பாலா, இளயராஜா எனும் இரண்டு பேரை மறந்துவிட்டு இந்த படத்தை பார்த்தால் இது ஒரு மிக மொக்கையான, சுமார் படம் எனும் லிஸ்ட்டில் கூட வர கஷ்டபடும் ஒரு தட்டையான தமிழ் படம்.
தாரை என்பது ஒரு நீளமான 12 அடி வரையான நீளத்தைக் கொண்ட ஒரு பழந்தமிழ் இசைக் கருவி. தப்பட்டை என்பது தோல் வாத்தியம். இந்த இரண்டையும் வாசிக்கும் ஒரு விளிம்பு நிலை மனிதர்களின் படம் என்று எண்ணத்தோடு பார்த்தால் இது ஒரு பெரிய ஏமாற்றம்.

எல்லா தமிழ் டைரக்டர்களுக்கும் ஒரு டெம்ப்ளேட் இருக்கும். ஒன்று சக்சஸ் என்றால் அதே டெம்ப்ளேட்டில் கதையை மற்றும் மாற்றி மீண்டும் மீண்டும் எடுத்து வாட்டுவார்கள்.

இந்த படத்தின் மூலம் இந்த லிஸ்ட்டில் பாலா இடம் பெற்று விட்டார்.
அவருக்கு வர வர அவரின் சைக்கோ கேரக்டர்கள்தான் டெம்ப்ளேட்டின் மூல கரு ஆகி விட்டது.
ஓரே விதமான சைக்கோ கேரக்டர்களில் கதையை மற்றும் மாற்றி எடுக்க ஆரம்பித்து விட்டார்.

தாரை தப்பட்டையில் இதுதான் பிரச்சனை. இதுவரை நாம் பார்த்து ரசித்த எல்லா பாலா பட கேரக்டர்களும் இதில் வந்து போகிறார்கள்.
இதில் குழம்பியது நாம் மட்டும் அல்ல. இளையராஜாவும்தான். சேது, நான் கடவுள், பிதாமகன் என்று எல்லா சோக இசையும் இங்கே ரிபீட்.

தாரை தப்பட்டையின் மிக முக்கிய வீக்னெஸ் உப்பு சப்பு இல்லாத ஒரு ஸ்டோரி லைன்.
படத்தில் ஹீரோ கேரக்டரைஷேஷன் மகா மட்டம். பாவம், சசிக்குமார். அவரின் வழக்கமான ஆட்க்ரோஷமும், நக்கலும் இதில் மிஸ்ஸிங்.
சன்னாசியாக வரும் இவர் நடிப்பதா இல்லை நடிக்ககூடாதா என்று பாலாவுக்கு பயந்து பயந்தே கடைசிவரை படத்தில் நடிக்காமல் போய்விட்டார்.
இதைத்தான் வரலக்‌ஷ்மி ஓவர் டேக் செய்கிறாரே ஒழிய அவர் கேரக்டரும் வீக்குதான்.
முதல் பாதியில் வீர லக்ஷிமியாக வரும் இவர் ஒரு 45 நிமிடங்கள் பின்பு சோக லட்சிமியாக அழுது வடிக்கிறார்.
படத்தின் ஓரே ஆறுதல் வர லக்ஷ்மியின் நடிப்பு மட்டுமே.

சரி படத்தில் என்ன என்ன ஓட்டைகள்?

சில சாம்பிள்கள் …
அந்தமானுக்கு முதலில் பயணம் செய்யும் ஒரு கப்பல் காட்சி வரும். எல்லோரும் ஒரு 20 டிகிரி வலதும் இடதும் மொத்த frame மில் வலதும் இடதும் ஆடுவார்கள். Shoot செய்தவுடன் எடிட்டர் வைத்து கப்பலை ஆட்டி உள்ளார்கள். நாடோடி மன்னனில் எம்ஜியார் கப்பல் இப்படித்தான் ஆடும். இந்த மாதிரி படத்தில் ஆயிரம் இடங்களில் டீடெய்ல் இல்லாத டப்பா காட்சிகள் பல உண்டு. இவர்கள் அந்தமான் என்று சொல்லி அமஞ்சகரையில் எடுத்தது எல்லாம் அப்பட்டமாக தெரிகிறது. அந்தமானில் நடப்பது எல்லாமே கதைக்கான செட்ப் காட்சிகளே ஒழிய இது கதையில் நடக்கும் நிகழ்வுகள் இல்லை. இதில் அந்தமானில் வெள்ளை சொக்கா போட்டுட்டு ஏகப்பட்ட ஆளுங்க மாங்கா தனமா voice sync இல்லாத ஜுனூன் ஹிந்தி பேசி சாவடிக்கிறார்கள். எதுக்கு அந்தமானுக்கு போனார்கள்? எப்படி ஒரு நாள் கூத்தில் எல்லோரும் டிக்கட் வாங்கி வந்து சேர்ந்தார்கள் என்று பாலாதான் விளக்க வேண்டும்.

படத்தில் சாமி புலவனாக சசிகுமாரின் தந்தையாக வரும் ஜி.கே.குமார் ஒரு சரக்கு மாஸ்டர்.பொதுவாக தவில் கலைஞசர்கள் வாசிக்கும் போது பாட மாட்டார்கள். தம் பிடித்து அடித்துக்கொண்டே பாட முடியாது.
தவில் வாசித்துக் கொண்டே பாடும் முதல் தமிழ் இசையல் புயல் இவர்தான்.
அவர் வாசிப்பதற்கும், முக பாவனையையும் பார்க்கும் போதுதான் நமக்கு தில்லான மோகனாம்பாள் சிவாஜியின் நடிப்பின் அருமை புரிகிறது.
இவர் அடிக்கும் சரக்கை கொஞ்சம் இவர் கேரக்டரிலும் ஏத்தி இருக்கலாம்.

ஆஸ்திரேலியாவில் இருந்து வந்தவர்களுக்காக இவர் பாட போவார். அவர் கையில் தாரை இருக்கும். அருகே ஒரு தபலா. அப்புறம் ஒரு ஜிங் ஜக் இருக்கும்.
பாட ஆரம்பித்ததும் தபலா பீட் வரும் முன்னரே தபலா வாசிக்க ஆரம்பித்துவிடுவார் தபலா கலைஞர். டக்குனு சாமி புலவன் ஒரு வட நாட்டு சாரங்கி எடுத்து ஒரு பிட் போடுவார்.
என்னையா நடக்குதுன்னு நமக்கே குழப்பம் வரும் வரை அவரை நடிக்கவிட்டு இவர் செத்தால் படத்துக்கு நல்லது என்ற அளவுக்கு சித்தரித்த டப்பா கதா பாத்திரம்தான் சாமி புலவன்.
சாமி புலவன் செத்ததுக்கு அந்தாள் அடிச்ச சரக்குதான் காரணமே ஒழிய சன்னாசி திட்டியது அல்ல என்பது அந்தாள் படத்தில் அடிச்ச சரக்கில் இருந்தே தெரியுது.

அடுத்து வில்லன். கொடூர கேரக்டருக்கு வில்லானாக ஒருத்தர் வேண்டும். எப்படி இப்படி ஒரு ஆள் அந்த கிராமத்தில் இருக்க முடியும்?
கேரக்டருக்கு கதை எழுதினால் இப்படித்தான்.
பாலா போன்ற ஒரு திறமையான இயக்குனர் அவரின் கேரக்டர் டெம்ப்ளேட் விட்டு வெளியே வரவேண்டும்.

இதை விட படத்தின் மிகப் பெரிய வீக்னெஸ் ..வக்கிரம்.
நடிகைகளின் இடுப்புக்கு மேல் 30 டிகிரி ஆங்கில் வைத்து நாட்டுப்புற கலையை சமீபத்தில் கெடுத்த மூன்றாம் ரக ரெகார்ட் ட்ரூப்தான் இது என்று காட்டியது படத்தை மேலும் பலவீனம் அடைய வைத்து விட்டது.
படத்தின் பெயரை “தாரையும் தப்பட்டை” என்பதற்கு பதில் ” இடுப்பும், சைக்கோவின் கடுப்பும்” னு வைத்து இருக்கலாம்.

ஜீவன் இல்லா படத்தை சில சமயம் கதை தாங்கி பிடிக்கும்.
கதையும் இல்லாத படத்தை சில சமயம் பாடல்கள் தாங்கி பிடிக்கும்.
நல்ல பாடல்கள் இல்லாத படத்தை சில சமயம் வசனங்கள் தாங்கி பிடிக்கும்.
கதை, பாடல்கள், வசனங்கள் இல்லாமல் போனாலும் அதில் நடித்த நடிகர்கள் சிலர் படத்தை தாங்கி பிடிப்பார்கள்.
சில சமயம் நடிகர்கள் நடிக்காமல் போனாலும் அவரின் ரசிகர்கள் படத்தை தாங்கி பிடிப்பார்கள்.
இப்படி தாங்கி பிடிக்க தாரை தப்பட்டைக்கு யாருமே இல்லை.
அதை பாடையில் ஏற்றி தாரையையும் தப்பட்டையும் அதையே அடிச்சிக்க வைத்த முழு பொறுப்பு பாலாவை சேரும்.

இந்த படம் அமேசிங் பாலா இயக்கத்தில் வெளிவந்த, இதய தெய்வம் இளையாராஜாவின் ஆயிராமாவது படம் என்று சொல்லாமல் இருப்பதுதான் இருவருக்குமே பெருமை.

www.sridar.com Rating: 3.0 /10.00