ஆண் என்பவன் வேட்டை ஆடவும், பெண் என்பவள் பிள்ளை பெற மட்டுமே என்று நம்பி பிறந்து இறப்பவர்கள் இந்த உலகில் ஏராளம்.

ஆதாம், ஆப்பிளைக் கொடுத்தது முதல், ஆப்பிள் போன் உபயோகிக்கும் இந்தக் காலம் வரை ஒரு மனிதனால் என்ன செய்ய முடியும் என்பதை மனிதனே முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை.

சுமார், 6 மில்லியன் ஆண்டுகள் ஆன பின்பும், நம் மூளையில் வெறும் 35% மட்டுமே உபயோகிக்கிறோம்.

மீதி 65% மூளை, நாம் தூங்கும் போது நம்மோடு தூங்குகிறது.

எதையாவது செய்ய வேண்டும் எனும் ஆவல் எப்போதுமே நம் மூளையில் உறங்கிக் கொண்டே இருக்கும்.

The human capacity to be curious has always existed.

 

அதை யார் வேண்டுமானாலும் தட்டி எழுப்பலாம்.

 

அப்படி ஒரு நாள் நான் ஹாஸ்டல் ரூமில் தூங்கிக் கொண்டு இருக்கும் போது ..

தாள் இடப்பட்ட கதவை ‘தட்’ ‘தட்’ என்று தட்டிவிட்டு சென்று இருந்தார் நியூஸ் பேப்பர் போடுபவர்.

அந்த காலத்தில்,தினமும் ஹிந்து நாள் இதழ் வாங்கிப் படிக்காவிட்டால், ஹாஸ்டல் அறிவாளிகள் லிஸ்ட்டில் நாம் இடம் பெற மாட்டோம்.

நானும் வாங்கினேன். ஹிந்துவை மட்டும் அல்ல.

 

ஜூஹி சாவ்லாவை நான் ரயில் நிலையத்தில்தான் முதலில் வாங்கினேன்.

அதன் பின் மாதாமாதம் ஹிந்தி நடிகைகள் என் ரூமுக்கே 12 ரூபாய் கொடுத்தால் ஓடி வந்தார்கள்.

கதவுக்குக் கீழே ஒழுக்கமான ஸ்டார் டஸ்ட் magazine, கலைந்த முடி ஹிந்துவுடன் சிதறிக் கிடந்தது.

பாலீதீன் கவரில் அழகாக மூடப்பட்டு இருக்கும் ஸ்டார் டஸ்ட் முன் பக்கத்தில் எப்போதுமே திறந்த மேனி நடிகைகள் படங்களே இருக்கும்.

 

இந்த முறை, வித்தியாசம்.

அட்டைப் படத்தில் இரு வசீகர கண்கள் என் தூக்கத்தை கலைத்தது.

என் அறை சுமார் பத்துக்கு பன்னிரண்டு ஆடி இருக்கும்.

ஒரு ரூமில் இரண்டு முதுகலை மாணவர்கள் தங்கி இருந்தோம்.

இருவருமே மரபியல் படிக்கும் மாணவர்கள்.

கதைக்கு நான் மட்டுமே தேவை என்பதால் இன்னொருவர் பற்றி கவலைப்படவேண்டாம்.

 

இரண்டு கட்டில்கள். இரண்டு மேஜைகள்.

மூலையில் ஒரு மண் பானை. அதில் கவிழ்த்து வைக்கப்பட்ட ஒரு ஸ்பீக்கர்.

வயர் இளையராஜாவின் தொண்டையை இணைத்து இருக்கும்.

அந்த மண் பானை பிறக்கும் போதே சாபத்தோடு பிறந்தது.

ஒரே ஒரு நாள் இளையராஜா பாடாமல் போனால் அது உடைந்துவிடும்.

சுமார் இரண்டு வருடங்கள் ஒரு சிறு விரிசல் கூட இல்லாமல் இளையராஜாவின் புண்ணியத்தில் உயிர் வாழ்ந்து கொண்டு இருந்தது அந்த மண் பானை.

 

அப்போது காலை 6.30 மணி …இருக்கும்

 

ஜெய்ப்பூர் ரயில் நிலையத்தில் ரயில் வண்டி புகையை கக்கிக் கொண்டு புறப்படத் தயாராக இருந்தது.

ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ். பெயர்தான் எக்ஸ்பிரஸ். நின்று நின்றுதான் ஓடும்.

சுமார் இரண்டு நாட்கள் தொடர்ந்து ஓடவேண்டும் என்ற அயர்ச்சி அதன் விசில் சத்தத்தில் விட்டு விட்டுக் கேட்டது..

37 station களை கடந்து அந்த ரயில் கோவை வந்து சேர வேண்டும்.

 

சுமார் பத்து பதினைந்து கிராமத்து வாசிகள் ஒரு குடும்பத்தை வழி அனுப்ப அங்கு இருந்தார்கள்.

அவர்கள் எல்லோருமே ராஜாதான் மாநிலம் பிகானீரை சேர்ந்தவர்கள்….

பெரும்பாலும் ஆண்கள். பாண்டியா அங்கராக்கா மேல் ஆடை மற்றும் பொட்டி அணிந்து இருந்தார்கள்.

நம்மூர் வேஷ்டி சட்டை போன்றது. கீழே தோத்தி.

ஒரே ஒரு வித்தியாசம் நம்மைப் போன்று தலைப்பாகை அணிந்து இருந்தாலும் அதன் நிறம் அந்த ஊரின் weather பொறுத்து மாறுபடும்.

பிக்கானீர் ஒரு பாலைவனம். வந்து இருந்தவர்கள் தலைப்பாகை மல்டி கலர்.

அப்படி என்றால் அவர்கள் Rajputs.

 

ராஜஸ்தானில் ஜாதி குலம் பொருத்து அவர்கள் தலைப்பாகை நிறம் இருக்கும்.

பிஷ்ணோய் என்றால் வெள்ளை. ஜாட் என்றால் மங்கிய வெள்ளை. ரைக்கா என்றால் சிவப்பு. லங்கா என்றால் checked வரிகள்.

ரயில் வண்டியில் அமர்ந்து இருந்த ஒரு பெண்மணி தான் பைகளை மீண்டும் எடுத்து பார்த்துக் கொண்டார்.

சுமார், 60 பாஜ்ரா ரொட்டிகளும், லாசன் பூண்டு சட்னியும் ஒரு டபராவில் தூங்கிக் கொண்டு இருந்தன.

இவை சுமார் பதினைந்து நாட்கள் வரை தாங்கும் பாலைவன உணவு.

பிக்கானீர் பாலைவனம் இவர்களின் மூதாதையர்களுக்கு சொல்லிக் கொடுத்த ஒரு புளிசாதம் மங்கா ஊறுகாய் காம்பினேஷன்.

ரொட்டி ஆப்கானில் இருந்து அவுரங்கஜீப் இவர்களுக்கு சொல்லிக் கொடுத்தது.

பூண்டை வைத்து சட்னி செய்ய மார்வாரிகள் சொல்லிக் கொடுத்தார்கள்.

ரொட்டியையும், பூண்டு சட்னியையும் பார்த்த அந்த அம்மணிக்கு வாயில் எச்சில் ஊறியது…

 

“தூ” என்று துப்பினேன்…

 

பல் துலக்கிக்கொண்டே ஸ்டார்ட் டஸ்ட் magazine நின் அட்டைப் படத்தை உற்று நோக்கினேன்.

1996 ஐஸ்வர்யா ராய் அட்டைப்படம். Fire Behind That Face என்பதுதான் தலைப்பு.

ஷோபா டே ரசித்து ரசித்து எழுதிய கட்டுரை.

துளு பேசும் குடும்பத்தில் architech ஆகி இருக்க வேண்டிய ஒரு சாதாரண மிடில் கிளாஸ் பெண் எப்படி உலக அழகி ஆனார் என்பதுதான் அந்தக் கட்டுரை.

எனக்கு அந்தக் கட்டுரையில் அக்கறை இல்லை.

அந்த அட்டைப் படத்தை அப்படியே கிழித்துவிட்டு மீதி புத்தகத்தை எடுத்துத் தூர வைத்துவிட்டேன்.

இத்தனைக்கும் அப்போது என் வாயில் இருந்த brush ஐ பல் மென்று கொண்டுதான் இருந்தது.

மே மாதம் சம்மர் லீவ் என்றாலும் லேபில் பல வேலைகள் இருந்தன.

இருந்தாலும் இந்த சம்மரில் இவரை வரைந்தே ஆகவேண்டும் என்று முடிவு செய்தேன்.

சனி, ஞாயிறு என்பதால் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரே மூச்சாக இவரை வரைந்து விட வேண்டும் என்று முடிவு செய்தேன்.

 

வாட்டர் பாட்டிலில் இருந்த தண்ணீரை கொண்டு வாயைக் கொப்பளித்து “தூ” என்று துப்பினார்.

 

“பார்த்துத் துப்பு” யாராவது மேல் படப்போகுது என்று ஒரு வயதான பாட்டி அந்தம்மாவிடம் சொன்னது.

இப்போது 58 ரொட்டிகள் மட்டுமே டபராவில் இருந்தன.

 

ரயில் புறப்பட்டது.

 

ஜன்னல் ஓரம், இந்தக் கதையின் கதாநாயகி தலையை சாய்த்து அமர்ந்து இருந்தார்.

அவர் காதில் ராஜஸ்தானின் போல்கி சில்வர் ஜும்க்கா கம்மல்கள் ஆடிக்கொண்டு இருந்தன.

ரயில் கிளம்பும் போது ஓடி வந்த ஒருவர் அந்தப் பெண்ணிடம் பல புத்தங்களை கொடுத்தார்.

இப்படி ஓடி வந்து கொடுத்தவர் அநேகமாக மாமாவாகத்தான் இருக்கவேண்டும்.

அநேகமாக அவர் மகன் கிராமத்தில் காதில் கடுக்கனுடன் மார்வாரி குதிரைகளை மேய்த்துக் கொண்டு இருக்கலாம்.

பிகானீர் பாலைவனத்தில் பெரும்பாலோர் curiosity இல்லாமல் வாழ்வபவர்கள்.

ஆண் என்பவன் குதிரை ஏறுபவனும் , பெண் என்பவள் பிள்ளை பெற மட்டுமே என்று நம்பி பிறந்து இறப்பவர்கள் இந்த உலகில் ஏராளம்.

அதில் அந்த கடுக்கன் போட்டவனும் ஒருவன். மாமா அப்படி இல்லை. முற்போக்கு வாதி.

ராணுவத்தில் இருந்ததால், கூட இருந்த தமிழர்கள் அவருக்கு சொல்லிக்கொடுத்து இருக்கக்கூடும்.

 

 

ரயில் நகர்ந்தது …

இன்னும் இரண்டு நாட்கள்… போர் அடிக்காமல் படித்துக்கொண்டே போ பேட்டி…என்று சொல்ல சொல்ல.. ரயில் பிங்க் சிட்டியைக் கடந்தது.

ஐஸ்வர்யா ராய் அதே வசீகர கண்களுடன் தூங்காமல் அந்த ரயிலில் நம் கதையின் கதாநாயகியுடன் பயணித்தார்.

சுமார் இரண்டு நாட்கள் கழித்து ரயில் கோவைக்கு அதி காலையில் வந்து சேர்ந்தது.

 

கண்கள் விழித்து சத்தம் போட்டார் …ரூம் மேட் ..

 

டேய், அப்படி நைட்டும் பகலும் என்னத்தடா இப்படி வரைஞ்சு தொலைக்கிற ..

Final Finish …touching முடிந்து ஐஸ்வர்யா ராய் புகைப்படத்தை என் 35 % மூளை கொண்டு முடித்தத்தை காண்பித்தேன்.

இருந்தாலும் அந்த அட்டைப் படம் போலக் கலரில் இல்லையே என்கிறார்.

பயங்கர டயர்ட் …

என் மூளையின் மீதி 65 % ரூமில் இன்னமும் அந்த ரூமில் தூங்கிக் கொண்டு இருந்தது.

RS புரம் நோக்கி டீ குடிக்கக் கிளம்பினேன்….

 

டீ, காப்பி …டீ, காப்பி …என்று கோவை தமிழ் இருவரையும் எழுப்பியது.

சுமார் ஒரு மாதம் கழித்து இப்போதுதான் தமிழ் காதில் விழுகிறது ..

பேட்டி…உத் ஜாவோ ..

 

இது ஹிந்தியில் சரியா என்று தெரியாது …

ஆனால் காதா நாயகனுக்கு இந்தளவுக்குத்தான் ஹிந்தி தெரியும் …

அப்படியே படித்து புரிந்து கொள்ளவும் ..

ஹம் கோயம்புத்தூர் பஹுன்சே …

கதா நாயகி கண்  முழித்தார்…

 

நான் உர் உர் என்று டீயை குடித்துவிட்டு லேபிற்கு சென்றேன்.

அங்கு இருவரையும் வரவேற்க அந்தப் பெண்ணின் தந்தை வந்து இருந்தார்..

பேட்டி…ஆப்கி சுட்டி கைசி தீ ..

 

தொடரும்