இந்த நான்கு வரிகளைத்தான் திரும்ப திரும்ப, பல ஆர்க்டிக் குறிப்புகளில் 4 மாதங்களாக படித்தேன்.
பனி, பனி…எங்கும் பனி..
இது ஒரு வெண்மையான வெறுமையான கடற்கரை.
அழகையும், பிரமிப்பையும் வெகுமதியாய் கொடுக்கும் ஒரு தொலை தூர இலக்கு.
நீங்கள் இங்கே பார்க்கப்போவது அனுபவிக்க நம்பமுடியாத நிலப்பரப்பு. இது தனிமையான, அற்புதமான மனித இருப்பை காணாத, காலடி சுவடு இல்லாமல் வரையப்பட்ட வண்ணமுடைய இயற்கை தேசம்.
இங்கே கருப்பு இரவு வானம், அமைதியாக பகலை மூழ்கடித்து, மகத்தான வெறுமையை உங்கள் மனதில் நிரப்பும்.
என் மனதில் இதை படித்தவுடன் தோன்றியது, இந்த வரிகளை அப்படியே புகைப்படம் எடுத்து வந்து தொடர் எழுதுவதுதான். பயணத்தின் ஒரு நோக்கம் புகைப்படம் எடுத்து, பின் விற்பது. தொடருக்கு தேவையான படங்களை மட்டும் இங்கு பதிவிடுவேன்.
மற்றவை காசு, பணம், money, துட்டு….
நான் சுமார் ஆறு ஆண்டுகளாக, Stock Photography என்பதை பகுதிநேரமாக செய்து வருகிறேன். இதை அனைவரும் முயற்சி செய்து பார்க்கலாம். கெட்டியாய், Getty Images( www.gettyimages.com) முதல் ஐயம் இல்லாமல் istock ( www.istockphoto.com) வரை முயன்று பாருங்கள். நான் ஆர்க்டிக் சென்று எடுத்துவரும் படங்களை இந்த தளங்களில் விற்க முடிவும் செய்தேன். Anyone who is doing photography for fun, can try any one of these agencies.
சரி, வான்கூவரில் இருந்து ஆர்க்டிக் எவ்வளவு தூரம்? அதை எப்படி சென்று அடைவது? எதை எடுத்துக்கொண்டு செல்லவேண்டும்? யார் கூட வருவார்கள்? என்று என்னக்குள் பல கேள்விகள். இந்த மொத்த பயணத்தை 12 நாட்களுக்குள் அடக்க வேண்டும். இடையில் தேவையான ஓய்வும் வேண்டும்.
நாட்கள் நகர, நகர, ஒவ்வொரு கேள்விக்கும் பதில்கள் கிடைத்தன. முதலில் ஆர்க்டிக் தேசத்திற்கு எப்படி செல்லவேண்டும் என்பதை சொல்கிறேன்.
கனடாவில் இருந்து ஆர்க்டிக் செல்ல, மொத்தம் மூன்று மாகாணங்களை கடந்து செல்லவேண்டும்.
பிரிட்டிஷ் கொலம்பியா (British Columbia), யுகான் (Yukon), மற்றும் நார்த் வெஸ்ட் பிரதேசங்கள் (Northwest Territories). இந்த மாகாணங்களை கடந்து சென்றால் ஆர்க்டிக் பெருங்கடலை சென்று அடையலாம்.
ஆர்க்டிக் மற்றும் நார்த் போல் – பிரதேசங்கள், எந்த நாட்டிற்கும் சொந்தம் கிடையாது. கனடாவின் மேல் இருக்கும் ஆர்க்டிக் – கனேடியன் ஆர்க்டிக் என்றும், ரஷ்யாவின் மேல் உள்ள ஆர்க்டிக், ரஷ்யன் ஆர்க்டிக் என்றும் அழைப்பார்கள். இதை போன்று நார்வே, டென்மார்க், கிரீன்லாந்து நாடுகள் ஆர்க்டிக்கை சொந்தம் கொண்டாட காத்து இருகின்றன.
ஆனால் , சர்வதேச சட்டத்தின் கீழ், எந்த நாடும் தற்போது வட துருவம் அல்லது அதை சுற்றியுள்ள ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியில் சொந்தம் கொண்டாட முடியாது. காரணம், United Nations Convention on the Law of the Sea. ( UNCLOS) என்று ஒரு சர்வேதேச சட்டம் உள்ளது. இதன்படி, ஆர்க்டிக் கடல் ஐ.நா.விற்கு சொந்தம். ஒரு நாட்டின் எல்லையில் இருந்து 370 கிமீ; அல்லது 230 மைல் தூரம் தான் அந்த நாடு சொந்தம் கொண்டாட முடியும். அதன்படி, கனடா ஆர்க்டிக், இனுவிக்கில் இருந்து 370 கம் தொலைவில் முடிந்து விடும்.
அதன்பிறகு உங்களுக்கு பாஸ்போர்ட் தேவை இல்லை. தாராளமாக நீங்கள் சென்று வரலாம். கேட்க நாதியில்லை. செத்தாலும் கேட்ப்பார்கள் யாரும் இல்லை.இது சொந்தம் பந்தம் இல்லாத நிசப்த பிரதேசம். ஆனால், இங்கு குண்டுகள் சத்தம் கேட்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
ஆர்க்டி கடல் பகுதி பல்வேறு காரணங்களுக்காக தற்போது பூசலில் உள்ளதுதான் உண்மை. காரணம், பனிக்கடியில் இருப்பது எண்ணையும் தங்கமும். இதை வெட்டி எடுக்க அதிக செலவு ஆகும். அதனால் இப்போதைக்கு அமைதியாய் இருபது போல் நடிக்கிறது இந்த உலகம்.
ஈரான், ஈராக் எல்லாம் சுத்தமாய் முடிந்த பின்னர், இங்கே தான் ரெகார்ட் டான்ஸ்.
மூன்றாவது உலகப்போர், தண்ணீருக்கு தான் நடக்கும் என்று எங்க ஊர் கிளி ஜோதிடர் கணித்து உள்ளார். அதன்படி, கனடா, டென்மார்க், நோர்வே , ரஷியன் கூட்டமைப்பு மற்றும் அமெரிக்கா இங்கு சண்டையை ஆரம்பிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. உலகின் எல்லா வளங்களும் முடிந்த நிலையில் அண்ணன் அமெரிக்கா காத்து இருப்பது, உலகின் இந்த பகுதிக்குதான். கனடாவின் இயற்கை வளம்அமெரிக்காவிற்கு நன்கு தெரியும். பின்னாளில் எடுத்துக்கொள்ளதான், இந்த வெள்ளாடு கனடாவிற்கு, அமெரிக்கா புல்லை கொடுத்து வளர்த்து வருகிறது.
கடா வெட்டு என்று தான் தெரியவில்லை…
இப்போதைக்கு இதை விட்டு தள்ளுங்கள். இது நம்ம பேரன், பேத்தி பிரச்சனை. எனக்கு இருக்கும் பிரச்சனை, கிடைக்கும் 12 நாளில் எவ்வளவு தூரம் சென்று வரவேண்டும்?
நான், இந்த தூரத்தை ஒரு புள்ளியில் இருந்து இன்னொரு புள்ளியின் தொலைவை சொன்னால் நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
வான்கூவரில் (BC) இருந்து வைட் ஹோர்ஸ் (White Horse, YK) வரை சுமார் 2,500 கிலோமீட்டர்.
வைட் ஹோர்ஸில் இருந்து டாசன் (Dawson,YT) வரை சுமார் 550 கிலோமீட்டர்.
டாசனில் இருந்து இனுவிக் (Inuvik, NWT) வரை சுமார் 800 கிலோமீட்டர்.
இனுவிக்கில் இருந்து ஆர்க்டிக் பாயிண்ட் ( Arctic Point) வரை சுமார் 750 கிலோமீட்டர்.
ஆர்க்டிக் பாயிண்டில் இருந்து ஆர்க்டிக் பெருங்கடல் வரை 500 கிலோமீட்டர்.
மொத்தம் 5,100 கிலோமீட்டர் தொலைவை 7 நாட்களில் அடையவேண்டும். திரும்பிவர 2 நாட்கள். மீதமுள்ள நாட்களை ஓய்வுக்காக ஒத்துக்கலாம் என்று எண்ணம். மொத்தம் 10,000 கிலோமீட்டர்களை 12 நாளில் பயணிக்க வேண்டும்.
முடிந்தவரை சென்றுவிட்டு, திரும்பியும் வந்துவிடலாம் என்று திட்டம் வகுக்க முடியாது. காரணம், எல்லா இடத்திலும் ஏற்பாடுகள் செய்துவிட்டு பின்பு அதை மாற்ற முடியாது. காரணம், இது ஒரு ஒன் வே டிராபிக் மாதிரி. ஒரு இடத்தில் இருந்து புறப்பட்ட பின்பு அடுத்த இலக்கை அடைந்தே தீர வேண்டும். இல்லை எனில் கையில் உள்ள satellite போன் மூலம் உதவியை கேட்கலாம். 6 மணி முதல் ஒரு நாளுக்குள் உதவி வந்து சேரும். ஆபத்தை பொருத்து நீங்கள் விலையை கொடுக்க வேண்டும். சுமார், 10,000 டாலார்கள் செலவு செய்ய வேண்டிவரும்.
சரி இந்த தூரத்தை எப்படி பயணிப்பது?
வான்கூவரில் இருந்து வைட் ஹோர்ஸ் வரை பறந்து செல்லலாம்.
வைட் ஹோர்ஸில் இருந்து டாசன் வரை ஊர்ந்து செல்லலாம்.
டாசனில் இருந்து இனுவிக் வரை வழுக்கி கொண்டே போகலாம்.
இனுவிக்கில் இருந்து ஆர்க்டிக் பாயிண்ட் வரை இழுத்து செல்லப்படலாம்.
ஆர்க்டிக் பாயிண்டில் இருந்து ஆர்க்டிக் பெருங்கடல் வரை மிதந்து செல்லலாம்.
இப்படி மாறி மாறி குளிரில் பயணம் செய்து கடைசியில் இறந்தும் போகலாம்.
இந்த வழுக்கல், இழுக்கல் அனைத்தையும் பின் வரும் வாரங்களில் சொல்கிறேன்.
ஆர்க்டிக் செல்ல தேவை ஒரு உயிர் காப்பீட்டு திட்டம்.
இது இறக்கும் முன்னரே, திவசம் செய்து சவபெட்டிக்குள் நம்மை அடக்கும் அடங்கா நிறுவனங்களின் அடக்க விலை. ஆர்க்டிக்கில், மூச்சு அடங்கினால் அதன் அடக்க விலையும் அதிகம். சுமார் 850 டாலர்கள் கட்டவேண்டும். ஒரு அமெரிக்க நிறுவனம்தான் சவ பெட்டி செய்து நம்மை கொண்டு வந்து சேர்க்கும். ஒவ்வொரு முறையும் நான், பயண காப்பீட்டு செய்துவிட்டுதான் எங்கும் பயணிப்பேன். ஆர்க்டிக் ஒன்றும் விதிவிலக்கு அல்ல. ஆர்க்டிக் செல்ல கட்டிய முதல் கப்பம், சவ பெட்டிக்குதான்.
பெட்டி செய்ய, என் அட்டை பணம் செலுத்தியது.
அடுத்து, யார் என்னுடன் பயணித்து வரப் போகிறார்கள்? இந்த கேள்விதான் இந்த பயணத்தின் மிக முக்கியமான கேள்வி. காரணம், இந்த கேள்வியை நானே எனக்கு பலமுறை கேட்டுக்கொண்ட கேள்வியும் கூட. இதற்கு பதில் மட்டும் காலம் தான் சொன்னது. வருவேன் என்பார்கள், ஆனால் வரமாட்டார்கள்.
எப்படி ஆரம்பித்தது இந்த கேள்வி என்பதை சொல்கிறேன். தொடர் முடியும் போது உங்களுக்கே தெரியும் அந்த பதில் வந்த விதம். டிசம்பர் மாதம் யாரவது ஆர்க்டிக் செல்கிறார்களா என்று நண்பர் கிரிகொரி அவருக்கு தொலைபேசியில் அழைத்துக் கேட்டேன். ஆம், நேட் ஜியோ explorers 6 பேர் இந்தவருடம் டிசம்பரில் ஆர்க்டிக் செல்ல இருக்கிறார்கள். நீங்கள் வேண்டுமானால் அவர்கள் கூட சென்று வாருங்கள், அதற்கு தேவையான ஏற்பாடுகளை நான் செய்கிறேன் என்றார். இதை கேட்டவுடன் எனக்கு மிகவும் சந்தோஷம். காரணம், கூட்டமாய் சென்றால் பயணத்தில் வரும் ஆபத்துக்களை எளிதில் எதிர்கொள்ளலாம் என்று நினைத்து இருந்தேன். ஆனால், அதில் ஒரு சிக்கல் இருப்பது அப்போது தெரியவில்லை. நான் எல்லா ஏற்பாடுகளையும் செய்ய துவங்கினேன்.
அடுத்து ரெடி செய்யவேண்டியது என் பொண்டாட்டியை. எனக்கு மொத்தம் ரெண்டு பொண்டாட்டி. வீட்டை விட்டு செல்லும் போது இரண்டு பொண்டாடிகளுடன் தான் செல்வேன். ஒரு பொண்டாட்டிக்கு நான் தாலி கட்டினேன். இன்னொன்னு என் கழுத்தில் தாலியாய் தொங்கிக்கொண்டு இருக்கும்.
My Lovable கேமரா.
நான் இவளை காதலித்தேனா, இல்லை அவள் என்னை காதலித்தாளா என்று தெரியாது. சுமார் ஐந்து வயதில் என் தாத்தா எனக்கு இவளை அறிமுகம் செய்து வைத்தார். 35 வருடங்கள், கல்யாணம் ஆகாமல் இவளை நான் காதலித்து வருகிறேன். கல்யாணம் தான் ஆகவில்லை. ஆனால், பல பிள்ளை குட்டிகள். சுமார் 10-12 லென்ஸ் பெற்று எடுத்து விட்டாள். ஒவ்வொரு பயணமும் இந்த 2 பொண்டாட்டி மற்றும் பிள்ளைகளுடன் மயிலும் சேர்ந்து கொள்வார்கள். ஆனால் இந்த பயணத்தில் ஒரு பொண்டாட்டி மட்டும் தான்.
ஆர்க்டிக் என்னுடன் தனியாக வருவதில் அவளுக்கு இருந்த ஆசை எனக்கு தெரிந்தது. சக்காளத்தி சகவாசம் போக போக தெரியும் என்பார்கள். இவளை தனியே வைத்துக்கொண்டு நான் பட்ட வேதனை கொஞ்சமா, நஞ்சமா? சரி, அவளையும் எடுத்து, பெட்டிக்குள் அடக்கினேன்.
அடுத்து, போட்டுக்கொள்ள உடை. ஐந்து ஜீன்ஸ் பாண்ட்ஸ், ஐந்து டி ஷர்ட்ஸ். மீதி அனைத்தையும் வெள்ளை குதிரையில் ( White Horse) ஏற்பாடு செய்து இருந்தேன்.
அடுத்து, ஆர்க்டிக் கிட். இது ஆர்க்டிக் செல்ல தேவையான அனைத்து பொருட்களும் அடங்கிய ஒரு கிட்.
https://sridar.com/2013/12/25/arctic-adventure-part-1-getting-ready/
இதில் உள்ள அனைத்தும் தேவை. சிலவற்றை அமெரிக்காவிலும், மீதியை வெள்ளை குதிரையிலும் தயார் செய்தேன்.
இவை அனைத்தையும் ஒரு பெட்டியில் அடக்கம் செய்தேன். எல்லாம் தயார்.
மனைவியும், மகனும் இந்தியா செல்ல தாயாராகிக் கொண்டு இருந்தபோது என் மனம் ஆர்க்டிக் செல்ல துடித்துக் கொண்டு இருந்தது.
அந்த தேதியும் வந்தது. இருவரையும், வான்கூவர் விமான நிலையத்தில் வழி அனுப்ப சென்று இருந்தேன். உள்ளே செல்லும் முன் கண்ணீர் விட்டு அழுதார்கள். மயிலும் அழுதது. வெறுமை வருவது எனக்கு தெரிந்தது.
விமானம் அரபு தேசத்தை நோக்கி பறக்க, என் கார் Fraser நதியின் மீது துரத்தி கொண்டு சென்றது.
விமானம் ஜெயித்து கண்ணில் இருந்து மறைந்த போது, தோல்வியை ஒத்துக்கொண்ட என் கார் என் வீட்டு கராஜில், மூச்சு வாங்கி நின்றது.
மூன்று வருடத்தில் என் வீட்டில் முதல் முறையாக அந்நியனாக நுழைந்தேன்.
யாருமில்லா வீடு, யாருக்கோ கதவை திறக்க வெறுமை என்னை வருக வருக என்று அழைத்தது.
நேராக, வெறுமை நிவர்த்தி ஊர்தியாம் கட்டிலில் படுத்து தூங்கினேன். இரவு எட்டு மணிக்கு எழுந்தேன்.
எனக்கு ஒரு கெட்ட பழக்கம். வீட்டை விட்டு எந்த ஊருக்கு பயணம் செய்தாலும், பயண நாளின் முந்தைய இரவில் வீட்டை மிக சுத்தமாக துடைத்து வைத்துவிட்டுதான் போவேன். பயணம் முடிந்து வீட்டிற்குள் நுழையும் போது பளிச்சென்று இருக்கவேண்டும்.
எட்டு மணிக்கு சுத்தம் செய்ய ஆரம்பிதேன். சுமார் 10 மணிக்கு வீடு ஞானஸ்தானம் பெற்றது.
இரவு பத்து மணிக்கு என் iphone அழுதது. ஷாகுல் அகமது மறுமுனையில் “சாஆஆர்” என்றார்.
ஷாகுல் அகமது முகம், சும்மா இருக்கும் போது கூட சிரித்து கொண்டு இருக்கும். சந்தோஷத்தை முகத்தில் வரனாக பெற்றவர்.
`சார், ரெடியா? காலை எட்டு மணிக்கு வீட்டுக்கு வருகிறேன். Flight பத்து மணிக்கு சரியா இருக்கும் என்றார்.” எல்லாம் ஒருமுறை மீண்டும் ஒருமுறை செக் செய்துவிட்டு தூங்க போனேன்.
தூக்கம் வரவில்லை…. ஜன்னலில், தூறல் மழை ஆரோகனம் இசைத்தது.
ஆர்க்டிக் பயணத்தின் முதல் நாள் விடிந்தது.
பயணத்தின் முதல் அடி, என் வீட்டு படிக்கட்டில் தொடங்கியது. என் பாக்கெட்டில் இருந்த என் பொண்டாடியை மதில் மேல் அமர சொன்னேன்.
கிளக் – என்று சிரித்தாள். ஆர்க்டிக் பயண முதல் நிழற்படம் அவள் நெஞ்சில் ஏறியது.
எட்டுமணிக்கு, வண்டி வான்கூவர் விமான நிலையம் புறப்பட்டது. 8.45 மணிக்கு ஆரத் தழுவி உள்ளே அனுப்பினார்கள்.
பறக்க வேண்டும். பறவையின் கூடு நோக்கி நடந்தேன். Air North – பறவையின் வேலைக்காரிகள் இருவரும் வெள்ளைக்காரிகள்.
கொடுத்த காசுக்கு மேல் சிரித்தார்கள். காசுக்கு சிரிப்பவர்கள், பேசுவதற்கு முன்னும் பின்னும் சிரிப்பார்கள். நாம் திட்டினாலும் சிரிப்பார்கள். அவர்கள் திட்டும் போது சிரிப்பார்கள்.
இந்த வேலையை ஆண்களிடம் கொடுத்தால் இன்னும் சிறப்பாக சிரிப்பார்கள். ஆனால், அவர்கள் பெண்களிடம் மட்டும் சிரிப்பதால் Customer Care-ல் அவர்களுக்கு வெள்ளை இல்லை.
நான் போர்டிங் பாஸ் வாங்கியபின், அடுத்து வந்த வெள்ளைகாரரிடம் அதே அளவு மாறாமல் சிரித்தார்கள். நான் அங்கு இருந்த வெள்ளை குதிரை பற்றிய பயண குறிப்புக்கள் அடங்கிய 4-5 இதழ்களை அள்ளிக்கொண்டு உணவகம் நோக்கி நடந்தேன்.
எனக்கு பசித்தது. சப்பை அழகி கொண்டுவந்த தேநீரை உறுஞ்சியபடி முகம் அருகே சில இதழ்களை வைத்து iphone இல் கிளக்கினேன்.
முதல் இதழை எடுத்து படித்தேன்.
வெள்ளை குதிரை ஏறும் முன் எவ்வளவு குளிரும் என்று பார்த்து செல்லுங்கள், இல்லை நீங்கள் உறைந்து விடுவீர்கள் என்று இருந்தது.
அவரசரமாக iphone வெதர் நெட்வொர்க் பார்த்தேன்.
Snow Storm In White Horse. Travel Warning என்று இருந்தது.
குடித்த தேநீர், சிறுநீராக மாறுவதை ஜீன்ஸ் பான்ட் சொன்னது.
உச்சா, இந்த முதல் ஆர்க்டிக் பச்சாவிற்கு, அச்சாவாக வந்தது.
தொடரும்
வாங்க பறக்கலாம் ஆர்க்டிக் நோக்கி
Leave A Comment