இது உண்மை சம்பவத்தை ஒட்டி எழுதப்பட்ட சிறுகதை.
ஏழாவது படிக்கும் என் பையன், இந்த வருடம், எதோ ஒரு வான்கூவர் தீவுல உள்ள ஒரு காட்டுக்கு கேம்ப் போக போறான். இந்த சம்மர் கேம்ப்புக்கான எல்லா ஏற்பாடுகளையும், அவங்க ஸ்கூல்தான் ஏற்பாடு செய்யுது. அதுக்கு இன்சார்ஜ் பையனோட வாத்தியார்- மிஸ்டர் மார்க்.
ஆபீசில் இருந்து சீக்கிரம் வா, ஈவினிங் மீட்டிங் ரொம்ப முக்கியம் என்று சொன்னான்.
சம்மர் கேம்ப், அடர்ந்த காட்டுக்குள்ளே என்பதாலும், முதல் முறையாக சின்ன பசங்க தனியா தங்க போறதாலும், எதை கண்டிப்பா எடுத்துட்டு வரணும், எது கண்டிப்பா எடுத்துட்டு வரக்கூடாதுன்னு சொல்ல ஒரு கூட்டம் நேத்து சாயும்காலம் ஸ்கூல்ல கூட்டினாங்க. பசங்களும் பெற்றோர்களும் கூடினார்கள். நானும் என் பையனோட போயிருந்தேன்.
கூட்டத்தின் நோக்கம், பெற்றோரின் சந்தேகங்களையும் பயத்தையும் போக்கி அனைத்து குழந்தைகளும் கேம்பிற்கு வரவைப்பதே ஆகும்.
பையனோட வாத்தி, மிஸ்டர் மார்க். ஆறு அடி உயரம். நல்ல குண்டு – செம சைஸ். வெள்ளைக்காரர். தாங்கி தாங்கி கூட்டத்துக்கு நடந்து வந்தாரு. குழந்தை மாதிரி பேசுனாரு. அவ்வளவு சாப்ட் கேரக்டர். என் பையனுக்கு அவரை ரொம்ப பிடிக்கும். அடிக்கடி அவரைபத்தி பேசுவான். முதன் முதலா நேர்ல பார்த்தேன். அவர் பேசினா யார் மனுசும் இளகிடும். அவ்வளவு நல்ல மனுஷன். பசங்களோட favorite வாத்தி என்பது புரிந்தது.
இதுதான், பசங்க தனியா தங்கபோற முதல் கேம்ப். ஏக எதிர்பார்ப்போட குழந்தைகள். கேள்விகளுடன் பெற்றோர்கள்.
வாத்தியார்- மிஸ்டர் மார்க், மெல்ல பேச ஆரம்பித்தார். “கேம்புக்கு போக, முதல்ல, கப்பல்ல ஒரு மணி நேரம், அப்புறம் ஒரு மணி நேரம் காட்டுல நடக்கணும். வான்கூவர் தீவில் மூணு நாள் ஜாலி கேம்ப். அங்க மொபைல் போன் சிக்னல் ஏதும் இல்லை. தங்க இடம், குளிக்க ஏரி, விளையாட இடம் அனைத்தும் உள்ள சௌகரியமான இடம் தான்” என்றார்.
எல்லாம் இருந்தாலும், சின்ன பசங்க தனியா காட்டுல தங்கும் பயத்தில், பெற்றோர்கள் ஏகப்பட்ட கேள்வி கேட்டார்கள்.
வாத்தி எல்லாருக்கும் ஒரு லிஸ்ட் கொடுத்து, அதில் உள்ள அனைத்து பொருட்களையும் கண்டிப்பா எடுத்து வருமாறு சொன்னார். அதை தவிர வேறு எந்த பொருளும் கூட எடுத்துவர அனுமதி இல்லை. எல்லா பொருளையும் வாங்கி ஒரு பெரிய சூட் கேசில், உடுக்க துணியுடன் கொடுத்து அனுப்ப சொன்னார்.
எல்லா சூட்கேசையும் ஹீட் ட்ரீட்மென்ட் செய்வோம். பூச்சி, பொட்டு இல்லாம பாத்துகுவோம். ஏக பாதுகாப்பு என்று தைரியம் ஊட்டினார்.
லிஸ்ட்டில் உள்ளதை தவிர, வேறு பொருட்களை நாங்கள் கண்டிப்பாக அனுமதிக்க மாட்டோம். சாப்பாடு கூட நாங்களே கொடுப்போம், எதுவும் கொடுத்து அனுப்பவேண்டாம் என்றார்.
டார்ச் லைட், 2 pairs of Shoes, medicines என்பவை கொண்டுவர வேண்டும் என்ற லிஸ்ட்டில் இருந்த சில ஐடம்ஸ்.
மொபைல் போன், ipad, Electronic Gadgets, Game consoles, Digital camera, knifes, sprays, candy, chocolates…என்பவை கூடாது என்ற லிஸ்ட்டில் இருந்த சில.
தனியாக அனுப்பும் பயத்தில், சில பெற்றோர்கள், அங்க கரடி வருமா? கொசு கடிக்குமா? கொக்கு கொத்துமா ? என்று கூட கேட்டார்கள்.
குளத்தில் குளிக்கும் போது பாதுகாப்பு கவசம் கொடுப்பீர்களா ? எங்க படுப்பாங்க? போர்த்தி படுக்க என்ன கொடுப்பீங்க? சாப்பிட என்ன கிடைக்கும்? அடிபட்டா மருத்துவ வசதி எப்படி? என்று பல கேள்விகள்.
எல்லாத்துக்கும் பெரிய வாத்தி பொறுமையா பதில் சொன்னாரு. போன வருஷம் போயிட்டு வந்த படம் எல்லாம் போட்டுக் காட்டினார்.
யாரும் பயப்படவேண்டாம். உங்க மனசில் சந்தேகம் வேண்டாம். எல்லாம் நான் பாத்துக்குவேன். என் கூட 8 பேர் வராங்க. அங்க 10-15 மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் இருந்து வந்து இருக்காங்க. கவலைப் படவேண்டாம் என்றார்.
“இதுக்கு மேலேயும் எதாவது கவலை இருந்தா, இப்பவே கேளுங்க, உங்க சந்தேகத்தை நான் தீத்து வைக்கிறேன்” என்று சொன்னார்.
கூட்டத்தில் அமைதி நிலவியது.
“ஏன் எந்த கேள்வியும் இல்லையா?…சங்கோஜபடாம கேளுங்க.. உங்க சந்தேகத்தை நான் தீத்து வைக்கிறேன்”…மேஜையை …அழுத்தி சொன்னார்.
எல்லா பெற்றோரின் சந்தேகங்களுக்கும் விடை கிடைத்தது இருந்தததால்….எல்லோரும் அமைதியாக இருந்தனர்.
அப்போது ஒரு வெள்ளைக்கார பெண்ணின் அப்பா மெதுவாக, தயங்கி தயங்கி, எழுந்து நின்றார்.
எல்லார் கவனமும் அவர் பக்கம் திரும்பியது. அவர் பயத்தில் இருப்பது பார்க்கும் போதே தெரிந்தது.
அந்த அப்பா தயங்கி தயங்கி கேட்டார் ” சார், நீங்க கொடுத்த லிஸ்டை பார்த்ததில் இருந்து என் பொண்ணு பயங்கர அப்செட். ஒரே அழுகை. நான் கேம்புக்கு போகமேட்டேன்னு சொல்றா”. அதுக்கு அவங்க அம்மாவும் சப்போட்டு … நீங்கதா.னு … இழுத்தாரு ….
அதுக்கு வாத்தி ” ஒன்னும் கவலை படவேண்டாம். லிஸ்ட்டில் உள்ள எல்லாத்தையும் வாங்க வேண்டியதில்லை. வாங்க மறந்ததை நாங்க கொடுத்திடுவோம். நாங்க பத்திரமா பாத்துக்குவோம். நீங்க உங்க மனைவிகிட்டே பேசுங்க. நான் உங்க பொண்ணுகிட்ட பேசுறேன். நான் தைரியம் கொடுக்கிறேன், பயப்பட வேண்டாம்னு சொல்லுங்க. நான் போட்டு காட்டிய படங்கள் உங்கள் பயத்தை போக்கி இருக்கும் என்று நினைக்கிறேன்” என்றார்..
அதுக்கு அவங்க அப்பா,
“நீங்க வேற சார், அவளுக்காவது, பயமாவது … பயம் எல்லாம் ஒன்னும் கிடையாது சார். நீங்க கொடுத்த லிஸ்ட்ல “மேக்கப் செட்” இல்லை. லிஸ்ட்டில் உள்ளது தவிர, வேறு எதுக்கும் அனுமதியில்லைன்னு நீங்க கிளாசுல சொல்லீடீங்க போல. லிஸ்ட்டை பார்த்ததில் இருந்து, வீட்டில் ஒரே அழுகை. மேக்கப் செட் இல்லாம அவளால இருக்க முடியாது. கேம்புல வெளிய தல காட்ட முடியாதுன்னு கவலைபடுறா. நீங்க தான் பெரிய மனசோட அதை அனுமதிக்கனும்” னு … மீண்டும் இழுத்தாரு ….
இதை கேட்டு அதிர்ந்த வாத்தி, ” என்னாபா இது…. மேக்கப் செட்டா? கரடி வரும் காட்டுக்குள்ள எதுக்கு உங்க பொண்ணுக்கு மேக்கப் செட்..? ” என்று கேட்டார்.
அதுக்கு அவங்க அப்பா ” அதை ஏன் சார் கேட்கறீங்க. அது, அவுங்க அம்மா மாதிரி. இந்த கருமத்தை போட அவ அம்மா தான் பழக்கி விட்டா . தூங்கும் பொது கூட அம்மாவும், பொண்ணும் மேக்கப் இல்லாம தூங்க மாட்டாங்க. ராவெல்லாம் எம்பொண்ணு ரொம்ப அழுவுறா சார் …..நீங்கதான் பெரிய மனசு பண்ணனும்..” என்று கெஞ்சினார்.
“எங்க உங்க பொண்ணு? இதை நான் அவ கிட்டயே கேட்கிறேன்” என்று வாத்தி கேட்டார்.
“நீ, கூடத்துக்கு போய் அனுமதி வாங்கிட்டுவா..நான் வெளிய விளையாடிட்டு இருக்கிறேனு சொல்லி என்னை அனுப்பி வைச்சுட்டா. ஆனா வெளிய வரும் போது Permission – னோட தான் வரனும்னு பிடிவாதமா சொல்லிட்டா ” என்றார் பாவமாக.
“கவலை படாதீங்க, எங்க அவுங்க அம்மா? நான் வேனா அவுங்கள பேசி சம்மதிக்க வைக்கிறேன்” என்று வாத்தி கேட்டார்.
அதுக்கு அவர் பயத்தோட ” சார் , எம் பொண்டாட்டி, நீ, எம் பொண்ணு வாழ்க்கையில் எதையும் உருப்படியா இதுவரை நல்லது செஞ்சதில்லை.. இதையாவது உள்ள போய், வாத்திகிட்ட ஒழுங்கா பேசி permission வாங்கிட்டு வான்னு சொல்லி (மிரட்டி) , வெளிய கார்ல உட்காந்து “ஜஸ்டின் பீபர்” பாட்டு கேட்டுட்டு இருக்கா” என்றார்.
வாத்தி நொந்து போயிட்டாரு.
அவர் நெத்தியில் “Why Makeup Set in Karadi Kaadu?” என்ற கேள்வி ஒட்டி இருந்ததை கூடத்தில் இருந்த அனைவரும் பார்த்தனர்.
பின் பெரிய வாத்தி நொந்துகிட்டே சொன்னாரு “சரி …சரி … உங்க பொண்னை அழ வேண்டாம்னு சொலுங்க. உங்க பொண்டாடியையும் இதுக்காக கோவபட வேண்டாம்னு சொல்லுங்க. உங்க குடும்பத்துக்காக நான் ரூல்ஸ்சை தளர்த்தி அனுமதி கொடுக்கிறேன். வேறு யாருக்கும் கிடையாது. யாரும், வேறு எதுக்கும் இனி இது வேண்டும் அது வேண்டும்னு கேட்கவேண்டாம்” என்று அன்போடு சொன்னார்”.
அனுமதி இதுதான்.
“வேணும்னா, உங்க பொண்ணை அனுமதிக்கப்பட்ட ஒரு பெரிய சூட்கேஸ் துணி கூட, ஒரு சின்ன பையை எடுத்துட்டு வர சொலுங்க. அந்த பையில மேக்கப் ஐடம் போட்டுஎடுத்துட்டு வர சொல்லுங்க. இந்த ரெண்டு ஐட்டம் தான். இதுக்கு மேல என்னால் எதுவும் முடியாது.” என்றார்.
அப்பாவுக்கு பயங்கர சந்தோசம். ” சாஆஆஆஆஆர் ….நெம்ப நன்றி சார். இருந்தாலும் இன்னும் ஒரு request சார் என்று இழுத்தார்….”
” என்ன இன்னும்?” என்று வாத்தி வேண்டா வெறுப்பாக கேட்டார்.
சார் , “எம்பொண்ணு, ஒரு சின்ன பையில் போட்டுக்க துணியும், ஒரு பெரிய மேக்கப் சூட்கேசும் எடுத்துட்டு வந்தா பரவாயில்லையா? “ என்றார்.
இதை கேட்ட வாத்தி, பொட்டுனு மயங்கி மேசையில் சாய்ந்தார்.
அவர் இப்போது மயங்கி விழுந்தது, கேம்பில் அவர் நிலைமையை நினைத்து இல்லை
அந்த பொண்ணோட வருங்கால புருஷனை நினைத்து ….
மேக்கப் பெட்டி அனுமதியோடு – கேம்ப் கூட்டம் கலங்கியது….
சந்தோஷத்தில் தந்தையும், தாயும், மேக்கப் மகளும் காரில் செல்ல,
சாய்ந்த மேசையில், சாய்ந்த பெரிய வாத்தி “பை” “பை” என்று கையை ஆட்டிக்கொண்டு இருந்தார்.
அப்போது சூரியன் மேக்கப் இல்லாமல் மறைந்து கொண்டு இருந்தது.
தூர நிலவு, மேக்கப்போடு மேகத்தில் இருந்து வெளியே வந்தது..
பொழுது சாய்ந்தது…. இரவு வேஷம் களை கட்டியது…
மனைவியும், மாணவியும் மேக்கப்போட்டு தந்தைக்கு குட் நைட் சொன்னார்கள்.
அப்பா, www.amzon.ca, கனேடிய காட்டில், புதிய மேக்கப் சூட்கேஸ் வாங்க, டீல் தேடிக்கொண்டு இருந்தார்.
இன்று இரவு, நல்ல பெட்டி கிடைக்கும் வரை அப்பாவிற்கு, அமேசான் காட்டில்தான் கேம்ப்.
_______________________________________
Behind the Scenes: Original Conversation:
Father : My daughter is upset. Can she bring the Makeup Set with her for the Camp? It is not in the list.
Mr. Mark : Makeup Set? …Hmmm, Ok…But I will allow 2 baggage per student. I am Ok as long it is small.
Father : Awesome. Thanks Mr.Mark
Rest is Creative Writing.
very nice..
மேக்கப் இல்லாவிட்டால் என்னையே எனக்கு யாருனு தெரியாது –
எனக்கு நான் யாரென்று தெரியாவிட்டால் அங்கு இருக்கப்போவது வேறொரு பெண்ணல்லவா?
அதனால் நான் கேம்ப்பில் இருக்க எனக்கு மேக்கப் வேண்டும் –
என்ற தத்துவத்தை அழகுத் தமிழில் எடுத்துரைத்ததற்கு நன்றி.
Superb…
“வாத்தியும் வருங்கால புருஷனும்” ஒரு நல்ல படைப்பு. வரைபடங்களும் அற்புதம்!!
“மார்க்-வாத்தி” ஒரு நல்ல வாத்தியார். அவருக்கு நிறையவே ‘மார்க்’ போடலாம்!!
‘கரடிக் காட்டில் கன்னிக்கு எதற்கு மேக்கப்?’என்று கணக்காக கேட்டவ ரல்லவோ நம் வாத்தி!
மேக்கப் மாணவியின் வருங்கால மணாளனை எண்ணி மனிதாபிமான உணர்ச்சி பொங்க ‘மயக்கம்’ போட்டவரும் நம் வாத்தியே!
“பாவப்பட்ட ஜன்மம்” மேக்கப்-மேனகையின் வருங்கால புருஷன் மட்டுமல்ல, அந்த ‘மணாளனின்-மாமனாரும் கூட’ என்று நன்கு அறிந்தவர் நம் வாத்தி.
நல்ல வேளையாக மேக்கப் செட்டிற்க்கு ‘ஓகே’ சொல்லி விட்டார் நம் வாத்தியார்..
இல்லையென்றால்…
ஆத்தாடியோவ்…என்ன நடந்திருக்கும்?
அப்பாவி அப்பாவை நன்றாக ‘ஆய்ந்து’ விட்டிருப்பார் அந்த மேக்கப் கருமத்தை பழக்கி விட்ட ஆத்தாக் காரி- பத்ரகாளியாக மாறி!
(ஏற்கனவே, வாத்திகிட்டே ஒழுங்கா பேசி ‘ஓகே’ வாங்கிட்டு வா என்று “மிரட்டி” அனுப்பி, வெளியே கானா பாட்டில் மூழ்கி காரில் காத்துக் கொண்டிருந்த நம் ‘மேக்கப் மகாராணி’)
அதற்காக ‘ஓகே’ சொன்ன நம் வாத்திக்கு தான் நாம் முதலில் நன்றி சொல்ல வேண்டும்!
பின்னர், ‘சாதனை படைத்திட்ட’ மகிழ்சியில், மாணவியும் அவர் மம்மியும் மேக்கப்போட்டு ‘குட்நைட்’ சொல்லிவிட்டு கனவுலகில் சஞ்சரிக்க..
அப்பாவி அப்பாவோ ‘அமேசான் காட்டுக்குள்ளே கேம்ப் போட்டு’, தனக்கு வந்த கொட்டாவியையும் அடக்கிக் கொண்டு, மகளின் மேக்கப் சூட்கேசுக்காக மணிக்கணக்காக மேய்ந்து வருகிறார்.
விரைவில் “சூட்கேஸ்” கிடைக்க நாமும் பிரார்த்திப்போம்… இல்லையென்றால் காலையில் கண்முழித்ததும் ‘மேக்கப் கலையாத பத்ரகாளியின்’ அவதாரத்தைத் தான் அவர் காண வேண்டி வரும்!
இதிலிருந்து அவர் தப்பிக்க ஒரே மாற்று வழி….
நம் அவதார்-3 “சுவாமி ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ. ” அவர்களின் அருளாசிகள் மட்டுமே!!
பின் குறிப்பு:
“மேக்கப் இல்லாவிட்டால் என்னையே எனக்கு யாருனு தெரியாது – எனக்கு நான் யாரென்று தெரியாவிட்டால் அங்கு இருக்கப்போவது வேறொரு பெண்ணல்லவா?” என்ற ஆழமான..
“மேக்கப்பில்லாத-தன்னை” அறியும் ஆன்மீக தத்துவத்தை தருணத்தில், தரணிக்கு வெளிக் கொணர்ந்த நம் அன்பினிய பிதாமகர் டாக்டர் சுவாமி அவர்களுக்கும் நன்றி பல.
Unmaiyale. Vara pora purusan tholainthan
Kalakunga….