நான் ஆர்க்டிக் கிளம்பும் நேரம், ராகு காலம். நல்லதையும் செய்வார் ராகு என்று படித்த துண்டு. ஏறமுடியாதவனை கண்டானாம், ஏணி பந்தயம் வச்சானாம் என்று இடக்கு பண்ற கிரகம் எது தெரியுமா? அவர் தான் மிஸ்டர் ராகு.
என்னதான் யோகக்காரகன் என்று பெயரை வைத்திருந்தாலும், சமயம் கிடைச்சா சந்தடி சாக்கில் சிந்து பாடுவதில் ராகு கில்லாடி. இது ஜாதகத்த்தில். அதற்கு மேல், தனிப்பட்ட முறையில் தினசரி ஒன்னரை மணி நேரத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும். அதற்கு பெயர் ராகு காலம். என் flight கிளம்பும் நேரம் ராகு காலம்.
இரவில்லே போனாலும் அரவிலே போகாதே என்பது பழமொழி. அது என்ன அரவு?
அரவுன்னா பாம்பு. ராகு யாரு? பாம்பு கிரகம். இவர் ஆளுகைக்கு உட்பட்ட ராகு காலத்தில் எந்த காரியத்தையும் செய்யாதே என்று தடை உத்தரவு போடும் விதமாக சொல்வதுதான் முன்னே சொன்ன பழமொழி.
சரி ஆர்க்டிக் போறவனுக்கு நேரம் காலம் தேவையானு நீங்க கேட்கலாம். தேவை இல்லைதான். பயம் வந்தால், நாத்திகத்தை தூக்கி குப்பையில் போட்டு விட்டு நெத்தியில் பட்டையை போடுபவன் நான். எனக்கு, மோடி வித்தையில் நம்பிக்கை இல்லை. ஆனால், நாடி ஓலையில் நம்பிக்கை உண்டு.
நான் நாத்திகத்தையும், ஆத்திகத்தையும் சரியாக கலந்து காப்பி போட்டு குடிக்கும் காரியவாதி. சரியாக நடந்தால் என்னால்தான் நடந்தது என்றும், தவறு நடக்கும் போது கடவுளை வேண்டும் சராசரி பக்தன். ஆர்க்டிக்கில் புயல், ராகு காலத்தில் flight என்று என்னை கிளம்புவதிற்கு முன் ஆட்டிப் படைப்பன அனைத்தும் கடவுளால் சரிசெய்யப்படும் என்று நம்பும் பக்தன்.
சரி, அப்படி அங்கு கெட்ட நேரம், நினைப்பது எதுவும் நடக்கவில்லை எனிலும், என்னதான் அங்கு இருக்கிறது என்று பார்த்து விட்டு வந்து விடலாம் என்று முடிவு எடுத்தேன்.
அதற்குள் ” போர்டிங் for வெள்ளை குதிரை” என்று ஒரு பெண்மணி கூவினார்.தோளில் ஒரு கேமரா Bag. கையில் ஒரு இழுவைப் பயணப் பெட்டி.
சக்கரம் போர்டிங் கேட் நோக்கி உருண்டு ஓடியது. அங்கே ஒரு சிறிய விமானம் என் கண்ணில்பட்டது. சுமார் 50 பேர் வரை பயணம் செல்லலாம் என்று நினைகிறேன்.
நடந்து சென்ற என்னை ஒரு அழகான பெண் தடுத்து, பயண சீட்டில் என் பெயரை தட்டு தடுமாறி “எலூஉமாலை சிதார்” நீதானா என்றாள்.
இது ஒன்றும் புதிது இல்லை. தினம் தினம் இந்த வெள்ளைக்காரர்கள் என் பெயரை கொலை செய்வதை ரத்தம் சிந்தாமல் பார்ப்பவன். அவளை பார்த்து அந்த “எலூஉமாலை” நான்தான் என்றேன். அவளுக்கு என் பெயரை சரியாக கூப்பிட்டுவிட்டதாய் பெருமை.
என் பெயர், எனக்கே மறந்துவிடும் அளவுக்கு “ஏழுமலையில்” உள்ள “ழு” வெள்ளைக்காரர்களை பாடுபடுத்தும். “லு” வை “லூ” என்று ” “ஊ” வோடு இணைத்து, ஏழுமலையில் உள்ள “மலை” என்பதற்கு பதில், எனக்கு ஒரு “மாலையை” என் பெயரில் போட்டு “எலூஉமாலை” என்பார்கள்.
ஸ்ரீதர் என்ற பெயர் – “சிறீடார்” என்று “டாரு டாராக” கிழிக்கப்படும். கிழிந்த “சிறீடார்” “எலூஉமாலை” உடன் இணைந்து “ஏலூமலாலாயீ சிறீடார்” ஆகும். இப்போது இந்த வெள்ளைக்காரி என் பெயரோடு, Flight போர்டிங் பாசையும் சேர்த்து கிழித்து என் கையில் கொடுத்தாள்.
Flight-டினுள் நுழைந்தேன். பனிப் பிரதேசம் மட்டும் அழகல்ல, பனிப் பிரேதேச விமானத்தில் பணிப் பெண்கள்களும் அழகுதான். கிளிகள் போன்று “கீச்” “கீச்” குரலில் பேசினார்கள். என் நம்பர் முதல் விண்டோ சீட் என்று சிரித்துக் கொண்டே சொன்னது ஒரு கிளி. தலைக்கு மேல் எல்லாவற்றையும் சொருகி விட்டு இருக்கையில் அமரவைத்தது இன்னொரு கிளி.
பக்கத்தில் இரண்டு காலி இருக்கைகள். ஆறு அடி உயரத்தில் ஒரு மனிதர் வந்து அமர்ந்தார். அவர் பின்னால் அதே உயரத்தில் ஒரு பெண்மணி வந்து அமர்ந்தார். என்னங்க” நீங்க வெள்ளை குதிரைக்கு ( White Horse) புதுசா?, உங்களை பார்த்தே இல்லை” என்றார். அந்த கேள்விக்கு அப்போது அர்த்தம் புரியவில்லை.
நான் புதுசு, “இதுதான் முதல் முறை வருகிறேன், I am a Traveler ” என்றேன்.Nice, “Welcome to Yukon, It is Larger than Life என்றார். இது தான் யுகானின் டாக் லைன்.
அப்போதுதான் கவனித்தேன், உள்ளே வருபவர்கள் ஒவ்வொருவரும் இவரைப்பார்த்து “என்னங்க ரிசார்ட் நலாமா?” என்பார்கள். ஐவரும் இவர் மனைவியும் விமானத்தில் வரும் அனைவரிடமும் குசலம் விசாரித்தார்கள்.
இது ஒரு குறியீடு. நம்ம மிஸ்கின் படம் மாதிரி.
நம்மளே புரிஞ்சுக்கனும்…
ஒரு பேருந்தில் இருக்கும் சிலர், வந்து உட்காரும் எல்லார்கிட்டையும் பேசுனா அந்த பேருந்து ஒரு கிராமத்துக்கு போகுதுன்னு அர்த்தம். பஸ் டிரைவர் முதல், கூடைக்குள்ள உள்ள கோழிவரை அனைவரையும் எல்லோருக்கும் தெரியும்.
ஐநூறு பேர் வாழுற கிராமத்தில, ஐநூத்தி ஒன்னா, ஒரு குழந்தை சத்தம் கேட்டா, அது எந்த அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் பொறந்த புள்ளைன்னு, மீதி ஐநூறு பேருக்கும் தெரிஞ்சா, அது தான் கிராமம்.
இந்த புள்ள, அந்த அப்பனுக்கு பொறக்கலைன்னு சந்தேகமா சொன்னா,அது குக்கிராமம். அதையே, சத்தியம் செஞ்சு பத்து பேர் சொன்னா அது பட்டிகாடு.
இதுவே, நகரத்துல புள்ள ஜாடை பக்கத்துவீட்டுகாரன் மாதிரி இருந்தாலும் கண்டுக்கமாட்டாங்க. காரணம் அவன் புள்ளையே அவன் ஜாடை இருக்காது….
கிராமத்தில் இப்பிடி இருப்பதில் வியப்பில்லை. காரணம், இருக்கிற 500 பேரும் வேறு யார்கிட்ட போய் பேசமுடியும்? யாரை பத்தி பேசமுடியும்? இது தான் flight ல இப்ப நடக்குது…எனக்கு புரிஞ்சு போச்சு. நம்ம போறது ஒரு வெள்ளைகார கிராமத்துக்கு.
நான் யோசனை செய்யும் போதே, ஏர் நார்த், தன் இறக்கையை விரித்து வெண் பனி தேசத்தை நோக்கி பயணத்தை தொடங்கியது. வான்கூவர், வானத்தில் இருந்து பார்த்தால் ஒரு கலப்படம் ஆன பூமி போல் தெரியும். மலை, கடல், தண்ணீர், பச்சை, குளம், குட்டை, ஏரிகள் நடுவே concrete குச்சிகள் என்று மிக அழகாக இருக்கும். ஒரு பெண்ணின் அழகை மேக்கப் இல்லாமல் பார்த்து கணிக்க வேண்டும். ஒரு ஊரின் அழகை வானத்தில் இருந்து மேக்கப் இல்லாமல் ரசிக்க வேண்டும். வானில் இருந்து வான்கூவேர் அழகு வண்ணத்தில் ஜொலித்தது.
விமானமும் மூக்கை வடக்கு நோக்கி நீட்டிக்கொண்டு பறந்தது. மெதுவாக, பச்சை நிறங்கள் மறைந்து வெள்ளை நிறங்கள் தோன்ற ஆரம்பித்தன.
பெல்ட், கழட்ட சொல்லி பஞ்சாபி பைலட் பக்குவமாய் சொன்னார்.
ஜோசியக்காரன் கூட்டை திறந்து அட்டையை கையில் எடுத்தவுடன் கூட்டை விட்டு வெளியே வரும் பச்சை கிளிகள் போல விமானத்தில், சிவப்பு கிளிகள் தன் இருக்கையை விட்டு பறக்க ஆரம்பித்தன.
ஒரு கிளி தட்டு நிறைய பிஸ்கட் கொண்டு வந்து கொடுத்தது. இன்னொரு கிளி, சுட சுட தேநீர் கொடுத்தது. இரண்டு கிளிகளும் வெள்ளைக்குதிரை கிராமத்து கிளிகள். எல்லோரிடம் பேசி பேசி உபசரித்தன.
ஒரு கிழடு, கிளியின் பெயரை சொல்லி கூப்பிட்டு, பழரசம் கேட்டது. கிளியும் கிழட்டு கிழவனின் பெயரை கில்பர்ட் என்றது. இதைக் கேட்ட கிக்பர்ட் சிரிக்க அவர் பொக்கை வாயில் ஒரு கிளி வோட்கா ஊற்றியது.
ஒரு கிராமத்து விமானத்தில், மணித்துளிகள் கரைந்தன. வெளியே மழை துளிகள், குளிரில் பனித்துளிகளாக உறைந்தன. கொஞ்சம் கொஞ்சமாக எல்லா பச்சை நிறமும் மறைந்தன. விமானம் மேகத்தை பிளந்து குதிரைப் போல் வெள்ளை குதிரையை நோக்கி பாய்ந்து சென்றது.
அருகில் இருந்த ஆறடி மனிதர், மெதுவாக பேச்சு கொடுத்தார். நான் வெள்ளை குதிரையில் வேலை பார்க்கிறேன். நான் ஒரு ஹெலிகாப்டர் பைலட், என்று சொன்னார். என்னை பற்றி விசாரித்தார். நான், எதற்காக வெள்ளை குதிரை போகிறேன் என்று அவரிடம் சொன்னேன்.
சிரித்துக்கொண்டே சொன்னார் “தப்பான நேரத்தில் வந்து விட்டீர்கள்”. இங்கே பாருங்கள் என்று ” விமானத்தின் ஜன்னலை காண்பித்து சொன்னார் ” அதோ தெரியும்…அந்த வெள்ளை மலைகளில் பனிக்காற்று சுழன்று கொண்டு இருக்கிறது..தூரத்தில் இருந்து அவை புகைப் போல் தெரியும். இன்னும் ஒரு வாரத்தில் இது பனிப் புயலாக மாறும். மிருகங்கள் இந்த வாரமே ஓடி, மண்ணுக்குள் ஒளிந்து கொள்ளும். அவ்வளவு மோசம். மோசமாக இருந்தால் வெள்ளை குதிரையில் தங்கிவிட்டு திரும்பி விடுங்கள். மேலே போக வேண்டாம்.” என்றார்.
அவர் சொன்னவுடன், என்னக்குள் இருந்த அத்தனை ஆர்க்டிக் ஆசையும் நொறுங்கியது. இன்னும் ஒரு மணி நேரத்தில் வைட் ஹோர்ஸ் வந்துவிடும். அங்கே ஒருவாரம் தங்கிவிட்டு, வானிலை அறிக்கையை படித்துவிட்டு போக நான் வரவில்லை. Mr.ராகு தன் வேலையை காட்டிவிட்டதாக நம்பினேன். தேவை ஒரு பரிகாரம். அதை அவரிடமே கேட்டேன்.
பொதுவாக, வடக்கை நோக்கி செல்ல செல்ல வானிலையை யாராலும் கணிக்க முடியாது. காரணம், இங்கு மரம் செடி கொடிகள் மிக குறைவு. மலைகளும், மட்டமாகி உயரம் குறைந்து பின்பு சமவெளியாக மாறிவிடும்..காற்று அடித்தால் தடுக்க எவையும் கிடையாது. ஓடும் வண்டி முதல், பறக்கும் ஹெலிகாப்டர் வரை சூறை காற்று தூக்கி எறியும்.
அங்கு வானிலை எப்படி மாறும் என்று தினம் தினம், ஒரு மணிக்கு ஒரு தடவை அறிவிப்பார்கள். அதை கேட்டுவிட்டு முடிவு செய்யுங்கள். நான், ஹெலிகாப்டர் பைலட் என்பதால் சொல்கிறேன் ” என் அனுபவத்தில் கடந்த 25 வருடத்தில் இந்த வருடம் தான் மிக மோசம் என்று நினைக்கிறேன். இருந்தாலும் பெஸ்ட் ஆப் லக் என்றார்.
எனக்கு வெறுத்து விட்டது. புறப்படும்முன் வானிலையை தவிர அனைத்தையும் சரிபார்த்தேன். என் தவறு தான். சரி, ஆனது ஆகட்டும், வந்தால் மலை…இல்லையேல் உயிரு…( மயிரு என்று சொல்லக்கூடாது என்பதால்…)
பைலட், ஸ்வீடன் நாட்டை சேர்ந்தவர். கனடாவிற்கு வந்து இங்கேயே படித்து வளந்தவர். வேலைக்காக வெள்ளை குதிரையில் குடி ஏறியவர். அவர் வேலைபார்ப்பது, சுரங்க கம்பெனிக்கு வாடகை விடும் ஹெலிகாப்டர் கம்பெனியில். யுகான் மாகாணம் முழுவதும் சுரங்க தொழில்தான் பிரதானம். Copper, Zinc போன்ற இருநூறுக்கு மேற்பட்ட தாது உப்புக்கள் கிடைக்கும் பூமி. இவை இங்கு கிடைக்கின்றன என்பது தங்கம் கிடைத்தபோதுதான் தெரிந்தது. இது ஒரு தனிக் கதை, இதை வெள்ளை குதிரையில் சூப் குடித்துகொண்டே பேசலாம்.
பைலட், தனது யுகான் சாகசங்களை சொல்ல ஆரம்பித்தார். அவர் தனது சாகசங்களை சொல்ல ஆரம்பித்தவுடன், அதுவரை முழித்துக்கொண்டு இருந்த அவர் மனைவி கொட்டாவி விட்டு தூங்க ஆரம்பித்தார். அநேகமாக, இவர் சாகசங்களை சுமார் 1000 பேர் கேட்டு இருப்பார்கள் என்பது அவர் மனைவியின் குறட்டை சத்தத்தில் இருந்து தெரிந்து கொண்டேன்.
அவர் கையை மேலே ஆடினார், கீழே ஆட்டினார், வாயை திறந்து திறந்து மூடினார். என் காதுக்கு எதுவும் நுழையவில்லை. என் கவலையெல்லாம் பயணம் தொடருமா என்பதிலேயே இருந்தது.
தீடீரென்று கிளிகள் கெஞ்சின. வெள்ளை குதிரை பத்து நிமிடத்தில் வந்துவிடும், பெல்ட்டை இடுப்பில் மாட்டுங்கள் என்று பைலட் அலறினார். கிளிகள் அனைவரின் இடுப்பையும், பெல்ட் அணிந்து இருகிறார்களா என்று, தன் பார்வையால் கொத்தி சென்றன.
விமானம், மெதுவாக இறகை மடக்கி இறங்க தொடங்கியது. விமான ஜன்னலில், பார்த்தேன்….
வெள்ளியாய் மின்னியது, பனி மலைகள். இடையில் உறைந்து போன பனி ஆறுகள். கண்ணுக்கு எந்த கட்டிடங்களும் தெரியவில்லை. மரங்களும் தெரியவில்லை. விமானம் மெதுவாக தரையை முத்தமிட்டது.
முத்தம் க்ரீச் என்று சத்தம் எழுப்பியது. விமானம் பனி தரையில் வழுக்கி சென்று வெள்ளை குதிரையை ஆரத்தழுவியது.
வெல்கம் டு White Horse – கிளிகள் கத்தின !!! கிராம மக்கள் பெருமூச்சு விட்டனர.
பாரதிராஜா படத்தில் ஒரு வெளிநாடு எப்படி இருக்குமோ அப்பிடி இருந்தது White Horse.
காலை விமானத்தில் இருந்து வெளியே வைத்தேன். என் வாழ்க்கையில் அப்படி ஒரு குளிரை நான் பார்த்தது கிடையாது. பெட்டி வரும் பெல்ட், கிராமத்து மக்களின் கூடைகளை சுமந்து கொண்டு சுற்றி சுற்றி வந்தது.
இது விமான நிலையம் கிடையாது. இது ஒரு கிராமத்து அரச மரம். கீழே கான்கிரீட் திண்ணை. வெட்டியாய் சில பெருசுகள். இரண்டு மூன்று டீக்கடை. மரத்தில் கொஞ்சம் கிளிகள். பேருந்துக்கு காத்து இருக்கும் வெளியூர் வாசிகள் 10 பேர். வந்து இறங்கிய 50 பேர். மொத்தம் 100 பேர்தான் இந்த அரச மரம் விமான நிலையம்.
ஒரு விமான நிலையத்தில் மத்தியம் ஒரு மணிக்கு வெறும் நூறு பேர் இருந்தால் ஊருக்குள் எத்தனை பேர் இருப்பார்கள்? யோசிக்கும் போதே என் பெட்டி என்னை வந்து சேர்ந்தது.
எடுத்துக்கொண்டு மெதுவாக நடந்து வெளியே வர கண்ணாடி கதவை அருகே வந்தேன். பனிக்குவியல் இடையே சில வேன்கள் தலை மட்டும் தெரிந்தது. மொத்தம் 10 வண்டிகள் இருந்தன.
கிரிகோரி ஏற்பாடு செய்த ஒருவர் வரவேண்டும்….இன்னும் காணவில்லை ….அதற்கு முன் ஒரு போட்டோ எடுத்து கொள்ளலாம் என்று நினைத்தேன் .
ட்ரை பாட், எடுத்து காமெராவை பொருத்தினேன். காமெரா இன்ப்ரா ரெட் ரிமோட் எடுத்துக்கொண்டு பின் தலையில் தொப்பியை மாட்டினேன்.
டைமர் ஆன் செய்துவிட்டு, கண்ணாடி கதவை திறந்தேன்.
என் வாழ்க்கையில் முதன் முறையாக இதயம் உறைவதை இதயமே சொல்லியது. மைனஸ் 38 டிகிரி ….காற்று பலமாக வீசி -45 பீல் லைக் ……குளிர்
திரும்பி நின்று காமெராவை பார்த்தேன் ….குளிரில் என் இரண்டாவது பொண்டாடியும் உறைந்து விட்டால் போலும் ….
கிளிக்” என்ற சத்தம் குளிர் காற்றில் கரைந்து போனது ……
நான் நடுங்கிக்கொண்டே நிற்க முடியாமல் மீண்டும் கண்ணாடி கதவை நோக்கி ஓடினேன். என் வாழ்க்கையில் இப்பிடி குளிருக்கு பயந்து ஓடியது கிடையாது ….
ஓடும் போது, ஒரு வண்டி ஹாரன் அடித்தது.ஒரு வெள்ளை வேனில் ஒருவர் என்னை பார்த்து கை அசைத்தார்.
அவர் கண்கள் மட்டும் வெளியே தெரிந்தது. மற்றவை அனைத்தும் மூடி குல்லா போட்டு இருந்தார். வண்டி என் அருகே வந்து நின்றது.
வேனின் ஆட்டோமாடிக் கதவு திறந்தது. நான் தாவி உள்ளே குதித்தேன். வெளியில் இருந்த 2 நிமிடத்தில் உறைந்து போய் இருந்தேன்.
வேனில் ஹீட்டர் சூடு இதமாய் இருந்தது …..ஓட்டிவந்த நபர் முகத்தை கண்ணாடியில் பார்த்தேன். கண்கள் மட்டும் தெரிந்தது. வாய் மூடியிருந்தது.
நீங்கள் தான் கிரிகொரி அனுப்பி வைத்த ஆளா? நாம் இப்போ எங்கே போகிறோம் என்றேன்?
முகமூடியை கழட்டிவிட்டு ” Welcome to White Horse, I am Nokarin Sukka” என்றது ஒரு குரல்.
அட இதுவும் ஒரு கிராமத்து கிளி…..கீச் கீச் என்று ஜப்பானீஸ் ஆங்கிலத்தில் பேசியது.
இந்த கிளி, நோக்கரின் சுக்கா அல்ல …அட்ரா சக்கா !!! இருவது வயது தான் இருக்கும் ….பெரிய வேனை அனாசியாமாக பனியில் ஒட்டியது.
எதிரே பார்த்தேன்…..ரோடு தெரியவில்லை …ஒரு குத்து மதிப்பாக ஒட்டியது கிளி.
இங்க ரோடு இல்லையா என்றேன்? கிளி சொன்னது ” ரோடு எல்லாம் இருக்கு, ஒரு பத்து மாசம் பனியில மூடியிருக்கும். ரெண்டு மாசம் மட்டும் வெளியில் தெரியும்” என்றது.
நான் சுமார் 100 பக்கம் ரோடு maps பிரிண்ட் எடுத்து வந்துள்ளேன், என்ன செய்வது என்றேன்.
கிளி சொன்னது ” தூக்கி வெளியில் போடு”….
தொடரும்
ஆர்க்டிக் பயணம் ….
பனிப் பிரதேசம் : பயணத் தொடர் (பாகம்-12):
1. பனிப்பயணம் ‘ராகு திசையில்’ தொடங்கியதை, பழமொழிகளோடு ஆரம்பித்து – காலண்டரையும் கூட காட்டி- பின்னர் நாத்திகம், ஆத்திகம் பற்றிய நயமான குறிப்பை, மெதுவாக அரசியல் வாசனையோடு உரைத்த விதம் அழகு!
“ஏற முடியாதவனை கண்டானாம், ஏணிப்பந்தயம் வச்சானாம்”
“இரவிலே போனாலும் அரவிலே போகாதே”
“பயம் வந்தால், நாத்திகத்தை தூக்கி குப்பையில் போட்டு விட்டு, நெத்தியில் பட்டை போடுபவன் நான்-
எனக்கு ‘மோடி’ வித்தையில் நம்பிக்கை இல்லை”
2. பனிப் பிரதேசத்திற்கு, தமிழ் நாட்டிலிருந்து ‘குறியீடு காட்டிப் புரியவைக்கும் மிஸ்கினையும்’, ‘நம் பாசத்திற்குரிய பாரதிராஜாவையும்’ கூட்டி வந்த விதம் அழகு!
“நம்ம போறது ஒரு வெள்ளைக்கார கிராமத்துக்கு” என்று சொல்லி, “கிராமம், குக்கிராமம், பட்டிக்காடு” என ஒவ்வொன்றுக்கும் இலக்கணம் வரையறுத்தது.
“பாரதிராஜா படத்தில் ஒரு வெளிநாடு எப்பிடி இருக்குமோ அப்பிடி இருந்தது ஒயிட்ஹார்ஸ் (வெள்ளைக்கார கிராமம்)” என்று சொல்லி,
அந்த ஊர் விமான நிலையத்தை பாரதிராஜா படத்தில் வரும் அரசமரத்தையும், அதன் சூழலையும் (கான்கிரீட் திண்ணை, வெட்டியாய் சில பெருசுகள், 2-3 டீக்கடை, கொஞ்சம் கிளிகள் etc. etc ) ஒப்பிட்டு நயமாக புரிய வைத்தது.
3.வான்கூவர் மற்றும் பனிப் பிரதேசத்தின் “மேக்கப் இல்லாத இயற்கையான அழகை” வண்ணப் படத்தையும் காட்டி வர்ணித்த விதம் அருமை!
“ஒரு பெண்ணின் அழகை மேக்கப் இல்லாமல் பார்த்து கணிக்க வேண்டும். ஒரு ஊரின் அழகை வானத்தில் இருந்து மேக்கப் இல்லாமல் ரசிக்க வேண்டும். வானில் இருந்து ‘வான்கூவர்’ அழகு வண்ணத்தில் ஜொலித்தது!”
“விமானமும் மூக்கை வடக்கு நோக்கி நீட்டிக் கொண்டு பறந்தது. பச்சை நிறங்கள் மறைந்து வெள்ளை நிறங்கள் தோன்ற ஆரம்பித்தன”
“வெள்ளியாய் மின்னியது பனி மலைகள்! உறைந்து போன பனி ஆறுகள்! கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எந்த கட்டிடங்களும், மரங்களும் தெரியவில்லை”
4. பனிப் பிரதேசத்தின் “குளிர்” பற்றி இதயமே உறையும் படியான வர்ணனைகள்!
“விமானம் பனித் தரையில் வழுக்கிச் சென்று வெள்ளைக் குதிரையை ஆரத் தழுவியது”. “வெளியே மழைத் துளிகள் குளிரில் பனித் துளிகளாக உறைந்தன”
“முதன்முறையாக இதயம் உறைவதை இதயமே சொல்லியது. மைனஸ் 38 டிகிரி! “காற்று வேறு பலமாக வீசி மைனஸ் 45 ஃபீல் லைக் குளிர்” என உணர்த்தியது!
“வாழ்க்கையில் அப்பிடி ஒரு குளிரை பார்த்தது கிடையாது”. “நான் நடுங்கிக்கொண்டே நிற்க முடியாமல் காரின் கண்ணாடிக் கதவை நோக்கி ஓடினேன்”
“என் வாழ்கையில் இப்பிடி குளிருக்கு பயந்து ஓடியது கிடையாது” “வெளியில் இருந்த 2 நிமிடத்தில் உறைந்து போய் இருந்தேன்”
5. இவை எல்லாவற்றையும் விட, விண்ணில் பறந்த போது ‘கொஞ்சிய கிளிகளைப்’ பற்றி கொஞ்சும் தமிழில், பதித்த வர்ணனைகளோ அபாரம்! எழில் வண்ணப் படமும் அதியற்புதம்!!
“பனிப் பிரதேசம் மட்டும் அழகல்ல; பனிப்பிரதேச விமானத்தில் பணிப்பெண்களும் அழகு தான். ‘கிளிகள்’ போன்று ‘கீச் கீச்’ குரலில் பேசினார்கள்”
“விமானம் டேக்-ஆஃப் சுமுகமாக முடிந்ததும்,’ஜோசியக் காரன் கூட்டைத் திறந்து அட்டையை கையில் எடுத்தவுடன், கூட்டை விட்டு வெளியே வரும் பச்சை கிளிகள் போல’ சிவப்பு கிளிகள் இருக்கையை விட்டு பறக்க ஆரம்பித்தன”
“ஒரு கிளி தட்டு நிறைய பிஸ்கட், இன்னொரு கிளி சுடச்சுட தேநீர் எல்லாம் கொண்டு வந்து கொடுத்தது; கில்பர்ட் கிழடுவின் பொக்கை வாயிலோ ஒரு கிளி வோட்கா ஊற்றியது”
“ஒயிட் ஹார்ஸ் நெருங்கியதும், கிளிகள் கெஞ்சின பெல்ட் மாட்டுங்கள் என்று. கிளிகள் அனைவரின் இடுப்பையும், பெல்ட் அணிந்து இருக்கிறார்களா என்று தன் பார்வையால் கொத்தி விட்டுச் சென்றன”
“ஒயிட் ஹார்ஸ் வந்து, விமானத்தில் இருந்து இறங்கி, வெளியே குளிரில் நடுங்கி, ஓட்டமாய் ஒடி வேனில் ஏறியதும், அங்கும் ஒரு கிராமத்துப் பைங்கிளி! ஜப்பானிய ஆங்கிலத்தில் கீச் கீச்சிய ‘கிளியின் பெயர் ‘நோக்கரின் சுக்கா (20)’- அட்ரா சக்கா!! (வேனில் ஹீட்டர் சூடு இதமாய் இருந்தது!)”
Super…//பனிப் பிரதேசம் மட்டும் அழகல்ல; பனிப்பிரதேச விமானத்தில் பணிப்பெண்களும் அழகு தான். ‘கிளிகள்’ போன்று ‘கீச் கீச்’ குரலில் பேசினார்கள்// ஏர் கனடாவில எல்லா பணிப்பெண்களும் 50 வயசுக்கு மேல தான்.. வேஸ்ட் கனடா ஏர்லைன்ஸ் !
This is air north not air canada.
Palaniswami Rathanaswami இடிப்பார் இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பாரிலானிலும் கெடும்.
தவறிருப்பின் சுட்டிக்காட்டுவது மட்டும்
நண்பனின் பொறுப்பல்ல.
நல்லவற்றை, நல்ல எழுத்துக்களின் நயத்தை நன்கு அனுபவித்து மகிழ்ந்து, தன்னைப் பாதித்த வரிகளையும் உவமைகளையும் பதிவு செய்வதும் நன்றே. நண்பர் பொன்ராஜா அவர்கள் அவற்றைத் திறம்படச் செய்துள்ளார் என்பதற்கு மாற்றுக் கருத்தில்லை.
கற்றாரைக் கற்றாரே காமுறுவரன்றோ!
எல்லா வர்ணனைகளும் உவமைகளும் என்னைக் கவர்ந்தாலும் நான் மிகவும் அனுபவித்தது குக்கிராமம், கிராமம், நகரம் பற்றிய வர்ணனை. புரியாதவர்கள் மீண்டுமொருமுறை கட்டுரையைப் படிக்கவும்.
Sega Siva சிறுகதை, கவிதை, கட்டுரை எழுதுவது அதற்குரியவர்கள் தான் எழுத வேண்டும் என்று நினைத்திருந்த படியால், எம்மில் பல சிந்தனையாளர்கள் எழுதுவதற்கு யோசிக்கவில்லை. எனது ஆசிரிய நண்பர் ஒருவரின் கருத்துக்கள், கற்கனைகள் ஆகியவற்றைப் பொறுக்கி ஒரு எழுத்தாள நண்பர் மகுடம் சூட்டிக் கொண்டார். நான் கூட எனக்குத் தோன்றிய பல அற்புதமான எண்ணங்களை, சிந்தனைகளை அவற்றை வெளியிடாமல் அப்படியே குழிதோண்டிப் புதைத்துள்ளேன். அதனை ஓரளவிற்காவது குறைக்கலாம் என்று முயற்சிக்கின்றேன். முகநூல் அந்தவகையில் ஒரு வரப் பிரசாதம்.
முதற்தடவையாக ஏழுமலை ஸ்ரீதரின் பயணக் கட்டுரையை வாசித்தேன். அதனை வாசிக்கு முன் நண்பர்கள் சுவாமி, பொன்ராஜ் ஆகியோரின் விமர்சனங்களைப் பார்த்த போது வாசிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. பயணக் கட்டுரைகள் என்று தொடங்கும் போது எனது மனதில் முதலில் வந்து நிற்பவர் ஆனந்தவிகடன் மணியன். அவரின் கட்டுரையைப் படிக்கும் போது எங்களையும் அந்த இடத்துக்குக் கூட்டிச் சென்றுவிடுவார்.
ஸ்ரீதரின் பயணக் கட்டுரை சற்று வித்தியாசமாக ஆரம்பித்த விதம் கூட அசத்தலாக இருந்தது. அதில் உண்மை, சத்தியம் என்பவற்றுடன், உவமானங்கள், சுயவிமர்சனம், நமது மண்வாசைன ஆகியவற்றைக் கலந்து நகைச்சுவையாகவும் எழுதிய படியால் மிக அருமையாக உள்ளது. “உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே இனிமை தோன்றும்” அழகை அழகு என்று சொல்வதற்கு எந்த வெட்கமோ, கிலேசமோ அடையத் தேவையில்லை. அவர் சொன்ன மாதிரி கிளி அழகாகத்தான் உள்ளது. அவரால் எடுக்கப் பட்ட புகைப்படங்கள் கூட கட்டுரைக்கு அழகு சேர்க்கின்றன. தொடர் மிகவும் அருமையாகச் பயணிக்கின்றது. இதில் விசேடம் என்னவென்றால் வாசகர்களையும் தன்னுடன் அழைத்துச் செல்கின்றார். பொறுத்த ஸஸ்பென்ஸில் தொடரை நிறுத்தியுள்ளார். (அதாவது 20 வயது ஜப்பானியக் பைங்கிளியுடன் காரில் ஏறிவிட்டார்) வாழ்த்துக்கள்! பயணம் தொடரட்டும்……………..
அப்ப பஞ்சதந்தரத்தில் கமல் காட்டியதெல்லாம் பொய்யா?
நம் ஆர்க்டிக் ஹீரோ ஸ்ரீதரின் பனிப்பயணத் தொடர் கட்டுரைக்கு நம் பிதாமகர் டாக்டர் சுவாமி அவர்களும், மதிப்பிற்குரிய நண்பர் சிவா அவர்களும் மேலும் இன்று மெருகூட்டி இனிமை சேர்த்துள்ளார்கள். அன்பினிய நண்பர்களுக்கு மெத்தவும் நன்றி!
நம் பிதாமகர் இங்கு குறிப்பிட்டது போல், இந்தப் பதிவில் ‘நம்மையும்’ மிகவும் கவர்ந்தது (கிளிகள் வர்ணனைகளைப் போல),
‘கிராமம், குக்கிராமம், பட்டிக்காடு மற்றும் நகரம்’ என்பவற்றிற்கு-
மண்வாசனையுடனும், அட்டகாசமான உவமானங்களுடனும், நகைச்சுவையாக இருந்தாலும்- ஆழமான கருத்துக்களை உள்ளடக்கி, எல்லோருக்கும் எளிதில் புரியும்படியாக ஒரு புதிய இலக்கணமே வகுத்துள்ளது தான்!
அடுத்து, நமதருமை நண்பர் சிவா அவர்களும் முதன்முறையாக பயணக்கட்டுரையை படித்ததாகக் கூறி, முத்தான கருத்துக்களை இங்கு பதிவு செய்துள்ளார்கள்.
“உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே இனிமை தோன்றும்”
‘அழகை அழகு என்று சொல்வதற்கு எந்த வெட்கமோ, கிலேசமோ அடையத் தேவையில்லை. அவர் சொன்ன மாதிரி கிளி அழகாகத்தான் உள்ளது. அவரால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கூட கட்டுரைக்கு அழகு சேர்க்கின்றன’
இதில் விசேடம் என்னவென்றால் வாசகர்களையும் தன்னுடன் அழைத்துச் செல்கின்றார்.”
ஆனால், இதில் இன்னுமொரு முக்கியமான விசேஷம்!!
கடைசியாக, இதுவரை கூடவே அழைத்து வந்த வாசகர்களை கொஞ்ச நேரம் கழட்டி விட்டு (-தொடரும்- என்று சொல்லி சஸ்பென்ஸ் வைத்து விட்டு) தான் மட்டும் ‘ஜம்’ என்று காரில் “கீச் கீச் சோடு” அட்ரா சக்கா வென்று சொல்லி அமர்ந்து பயணத்தை ஆரம்பிக்க தயாராகி விட்டார்!
“நடந்தது என்ன? உண்மையும் பின்னணியும்!”
அடுத்த வாரம் வரை பொறுத்துத் தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை!
பின் குறிப்பு:
இன்னும் ‘சஸ்பென்ஸ்’ தாங்கவில்லையா?
அதுவரை ‘கிளி ஜோசியம்’ வேண்டுமானால் பார்க்கலாம்!