கனடாவில் காலம் நனைந்து ஓடியது. கனேடிய மண்ணில் நான் கால் வைத்த இடம் “வான்கூவர்”. கரைந்து போக வேண்டிய மூன்று வருடம் தினம் தினம் மழையில் நினைந்துதான் ஓடியது….
இங்கு வருடத்தில், சராசரியாக 165 நாட்கள் மழை பெய்யும். மீதம் உள்ள நாட்களில், மழை பெய்வதுபோல் இருக்கும். சூரியன் தெரியும் நாட்களில் அலுவலகத்தில்” WOW, What a sunny day !!!” என்று ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி முத்தமிட்டு கொண்டாடுவார்கள்”
இந்த ஊருக்கு, சூரியன் ஒரு கடன்காரன். தேடிப்பிடித்தாலும் கிடைக்கமாட்டான். அப்பிடி, கிடைத்தாலும் அவன், அசல் வெய்யிலை தராமல், வட்டி வெய்யிலை கொடுத்துவிட்டு, ஓடி மேகத்துக்குள் ஒளிந்துகொள்வான். அவன் என்று வருவான் என்று தினமும் Weather Network – ல் பார்ப்பது தான் பெரும்பாலான கனேடிய குடிமகனின் காலைக் கடன். என்னதான் மழை பெய்தாலும் இங்கு ஒரு அழகு இருக்கும்.
இந்த நகரம் அழகின் மறுஅவதாரம். தினம் வீட்டின் கதவை திறக்கும் போது, நேற்றுதான் வந்து வந்து இறங்கினேன் என்று எண்ணத்தோன்றும் பொலிவு.
சொன்னால் புரியாது. இது ஒரு சொர்க்க பூமி.
ஊரின் ஒரு புறம் கடல். மறுபுறம், கடலை ஒட்டிய மலைகள். காலையில் இம்மலைகள், பற்பசையை தன் தலையில் வைத்துக்கொண்டு பல் விளக்காமல், பளிச் என்று பல் இளித்துக்கொண்டு நிற்கும். இயற்கை துப்பிய எச்சங்கள், பசிபிக் பெருங்கடலில் சில நூறு தீவுகளாய் மிதந்து கொண்டு இருக்கும். இதில் பெலுகா திமிங்கலங்கள், அந்தர் பல்டி அடித்து விளையாடிக்கொண்டு இருக்கும். எங்கும் பசுமை இருந்ததால் என்னவோ – உலகின் Green Peace இயக்கம் இங்குதான் தோற்றுவிக்கபட்டது. இங்கு மரங்கள், மிரட்டிகொண்டுதான் நிற்கும். எவனும் இவைகளை வெட்டமுடியாது. சராசரியாக ஒரு மரம் மூன்று மனித சந்ததிகளை பார்த்துவிட்டு, நாலாவது சந்ததிக்கு வீடு கட்டி கொடுக்கும்.
இந்த ஊரின் ஒரு சிறப்பு, ஒரே காலத்தில் கடலில் நீந்தலாம், பனியில் சறுக்கலாம், வெயிலில் வேகலாம், ஏரியில் மீன் பிடிக்கலாம், கடற் கரையில் விளையாடலாம், புல் தரையில் கோல்ப் பந்தை அடிக்கலாம், உலகின் எல்லா உணவுகளையும் சுவைக்கலாம்.
மைகேல்.ஜே. பாக்ஸ் முதல் பலான அழகி பமீலா அண்டர்சன் வரை பிறந்து வாழ்ந்த ஊர் இது.
சரி, இந்த ஊரை எவன்தான் கண்டுபிடித்தான்? வழக்கம் போல இந்த நகரத்தையும் தொப்பி போட்ட ஒரு ஐரோப்பியன் தான் கண்டுபிடித்தான்.
ஸ்பானிஷ் கேப்டன் ஜோஸ் மரியா, 1791-ல் ஜார்ஜியா ஜலசந்தியை ஆராய, ஐரோப்பியாவில் இருந்து வந்து, முதன் முதலில் வான்கூவரில் தரை இறங்கினார். இவர்தான், முதன் முதலில் புராட் நுழைவாயில் (Burrad Inlet) வழியாக வான்கூவர் உள்ளே நுழைந்தது.
முதலில் வந்து இறங்கிய இவர், ஆங்காங்கே அலைந்து கொண்டு இருந்தார். பெயர் சொல்லும்படி எதுவும் செய்யவில்லை. அதனால் இவர் பெயர், பெரிதாக வரலாற்றில் பதியப்படவில்லை.
அதற்கு காரணம், அடுத்து வந்த புத்திசாலி வெள்ளைகார கடற்படை தளபதி ஜார்ஜ் வான்கூவர் ( 1757-1798 ).
இவர், இரண்டு சிறிய படகுகளில் பிரிட்டனில் இருந்து கிளம்பி, ஆஸ்திரேலியா, பிஜி, டாஹிடி தீவுகள் வழியாக வான்கூவருக்கு வந்தார். அவர் 1772 ஆம் ஆண்டு பூட் அணிந்த தன் பாதங்களை வான்கூவர் கடற்கரையில் பதித்தார். அப்போது Stanley Park, False Creek, Kitsilano, Point Grey – இவை அனைத்தும் கிராமங்களாகதான் இருந்தன. இந்த கிராமங்களில், ஐரோப்பாவில் வந்தேறிய பழங்குடிகள் (Natives) வாழ்ந்து வந்தார்கள். வந்து இறங்கிய வெள்ளைகார துரை, செய்த முதல் காரியம், போன இடத்துக்கு எல்லாம் ஆங்கில பெயர்களை சூட்டியதுதான்.
இவர் எந்த இடத்தையும் விட்டு வைக்காமல் ஒரு வருடம் பெயர் சூட்டும் விழாவை மட்டும் நடத்திக்கொண்டு இருந்தார். இவர்தான் Mount Baker, Mount St. Helens மற்றும் Mount Rainier என பல புகழ் பெற்ற, பனி சிகரங்களுக்கும் பெயர் சூட்டிய புண்ணியவான். இன்று கனடாவின் மேற்கு மாகாணம், பிரிட்டிஷ் கொலம்பியா என்று பெயர் பெற்றதற்கும் இவர்தான் முக்கிய காரணம்.
கனடாவின் மேற்கு மலைகளை சுற்றி திரிந்து, இவர் வரைந்த, தேடல் வரைபடங்கள் (Exploration Maps) பின்னாளில் பெரிதும் எல்லோராலும் உபயோகப்படுத்தப்பட்டது.
இவர் மீண்டும் 1795- ஆம் ஆண்டு தனது பயணத்தை முடித்துக்கொண்டு பிரிட்டன் நோக்கி பயணம் செய்தார். அதற்கு அவர் சொன்ன காரணம், இந்த ஊர் எனக்கு பிடிக்கவில்லை. காரணம் எப்போதும் மழை இங்கு பெய்கிறது. கண்டுப்பிடித்தவனுகே இந்த கதி என்றால் இங்கு பெய்யும் மழையை பற்றி சொல்லவா வேண்டும்?
சரி, வெற்றியுடன் பிரிட்டன் திரும்பிய கடற்படை தளபதி, பிரிட்டனில் தனக்கு ஆடம்பர வரவேற்ப்பை எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு அங்கு கிடைத்தது அவமானம் மட்டுமே. அங்கு நடந்த அரசியல் சூழ்ச்சி மற்றும் அவருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகளால் மனம் நொந்து போனார். சொல்லபோனால், இவரை தெருமுனையில் நிறுத்தி வைத்து, இவர் சொந்தக்காரன் அடியும் கொடுத்தான். மனிதன் மனம் வெறுத்து நொந்து போனார். கடைசியில், தன் 40 ஆவது வயதில் உடலும் மனமும் வாடி, மாண்டு போனார். வான்கூவரை இவர் கண்டுபிடித்ததால், கனேடிய நிறுவனம் – ஹட்சன் பே (The Hudson’s Bay Company) இவரின் கல்லறையை இங்கிலாந்தில் புதுப்பித்து சிறப்பித்தது.
வான்கூவர் வெறும், 115 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நகரம். 200 வருடம் தான் இதன் பராம்பரியம். வான்கூவர் (Vancouver) கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் மிகப்பெரிய நகரமும் கனடாவிலேயே மூன்றாம் மிகப்பெரிய மாநகரமும் ஆகும். நியூயார்க் நகரம், மெக்சிகோ நகரம், மற்றும் சான் ஃபிரான்சிஸ்கோ தவிர, வட அமெரிக்க நகரங்களில் வான்கூவரின் மக்களடர்த்திதான் மிக அதிகமானது. அப்படி எதற்காக மக்கள், இங்கு வந்து குளிரில் வாழ்கிறார்கள்? என்று நீங்கள் எண்ணலாம்.
அதற்கு நான் உங்களை 150 வருடம் முன் அழைத்து செல்லவேண்டும்.
நூற்றியைம்பது வருடம் முன்னால், எனது முப்பாட்டன், மலேயா நாட்டு, பினாங்கு கரும்பு தோட்டத்தில், கரும்பு வெட்டி பிழைத்த காலத்தில் இவர்கள் இங்கு நீச்சல் குளம் கட்டி குளித்து கொண்டு இருந்தார்கள். இது சுகம் கண்ட மனிதர்கள் வாழ்ந்த பூமி.
காரணம் தங்கmoney. தங்கம் தோண்டி எடுத்து வித்த Money – இனி கதையில் தங்கmoney என்று அழைக்கப்படும்.
1855 – ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஓடிக்கொண்டு இருக்கும் தாம்சன் நதியில் முதன் முதலில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. காலம் காலமாக, தங்கம் ஆற்று படுகையில் கேட்பாரற்று கிடந்தது. இங்கு வாழும் பழங்குடிகள் இதை மண் என்று நினைத்து வாழ்ந்து வந்தார்கள். வெள்ளைக்காரன் மணலை ஜல்லித்து தங்கம் எடுத்து அமெரிக்காவிற்கு விற்றான். ஆற்று படுகையில் தோண்டிய இடம் எல்லாம் தங்கம். இந்த செய்தி தீ போல் அமெரிக்க மாகாணம் கலிபோர்னியா வரை சென்று அடைந்தது. தங்கmoneyயை தேடி, ஒரு வருடத்தில் 30,000 பேர் அமெரிக்காவில் இருந்து வந்து பிரேசர் நதியில் குதித்தனர்.
அதற்கு பின் நடந்தது தான் தங்கவேட்டை. பிரேசர் கான்யான் கோல்ட் ரஷ் 1855 ஆம் ஆண்டில் தொடங்கியது. இந்த வேட்டை, தங்கம் முடியும் வரை ஓயவில்லை. இப்படி தங்கmoney-க்காக, ஓடி வந்த ரகுமணிகளின் சந்ததி தான், தற்போதைய வான்கூவேர் வெள்ளைகாரர்கள்.
இதைப்பற்றி விரிவாக பின் வரும் வாரங்களில் சொல்கிறேன்.
இந்த தங்கவேட்டை, அமெரிக்கன் செய்வது டக்லஸ்சுக்கு பொறுக்கவில்லை. யார் இந்த டக்லஸ்?
ஜேம்ஸ் டக்லஸ் தான் வான்கூவர் தீவின் அப்போதைய கவர்னர். பிரிட்டன்தான் இவர் தேசம் . மனிதர், அமெரிக்கர்களின் தங்கmoney படை எடுப்பில் அரண்டு போய், லேன்ங்லி கோட்டைக்கு ( Langley) வந்து இந்த பூமி ஆங்கிலேயருக்குத்தான் சொந்தம் என்று அமெரிக்கர்களுக்கு பயந்து பிரகடனப்படுத்தினார். நீ என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக்கொள், நங்கள் வந்த வேலையை பார்க்கிறோம் என்று ஒன்பது திசையிலும் தங்கத்தை தேடினார்கள்.
மொத்தம் 8 திசை தானே? அது என்ன ஒன்பதாவது திசை? இந்த ஒன்பதாவது திசை தான் தங்க திசை.
ஒருவருக்கு ஆற்றின் ஒரு பகுதியில் தங்கம் கிடைத்துவிட்டால் அந்த இடத்தை யாருக்கும் சொல்லமாட்டார். குடும்ப ரகசியம். அந்த இடத்தை வரைபடத்தில் வரைந்து, ஒரு இடத்தில் மறைத்து வைத்து பாதுகாத்து தங்கவேட்டையை பரம்பரை பரம்பரையாக குலத்தொழிலாக ரகசியமாக செய்ய துவங்கினர்.
தேடியவனுக்கு கிடைத்தது. கிடைக்காதவன் துப்பாக்கி எடுத்து ஆற்று படுகையில் அமர்ந்துகொண்டு தங்கம் சல்லடை போட்டு எடுத்து வருபவனை சுட்டு கொள்ளை அடிக்க ஆரம்பித்தான்.
தங்கmoneyக்காக கூட்டம் கூடியது.
வேட்டை, கொள்ளை, பணம், பிணம் எல்லாம் சர்வ சாதாரணம்.
பணம் வான்கூவர் தெருவில் புரண்டு விளையாடியது. கப்பல் கரையை மாதம் ஒரு முறை தட்டியது.
இங்கிலாந்தில் இருந்து அழகிய பெண்கள் வந்து இறங்கினார்கள். தங்கம் வெட்டிய அழுக்கு அமெரிக்கன் அவர்களை திருமணம் செய்தான்.
அவர்களுக்கு அழகிய ஆங்கிலோ-அமெரிக்கன் பெண்கள் பிறந்தார்கள். அந்த பெண்களை கனேடிய வந்தேறிகள் திருமணம் செய்தார்கள்.
குழந்தைகளும் பளார் வெள்ளையாக பிறந்தன.
வேலைக்கு ஆசியாவில் இருந்து கருப்பு கூலிகளை கப்பலில் கூட்டிவந்தார்கள். அவர்களை வைத்து கட்டிடம் கட்டினான்.
சாதனை கடிதங்கள் பல எழுதினான். குதிரையை லாயத்தில் கட்டிவைத்துவிட்டு, வண்டி ஓட சாலைகளை அமைத்தான். இங்கிலாந்தில் இருந்து கப்பலில் ரயில் வண்டியை கொண்டு வந்து ஓட்டினான்.
தங்கம், நிலக்கரி, தாது உப்புக்களை வெட்டி எடுத்தான். பணம் உடலில் கொழுப்பாய் உருவெடுத்தது.
இரவுகளில் குடியும் கூத்தும் அரங்கேறியது. குடிமயக்கத்தில் கூலி பெண்களை கைப்பிடித்தான்.
பத்து மாதத்தில் Hybrid குழந்தைகள் பிறந்தன.
குழந்தைகளும் இப்பொது சுமார் வெள்ளையாக பிறந்தன.
நிறம் மாறா தங்கம் பிறந்த மண்ணில், மனிதர்களின் நிறம் மாற தொடங்கியது.
Multiculturalism இப்பிடித்தான் வெள்ளைக்கார மது குப்பியில் ஆரம்பித்தது.
1858 ஆம் ஆண்டு வான்கூவர் தன் கூரையை வேய்ந்தது. ஒரு நகரம் உருவாக ஆரம்பித்தது. மழையும் கொட்டாமல் தூற ஆரம்பித்தது. ஒரு மாறுபட்ட பரிணாம பல்கலாச்சார சமுதாயம் உருவாக ஆரம்பித்தது.
இந்தியாவில் இருந்து தாடிவைத்தவனும் வந்து இறங்கினான். சீனாவில் இருந்து மீசை முளைக்காதவனும் வந்து சூப் வைத்தான். இருவரும் கோட்டும் சூட்டும் போட்டு அலைய ஆரம்பித்தார்கள்.
எல்லாம் கலங்கிப் போனது.
மிளகுக்கும், ஏலக்காய்க்கும் இந்தியா வந்து நம்மை அடிமை படுத்தியவன், கடைசியில் பட்டர் சிக்கனுக்கு அடிமை ஆனது தான் வரலாறு.
இங்கு வாழும் 50% மக்கள் வேற்று மொழியை தாய் மொழியாய் பேசுபவர்கள்.
மொத்தத்தில் இது ஒரு புதிய, புனித, புதின, கலப்பட பூமி.
இங்கு தூய oxygen, வட்டியில்லா கடனுக்கு குடியிருக்கிறது.
எங்கும் எதிலும் சுதந்திரம்.
குளிர் காலத்தில் மூடியிருக்கும் பெண்களின் கால்கள், வெயில் காலத்தில் வெளியே தெரியும். ஆண்கள் சிகையை பெண்கள் போல் வளர்த்து கொண்டு, ஆண்கள் போல் சிகை கொண்ட பெண்களோடு சுதந்திரமாக பேருந்தில் முத்தம் கொடுத்துக் கொண்டு இருப்பார்கள்.
இதை பார்த்து பழகியவன் பார்க்கமாட்டான். பார்க்காதவன் பார்த்து பழகுவான்.
வெயில் காலத்தில் ஊரை காலி செய்து விட்டு, ஏதாவது ஒரு ஏரியின் கரையில் அமர்ந்து, குச்சியில் சொருகிய செத்த கோழியை வேக வைத்துக்கொண்டு இருப்பார்கள்.
குழந்தைகளுக்கு, பள்ளியில் பாடம் சொல்லி கொடுக்காமல் விளையாட சொல்லி கொடுப்பார்கள். வளர்ந்ததும், குழந்தைகள் வாழ்க்கையையும் விளையாட்டாக ஆடுவார்கள்.
911 என்னும் புனித எண்ணை எல்லோரும் உபயோகிப்பர். இவர் தான் இங்கு கடவுள். சாகும் முன் இவரை அழைப்பார்கள். இந்த கடவுள் ரோடில், சிவப்பு எருமையில் தலையில் ஒளி ஏந்தி சத்தம் போட்டுக்கொண்டே வருவார்.
எல்லாரும் ஒதுங்கி கடவுளுக்கு 911 வழி விடுவார்கள்.
பெட்டி பெட்டியாய், அட்டையில் வீடு கட்டுவார்கள்.
அடுத்த பெட்டியில் வாழ்பவன் பெட்டிக்குள் போனாலும், இந்த பெட்டியில் இருப்பவன் கண்டுகொள்ளமாட்டான். Invasion of Privacy.
மகன், தன் தந்தையின் வீட்டில் தங்க வாடகை கொடுப்பான். மகள் தந்தையின் முன் காதலனுடன் மது குடிப்பாள்.
வாரா வாரம், வீட்டு குப்பையை பாதுகாத்து வைத்து, குப்பை வண்டிக்கு தானம் கொடுப்பார்கள்.
இங்கு பிச்சை எடுப்பவனும் கௌரவம் பட சிவாஜி கோட் அணிந்து, டீசெண்டாக பிச்சை கேட்பான்.
வெள்ளைக்காரிகள், பூனையிடம் பாசம் காட்டி புருஷனை விட்டுவிட்டு சிங்கம் போல் சிங்கள் மாம் தகுதியோடு, புருஷனிடம் புடுங்கிய பாதி பணத்தில் Beauty Parlour சென்று கொண்டு இருப்பாள்.
வந்த புதிதில் எனக்கு இங்கு நடப்பதெல்லாம் புதிதாய் இருந்தது.
புதிதாய் ஒருவருடம், புரிந்து கொள்ள ஒருவருடம், புரிந்து பழக ஒரு வருடம் என மூன்று வருடம் கரைந்து (மன்னிக்கவும்), நினைந்து ஓடியது.
மூன்றுவருடங்கள், கனடாவை சுற்றிப் பார்த்தேன். மழை பெய்தால் அமெரிக்கா சென்று சுற்றுவேன். இரண்டும் ஒத்துவரவில்லை எனில் வீட்டில் சமைத்து உண்டு எடுத்த படங்களை கண்டு ரசிப்பேன்.
2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், என் மனைவியும் மகனும் ஒரு மாதம் இந்தியா போகவேண்டும் என்று சொன்னார்கள். எனக்கு அலுவகத்தில் வேலை அதிகம் இருந்தது. என்னால் வர இயலாது என்று சொல்லிவிட்டேன்.
பத்து நாட்கள் கிருஸ்துமஸ் விடுமுறை மட்டும் உண்டு. டிசம்பர் மாதம் குளிர் என்பதால் என்ன செய்யலாம் என்று மனம் யோசித்தது.
என் மகனின், படுக்கையின் மேல் ஒரு உலக வரைபடத்தை ஒட்டி வைத்துள்ளான். காரணம் பிறகு சொல்கிறேன்.
செப்டம்பர் மாதத்தில் ஒரு நாள், எதேச்சையாக உலக வரைபடத்தை மீண்டும் பார்த்தேன்.
நாம் ஏன் ஆர்க்டிக் போக கூடாது என்று நினைத்தேன். உடனே, என் பழைய டைரியை எடுத்து ஐஸ்லாந்து நண்பரின் ஈமெயில் முகவரிக்கு ஒரு மின் அஞ்சல் அனுப்பினேன்.
“உங்களோடு பேசவேண்டும். உங்கள் ஆர்க்டிக் நண்பன்” என்று நடு இரவில் மின் அஞ்சல் அனுப்பிவிட்டு பதிலை எதிர்பார்த்து தூங்கிவிட்டேன்.
நன்றாக தூங்கிக்கொண்டு இருக்கும்போது என் அலைபேசி என்னை அழைத்தது. தூக்கத்தில் எடுத்து ” யார் ? ” என்று கேட்டேன்.
” Man, How are you? Are you really going to Arctic? ” என்று வயதான ஒரு குரல் என்னை கேட்டது.
எட்டு வருடங்கள் முன் கேட்ட குரலுக்கு வயதாகிவிட்டது. உற்சாகம் மட்டும் குறையவில்லை.
அன்று தூக்கம் தொலைந்தது….கனவு நிஜமாக போகும் தருணம் என் அருகில் இருப்பதாய் உணர்ந்தேன். முப்பது நிமிடங்கள் பேசினார். எப்போது வேண்டுமானாலும் பேச சொன்னார்.
உன்னால் முடியும் என்று நம்பிக்கை தந்தார். தூங்காமல் புரண்டு புரண்டு படுத்தேன்.
காலையில் குப்பை வண்டி என்னை எழுப்பியது. அடுத்த நாள் பூத்துவிட்டது.
அந்த கணம், மனம் என்னை அறியாமல் 2014 புது வருடத்தை ஆர்டிக்கில் கொண்டாட முடிவெடுத்து இருந்தது.
அடுத்த நான்கு மாதமும் ஆர்டிக் பசலை நோயால் வாடினேன்.
(தொடரும்)
Great ! Why 1972? Is it 1792??
thanks praba, corrected the year!
பனிப்பிரதேச பயணம் (பாகம் 9) : எட்டுத் திக்கும் தாண்டி, இன்று ஒரு ‘ஒன்பதாவது திசையிலும்’ அடியெடுத்து வைத்து, சூடு பிடித்துள்ளது.
ஏழாமறிவில் உதித்த எழில் கொஞ்சும் வர்ணனைகள் அபாரம்! உள்ளத்தை கொள்ளை கொள்ளும் வண்ணப் படங்களும் அற்புதம்!
நமது ஆர்க்டிக் ஹீரோ, இன்று பதித்துள்ள ஒவ்வொரு வரிகளும் தங்கம் போன்று தகதகவென ஜொலிக்கிறது. அவர்தம் கைகளில் தவழ்ந்த மாயாஜாலம் வரிக்கு வரி தென்படுகிறது.
‘சொர்க்க பூமியான’ வான்கூவரின் சரித்திரம் மற்றும் பூகோளம், அழகியலோடு கலந்து, அழகான வர்ணனைகளால் புட்டுப்புட்டு வைக்கப்பட்டுள்ளது. நகரின் சுமார் 200 வருட பாரம்பரியத்தையும், அதன் இன்றைய பரிணாம வளர்ச்சியும் (Multi-culture) கவின்மிகு தமிழில், தெள்ளத் தெளிவாக அலசி ஆராயப் பட்டுள்ளது.
‘சுகம் கண்ட மனிதர்கள் வாழ்ந்த’ சொர்க்க பூமிக்கு ஒரு தங்கத்தாலான மணிமகுடமே வைக்கப் பட்டுள்ளது. ‘தங்கமலை (தங்கமணி) ரகசியத்தையும்’, தங்கமணி வேட்டையையும், தங்கமணிக்காக வந்த ரகுமணிகளின் சந்ததிகளையும், விலாவாரியாக விவாதித்து விளாசப் பட்டுள்ளது.
சொர்க்க பூமியில் காலடி எடுத்து வைக்கும் போது, கண்ணாமூச்சி காட்டும் சூரிய பகவனை ‘கடன் காரனாக்கிய’ நயமும், அந்த (சூரிய) ஒளியை தலையில் ஏந்தி, சிகப்பு எருமையில் சீறிக்கொண்டு வரும் ‘911 கடவுளாக’ எமதர்ம-பகவனை சித்தரித்த எழிலும், ஆராதிக்கப் படவேண்டியவை.
பிரம்ம தேவன் படைப்பிற்கு சவால் விடும் படியாக, பத்து மாத ‘ஹைப்ரிட் குழந்தைகள்’ உற்பத்தி – ‘பளார் வெள்ளை’ குழந்தையிலிருந்து ‘சுமார் வெள்ளை’ குழந்தை உருவான ஜெனிடிக்ஸ் மற்றும் ‘கொழுப்பியல்’ தியரியை கையாண்ட விதம் அழகு.
இந்த அற்புதமான பதிவில் ஒவ்வொரு வரியும் ரசிக்கும் படியாக இருந்தாலும், அதில் குறிப்பாக நாம் மிகவும் ‘ருசித்த’ வரிகள்:
*வான்கூவர் கடலை ஒட்டிய மலைமுகடுகளோ காலைநேரத்தில் பற்பசையை தலையில் வைத்துக்கொண்டு பல் விளக்காமல் பளிச்சென்று பல் இளித்துக் கொண்டு நிற்கும் (அதனால்தான் என்னமோ, வான்கூவர்-வாழ் ‘பாண்டியன்களும்’ சரியாக பல் விளக்காமல் மனைவிமார்களிடம் ‘கொட்டு’வாங்கிக் கொண்டு நிற்கிறார்கள்)
*மிளகுக்கும் ஏலக்காய்க்கும் இந்தியா வந்து நம்மை அடிமைப் படுத்தியவன் இன்று ‘பட்டர் சிக்கனுக்கு’ இங்கு வந்து அடிமையானது தான் வரலாறு. (வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!)
*வெயில் காலத்தில் ஊரை காலி செய்து விட்டு, ஏதாவது ஒரு ஏரிக்கரையில் அமர்ந்து, குச்சியில் சொருகிய செத்த கோழியை வேக வைத்துக் கொண்டு இருப்பார்கள். (‘கிச்சன் நிஞ்சாவின்-பார்பிக்யூ ஸ்பெஷல்’!)
*வெள்ளைக்காரிகள், பூனையிடம் பாசம் காட்டி புருஷனை விட்டு விட்டு, சிங்கம் போல சிங்கிள்-மாம் தகுதியோடு, ‘புருஷனிடம் புடுங்கிய பாதி பணத்தில்’ ‘ப்யூட்டி பார்லர்’ சென்று கொண்டு இருப்பர். (வெள்ளை-கைகாரிகளின்- அதாவது ‘சிங்கிள்-மாம் காரிகைகளின்’ கலாச்சார நிதர்சனத்திற்க்கு ஒரு சாட்டையடி!)
பின்குறிப்பு:
அன்று சுவாமி விவேகானந்தர் சிகாகோ நகரம் விஜயம் செய்த போது(1893), இந்த வான்கூவர் மண்ணில் கால் பதித்ததை மனதில் கொண்டே தான், ‘இந்த நகரை’ நம் கனடா குடியேற்றத்தின் போது (2000) தேர்ந்தெடுத்தோம். வந்த பின்னர் தான் தெரிந்து கொண்டோம் ‘வான்கூவர்’ ஒரு இயற்கை எழில் கொஞ்சும் பூமியென்று!
ஆனால், இன்று இந்த பதிவின் முலம் வான்கூவரின் அழகியலை கலைநயத்தோடு, மேலும் விரிவாக தெரிந்து கொண்டோம்.
“சொன்னால் புரியாது, இது ஒரு சொர்க்க பூமி” என்றும்,
“இந்த நகரம் அழகின் மறு அவதாரம்’ என்றும்
சொன்ன
நம் ‘அவதார்-2 ஆர்க்டிக் ஹீரோ’வின் வார்த்தைகள் சத்தியத்தில் பொதிந்தவை!
அவர்களுக்கு கோடானுகோடி நன்றிகள்!!
அவரது கலைப்பயணம் மென்மேலும் செழித்தோங்க நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!
இந்த பகுதியில் எங்களை Vancouver அழைத்து சென்றமைக்கு நன்றி. இயற்கை எழில் மிக்க அந்த சொர்க பூமியை உங்கள் எழுத்துக்கள் மூலம் கண்டுகொண்டோம் . உங்களின் இந்த பயண கட்டுரை என்னை லேனா தமிழ்வாணன் அவர்களின் பயண கட்டுரையை நினைவு கூற செய்கிறது. அருமையான பதிவு . ஃப்ரேஸர் நதியோரத்தில் தங்க தேடல் … மனிதனின் பொருள் தேடல் … மக்களின் கலாச்சாரம் … வெயில் தேடும் ஜீவன்கள் … பழைய நண்பரின் ஈமெயில் … ஆர்டீக் இன் பயணம் ஆரம்பம் … ஆவலுடன் அடுத்த அத்தியாயம் நோக்கி ….
Palaniswami Rathanaswami நிறைகுடம் தளும்பாது எனும் அன்னைத் தமிழ் முதுமொழியை மெய்பிக்கும் வகையில் அமைதியாய் உள்ள ஶ்ரீதரினுள் எத்தனை பரிணாமங்கள்!
மரபியல் முனைவர், வரைபடக் கலை வல்லுனர், நிழற்படப் பிடிப்பு நிபுணர், குரல் வளக்கலை கோமான், உலகின் நான்கில் ஒரு பங்கு நாடுகளில் பயணம் செய்தவர், மென்பொருள் படைப்பாளி, மயிலின் பிரம்மா, பின்குரல் ஒலிப்பவர், வசனம் எழுதும் வாய்ப்புப் பெற்றவர், திரைத்துறை அனுபவசாலி, திக்கெட்டில் ஒன்பதாவதாக ஒன்றையும் இணைத்தவர், இத்தனைக்கும் இடையிலும் பயணக்கட்டுரை எழுத்தாளர், அதையும் அழகியலோடு ஆர்வத்தைத் தூண்டும் வகையில் எழுதக் கூடியவர் – ஒருவருள் பலரா அல்லது பலரிணைந்த ஒருவரா …..
அனைவரையும் அனைத்துப் பரிணாமங்களையும் மேலும் மேலும் காண ஆவலுடன் காத்திருப்போம்.
நம் ஆர்க்டிக் ஹீரோ- “ஶ்ரீதரின்” பன்முகப் பரிமாணங்கள் மற்றும் அவர் வளர்ச்சி பெற்ற பரிணாமங்கள் பற்றியும்,
மற்றும் “அவதார் 2 – கிச்சன் நிஞ்சா” இன்றுவரை எடுத்துள்ள பல்வேறு அவதாரங்ளைப் பற்றியும்,,
நம் வணக்கத்திற்குரிய இனிய பிதாமகர் “டாக்டர் சுவாமி அவர்கள்” இங்கு பதித்துள்ள கருத்துக்கள் ஒவ்வொன்றும்…
முத்து முத்தானவை! சத்தியமானவை!
“சாகித்திய அகாடமி விருதுக்கு” ஒப்பானவை!!