இது சமூக வலை தளங்களில் கிண்டல் செய்வது போல், ஒரு மகா மோசமான, மட்டமான படம் எல்லாம் இல்லை. கண்டிப்பாக மிஸ் செய்யாமல் பார்க்கவேண்டிய படம்.

ஒரு பெரிய நடிகரின் படத்தை வழக்கம் போல் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்க்க போனால் கண்டிப்பாக இது எல்லோரும் பிடித்தே ஆகா வேண்டும்.

கருத்து சொல்றேன் பேர்வழினு ஆள்ளாளுக்கு பக்கெட்டும், துடைப்பமும் எடுத்துட்டு கழுவி ஊத்த கிளம்பிட்டா யார்தான் மக்களுக்கு உண்மையா விமர்சனம் எழுதுவது?

இவனுங்களுக்கு எப்பவுமே இதே வேலையா போச்சு.

எதற்கு எடுத்தாலும் தெலுங்கு பாகுபலியையும், பண்டரி பாய் நடித்த 1974 லில் வெளிவந்த “பக்த கோர கும்பரா” என்ற ஹிந்தி படத்தையும் இப்போது வரும் தமிழ் படங்களோடு ஒப்பிட்டு பேசுவதே வழக்கமாகி விட்டது.

இது கண்டிப்பாக குழந்தைகளுடன், குடும்பத்துடன் சென்று சுமார் மூன்று மணி நேரம் அமர்ந்து ரசிக்கும் action pack பாண்டஸி படம் மட்டும் அல்ல. இது பெரியவர்களையும் ரசிக்க வைக்கும் மாயஜால திரைக் காவியம்.

இதுவரை ஒரே மாதிரியாக action பார்முலாவில் நடித்து வந்த விஜய் இந்த படத்தில் ஒரு புதிய முயற்சியை எடுத்தது வரவேற்கதக்கது.

இனி, இது போன்ற புதிய முயற்சிகளை கண்டிப்பாக விஜய் இனி வரும் படங்களில் எடுக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களின் அவா.

இது தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்தை நோக்கி இட்டு செல்லும் ஒரு மிக முக்கிய முயற்சியாகவே தெரிகிறது.

அப்படி என்ன இந்த படத்தில் சிறப்பு என்கிறீர்களா ? ஒன்றா இரண்டா,,,பட்டியல் இட …என்னால் முடிந்த சில.

படத்தின் மிக முக்கிய முதல் பிளஸ்… படத்தின் திரைக்கதை.

இது ஒரு பண்டசி திரைப்படம் என்பதால் லாஜிக் எல்லாம் பார்க்க வேண்டியதில்லை.

இது ஹாரி பட்டர் ரக கற்பனை கதா பாத்திரங்கள் கொண்ட கதை. வேதாள உலகம் தான் படத்தின் மைய்ய கரு.

1956 இல் வெளிவந்த பெர்னோ மெலோ மற்றும் அலெக்ஸாண்டர கான்ச்டாண்டினோ நடித்த ” ப்ளாக் ஆர்பியஸ்” போன்ற ஒரு கலர்புல் கற்பனை காவியம் இது.

படத்தின் அட்டகாசமான ஒன் லைன் கதை இதுதான். தந்தையை கொன்ற ஒரு வேதாளத்தை டைம் travel செய்து ஒரு மகன் எப்படி ராணியை காப்பாற்றுகிறார் என்பதே.

இதுவே உலக வரலாற்றில் முதல் முறையாக மகன் தந்தையை கொன்றவனை பழிவாங்கும் நியோ திரில்லர் action கதை கொண்ட முதல் படம்.

இப்படி ஒரு சிக்கலான அப்பா மகன் கதையையை இயக்குனர் சிம்பு தேவன் எப்படி சிந்தித்து எழுதினார் என்பது ஒரு பெரும் வியப்பு என்றால், இந்த கதையை கேட்டு 33 கோடி வாங்கி நடிக்க ஒத்துக் கொண்ட விஜய் அண்ணாவை என்னவென்று சொல்வது.

கதையில் வேதாள உலகின் ரட்சகனாக வரும் விஜய் சண்டையிலும் சரி, நடிப்பிலும் சரி பின்னி பெடல் எடுத்து உள்ளார் என்று சொன்னால் மிகையாகாது. ஒரு சில காட்சிககளை படம் பிடிக்கும் போது வயிறு சரியில்லை போலும்.

நெளிந்தாலும், இவருக்கு இந்த சரித்திர ஹீரோ லுக் பொருந்தி போகிறது.

விஜய் costume மில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். ஏதோ நம்ம ஊருகழை கூத்தாடி போல் வருவது மட்டுமே மனதை வருந்த வைக்கிறது.

இதில் ராணியாக வரும் ஸ்ரீ தேவியும், பவள மல்லியாக வரும் ஷுருதி ஹாசனும், மாதங்கியாக வரும் ஹன்சிகாவும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்தது படத்தின் மிகப்பெரிய பிளஸ்.

படத்தின் இன்னொரு பிளஸ் ஷுருதி ஹாசனின் குரலும், அந்த பேசும் கிளியின் வாய்ஸும். அப்படியே ரெகார்ட் செய்து தினம் தினம் காலையில் கேட்கலாம். சோ ஸ்வீட்.

விஜயின் தந்தையாக வரும் பிரபு நடிப்பில் பல இடங்களில் பழைய சிவாஜியை ஞாபகப்படுத்துவதை யாரும் மறுக்க முடியாது.

அவரின் ஒரு கையை வில்லன் வெட்டிய போதும் ஒரு பழைய சிவாஜி ஷாலை அணிந்து அந்த கையை உள்ளே மறைத்ததில் இயக்குனரின் டச் தெள்ள தெளிவாக வெளியே தெரிகிறது.

படத்தை இயக்குனர் சிம்பு தேவன் தோய்வில்லாமல் கதையை நகர்த்திய விதம் அலாதி. இதற்கு பெரிதும் துணையாய் இருப்பது படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள்.

அதிலும் அந்த பேசும் கிளி, குள்ள மனிதர்கள், நேரோலேக் பச்சை பெயிண்ட்டு, குண்டு ஆமை கரெக்டர்கள் என்று ஆளுக்கு உள்ளே புகுந்து கதைக்கு பலம் சேர்த்து படத்தையே அதகளம் செய்துவிட்டார்கள்.

இவ்வளவு சீரியஸா போகும் கதையில் ஏகப்பட்ட இடத்தில் காமெடி. சிரித்து சிரித்து கண்களில் தண்ணீரே வந்துவிட்டது.

அடுத்தது, படத்தின் ஆர்ட் direction. ஒரு நூறுக்கு நூறு அடி மூங்கில் காட்டில் செட் போட்டு எடுத்து இருந்தாலும் இதை ஒரு புதிய வேதாள உலகம் போல காண்பித்தது ஒரு கலை ரசனை.

அடுத்து படந்தின் கலர் டோன். Adobe போட்டோ ஷோப்பில் உள்ள அத்தனை கலர்களும் படத்தில் சீனுக்கு சீன் வந்து போகும். இதைத்தான் கலர்புல் படம் என்று சொல்லுவோம்.

படத்தில் ஒரு பாடல் மட்டுமே சுமார். மற்ற நான்கும் சூப்பரோ சசூப்பர் . ரசிகர்கள் தியேட்டரில் எழுந்து ஆடியதால் கேமெரா பிரிண்டில் சரியாக தெரியவில்லை.

பின்னணி இசையில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் இது 1944 கில் ஐரோப்பாவில் நடந்ததை, கற்பனையில் எடுத்த சக்கை போடு போட்ட ஸ்பானிய பாண்ட்சி படமான “பான்ஸ் லாப்ர்ய்ந்த்” லெவெலில் வந்து இருக்க வேண்டிய படம். ஜஸ்ட் மிஸ்.

சினிமா அறிவு இல்லாமல், தமிழ் சினிமாவின் வரலாறு தெரியாமல் எதற்கு எடுத்தாலும் குற்றம் கண்டுபிடிக்கும் இந்த சமூக வலைதள அப்பறடீன்சு எழுத்தாளர்கள் இருக்கும் வரை தமிழ் சினிமா உலக வரை படத்தில் இடம் பிடிப்பது கடினமே.

எதற்கு எடுத்தாலும் இது சொட்டை, இது நொள்ளை என்று பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களை இன்டர்நெட்டில் கலாய்ப்பது ஒரு மன நோய். இது ராஜு பாயில் ஆரம்பித்து இன்று புலி வரை தொடர்வது தமிழ் சினிமாவின் சாபக்கேடு.

எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஜஸ்ட் லைக் தட் ஒரு மூன்று மணி நேரம் போவதே தெரியாமல் எல்லோரும் கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம்தான் எங்கள் அண்ணா விஜய் நடித்த புலி.

குறைகள் இல்லா வாழ்க்கை இல்லை… குறைகள் இல்லா படங்களும் இல்லை.

இருப்பினும் இதை கண்டிப்பாக ஜப்பானிய இயக்குனர் அகிரோ குரோசோவா 1942 இல் எடுத்து வெளிவந்த Seishun no kiryu (Wind Currents of Youth) என்ற படத்தோடு ஒப்பிடாமல் இருக்க முடியாது.

என்ன அங்காங்கே சில குறைகள் உள்ளதை மறுக்க முடியாது. உதாரணத்துக்கு எடிட்டிங்கை சொல்லலாம்.

படம் கொஞ்சம் நீளம். இன்னும் கொஞ்சம் கவனமாய் செய்து இருந்தால் இது 1975 ல் ஜாக் நிகல்சன் மெண்டலாக நடித்த ” அங்கே ஒரு காக்கை குஞ்சு ( One Flew Over the Cuckoos Nest” படத்துக்கு இணையாக பேசப்பட்டு இருக்கும்.

படம் மொத்தம் 154 நிமிடம்.

டைட்டில் போட்டவுடன் முதல் இரண்டு நிமிடத்தில் ஒரு முட்டையில் இருந்து பேசும் கிளி உடைத்துக்கொண்டு வெளியே வரும்.

அங்கிருந்து ஒருசுமார் 75 நிமிடத்தை கட் செய்து, பின்பு இடைவேளையில் இருந்து இன்னொரு 75 நிமிடத்தையும் end கார்டு போடும் வரை கட் செய்து இருக்கலாம்.

மீதி உள்ள இரண்டு நிமிடத்தை விஜய.டி ராஜேந்தர் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய “கொடுக்கா புலி” அடுக்கு வசனங்களை சேர்த்து நான்கு நிமிடமாக படத்தை சுருக்கி எடுத்து வெளியிட்டு இருந்தால் இன்னும் அருமையாக இருந்து இருக்கும்.

என்னை பொறுத்தவரை இந்த படத்தில் குறைகள் எதுவுமே இல்லை.

இரண்டாம் பாகம் இல்லாதது மட்டுமே குறை.

இந்த படம்தான் தமிழ் சினிமாவின் முதல் மைல் கல் என்பதால் இதற்கு மதிப்பெண் கிடையாது.

இனி வரும் படங்களுக்கு இந்த மைல் கல்லில் இருந்து அளந்துதான் இனி மார்க் கொடுக்கணும்.

மன்னித்து விடுங்கள்.