பாகுபலி – (www.sridar.com)

எல்லோரும் படத்தை பற்றி பல வகையில் எழுதி விட்டதால் அதையே நான் திரும்ப எழுதப் போவதில்லை.

இது என் மாற்றுப் பார்வை

இந்திய தீபகற்பத்தின் வரலாறு மிகத் தொன்மையானது.
பேலியோலிதிக் கற்காலம் தொட்டு வெள்ளைக்காரன் ஆண்ட கலோனியல் காலம் வரை அது பரந்து விரிந்தது.
சுமார் 75,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் மனித தடம் தன் கலாச்சாரத்தைப் பதித்துவிட்டது.

நாம், இன்று இழந்து நிற்கும் கலாசாரம் பன்னெடுங்காலமாக நம் மக்கள் வாழ்வியலை உள்வாங்கிப் பிறந்ததுதான்.அது அவ்வளவு லேசுப்பட்டதில்லை.

சிந்து சமவெளியில் ஆரம்பித்து, இந்தோ ஆரிய, வேத காலங்களைக் கடந்து பௌத்தம், சைவம், வைணவம் மற்றும் சக்தி வழிபாடுகளின் வளர்ச்சி கண்ட பூமி இது.

இந்த பூமியை ஆள ஆசைப்படாத அரசர்கள் இல்லை. இங்கு நடக்காத போர்கள் இல்லை. அண்ணன், தம்பியைக் கொன்றதும் அரசனுக்கு ஆயிரம் வைப்பாட்டிகளும் சகஜமாக இருந்த கலாச்சாரம் இது.

உலகின் முதன்மையான நாகரிகத்தின் சொந்தக்காரர்கள் நாம். நமக்கு நாமே நேர்மை, நீதி, நியாயம், தர்மம் என்று புத்தகம் பல எழுதி வைத்து அரசாண்ட பூமி இது.

நம் தொன்மையையும், நம் கலாசாரத்தின் பின் நோக்கிய நிழல் பிம்பங்களையும் நாம் சொல்லிக் கேட்டு இருப்போம். இதை ஒட்டிய பல புத்தகங்களும், சில இந்திய வரலாற்றுப் படங்களும் வந்து உள்ளன.

உதாரணத்துக்கு, வடக்கே எடுக்கப்பட்ட Mughal-E-Azam (1960) ஒரு மிகச் சிறந்த வரலாற்றுப் படம். தமிழில் சொல்லவேண்டும் என்றால் 1948 ஆம் ஆண்டு வெளிவந்த சந்திரலேகாவைச் சொல்லலாம். புனைவுக் கதை என்றாலும் அதில் கொஞ்சம் பண்டையகால வாழ்வியலைக் காணலாம்.

எஸ். எஸ். வாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஆர். ராதா, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
அந்த காலத்தின் மிகப் பெரிய பிரம்மாண்டப் படம் அது. முரசுகள் மீது ஆடிய நடனத்தைச் சுமார் 25 ஆண்டுகள் பேசினார்கள்.

இதைத் தவிர்த்து இந்தியில் அமரபாலி (1966), மற்றும் 1955 ல் வந்த அட்-இல் ஜஹாங்கீர் மற்றும் 2008 ல் வந்த ஜோதா அக்பரையும் சொல்லலாம்.

இவ்வளவு தொன்மை இருந்தும் இந்தியாவின் பெருமை என்று எடுத்துக்கொண்டால் நம் வரலாற்றுப் புத்தகத்திலும் சரி சினிமா ஊடகத்திலும் சரி அக்பர், ஒளரங்கஜீப், பாபர், ஹுமாயுன் பற்றியும் ஷாஜஹான் வடக்கே மும்தாஜூக்கு கட்டிய தாஜ் மஹாலையும் மட்டுமே முன் நிறுத்து எழுதப்பட்ட வரலாறும், சினிமா படங்களும்தான் பெரும்பாலோருக்கு நியாபகம் வரும். அதை விட்டால் காந்தி, ஜான்சிராணி, கப்பல் ஓட்டிய தமிழன் என்று கலோனிய சினிமா பதிப்புக்கள் ஏராளமாக வந்து இருக்கின்றன.

இதற்கு யாரையும் தப்புச் சொல்ல முடியாது. ஆங்கிலேயருக்கு முன் கடைசியாக ஆண்டவர்கள் முகலாயர்கள். இந்த இரண்டை வைத்து மட்டுமே இந்திய வரலாற்று சினிமா காலம் ஓட்டியது.

இந்தியாவிற்கு tour வந்தால் டெல்லி இரும்புத் தூணையும், பதே பூர் சிக்ரி ஆக்ரா வழியே ராஜஸ்தான் சென்று மீண்டும் டெல்லி வந்தாலே அதுவே இந்திய வரலாறு என்று நம்பிக்கொண்டும் இருந்தது போல படம் எடுத்துக்கொண்டு இருந்தார்கள்.

இந்தி சினிமாவிற்கு தொடக்கம் இதுதான். பாபர்தான் source. 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த துருக்கிய – மங்கோலிய கலப்பினப் பேரரசர் தைமூர் என்பவர்தான் முகலாய ஆட்சியின் பீடம். பாபரில் ஆரம்பித்து கடைசி முகலாய மன்னன் பகதூர் ஷாவுடன் படம்மும் ஒன்றை எடுத்து டைட்டில் போட்டு முடித்து விடுவார்கள்.

அதைவிட்டால், அவர்களுக்கு அடுத்த சப்ஜெட் ஆங்கிலேயருடன் கிரிக்கெட் ஆடியது, ஹரியானாவில் மல்யுத்தம் செய்தது, பாண் சிங் தோமர் என்று போய் விடுவார்கள்.

கல்லணை கட்டிய கரிகாலனைத் தெரியாத இந்தியனுக்கு, பூலான் தேவி பற்றித் தெரியும். அதையும் தாண்டி வரலாறு என்றால் இந்தியா பாகிஸ்தான் பிரிவினை. அடுத்து கார்கில், காஷ்மீர். 150 ஆண்டுக்கு மேல் சிந்தித்து படம் எவரும் எடுத்ததில்லை.

தென் இந்தியாவின் தொன்மையை இதுவரை செலுலாய்டில் யாரும் மிகச் சிறப்பாக உலகம் போற்றும் வகையில் வடித்ததில்லை.

இடிந்த கொலை செய்யும் களமான கிரேக்கக் கலோசியத்துக்கு இருக்கும் மரியாதை, நிமிர்ந்து இருக்கும் நம் தஞ்சைப் பெரிய கோயிலுக்கு சினிமா கொடுத்ததில்லை.

We never painted a perfect Historic Picture.

ஓவியர்கள் இருந்தும் காகிதங்கள் கிடைத்ததில்லை.

முகலாயர்கள் இந்தியாவை ஆண்டது, வெறும் 150-175 ஆண்டுகள் மட்டுமே. அதுவும் வடக்கேதான் இவர்களின் ஆட்சியின் பெரும் பகுதி. இவர்கள் விட்டுச் சென்ற கட்டிடக் கலையும், பண்பாடும் கலாச்சாரமும்தான் இதுவரை இந்திய சினிமாவில் கோலோச்சி வந்து இருக்கிறது. இந்த அரசர்களை முன் நிறுத்தியே படங்களும் வந்து உள்ளன.

வட இந்தியர்களைப் பொறுத்தவரை இதுதான் இந்தியாவின் வரலாறு. ஒடிசாவில் சந்திர குப்தனையும், பாடலிபுத்திரத்தையும் அதிகமாக நாமும், நம் வராலாற்றுக் காவியங்களும் சரியாகக் காட்டியதில்லை.

கலிங்கத்துக்கே இந்த நிலைமை என்றால் தெற்கே ஆண்ட சோழ, சேர பாண்டியன் பற்றி எல்லாம் யார் கண்டு கொள்வது? இந்த கடுப்பில்தான் கமல் மருதநாயகம் எடுக்க நினைத்தார். ராஜ மௌலி முந்திக்கொண்டார்.

கமலும், ராஜமௌலியும் ஒரே காலத்தில் சினிமா உலகின் பீக்கில் இல்லாமல் போனது ஒரு சினிமா வரலாற்றுப் பிழை

ராஜ மௌலி பீக்கில் இருக்கும் போது கமல் டிவிட்டரில் பீக்கில் இருக்கிறார்.

சரி, அதை விட்டு விடுவோம்…

நான்கரை அடி உயரம் உள்ள குள்ள அக்பரை, ஜோதா அக்பரில் ஆறு அடியாகக் காட்டி செல்லுலாய்டில் இந்திய வரலாறு எழுதினார்கள். வாவ் வாட் ஏ ஹிஸ்டாரிக் movie என்றார்கள்.

150 வருடம் மட்டுமே ஆண்ட முகலாய மன்னர்களுக்கு மீடியாவும், சினிமாவும் கொடுத்த முக்கியத்துவத்தை, இதைவிட மிகச் சிறப்பாகவும், திறமையாகவும் ஆண்ட பல இந்திய பேரரசுகளுக்குக் கொடுக்கவில்லை என்பது என் தனிப்பட்ட ஆதங்கம். தென் இந்திய பேரரசுகளைப் பற்றியும், புராதன வாழ்வியலையும் இதுவரை ஏன் யாரும் எடுக்கவில்லை என்ற ஏக்கம் பல தென் இந்தியர்களுக்கு இருந்து இருக்கும்.

தக்காண பீடபூமியில், சுமார் 400 வருடம் செம கெத்தாக ஆட்சி புரிந்த விஜயநகரப் பேரரசு பற்றி இன்று எத்தனை பேருக்குத் தெரியும்? இந்தியாவை ஆட்சி செய்த மிக சிறந்த மன்னர்களுள் ஒருவன், கிருஷ்ண தேவராயன் என்பது நம்மில் பலருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை.

ஹரிஹர ராயன், புக்க ராயன் பற்றி எல்லாம் நம் வரலாறே நமக்கு வெளிச்சம் போட்டு சரியாக காட்டியதில்லை.

ராஜராஜனும், ராஜேந்திர சோழனும், திருவாங்கூர் சம்ஜிராமதீரா ரவிவர்ம குலசேகரன் போன்ற மன்னர்கள் வட இந்தியாவை ஆண்டு இருந்தால் இவர்கள் வரலாறே வேறு மாதிரி எழுதப்பட்டு இருக்கும்.

விட்டுத் தள்ளுங்கள் …

இன்று வெளிவந்து சக்கை போடு போடும் பாகுபலியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் வெறும் ரியல் டைம் கிராபிக்ஸ் காட்சிகளோ, செம ட்விஸ்ட்டான கதையோ, கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் போன்ற காரணங்களோ மட்டும் இல்லை..

எந்த வித சமரசமும் இன்றி, தென் இந்திய முகங்களை மட்டுமே கொண்டு தக்காண பீட பூமியில் நம் முன்னோர்கள் ஆட்சி புரிந்த பூமியையும், நம் மக்களின் கலாசாரத் தொன்மை சார்ந்த வாழ்வியலையும் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி நம் ஆழ் மனதில் புதைந்து இருக்கும் நம் பூமியின் காலாச்சார மன ஓட்ட பிம்பங்களை நிழல் பிம்பங்களாக நிஜத்தில் கொண்டு வந்ததே இந்த வெற்றிக்கு மாபெரும் காரணம்.

உள் மனதில் அந்த காலத்தில் நம் மன்னர்களும், அரசிகளும், மக்களும், அவர்களை ஒட்டிய வாழ்க்கையையும் நிஜம் போல் பார்த்த ஷாக்தான் அது.

அது ஒரு இனம் புரியாத Satisfaction நம் ஆழ் மனதில் விதைக்கிறது. நம் 1000 வருட முப்பாட்டனின் பூட்டனின் பழைய புகைப்படத்தை மண் சட்டியில் இருந்து தோண்டி எடுத்து, அவர் அந்த காலத்தில் HD Cam கொண்டு எடுத்த கதையின் நெகட்டிவை நமக்கு கலர் பிரிண்ட் போட்டு காண்பித்தால் என்ன பரவசம் கிடைக்குமோ, அதே பரவசம்தான் பாகுபலியை காணும் போது வருகிறது.

இந்த படத்தை பார்த்து பல வட இந்தியர்கள் ஜெர்க் ஆகி இருப்பார்கள் என்பது திண்ணம். இந்திய சினிமா வரலாற்றில் முதன் முறையாக, ஒரு தென் இந்திய கலாச்சாரத் தொன்மையை மின் பிம்பமாக மாற்றிய திரைப்படமே பாகுபலி என்றால் அது மிகை அல்ல.

ரிச்சர்ட் ஆட்டன்பாரோவுக்கு எப்படி ஒரு காந்தியோ, ராஜ மௌலிக்கு பாகுபலி. செதுக்கி எடுத்த சிற்பம் இது.

மற்றபடி பாகுபலியின் கதை இதுதான்.
மொத்தம் இரண்டே இரண்டு முடிச்சுக்கள்.

ஒரு முடிச்சு…
அடுத்த அரசர் யார் என்பதை முடிவு செய்ய கட்டப்பாவால் பாகுபலியின் முதுகில் குத்தி கிழிக்கப்பட்ட ஒரு முடிச்சு.

இன்னொரு முடிச்சு…
அடுத்த அரசு வாரிசு பிறப்பதற்காக தம்மனா முதுகில் பாகுபலியால் அவிழ்க்கப்பட்ட ஒரு முடிச்சு.

ஒரு முடிச்சி அவிழிந்த ஆனந்தத்தை பாகுபலியும், இன்னொரு முடிச்சியை ராஜ மௌலி அவிழ்த்த காரணத்தை நாமும் திரையில் காண்பதே படத்தின் கிளைமஸ்ஸ்.

எபிக்.

ஸ்ரீதர் ஏழுமலை
www.ஸ்ரீதர்.காம்
________________________________
Read more : http://bit.ly/2oWVNO4