கருப்பு இரவு . தேதி 8. மணி 12.
நான் முதல் முறையாக 11 மணிவரை ஆபீஸ் வேலை பார்த்துவிட்டு வீட்டுக்கு வருகிறேன்.
மெட்ரோ ஸ்டேஷன் ரயில் நிலையம். யாரும் இல்லை. வெறிச்சோடி கிடந்தது.
இரவில் கனடா பயமாய் தெரிந்தது.
சில பிச்சைக்காரர்கள் கஞ்சா வாடையுடன் என்னை கடந்து சென்றார்கள்.
மரணம் அவர்கள் பார்வையில் தெரிந்தது.
சிலர் பிணம் போல் சாய்ந்து கிடந்தார்கள்.
சிலர் ஓநாய் போல் ஒரு டாலருக்கு ஓலமிட்டார்கள்.
மயான அமைதி. வெண் பனி மூட்டம்……
கிங் ஜார்ஜ் ஸ்டேஷன் என்று சிவப்பு விளக்கு நின்று நின்று ஒளிர்ந்தது.
சுடுகாட்டில் க்ரீச் என்று ரயில் வண்டி வந்து நின்றது.
பயம் என்னை அறியாமல் என் கூட ரயில் ஏறியது.
நான் கடைசி பெட்டியில் ஏறினேன்.
அதில்தான் 10 -15 பேர் இருந்தார்கள். எல்லோரும் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பி வருபவர்கள்.
யாரும் யாருடனும் பேசவில்லை. சிலர் தூங்கிக்கொண்டு இருந்தார்கள்.
சிலர் வெறித்து பார்த்து கொண்டு இருந்தார்கள்.
தனியாக இருக்கும் கடைசி இருக்கையில் அமர்ந்தேன். கடைசி ஸ்டாப்பில் நான் இறங்க வேண்டும்.
எனக்கு அரை தூக்கம் முழுதாய் வந்தது.
ஒவ்வொரு ஸ்டாப்பிலும் இறங்கினார்கள். யாரும் ஏறவில்லை. தூங்கிவிட்டேன்.
கடைசி ஸ்டாப்பிற்கு முன்னால் வந்த ஸ்டாப்பில் தீடீரென்று முழித்தேன்.
பக்கத்தில் ஒரு வயதான வெள்ளைக்கார பாட்டி உட்காந்து இருந்தார்.
எப்போது வந்தார் என்று தெரியவில்லை.
முட்டை கண்கள். வெள்ளை உடை.
தலை விரித்துவிட்டு விட்டத்தை முறைத்து கொண்டு இருந்தார்.
பார்க்கவே பயமாய் இருந்தது.
என் கம்பார்ட்மெண்டில் இப்போது நாங்கள் இருவர் தான்.
எழுந்து வேறு வண்டியில் ஏறலாம் என்று நினைக்கும் போது …
“டப்’ என்று ரயில் வண்டியின் கதவுகள் மூடின.
பாட்டி ஏதோ ஒரு பாட்டை சத்தமாக பாட ஆரம்பித்தார்.
ஊ ஊ …ஓ !!! ஊ ஊ …ஓ !!!
நான் காதுகளையும் கண்ணையும் மூடிக்கொண்டேன். கால்கள் நடுங்கின.
ரயில் கடைசி ஸ்டாப் நோக்கி சென்றது.
ரயில் வண்டியின் சத்தம் ” க்ரீச்” “கிரீச்” என்று என் காதில் ஓதின.
பாட்டி இன்னும் சத்தமாக பாட ஆரம்பித்தார்.
வேகாகமாக போன ரயில் “தடால்” என்று கடைசி ஸ்டாப்பில் நின்றது.
வண்டி நின்ற பின், மெதுவாக கண்களை திறந்து பார்த்தேன்.
பாட்டியை காணவில்லை.
நான் மட்டும் தான் இப்பொது கம்பார்ட்மெண்டில் இருந்தேன்.
பாட்டி எங்கே போனது?
ஒரு ஸ்டாப்பில் இருந்து ரயில் கிளம்பும் போது இருந்தது எப்படி காணாமல் போனது?
பயம் என்னை தொற்றிக் கொண்டது.
இது பேய் தான். ஊர்ஜிதம் ஆனது.
ரயில் வண்டி கதவு மூடி இருந்தது. ரயில் நிற்கவில்லை. எங்கே மறைந்தது இந்த பாட்டி.?
இது பேயே தான்.
பேருந்துக்கு நடந்து போகவேண்டியவன் ஓடிக் கொண்டு இருந்தேன். முதுகில் ஆபீஸ் பை.
யாரோ என்னை துரத்துவது போல் சத்தம் .
என் கூட டக், டக் என்று ஓடி வந்தது.
இதயம் அதை விட வேகமாக ஓடியது.
உயிரை பிடித்துக்கொண்டு நின்று கொண்டு இருந்த பேருந்தில் ஏறினேன்.
பயத்தில் வேர்த்து கொட்டியது. 20 நிமிடத்தில் வீடு போய் சேர்ந்து விடலாம்.
அந்த பாட்டியின் கண்களும், பாடலும் கேட்டுகொண்டே இருந்தது.
இனி இரவில் தனியாக வரக்கூடாது.
அதுவும் வெள்ளைகார பேய். நாசுக்காய் கொன்றுவிடும்.
பேருந்தின் ஓட்டுனர் அருகே உள்ள இருக்கையில் அமர்ந்தேன்.
கண்கள் பயத்தில் இருந்தன. இருண்டு போய் மங்கலாக தெரிந்தது.
15 நிமிடம் கழித்து ஒரு கை என் தோளை தட்டியது. திரும்பி பார்த்தேன் .
80 வயது வெள்ளைக்கார தாத்தா, இரும்பிக்கொண்டே ஒரு அட்டையை என்னிடம் நீட்டினார்.
சைகையால் நான் அங்கு போகவேண்டும் என்று காட்டினார் .
அந்த அட்டையை வாங்கி படித்தேன்.
அதில் நம்பர் 42, 162 ஆம் வீதி Surrey என்று எழுதி இருந்தது.
அட, இது என் பக்கத்து வீடு. வெள்ளைக்கார தாத்தாவிற்கு வழி தெரியவில்லை.
இந்த ஊரில் யார் அடுத்த வீட்டில் இருகிறார்கள் என்று கூட தெரியாமல் வாழ்கிறோம் என்று நொந்துகொண்டேன்.
“தாத்தா, இந்த அட்ரஸ் அடுத்த ஸ்டாப்தான். எங்க வீட்டு பக்கம் தான்.
நான் உங்களுக்கு வழி காட்டுகிறேன்” என்றேன்.
இருட்டில் முகம் சரியாக தெரியவில்லை.
வெள்ளைக்கார தாத்தா சிரித்தார்.
பின்பு இரும்பல் சத்தம்.
என் வீட்டு ஸ்டாப் வந்தது. வாங்க போகலாம் என்றேன்.
நடக்க முடியாமல் என் பின்னால் இறங்கி நடந்தார் வெள்ளைக்கார தாத்தா.
பத்து நிமிடத்தில் என் வீடு வந்துவிடும்.
முதலில் Unit no: 42 வரும். அடுத்து என் வீடு Unit no: 41.
இருவர் வீடுக்கும் ஓரே சுவர். இது Town Home.
ஒரு வீட்டில் சத்தம் போட்டால் அடுத்த வீட்டில் கேட்கும்.
திரும்பி பார்த்தேன்…
வெள்ளைக்கார தாத்தா மெதுவாக நடந்து வந்து கொண்டு இருந்தார்.
இருட்டில் அவர் அணிந்து இருந்த வெள்ளை ஜிப்பா மிளிர்ந்தது.
என் அருகே வந்தவுடன், “தாத்தா இதுதான் நீங்க தேடி வந்த Unit” என்றேன்.
அவர் எதுவும் பேசவில்லை.
அவர் இரும்பிக்கொண்டே வீட்டுக்கு முன் சென்றவுடன், ஒரு உருவம் வந்து கதவை திறந்தது.
இருட்டில் யார் என்று எனக்கு தெரியவில்லை.
வெள்ளைக்கார தாத்தா வீட்டிற்கு உள்ளே சென்று கதவை சாத்தும் முன் என்னை பார்த்து இரும்பிக்கொண்டே சிரித்தார்.
அப்போது தான் பார்த்தேன் “முன்னால் இரண்டு பற்கள் தங்க பற்கள்”.
நானும் சிரித்துவிட்டு, என் வீட்டு காலிங் பெல்லை அழுத்தினேன்.
இரண்டு நிமிடம் கழித்து மனைவி வந்து கதவை திறந்தார்.
“ஏன் இவ்வளவு லேட்? மணி 12 ஆச்சு. ராத்திரியில், தனியாவா வரது? சொல்லியிருந்தா நான் ஸ்டேஷனுக்கு வண்டி எடுத்துட்டு வந்து இருப்பேன்”என்றார்.
வேலை அதிகம், கடைசி பஸ் இருந்தது.
அதுதான் ஏறி வந்து விட்டேன். நான் பக்கத்துக்கு வீட்டு தாத்தா கூடத்தான் வீட்டுக்கு நடந்து வந்தேன், தனியா வரவில்லை என்றேன்.
போன் செய்ய மறந்துட்டேன்னு சொலுங்க.
நம்ம பக்கத்துக்கு வீடு நாலு மாசமா காலியா இருக்கு.
எனக்கு தூக்கிவாரிப் போட்டது. ” நீ எந்த வீடை சொல்லுற? 39 கிடையாது. நான் unit no 42-டை சொல்றேன்.
அந்த வீட்டு தாத்தா, இப்பதான் தான் உள்ளதான் போனாரு. எம் கூட தான் வந்தார். என் கண்ணால பார்த்தேன்.”
பொய் சொல்லாதீங்க. “Unit Number 42 தான் காலியா இருக்கு” என்றார். அந்த வீட்டு owner இன்னிக்கி காலைலதான் வீடை சுத்தம் செஞ்சு என்கிட்ட ஒரு சாவி கொடுத்துட்டு போனார்.
அடுத்தவாரம் ” Sky Train – ல வேலை பார்க்கும் ஒருவர் குடிவர போகிறாராம்.” லேட்டா வந்துட்டு தூக்கத்தில ஒளறாதீங்க” என்றார்.
அப்போதுதான், தாத்தா கொடுத்த அட்டை ஞாபகம் வந்தது. எடுத்து மனைவியிடம் நீட்டினேன்.
அவர் அதை வாங்கி பார்த்தார். “என்னங்க இதுல அட்ரஸ் ஒன்னும் இல்லை, ஏதோ பழைய பாட்டி படம் தான் இருக்கு” என்று அட்டையை தூக்கி போட்டுவிட்டு தூங்கப் போனார்.
கீழே தூக்கி எறிந்த பழைய போட்டோவை நடுக்கத்துடன் எடுத்து பார்த்தேன்.
அந்த போட்டோவில் ” ரயிலில் பார்த்த அதே பாட்டி சிரித்துகொண்டு இருந்தார்”
நான் மயங்கி சுவரில் சாய்ந்தேன்.
Leave A Comment