” நீங்கள் உடனடியாக டெல்லி வரமுடியுமா?”

முகேஷ், ஆங்கிலத்தை ஹிந்தியில் ஜாடையில் பேசினார்.

நான் ” ஹ்ம்ம்.. வருகிறேன். எதற்காக?” என்று தமிழ் வாடையில் ஆங்கிலத்தில் அவரிடம் கேட்டேன்.

ஒரு வாய்ஸ் டெஸ்ட் எடுக்கவேண்டும். நீங்கள் பேசிய ஒரு ஒலிப்பதிவை கேட்டோம். எங்களுக்கு உங்கள் குரல் பிடித்து உள்ளது. ஒரு நாளில் வேலையை முடித்துவிடலாம். நீங்கள் சரி என்றால், எங்கள் அலுவகத்தில் இருந்து டிக்கெட் அனுப்புகிறோம் என்றார்.

அது நாள் வரை நான் Voice-Over செய்தது கிடையாது. Voice Over Artist என்றால் – குரல் நிபுணர் அல்லது வர்ணனையாளர் அல்லது சிறப்பு குரல் நடிகர் என்று பொருள். முன் பதிவு செய்யப்பட்ட படம், விளக்கக்காட்சிகள், அல்லது, ஆவணப்படங்கள் எடுத்தப்பின், அவற்றிற்கு பின்னால் ஒரு ” கர கர ‘ ஆண் குரலோ, இனிமையான பெண் குரலோ பேசும். இந்தக் குரல் படத்தை பொருத்தும், ஒளிப்பதிவின் கருத்துக்கு ஏற்ப ஒரு modulation-ல் பேசிக்கொண்டு இருக்கும். அது ஓடும் அந்த படத்தோடு ஒத்து பேசும். இது தான் Voice-Over.

எடுத்துக்காட்டாக ” You Watching BBC” என்பதற்கும் ” உலக தொலைக் காட்சிகளில் முதல் முறையாக’ என்பதற்கும் உள்ள குரலின் வித்யாசம், நோக்கம் உங்களுக்கே புரியும். பேசுபவர் அதை ரசித்து பேசவேண்டும்.

Low rez jpeg for web use only

அதுநாள் வரை, நான் எடுத்த பல படங்களுக்கு, ஆஸ்தான Voice – Over Artist கலைஞர் டிவி புகழ் ” SAC Vasanth” சார் தான். இவர் ஒரு சிறந்த கலைஞர் மற்றும் புகழ்பெற்ற Magician. இவர் ஒரு நல்ல Voice Over Artist என்பது பலருக்கு தெரியாது. அவர் வாய்ஸ் கொடுக்கும் அழகே தனி. வெண்கலம் அவர் தொண்டையில் தாண்டவமாடும். என் வேலை ஸ்கிரிப்ட் எழுதுவது மட்டுமே. Voice – Over Artist க்கு என்று ஒரு பேங்க் உண்டு. இதில் உலக தரமான வாய்ஸ் கொண்ட கலைஞர்கள் இருப்பார்கள். சாம்பிள் பார்த்து பொருக்கி எடுத்து அழைக்கலாம். http://www.voicebank.net (இது போல் பல தளங்கள் இந்த சேவையை செய்கின்றன). அதுநாள் வரை என் வாய்ஸ் எந்த வாய்ஸ் பாங்கிலும் பதியவில்லை. பின் எப்படி முகேஷ் என்னை அழைத்தார்?

இந்த டெல்லி உரையாடல் நடப்பதற்கு ஒரு மாதம் முன்புதான் சென்னையில் ஒரு Corporate Movie ஒலிப்பதிவு செய்ய ஒரு ஸ்டுடியோவிற்கு போயிருந்தேன். எனக்கு முன்னால் ஒரு ஒலிப் பதிவு நடந்து கொண்டு இருந்தது. பேசுபவர் சொதப்பி கொண்டு இருந்ததால் எனக்கு கொடுத்த டைம் தள்ளிப்போனது. ஏதோ ஒரு குருவியைப் பற்றி scientific presentation அது. Scientific Terminologies பேசுபவர் வாயில் நுழையவில்லை. எனக்கு நேரம் வீண் ஆனதால் அவருக்கு Scientific Terminologies உச்சரிப்பை சொல்லிக் கொடுக்க, நான் recording ரூமில் மைக்கை பிடித்து Scientific Terms-சை படித்துக் காட்டினேன். அவரும் அதன் படியே படித்தார்.
இது முடிந்து ஒரு மாதம் கழித்துதான் இந்த டெல்லி அழைப்பு. ஒலிப்பதிவு செய்த நிறுவனம் நான் பேசிய Unedited பிரதியை கேட்டுப் பார்த்தது. பேசியவர் குரலை விட சொல்லிகொடுத்த வாய்ஸ் பிடித்து போனதால்தான் முகேஷ் என்னை அழைத்துள்ளார்.

இதற்குதான், பெண் பார்க்க மாப்பிள்ளை வரும் போது, கல்யாண பெண்ணை விட சுமாராக இருக்கும் பெண் தோழிகளை கூட இருக்கும்படி பார்த்துக் கொள்வார்கள். அப்போதுதான் மாப்பிள்ளைக்கு பெண் பிடிக்கும். உலகம் எப்போதுமே “Comparative Analysis” – ல் தான் நகரும், மணமகன் உட்பட.
பாவம் அந்த திருச்சிக்காரர். நான் சொல்லிகொடுக்க போய் அவரின் கல்யாண வாய்ப்பை தட்டிப் பறித்தேன். எனக்கும் அந்த நிறுவனத்திற்கும் நிட்சயம் முடிவானது. இடம்: டெல்லி.

முகேஷ் இணைப்பை துண்டித்த சில மணி நேரத்தில், மும்பையில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. பதினெட்டு வயதைப் போல் அந்த 40 வயது பெண்குரல் காட்ட முயற்சித்தது. என்னிடம், கொஞ்சி கொஞ்சி பேசி, ஊட்டியில் எனக்கு பிரசவம் பார்த்த செவிலியர் யார் என்பதுவரை என்னிடம் இருந்து கறந்து விட்டது. முடிவில் டிக்கெட் ரெடி என்று சொல்லும்போதே என் முதல் Generation Iphone சிணுங்கியது. அழை பேசியை வைக்கும் முன் அந்த, 20-40 யிடம் கேட்டேன், நீங்கள் எந்த நிறுவனம்?

We are calling from டிஸ்கவரி சேனல் என்று சொன்னது.

நான் அதிர்ச்சியில் தலை சுற்றி படுக்கையில் விழுந்தேன்.

அதிர்ச்சி கொடுத்தது டிஸ்கவரி சேனல் என்பதால் என்னவோ என்னை தலையை சுற்றி காங்கோ நாட்டு வரிக்குதிரைகள் ஓட அதை ஆப்ரிக்க க்ரூகர் பூங்கா சிங்க குட்டிகள் துரத்தி பிடிப்பது போல் காட்சிகள் கண் முன் பிம்பங்களை ஏற்படுத்தின. அதற்குப்பின் என் வாழ்கையில் நடந்தவை அனைத்தும் ஒரு சுவாரசியம் நிறைந்த பயண வாழ்க்கை.

சொன்னபடி, டெல்லி பறந்தேன், Creative உலகில் என்னை மீண்டும் பிறக்க வைத்தார்கள். பேச வேண்டும். ஒரு வரியை 50 முறை சரியாக வரும் வரை பேசவேண்டும். எதற்கு 50 முறை பேசவேண்டும் என்று நினைக்கலாம். நீங்கள் இதை முயற்சி செய்து பாருங்கள். தேவை ஒரு ஸ்டாப் clock .

கீழ்கண்ட வாக்கியங்களை 40 செகண்ட் நேரத்தில் ஒரே சீராக, Modulation உடன் படித்து பாருங்கள்.

Conditions:

1. 40 second-க்கு குறைவாகவும் பேசக்கூடாது, அதிகமாகவும் பேசக் கூடாது.
2. வரிக்கு வரி தேவையான அளவு இடைவெளி இருக்கவேண்டும்
3. உச்சரிப்பு – வெள்ளைக்காரன் தோக்கனும்

dynasaur

இதுதான்:

This little mammal is a scavenger.
Called Didelphodon,she is a marsupial and specializes in raiding abandoned dinosaur nests.
This evening, she could be in luck. Unfortunately, the smell of the nest blinds her senses to danger.
The end of the Cretaceous.

இதைத்தான் Script என்பார்கள். ரெகார்டிங் ஸ்டுடியோவில், Sound Proof Room ஒன்று இருக்கும். இதில் நின்றுகொண்டு நீங்கள் பேசும் போது எதிரே திரையில் இதற்கான படம் ஒலியில்லாமல் ஓடும். நீங்கள் இந்த வாக்கியத்தை பேசும் வரை மீண்டும் மீண்டும் ஓடவிட்டு கனகச்சிதமாக வரும்வரை திரும்ப திரும்ப பேசவேண்டும்.
இப்படி பேசியவன், பின்பு இதற்கான Script எழுதவும் ஆரம்பிதேன். Script எழுத, என் கண்களையும் காதுகளையும் திறந்தேன். நாம் எழுதும் நாலு வரியை, நாற்பது ஆயிரம் பேர் ரசிக்கவேண்டும். எழுதி எழுதி அழிக்கவேண்டும்.

நான் எழுதிய பக்ககங்களை விட கிழித்த பக்கங்கள் தான் அதிகம்.

பேச போனவன், ஸ்கிரிப்ட் எழுத ஆரம்பித்தேன். பின்பு, டிசைன், கேமரா, அனிமேஷன் என்று எல்லா வேலைகளிலும் இறங்கினேன். Creative Director – ஆக வலம் வந்த காலங்கள் என்றும் அழியாதவை. இந்த காலத்தை தனி புத்தகமாக கூட எழுதலாம். நினைக்கும் போது பறப்பேன். நினைத்த இடத்தில உறங்குவேன். உலகத்தில் 30 -க்கு மேற்பட்ட நாடுகளை சுற்றி பார்த்தேன். இதில் இனிமை என்னவென்றால் இதை அத்தனையையும் என் பகுதி நேரத்தில்தான் செய்தேன். அந்த கால கட்டத்தில் என் முழு நேரம் வேலை “Software Development” மட்டுமே.

இரவு ஏழு மணிக்கு என் நாள் துவங்கும். அமெரிக்காவில் காலை எட்டு மணி. அமெரிக்க நிறுவனத்திற்குத்தான் நான் Software செய்து கொடுக்கவேண்டும். வேலைகள் முடித்து தினம் காலை மூன்று அல்லது நான்கு மணிக்கு தூங்க செல்வேன். காலை ஏழு மணிக்கு எழுந்து மீண்டும் கணினி முன் அமர்வேன். அப்போது வியட்நாமில் காலை 9.30 மணி. மூன்று பேர் அடங்கிய குழுவை வியட்நாமில் வேலைக்கு அமர்த்தி இருந்தேன். அவர்களிடம் வேலையை செய்ய சொல்லிவிட்டு காலை உணவை முடிப்பேன். 8.30 மணிக்கு மீண்டும் வேலைக்கு ஆஜர். இந்தியாவில் வேலை பார்க்கும் Software Developers வருவார்கள். நான் என் Creative வேலைகளை காலை 9 மணிக்கு ஆரம்பிப்பேன். இது மதியம் இரண்டு மணி வரை ஓடும். இரண்டு பெரிய ப்ராஜெக்ட் மற்றும் 5-10 சிறிய project வேலைகள் நடந்து கொண்டு இருக்கும். இடை இடையே ஸ்கிரிப்ட் வேலைகளை முடிப்பேன். டிஸ்கவரி டீம் சிங்கப்பூரில் வேலை பார்க்கும். மதியம் இரண்டு மணிக்கு கண்கள் தூக்கத்தை தேடும்.தூக்க கலக்கத்தில்காரை ஓட்டி சென்று, மிலிட்டரி ஸ்கூல் முன்பு நிறுத்திவிட்டு தூங்கிவிடுவேன்.

இரண்டரை மணிக்கு மயில் கதவை வந்து தட்டும் . கதவை திறந்து, சுமையுடன் இருக்கும் மயிலின் இறகை அவிழ்த்து விட்டு கதவை சாத்துவேன். 2.30 மணிக்கு, மத்திய உணவை முடித்துவிட்டு தூங்க போவேன். இரவு 7 மணிக்கு எனக்கு காலை விடியும்.

இருட்டில் விழிப்பேன். வெளிச்சத்தில் தூங்குவேன்.

இப்படியாக ஓடிக் கொண்டு இருந்த என்னை நிறுத்தி ஒரு நாள், நீ சிங்கப்பூர் அல்லது ஆஸ்திரேலியா போய் வேலை பார்க்க முடியுமா என்றார்கள். ஆஸ்திரேலியா விசா வர இன்னும் 6 மாதம் காலம் ஆகும். என்ன செய்யலாம்?

ஏன் கனடாவிற்கு போக கூடாது? என்று தோன்றியது. 2001 ஆம் ஆண்டே என்னிடம் கனடா விசா இருந்தது. 2000 ஆண்டில், என் முதல் அயல் நாட்டு அலுவலகத்தை கனடாவில் உள்ள “White Horse – ல் ” தான் தொடங்கினேன் என்று பலருக்கு தெரியாது. ஒரு பிரஞ்சு கம்பெனியுடன் சேர்ந்து “Gaming Company” ஆரம்பித்தேன். அந்த கம்பெனி மீது, 2001 ஆம் ஆண்டு ஒசாமா குண்டு போட்டார்.

அதற்குப்பின் மீண்டும் 2009 ஆம் ஆண்டுதான் கனடா வர விழைந்தேன். மூன்று மாதத்தில் விசா வந்தது. விசா வந்தவுடன் நான் இருவரை அழைத்து பேசினேன்.

முதலில் அழைத்தது பேசியது என் நண்பர் மற்றும் என் வாடிக்கைக்காரர் – Matt Robson. ( http://www.atasd.ca/)

இவர் ஒரு நியூசிலாந்துகாரர். மனைவி ஒரு கனேடியன். கடல் சார்ந்த தொழில்நுட்ப வல்லுனர். ஜப்பானில் வேலை செய்து கொண்டு இருந்தவர், இந்திய கடலில் சுனாமி வந்த காலத்தில், இந்தியா வந்து சுனாமி வருவதை முன் கூட்டி சொல்லும் கனேடிய கருவியை இந்திய அரசாங்கத்திற்கு விற்க வந்தவர். கடல் மீது இந்த கருவிகள் மஞ்சள் நிறத்தில், கரையில் இருந்து பல கிலோமீட்டர் தொலைவில் மிதந்து கொண்டு இருக்கும். கடல் சீற்றம் வரும் போது, தகவலை செயற்கைகோளுக்கு அனுப்பி பின் அது Tsunami Warning Centre – க்கு அனுப்பி வைக்கும். இவருக்கு தேவையான அனைத்து Technical மற்றும் Logistics Software மற்றும் மார்க்கெட்டிங் materials செய்து கொடுத்தேன். நாங்கள் இருவரும் மீட்டிங் நடுவே கோவையில் தொழில் நண்பர் சந்திரசேகர் வீட்டு மீன் வறுவலை மாறி மாறி வலை போட்டு பிடித்து உண்போம். பேசும் போது, அவரின் ஜப்பான் நாட்டு வாழ்கையையும், நியூசிலாந்து இளமை பருவ அனுபவங்களையும், ஆஸ்திரேலியாவில் படிக்கும் போது மனைவியை சந்தித்ததையும் சிலாகித்து பேசி மகிழ்வார்.

ஹாய், மாட், நான் கனடா வருகிறேன் என்றேன். வா.. வா..!!!
உன்னை இந்நாடு கவரும். உலகின் மிக அழகிய நியூசிலாந்து விட்டு கனாடாவில் இருக்கிறேன் என்றால் புரிந்துகொள் என்றார். விக்டோரியாவில் மீண்டும் அவரை 2010 சந்தித்தேன். எங்களுக்கு ” தாய்லாந்து தேங்காய் தண்ணீர்” கொடுத்து உபசரித்தார் மாட் ராப்சன்.

அடுத்து அழைத்தது நண்பர் மற்றும் என் வாய்ஸ் குரு – ஆடம் பெர். Adam Behr. http://www.adambehr.com/

Adam

இவர் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு பின்னணி கொண்ட ஒரு சர்வதேச குரல் கலைஞர். இவர் முதுகலை நாடக கலை பட்டம் பெற்றவர். இவர் குரலை நீங்கள் எங்கும் கேட்கலாம். NATIONAL GEOGRAPHIC, DISCOVERY, CNN, CBS, BBC America, Sony, Coca-Cola,Electronic Arts,Harley-Davidson, Blockbuster, X-Box, BMW and என எதையும் இவர் விட்டு வைக்கவில்லை. இவரின் சிறப்பு அம்சம் ஆங்கில மொழியை உலக உச்சரிப்புகள் அனைத்திலும் பேசுவார். இவர் தென் ஆப்பிரிக்க வெள்ளையர். மனைவி கனேடியன். 6 மாதம் சவுத் ஆப்ரிக்காவில் இருப்பார், 6 மாதம் கனடாவில் இருப்பார். இவர் தான் discovery channel வாய்ஸ் Trainer. பல குரல் வித்தகர். எப்போதுமே இவருடன் ஒரு சூட்கேசில் மொபைல் ஸ்டுடியோ பயணிக்கும். நிமிடத்தில் கடையை விரித்து, ஒரு கூண்டு செய்து அதன் உள்ளே சென்று விடுவார். ரெகார்டிங், எடிட்டிங் எல்லாம் முடித்து விட்டு அந்த கூண்டில் இருந்தே உலகின் எந்த இடத்திற்கும் ரெகார்டிங் செய்து அனுப்புவார்.

ஹாய், ஆடம், நான் கனடா வருகிறேன் என்றேன். வா.. வா..!!! என் வீடு 6 மாதம் காலியாக இருக்கிறது, நான் ஆப்ரிக்கா போகிறேன். வேண்டுமென்றால் வந்து தங்கு என்றார்.

கோவையை விட்டு என் கனேடிய பயணம் 2010 அக்டோபர் மாதம் தொடங்கியது. மும்பை வழியே, லண்டன் வந்து பின்பு வான்கோவர் வரவேண்டும். மும்பையில் என் நண்பர் எங்களை அழைத்து சென்று உணவு வாங்கி கொடுத்தார். என் மகனுக்கு “Krish ” என்று போட்ட ஜாக்கெட் ஒன்றை ஆர்டர் செய்து வாங்கி வைத்து இருந்தார். சரியாக அது என் மகனின் உடலை போர்த்திப் பொருந்தியது. அதை பத்திரமாக வைத்து இவன் திருமணத்தின் போது, இவன் மனைவியிடம் காண்பிக்க அதை பொக்கிஷம் போல் பாதுகாத்து வைத்துள்ளேன். இந்திய மண்ணில் இருந்து கிளம்பிய போது என் மகனின் அளவுகோல் – Size தான் இந்த மும்பை ஜாக்கெட்.

லண்டனும் வந்தது. Air Canada – எங்களை, லண்டனில் இருந்து கனடா அழைத்து வரவேண்டும். லண்டன் விமான நிலையத்தில், விமானத்தில் அமர்ந்தது தான் தெரியும். அமர்ந்து தூங்கும் தூக்கம், தொண்டையை மட்டும் இல்லாமல் காதையும் சேர்த்து அடைத்தது. தண்ணீர் கேட்டேன்.

ஒரு 18 வயது அழகிய கனேடிய பெண், ராக்கி மௌன்டைன் புனித நீரை குப்பியில் அடைத்து தருவாள் என்று காத்து இருந்தேன். அறுபது வயது மதிக்கத்தக்க கிழவன் ஒருவன் வேண்டா வெறுப்பாக தண்ணீர் பாட்டிலை நீட்டினார். திரும்பி பார்த்தேன். பின்னால் ஒரு மூதாட்டி காபி கொடுத்து கொண்டு இருந்தார். சுடுகாட்டு பயணம் போல இருந்தது Air Canada பயணம். எதையும் குடிக்காமல் தூங்கிவிட்டேன். Air Canada என்றால் அந்த கிழவனும் கிழவியும் தான் நினைவில் வருகிறார்கள். இந்த படத்தில் உள்ளது போல் யாரும் இல்லை.

Aircanada

 

நான் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தபோது திடீரென்று, மயில் கூவியது…..

அப்பா இங்க பாருங்க..

என் இருக்கைக்கு முன் உள்ள திரையில் ஏர் கனடா விமானம் ஒரு புள்ளியாய் பறந்து கொண்டு இருப்பது ஒரு வரைபடத்தில் தெரிந்தது …

அப்பா, இங்க பாருங்க கிரீன்லாந்து ..

கீழே கிரீன்லாந்து, வடக்கே அக்டோபர் பனியில் ஆர்க்டிக் என்னை வா என்று அழைத்தது …

மீண்டும் என் ஆர்க்டிக் கனவு துளிர்விட்டது …

விமானம் வெள்ளை தேசத்தை நோக்கி பறந்தது கொண்டு இருந்தது …

 

 

தொடரும் …