இருவது வயது ஜப்பானிய சப்பைக் கிளி, வண்டியை அசால்டாக பனியில் ஒட்டியது. வண்டி, வளைந்து நெளிந்து, கிளியின் சொல்படி பனியில் வழுக்கிக் கொண்டே போனது.

Leaving 2

 

பனி ரோடில் வண்டி ஓட்டுவது, பொண்டாடியிடம் வாதாடுவதற்கு சமம். கொஞ்சம் ஓவரா, அமித்தி பிடிச்சுட்டு, பின்னாடி நீங்களே நினைச்சாலும் நிறுத்த முடியாது. அது பாட்டுக்கு ஒரு சைடா போயிக்கிட்டே இருக்கும். நிறுத்தனும்னு நினைச்சாலும் நிக்காது.

இப்பிடி நடக்கும் போது நீங்க செய்ய வேண்டியது, பேசாம Steering Wheel – ளை, உங்க மண்டைய ஆட்டுற மாதிரி ஆடிக்கிட்டே இருக்கனும். கிடைசியா, எங்கயாவது போய் மோதி “டக்குனு” நிக்கும். முக்கியம்மா, அதுவே தான் நிக்கும். நம்ம வேலை, நமக்கு எவ்வளவு டேமேஜ் என்று கணிப்பதுதான்.

ஆனா, இந்த ஜப்பானிய சப்பைக் கிளி பலே கில்லாடி என்பது, அது வண்டி ஓட்டும் லாவகத்தை பார்த்தவுடன் புரிந்து போனது. வைட் ஹார்ஸ், ஒரு சின்ன கிராமம்தான். ஒரு பத்து நிமிடத்தில் விமான நிலையத்தில் இருந்து ஊருக்குள் சென்று விடலாம். போகும் வழியில் கிளி, வண்டியை ஒரு சிவப்பு சிக்னலில் நிறுத்தியது.

Leaving

சிக்னல் மேல், ஒரு பெரிய பச்சை நிற போர்டில், அலாஸ்கா ஹை வே (Alaska Highway) என்று , ஒரு அம்புக் குறியின் கீழ் எழுதி இருந்தது. இந்த புள்ளியில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர், தென் மேற்கு திசை சென்றால் “அலாஸ்கா” மாகாணத்தின் ஸ்காக்வே நகரம் சென்று விடலாம். மூன்று மணி நேர கார் பயணம் உங்களை அலாஸ்கா கொண்டு செல்லும்.

அந்த போர்டை படிக்கும் போதே ஒரு கிளர்ச்சி ……காரணம், இது லேசுபட்ட நெடுஞ்சாலை இல்லை…சில பேருக்கு இதில் முழு தொலைவையும் பயணிப்பது வாழ்க்கை லட்சியம்…எனக்கும் ஒரு ஆசை …இதுதான் என் அடுத்த பயண பாதை…

alaska_highway_map

ஒரு travel blog -ல் ஒரு அலாஸ்கா வாழ் அமெரிக்கர் எழுதி இருந்ததை இங்கே சொல்லியாக வேண்டும். வருடா, வருடம் கிருஸ்துமஸ் பண்டிகை முன் வாரம், அவர் வேலை செய்யும் ப்ளோரிடா – மியாமியில் இருந்து, அலாஸ்காவில் இருக்கும் அவர் குடும்பத்தை பார்க்க தன் பழைய காரில் பயணிப்பாரம். சுமார் 90 மணி நேரம் ஒரு வழி கார் பயணம். கிருத்துமஸ் கொண்டாட்டம் முடிந்து மீண்டும் 90 மணி பயணம் செய்து மியாமி வருவாராம். 17 வருண்டங்களாக இதை செய்யும் இவரிடம் “இது எப்படி சாத்தியம்? ஏன் நீங்கள் மியாமிக்கோ அல்லது அலாஸ்காவிற்கோ உங்கள் குடும்பத்தை இடம் மாற்றம் செய்ய கூடாது?, வருடா வருடம் அதுவும் காரில் ஏன் பயணிக்க வேண்டும், பறந்து போனால் சீக்கிரம் போய் சேரலாம்..” என்று கேட்டார்கள்.

Alcan

அதற்கு அவர் “இந்த அலாஸ்கா நெடுஞ்சாலையில் நான் பயணிக்கும் இந்த 2 வாரம் தான் ஒரு வருடத்தில் நான் வாழ்ந்த நாட்கள். 20 CD கொஞ்சம் நொறுக்கு தீனி, தேவையான காஸ் cans – அவ்வளவுதான், தனியாக நான் பாடிக்கொண்டே வண்டி ஓட்டுவேன். அலாஸ்கா நெடுஞ்சாலை ஒரு சாலை இல்லை..அது என் வாழ்வின் உயிர் நாடி. சில சமயம் அந்த நெடுஞ்சாலையில் வண்டி ஓட்டும் போதே இறக்கவேண்டும் என்று தோன்றும்” என்று எழுதி இருப்பார்.

என் மனம் சில வினாடிகள் இந்த நெடுஞ்சாலை பற்றி யோசிக்க ஆரம்பித்தது.

நீங்கள், காரில் ரோட் ட்ரிப் விரும்பி போகும் நபராக இருந்தால், நீங்கள் கண்டிப்பாக ஒரு முறை அலாஸ்கன் ஹை வே (Alaska Highway) வழியே கனடாவில் இருந்து அலாஸ்காவில் இருக்கும் Anchorage வரை போய் பாருங்கள். அசந்து விடுவீகள். எல்லோரும் அலாஸ்காவை, சொகுசு கப்பலில் (Cruise) சென்று பார்ப்பார்கள். இது, சிங்கத்தை Zoo வில போய் பாக்கிற மாதிரி. த்ரில் கம்மி. அதே சிங்கத்தை காட்ல பாக்கனும்னா, நீங்க இந்த ரோட்டுக்குதான் போகனும்.

Alaskan Highway

உங்களுக்கு ரோடில் சாகசம் செய்ய பிடிக்கும் என்றால் நேராக கால்கரி (Calgary) சென்று அங்கிருந்து அலாஸ்காவிற்கு ஒரு வேன் எடுத்து ஓடிப் பாருங்கள். மொத்தம் இரண்டு வாரங்கள் தேவைப்படும். இது தான் என் அடுத்த பக்கெட் லிஸ்ட்டில் ( Bucket List) இருக்கும் பயணம். ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை இந்த ரோட்டில் பயணம் செய்தால் கடைசியில் வடக்கே சொர்க்க வாசல் திறக்கும் என்று படித்ததுண்டு. சரி, அது என்ன Bucket List?

சாகறதுக்குள்ள பார்க்க வேண்டியதைதான் Bucket List என்று சொல்வார்கள். A list of things to do before you die. Comes from the term “kicked the bucket. சாகறதுக்கும் பக்கெட்டுக்கும் என்ன சம்பந்தம்? முந்நூறு வருஷம் முன்னாடி எவனாவது தப்பு செஞ்சா அவனை ஒரு கயித்துல கட்டி, ஒரு பக்கெட் மேல நிறுத்தி தொங்க விடுவாங்க. அப்புறம் அவன் செஞ்ச தப்பை ரெண்டு வயசான வெள்ளகாரனுங்கோ கிழிஞ்சி போன டிரஸ் மாட்டிட்டு படிப்பானுங்கோ… அப்புறம் அந்த பக்கெட்டை எட்டி உதைப்பானுங்கோ. அவன் செத்துடுவான். அவன் மனைவி பக்கத்தில ஒரு வீட்டு ஜன்னலில் இருந்து பாத்து அழுவா. விவரம் தெரியாத புள்ள குட்டிங்க தெருவுல கோலி குண்டு விளையாடிட்டு இருக்கும். இப்பிடி உருவான சொல் தான் “கிக்கிடு த பக்கெட்” ( Kicked the Bucket). தமிழ்ல சொல்லனும்னா கடவுள் ஒரு நாள் நம்ம நிக்கிற பக்கெட்டை உதைப்பார். அதுக்குள்ள போய் பாக்க வேண்டிய இடத்தை பாத்துடு மகராசா என்று சொல்வதுதான் – பக்கெட் லிஸ்ட்.

Kicked the Bucket

நான் நிக்கிற, என் பக்கெட்டில் ஒரு 135 இடம் இருக்கு. உங்க கிட்ட பக்கெட் லிஸ்ட் இல்லை என்றால் அட்லீஸ்ட் ஒரு டம்பளர் லிஸ்டில் இந்த ரோட்டை சேர்த்து விடுங்கள். இந்த லிஸ்ட் பத்தி தனியா ஒரு தொடர் சாவும் போது எழுதுவேன்.

சரி, இந்த அலாச்கன் நெடுஞ்சாலைக்கு வருவோம்….அப்பிடி என்னதான் இருக்கிறது இந்த நெடுஞ்சாலையில்?

சொல்கிறேன்….

Alaska_Highway

இந்த நெடுஞ்சாலை Alcan நெடுஞ்சாலை ( Alaska-Canadian Highway) எனவும் அழைக்கப்படும். இந்த நெடுஞ்சாலை, இரண்டாம் உலக போரின் போது கனடா வழியே அமெரிக்காவை இணைக்கும் நோக்கத்துடன் கட்டப்பட்டது. இது, Alberta – Dawson Creek – என்னும் இடத்தில் தொடங்கி வைட்ஹார்ஸ், யூக்கான் வழியாக அலாஸ்கா போய் சேரும். இதன் நீளம் 1,387 மைல், தோராயமாக 2,700 கிலோமீட்டர்கள் .

பள்ளிக்கூட பசங்க, ஒரு செங்கோண முக்கோணத்தை எப்படி, அழித்து அழித்து வரைவார்களோ, அப்பிடி போடப்பட்டது தான் இந்த அலாஸ்கா நெடுஞ்சாலை. புவி அமைப்பு, மற்றும் வானிலை காரணமாக மாற்றி மாற்றி குறுக்கும் நெடுக்கும் போட்டு ஒருவழியாக சரியான பாதை அமைக்க பல ஆண்டுகள் ஆனது. கட்டி முடிக்கப்பட்ட ஆண்டு 1942, இருப்பினும் 1948 ஆம் ஆண்டு தான் பயன்பாட்டுக்கு வந்தது.

இதை தொடங்கும் போது, இந்த நெடுஞ்சாலை கனேடியன் ராகிஸ் (Canadian Rockies) மலைகளை உடைத்து எறிந்து, யுகான் வறண்ட பனிப் பூமி வழியே அலாஸ்காவில் உள்ள அமெரிக்க ராணுவ முகாமிற்கு சென்று முடியவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. சும்மா ஒன்னும் முடிவு செய்யல…பயந்து ஆரம்பிச்ச ரோடு தான் இது.

Peral harbour

சப்பை மூக்கு, ஜப்பான்காரன் ஹவாயில், அமெரிக்கன் ஹாயா இருக்கும் போது, காக்கா கூட்டம் மாதிரி பறந்துவந்து குண்டு போட்டான். அன்னிக்கு December 7, 1941.

Pearl harbour

இதை ஏழாம் தேதி ஏழரைனு சொல்லலாம்….
ஆடிப்போயிட்டான் அமெரிக்கன் அல்போன்சு.

அப்போ அமெரிக்க அதிபரா இருந்தவர் Franklin D. Roosevelt. அடுத்து சப்பை, குறி வச்சு அடிக்க போறது அலாஸ்காதான்னு அமெரிக்க அல்போன்சு அண்ணாச்சி பயந்து போயிட்டாரு. ஏன்னா, அவுங்க பறந்து வந்து தூரமா இருக்கிற ஹவாய் மாதிரி இருந்த தொலை தூர அமெரிக்க நிலத்தில குண்டு போட்டாங்க. அப்போ அலாஸ்காவுக்கு பறந்து மட்டும் தான் போக முடியும். அமெரிக்காவில் இருந்து ரோடு இல்லை.

கறிக் கடை அமெரிக்க அல்போன்சு பாய், வெள்ளாடு கனடாவிற்கு ட்ரன்க் கால் போட்டு, ஏய் வெள்ளாடு…., ஐ அம், கறிக்கடை பாய் அல்போன்சு ஸ்பீகிங் …நிம்பல்கி ஒரு ரோடு ஒன்னு அவசரமா அலாஸ்கா போறதுக்கு வேணும். ஜப்பான் சப்பை மூக்கன், என்னை ஹவாயில வச்சு ஓட்டை வடை சுட்டுட்டான். அடுத்து உளுந்து வடை அலாஸ்காவில் போடப் போறான். அதுக்கு மாவு ஊர வச்சுட்டானு உளவு படை சொல்லுது. சட்டியில எண்ணை காயறதுக்குள்ள நீ என் ஊருக்கு, உங்க ஊரு வழியா ஒரு ரோடு போட்டு தாடா ராஜா” என்று மிரட்டியது. காரணம், இந்த ரோடு கனடா வழியா தான் 80% போட வேண்டி இருக்கும். 20% ரோடு மட்டும் அலாஸ்கா பக்கம் போடனும்.

உடனே வெள்ளாடு கனடா சொன்னது “போடா போக்கத்தவனே, நானே உலக போரில் காசில்லாம கஞ்சிக்கு பிச்சை எடுத்துட்டு இருக்கேன். எங்கிட்ட வந்து புடுங்குற, பரதேசி. வேனும்னா பாய், நீயே உள்ளுகா வந்து ரோடு போடு. நீ வேனா அப்பிடியே Calgary மேல போய் பாரு பாய், குளிருல எந்த நாயும் இருக்காது, கொஞ்சம் நரியும், கரடியும் தான் மேஞ்சிட்டு இருக்கும்…. எங்கயாவது ஆளை புடி. அடிச்சு புடிச்சு எப்படி ரோடை போடுவியோ எனக்கு தெரியாது… ஆனா, நீயே போடு….நம்பல் கிட்டே நீ போடு, இப்பிடி போடுங்கற டாகால்டி எல்லாம் வேண்டாம், பாய் ” என்றது.

அத்தோட சில கண்டிஷன் போட்டது வெள்ளாடு – “இப்பவே சொல்லிட்டேன், செலவு உன்னுது, ரோடு என்னுது. நான் ஒரு சல்லி காசு கூட, என் பிச்சை ப்லேட்டுல இருந்து தரமாட்டேன். ரோடு போட ஜல்லி வேணும்னா தரேன்.

ஆனா, கட்டி முடிச்சு ஆறு மாசத்துல என்கிட்ட ரோட்டை கொடுத்துடு. நீ, உம் பொஞ்சாதி, உன் புள்ளைகுடிங்கோ, உன் பேராண்டிகோ. …இப்பிடி ஏழேழு தலைமுறைக்கும் நீ இந்த காட்டுப் பாதையை அனுபவிக்கலாம். கனடா வழியா அலாஸ்கா போற வரப்பு தான் நம்ம ரெண்டு பேருக்கு சொந்தம். என் நிலத்துல கை வைக்க படாது பாய்… என்ன டீலா? இல்லை நோ டீலா” என்று கேட்டது.

கறிக் கடை அல்போன்சு பாய், “ஹ்ம்ம் டீல் ஓகேனு” சொன்னாரு.

ஒரு ஆட்சேர்ப்பு அறிவிப்பு ரெடி செய்தார்கள் அமெரிக்கர்கள்.

இது தான் அது: ‘

Recruitment notice. (IMPORTANT)
Men hired for this job will be required to work and live under the most extreme conditions imaginable,’
‘Temperatures will range from 90 degrees above zero to 70 degrees below zero. Men will have to fight swamps, rivers, ice and cold. Mosquitoes, flies and gnats will not only be annoying but will cause bodily harm. If you are not prepared to work under these and similar conditions, Do not apply.’

இது தான் உலகிலேயே ” பனாமா கால்வாயை அடுத்து சிரமமான பனி ” என்று அமெரிக்கா அறிவித்தது. தேவை மொத்தம் 16,500 பேர். சப்பை வந்து அடிப்பான் என்ற பயத்தில் ஒரு வருடத்திற்குள் முடிக்கவேண்டும் என்ற கட்டாயம். ராணுவமும், கூலித் தொழிலாளிகளும் இரவும் பகலும் உயிரை கொடுத்து ரோட்டை போட்டார்கள்.

ஒன்பது மாதத்தில் 1,422 mile ரோடு ரெடி. அமெரிக்கா இந்த வாய்கால் அருகே எண்ணெய் குழாய் பதித்து அலாஸ்காவில் இருந்து எண்ணெய் கீழ் அமெரிக்க பிரதேசங்களுக்கு கொண்டுவர திட்டம் தீட்டி, அதையும் ரோடு போடும் போது செயல் படுத்தியது.

இது தான் இரண்டாம் உலகப் போரில், மிக அதிகம் செலவு செய்த ஒரே கட்டுமான பணி. அந்த காலத்திலேயே இதன் மொத்த செலவு 135 மில்லியன். காசு தர மாட்டேன் என்று சொன்ன கனடா, ரோடுக்கு ஜல்லி, மணல், மரம் எல்லாம் கொடுத்து உதவியது. கட்ட வரும் அமெரிக்கர்களுக்கு விசா வழங்கும் விதிமுறைகளை தளர்த்தியது.

Alcan_construction

வந்து சேர்ந்த அவர்களால், அவ்வளவு எளிதில் ரோடு போடமுடியவில்லை. குளிரில் உறைந்தார்கள். வெயில் அடித்ததும் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. காட்டுத்தீ உபகரணங்களை எரித்தது. வண்டியின் சக்கரங்கள் சேற்றில் புதைந்தன.

எல்லாவற்றிற்கும் மேலாக, வந்தான் “எம தர்ம மகாராஜா”. அரண்டு போனார்கள். இவன் பெயர் “அலாச்கன் கொசு”. ஆர்க்டிக் வெயில் வந்தவுடன் படை எடுப்பார்கள். முகத்தில் வலை பொருத்திக்கொண்டு தான் சம்மரில் ஆர்க்டிக் செல்லவேண்டும். இல்லை, செத்து விடுவீர்கள். கூட்டம், கூட்டாமாக சிறிய பறவையின் அளவில் வரும். கடித்து லிட்டர் கணக்கில் ரத்தம் குடிக்கும்.

ஒரு ராணுவ தளபதி இப்படி எழுதினார் “‘You had to eat with your head net on,’ ‘you would raise the head net, and by the time you got food on the spoon up to your mouth it would be covered. In next 15 minutes you will be dead”.

ரோடு வேலை நடுக்கும் போதே 1942 ஆம் ஆண்டு சப்பைகள் அலாஸ்காவின் Aleutian தீவை தாக்கினார்கள். அமெரிக்கா இந்த ரோடின் அவசியத்தை புரிந்து மேலும் பல்லாயிரம் ராணுவ வீரர்களை அனுப்பி வைத்து ஒரு வழியாக நெடுஞ்சாலையை போட்டு முடித்தது.

Troops-arriving

ஒரு ராணுவ வீரர் நெடுஞ்சாலை போட்டு முடித்த பின்பு இப்படி எழுதினார்: ‘The Alaska Highway winding in and winding out fills my mind with serious doubt as to whether ‘the lout’ who planned this route was going to hell or coming out!’ பேச்சு தமிழில் சொல்லவேண்டும் என்றால் “யாருப்பா நீ? எப்பிடியா இந்த ரோட்டு பிளான் போட்ட… நீ நல்லா இருக்கணும் சாமியோவ்”

காரணம் இந்த நெடுஞ்சாலைதான், உலகின் வாடா கோடிக்கு செல்லும் அற்புத சாலை. இதில் நான் இன்னும் பயணம் செய்யவில்லை. அதனால் இதைப்பற்றி எனக்கு படித்த அறிவு மட்டுமே. படித்ததில், நான் தெரிந்து கொண்டது, கொஞ்சம் மட்டுமே.

இந்த மிகப் பெரிய நெடுஞ்சாலையை அமைக்கும் போது, முக்கிய இடங்களை அதன் மைல் தொலைவை கொண்டு அழைக்க ஆரம்பித்தார்கள். இதை வைத்து மைல் போஸ்ட் என்ற புத்தகம் ஒன்று உள்ளது. அலாஸ்கா நெடுஞ்சாலையில் இவனே உங்களுக்கு உற்ற நண்பன்.

http://www.themilepost.com/

இங்கு பயணிக்க, பார்க்க, முக்கியமான இடங்கள் மைல் பை மைல் சொல்லி இருப்பார்கள். அட்டகாசம். என்னிடம் ஒரு பிரதி உள்ளது.

Milepost

இப்போது இந்த வண்டி இந்த சிக்னலில் நிற்பது அந்த கிரேட் அலாச்கன் நெடுஞ்சாலையில் எதிரில்.

என் வீட்டை ஒரு மேஸ்திரிதான் கட்டினார். தாஜ்மஹாலையும் ஒரு மேஸ்திரி தான் கட்டினார்.

மேஸ்திரி கட்டுறதெல்லாம் தாஜ்மஹால் ஆகாது.

எதிரே தெரிந்தது, ஒரு சாதரணமான நெடுஞ்சாலை போல் தான் இருந்தது. ஆனால், மீண்டும் அந்த பச்சை போர்டை பார்த்து ” Alaskan High Way” என்று படிக்கும் போது என் காதில் அது “தாஜ்மஹால்” என்று ஒலித்தது.

கிளி என் நினைவை கலைத்தது…இப்பொது, வண்டி ஒரு ஹோட்டல் முன்பு நின்று கொண்டு இருந்தது.

கண்ணாடியில் பெயர் தெரிந்தது ” Gold Rush Inn”…

தங்க வேட்டைக்கு வா ….

 

 

தொடரும்

வெள்ளைக் குதிரை ஓட்டம்