கணபதி ஐயர் … கணபதி கணபதி ஐயர்னு ஒருத்தர் இருந்தார்.
விநாயகர் கோவில் அர்சகர். நல்ல மனுஷன்.
வீட்டு விஷேஷதுக்கு எப்பவும் ஸ்டேட் பேங்க் கடன்ல வாங்கிய TVS 50 ல் தான் வருவார்.

வீட்டில் இருக்கும் விநாயகர் சிலை கல்லில் செய்தது. செய்தது முருகேச ஆச்சாரி.
இவர் மட்டும் எகிப்த்து கிஜாவில் பிறந்து இருந்தால் இந்நேரம் The Great Sphinx சிலையை வடித்து இருக்க கூடும்.
என்ன செய்வது? இந்தயாவில் பிறந்து விட்டார்.
25 ரூபாய்க்கு சின்ன விநாயகரும், 60 ரூபாய்க்கு பெரிய விநாயகரும் செய்து விற்பார்.

சுண்டல், உளுந்து வடை, சுவீட் பொங்கல் எல்லாம் செய்துதான் சாமி கும்பிடுவோம்.
உளுந்து எப்பவும் ” நேசமணி நாடார் அண்ட் சன்ஸ்” கடையில் மட்டுமே நல்லா இருக்கும்.
அவர் கடையில் எண்ணெய் அவ்வளவு நல்லா இருக்காது.

எண்ணையில் பாமாயில் வாசனை வரும் என்பார்கள். பிசினஸ் மேன். அப்படித்தான்.
அதனால், எப்பவும் “நல்லியப்ப செட்டியார் ஆயில் மில்லில்” தான் தூக்கு சட்டியில் எண்ணெய் வாங்கி வந்து வடை சுடுவோம்.

சட்னி அரைக்க எப்பவும் “பாட்ஷா பாய்” கடையில்தான் தேங்காய் வாங்குவோம்.
அவர் தட்டி கொடுத்து நல்ல தேங்காய் கொடுத்தால்தான் சாமிக்கு உடைக்கும் போது நேராக உடையும்.
வெத்தலை பாக்கு – எப்பவும் தங்கவீரத் தேவர் கடையில்தான்.
வீரத்துக்கு அடையாளமா மீசை வெச்சு இருந்தாலும், கோவமே வராது அவருக்கு.

LKG, UKG யில் டான் பாஸ்கோவில் படித்தேன்.
பொட்டு வைக்காத மேரி மிஸ் தான் டீச்சர்.

சாந்தகுமார்தான் என் பிரண்ட். சுத்த பத்த-மாணவன்.
ஸ்கூலுக்கு அவன் எடுத்து வரும் தண்ணீர் பாட்டிலில் நம் கண் முன்னே எச்சை துப்பி வச்சுடுவான்.
யாரும் எடுத்து குடிக்க கூடாது என்பதுதான் நோக்கம்.
இப்ப அவன் டாக்டருக்கு படிசிட்டு எங்க ஊரில், மேரி மிஸ் பேத்திக்கு சீத பேதிக்கு ஊசி போட்டுட்டு இருக்கான்னு சொன்னங்க.

நான் சுமாரா படிச்சு, அரசு பள்ளியில் ஆறாவது சேர்ந்தேன்.
எங்க ஸ்கூலில் மொத்தம் இரண்டு சயின்ஸ் வாத்தியார்.
ஒருத்தர் பேர் ” ரெட்டியார்” வாத்தியார்.
இன்னொருத்தர் ஜெயின் வாத்தியார்.

இவங்க ரெண்டு பேரின் ஒரிஜினல் பேர் என்னனு இன்னைக்கு வரை தெரியாது.
எங்க ஸ்கூல் Drill மாஸ்டர் பேர் காதர்கான். அவர் ஏன் தொப்பையோட இருக்கார்னு நேசமணி பிள்ளைகிட்ட கேட்டேன்.
அவர் அதிகமா பிரியாணி சாப்பிடுவார்..அதனால பிரியாணி சாப்பிடுவது தப்புன்னு சைவ கிளாஸ் எடுத்தான் நேசமணி.

இதை கேட்ட Christopher தனபால் சிரிச்சான்.
இவன் எங்க எதிர்த்த வீடு. பணக்காரன். அவன் சம்மர் லீவுக்கு வருஷா வருஷம் மலேசியா போவான்.
அந்த காலத்தில் சிங்கப்பூர், மேலசியாவில் சொந்தம் இருந்தா அவனை பணக்காரன் என்பார்கள்.
பர்மாவில் இருந்து திரும்பி வந்து இருந்தா அவங்களை பிச்சைகாரங்க என்போம்.

மலேசியாவில் அவங்க அம்மா பொறந்தும் இருந்தும் தெருவில் ஒரு ஈ காக்கா கூட மதிக்காது.
காரணம் கேட்டா, அவன் converted Christian என்றார்கள்.
அது என்ன converted Christian? ன்னு கேட்டேன் .

அங்க இருக்குப் பார் மாதா பிரஸ் ..செவப்பா இருக்காரே மாதேயு…அவர்தான் ஒரிஜினல் Christian என்றார்கள்.
அப்ப, வீடுக்கு பக்கத்தில் அலேலூயானு, ஜால்ரா அடிக்கிறவங்க யார்னு கேட்டேன்.
அவங்க பெந்தகொஸ்து. அவங்க வேற குரூப் என்றார்கள்.

ஆனா, மூணு பேரும் பார்க்க நம்ம தமிழ் ஆளுங்க மாதிரிதானே இருக்காங்க என்றேன்.
உண்மையில் இவங்க மூன்று பேருமே converted, எங்கள மாதிரி ஒரிஜினல் யுரோசியன் இல்லை என்றான் ரமேஷ்.
அவங்க அப்பா கும்ப கோணத்தில் போஸ்ட் ஆபீசர்.  அவன் கணக்கில் கெட்டிக்கார புலி.

டவுட் கேக்க அவன் வீட்டுக்கு போனா, நாம் உட்காந்த திண்ணையை நாம் எழுந்து வரும் போது அவன் பாட்டி நம் கண் முன்னாடியே தண்ணி தெளிச்சு விடும்.
அதுக்கு அவன், விடு விடு …வீட்டுப் பெருசு அப்படித்தான் என்பான்.

தலைசுத்தி, மயக்கம் வந்து சரி தலைக்கு மேல் உள்ள பாரத்தை குறைக்க முடி வெட்டப் போனா…
ஊரில் மொத்தம் ரெண்டு கடைதான். அதுல ஒண்ணு, முருகன் அழகு நிலையம். ஓனர் முருகேசன்.
சூப்பர் மனுஷன். ஒரு குறிபிட்ட ஜாதி மட்டும் தான் அந்த தொழில் செய்யனும்னு எங்க ஊரில் எழுப்படாத விதி.

காரணம் கேட்டா அந்த தொழில் சுத்தம் இல்லாதது என்றார்கள்.
எனக்கு தெரிஞ்சு முருகேசன் எப்பவும் குளிசிட்டு சுத்தமா, நெத்தியில் பட்டை போட்டுட்டுதான் கடைக்கு வந்து முடி வெட்டுவார்.
அங்க முடி வெட்ட வரவங்கதான், குளிக்காம அழுக்கா லுங்கி கட்டிட்டு வருவாங்க.

தொழிலுக்கும் சுத்தத்துக்கும் சம்பந்தம் இருக்குனு சொல்வாங்க.
அதே ஊரில் கடன் வாங்க எல்லோரும் செல்லும் இடம் வாயில் பாண் பராக் போட்டு தெருவில் துப்பும் “மதன் லால் சேட்டு அடகுக் கடை”.

எங்க கரும்பு தோட்டத்துக்கு பெயரே “ஆச்சாரி ஷெட்”.
அச்சாரிக்கு எப்படி விவசாயம் தொழிலாகும் என்று கேட்டதுண்டு?

ஊருக்கு ஒதுக்கு புறமா காலனின்னு ஒரு இடம் இருக்கும்.
கடவுளின் குழந்தைகள் – ஹரியின் ஜனங்களை தனியாக ஒதுக்கி வைத்து இருப்பார்கள்.
ஏன் இந்த கொடுமை என்ற கேள்விக்கு இன்றும் கூட பதில் இல்லை.

பத்து வயசுக்குள்ள பத்தாயிரம் ஜாதி மேட்டகளை இந்த சமுதாயம்தான் நமக்கு சொல்லிக் கொடுத்தது.
சின்ன கெளன்டரும், தேவர் மகனும் தியேட்டரில் சக்கை போடு போட்டன.

ஜாதிகள் இல்லையடி பாப்பா எனும் புத்தகம் கிருஷ்ணசாமி முதலியார் பள்ளிக்கூட லைப்ரரியில் லோனுக்கு கிடைத்தது.
அதை வாங்கி வந்து சுமாராகத்தான் படித்து பாஸ் ஆனேன்.

ஏன் குறைந்த மதிப்பெண் வாங்கினேன் என்று யோசித்தேன்.
படிக்காமல் விட்டு போனது ஏராளம் உள்ளது என்று அரசாங்கமே சொல்லிக் கொடுத்தது.

பேர் அறிஞர் அண்ணாதுரைக்கு மரியாதை கொடுக்கும் அண்ணா University ல் ஒரு புக் லெட் கொடுத்தார்கள்.
A for Agamudayar முதல் Z for Zebra வரை தமிழ்நாட்டில் உள்ள எல்லா ஜாதிகளையும் வரி வரியா லிஸ்ட் போட்டு வரிசை படுத்தி இருந்தார்கள்.

OC என்று Category ல் என்னைவிட அறிவாளியான கும்பகோண ரமேஷ் மேல் படிப்பு படிக்க முடியாமல் வெளியே தூக்கி அடிக்கப்பட்டான்.
அவன் கணக்கு அறிவு ஒரு ரூபாய்க்கு எந்தனை 25 பைசா போஸ்ட் கார்ட் கொடுக்கலாம் என்பதோடு முடிந்து போனது.

சமூகத்தில் அறிவுள்ளவனுக்கு படிக்க வழி இல்லை.
இன்னும் சிலருக்கு சமூகத்திலேயே இடமில்லை.

உலகில் எதுவுமே சமன் கிடையாது என்றார்கள்.
அது சமனும் ஆகாது என்றார்கள்.
அப்படி சமனாகும் போது இந்த உலகமே இருக்காது என்றார்கள்.

அதனால், மனிதனை பிரிக்க ஜாதியை உருவாக்கினார்கள்.
இதை எழுதி வேதம் என்றார்கள்.

தொழிலை கீழ் மேல் என்று பிரித்தார்கள்.
ஜாதிக்கு ஒரு தொழிலை கொடுத்தார்கள்.

எல்லோரும் பின் பிரிந்தார்கள்.
பிரிந்தவர்கள் தனியே கூடினார்கள்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றார்கள்.
சுந்தந்திர இந்தியாவில் பத்து பைசா மிட்டாய் எல்லோரையும் சந்தோஷப்படுத்தியது.
இந்து பத்திரிக்கையில் வரும் பக்ரித் பெருநாள் வாழ்த்தை உலக சமாதானம் என்று புரிந்து கொண்டார்க்கள்.

இன்று நாம் வாழும் வாழ்க்கை ஒரு முக்கோண வாழ்க்கை.
ஒரு காலத்தில் கூரிய முக்கோணத்தில் மேல் பகுதியில் சிங்கம் போல் அமர்ந்து கீழ் உள்ள மான்களை வேட்டை ஆடினார்கள்.
அப்படி இருந்தும் காட்டில், சிங்களை விட இப்போது மான்கள்தான் கூட்டம்தான் அதிகம் உள்ளன.

மானுக்கு உணவான புள் எளிதில் கிடைக்கும். ஆனால், சிங்கத்துக்கு உணவு மானை  தினம் வேட்டை ஆடினால்தான் கிடைக்கும்.
காட்டில் சிங்கமாக வாழ்வதை விட மானாக வாழ்வது எளிது.

இது சிங்கத்துக்கும் தெரியாது. மானுக்கும் புரியாது.
அடித்து அடித்து சாவார்கள்.

செத்தவுடன் வெட்டியான் கோவிந்தன்தான்  வந்து புதைப்பான்.
கணபதி ஐயர் வந்துதான்  தெவஷம் செய்வார்.