உயிர் வாழ Oxygen தேவை.
நான் ஐந்தாம் வகுப்பில் படிக்கும் போது ஒரு நாள் வாத்தியார், சுவாசக் குழாய் படம் போட்டு நாம் உயிர் வாழ Oxygen தேவை என்று பாடம் எடுத்தார்.
அன்று சாயுங்காலம் விளையாடிக் கொண்டு இருந்த எனக்கு அதிகம் மூச்சு வாங்கியது.
வியர்த்தும் கொட்டியது.
புளிய மரத்தடியில் உட்காந்து ஓய்வு எடுத்தேன். அப்போது, வாத்தியார் எனக்கு Oxygen பற்றி சொல்லிக் கொடுத்தது ஞாபகம் வர, கூடவே ஒரு பெரிய சந்தேகமும் வந்தது.
மூச்சு நாம் விடுகிறோமோ இல்லை, உடம்பு அதுவா விடுகிறதா என்று?
விளையாடி அதிகம் மூச்சு வாங்கியதால், பயம் என்னை அறியாமல் திடீரென்று தொற்றிக்கொண்டது. அதிகம் விளையாடி ஏதோ, என் மூச்சு குழாயில் தப்பு நடந்து விட்டது என்று பயந்துவிட்டேன். ஏன் வியர்த்துக் கொட்டுகிறது? ஏதாவது பிரச்சனையா? என்று யோசிக்க ஆரம்பித்தேன்.
மூச்சு விட கஷ்டமாக இருப்பதைபோல் உணர்ந்தேன்.
சரி இனி மூச்சை நாமே கஷ்டப்பட்டு இழுத்து, பின் நாமே விடவேண்டியது தான் என்று பயந்துவிட்டேன்.
பயத்தில் ஓடி சென்று, விளையாடிக்கொண்டு இருந்த சில பசங்ககிட்ட கேட்டேன் ” டேய், உங்க மூச்சை நீங்க விடுறீங்களா இல்லை உடம்பு அதுவா இழுத்து, இழுத்து விடுதா என்று?
பசங்க குழம்பி போய், இல்லைடா… நாங்க மூச்சை இழுக்க மாட்டோம்….அதுவாதான் இழுத்து விட்டுகுது…ஏன் உனக்கு ஏதாவது பிரச்சனையா…நீ ஏன் மூச்சை இவ்வளவு வேகமா இழுத்து, இழுத்து விடுற ….? என்று கேட்டார்கள்.
நான் பயந்தது சரி தான். விளையாடும் போது ஏதோ எனக்கு மூசுக் குழாயில் பிரச்சனை வந்துவிட்டது என்று நம்பிவிட்டேன். நாளைக்கு அப்பாகிட்ட சொல்லி டாக்டரை பார்க்கணும், அதுவரை மூச்சை நானே இழுத்து, நானே விட்டாகனும்.
நைட் முழுவதும் தூங்காமல் மூச்சை கஷ்டப்பட்டு இழுத்து பின், மெதுவாக நானே விட்டுக் கொண்டு இருந்தேன். மூச்சு விடாமல், நான் மறந்து தூங்கி விட்டேன் என்றால் oxygen இல்லாமல் செத்துவிடுவேன் என்று நம்பினேன்.
உடனே science புத்தகம், எடுத்து வாத்தியார் எடுத்த பாடத்தை மீண்டும் மூச்சு முட்ட படித்தேன். உயிர் வாழ Oxygen தேவை என்று இருந்தது.
துக்கம் தொண்டையை அடைத்தது. கூடவே வியர்த்தும் கொட்டியது. இவ்வளவு பெரிய உயிர் பிரச்னையை எப்படி வீட்டில் சொல்லுவது என்று பயம் வேறு.
எப்போது தூங்கினேன் என்று தெரியாது.
காலையில் எழுந்தவுடன், முதல் வேலையாக மீண்டும் மூச்சு விட ஆரம்பித்தேன்.
அப்போதுதான் யோசித்தேன்..தூங்கும் போது எப்படி மூச்சு விட்டேன் என்று?
அந்த நாள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்.
ஏன் என்றால், அன்று தான் என் மூளையை எனக்கு தெரிந்தே முதன் முதலில் உபயோகப்படுத்தி யோசிச்சேன்.
அப்படி வளர்ந்த மூளை 25 வயதுக்கு மேல் வளரவே இல்லை. அறிவியல் பூர்வம்மாக யாருக்கும் இந்த வயதுக்கு மேல் மூளை வளர்வதில்லை. வளர்ந்த மூளையில் வெறும் 5% மூளையை மட்டுமே மனிதன் பயன்படுத்துகிறான். மீதி மூளை இப்போது, பெட்சீட் போத்தி படுத்து தூங்கிக் கொண்டு இருக்கிறது.
குழந்தை பருவம் என்றுமே அக்ரோஷமானது . ஹார்மோன்கள் தினமும் ஹார்மொனிய பெட்டி வைத்து வாசிக்கும்.
வளர்ச்சி உடையது. வாழ இனிமையானது. கேள்விகள் ஆயிரம்கேட்க தோன்றும். பதில்கள் தேடி தினம் அலையும்.
பதில்கள் கிடைக்காத கேள்விகள் இருக்கும் வரைதான் மூளைக்கு வேலை.
வயதான பின்பு, கேள்விகள் கேட்பதை நிறுத்தி விட்டோம். பதில்களை அதிகம் சொல்கிறோம்.
குழந்தை பருவம் தான் மூளை வளரும் பருவம். 18 வயதோடு மூளை வளர்வது நின்றுவிட்டு பின் அனுபவம் வளர தொடங்கும். அப்போதே மூளை வேலை செய்வதை நிறுத்த தொடங்கும்.
வளரும் குழந்தைகள் கேள்வி கேட்டால் பொறுமையாக பதில் சொல்லுங்கள்.
காரணம், உயிர் வாழ Oxygen தேவை. மூளை வளர கேள்விகள் தேவை.
குழந்தையாய் இருந்து கேள்வி கேட்டு வளர்ந்த எல்லோருக்கும் பெரிய குழந்தைகளுக்கும், குழந்தை தின வாழ்துக்கள் !!1
மேலும் மூளையை பற்றி தெரிந்து கொள்ள இந்தம்மா சொல்வதை கேளுங்கள்.
http://ed.ted.com/lessons/the-mysterious-workings-of-the-adolescent-brain-sarah-jayne-blakemore
இப்படிக்கு,
வளர்ந்த குழந்தை
Leave A Comment