நான் வான்கூவருக்கு கிளம்பும் சில மாதங்களுக்கு முன்பு என் மனைவியும் மகனும் Facebook ல் இந்த வீணா போன FarmVille என்ற கேம் ஆட ஆரம்பித்தார்கள். இதில் இவர்களுக்கும், அவர்களின் நண்பர்களுக்கும் போட்டி இருந்தது. இந்த கேமில், நாம்  நிலத்தை வாங்கி அதில் பல வகை பயிர் செய்யலாம். ஆடு, மாடு, கோழி என்று பலதும் வாங்கி விவசாயம் செய்யலாம். எனக்கும் கேம்களுக்கும் நிறைய தூரம். சரி, என்ன இழவோ ஆட்டட்டும் என்று இருந்துவிட்டேன்.

இந்த கேமில் வெற்றி பெற அறுவடை செய்ய வேண்டும். அதிக harvest அதிக gold coins மற்றும் points கொடுக்கும். பயிரை நட , விதைகள் வாங்க வேண்டும். பின்பு நிலம் ரெடி செய்து, அதை விதைத்து விட்டால் அவை சில மணி நேரம் முதல் சில நாட்களில் harvest க்கு வரும். பீன்ஸ் வகைகள் 4 – 8 மணி நேரத்திலும், wheat போன்றவை 18-24 நேரத்திலும் அறுவடைக்கு வரும். முதலில் அவர்கள் அறுவடை செய்து வந்தார்கள். போகப் போக அறுவடைக்கு வரும் நேரம்  இரவானதால் என்னை login செய்து அறுவடை செய்ய சொன்னார்கள். காரணம், அப்போது நான் ஒரு அமெரிக்க கம்பெனிக்கு இரவில் வேலைப் பார்த்து வந்தேன். முதலில் முடியாது என்றேன். உதவுங்கள் என்று கெஞ்சியதால் ஒரே ஒரு முறை Harvest செய்து கொடுத்தேன்.

காலையில் எழுந்து பார்த்தவர்களுக்கு மகிழ்ச்சி. அதையே இரண்டாவது நாளும் என்னைச் செய்ய சொன்னார்கள். அப்படியே இது வளர்ந்து ஏர் உழுவது , விதை விதைப்பது, மாடு மேய்ப்பது, கோழி முட்டை collect செய்வது என்று எனக்கு அவர்கள் farmville யில் வேலை அதிகமானது. இவர்களுக்கும், இவர்கள் நண்பர்களுக்கும் நடந்த போட்டியில் எனக்கு இரவில்  ஆபீஸ்  வேலை இல்லை என்றாலும் அலாரம் வைத்து எழுப்பி வேலை வாங்கினார்கள். ஒரு கட்டத்தில் நான் முழு நேர farmville விவசாயத்தில் மூழ்கினேன். நானே காலெண்டர் போட்டு விதை விதைப்பது, அறுவடைக்கு வரும் வரை விட்டதை பார்த்து காத்துக் கொண்டு இருப்பது என்று ஆபிஸ் வேலையை விட இந்த வேலை அதிகமாகியது. வந்த லாபத்தில் இருவரும் நிலத்தை வளைத்து வளைத்து போட்டு வாங்கி என்னை ஏர் உழ சொன்னார்கள்.

அதற்குப்பின் கொஞ்சம் கொஞ்சமாக எனக்கு மரியாதை குறைந்தது. ஏன் இன்னும் மாட்டுக்குப் புண்ணாக்கு வைக்கல ? ஏன் இன்னும் கோழி கக்கூசை கழுவல என்ற ரேஞ்சுக்கு இருவரும் என்னை வாட்டி எடுத்தனர்.

கனடாவுக்கு கிளம்பும் முன் இரவு கூட நான் நாற்று நட்டுவிட்டு, ஹாங்காங்கில் இறங்கி அறுவடை செய்தேன். கனடா வந்தபின்பும் என்னை இந்த Farmville யில் கொத்தடிமையாக வைத்து வேலை வாங்கினார்கள்.

கனடாவில் அப்போது வேலை தேடிக்கொண்டு இருந்தேன். அப்போது ஒரு நாள் இரவு வாழ்க்கையே வெறுத்து போய் இருந்த என்னை ஒரு இரவில் ஒரு பத்து வெள்ளை பண்ணி வாங்கி மேய்க்கச் சொன்னார்கள்.

அதோட சரி, இதுக்கும் மேல இந்த அடிமை வாழ்க்கை வேண்டாம்னு, அடிமைப் பெண் எம்ஜியார் போல இருவரும் தூங்கி கொண்டு இருக்கும் போது அந்த கேம்மில் இருந்த எல்லா நிலத்தையும்  காலி செய்து விற்றுவிட்டு அவர்கள் account இல் இருந்த கேமை delete செய்துவிட்டு ஓடி வந்துவிட்டேன்.

நீதி:

உங்கள் வெற்றிக்காகவும், சந்தோஷத்துக்காகவும் அடுத்தவர் வாழ்க்கையில் என்றுமே கேம் ஆட வேண்டாம். உங்கள் வெற்றிக்கு நீங்கள் உழையுங்கள்.