இந்தியாவில் சில இடங்களில் தடையாம். இந்த மாதிரி பலவித தடைகளை பல இடங்களில் பார்த்தாகி விட்டது. ஒன்னும் புதுசு இல்லை.

ஒருத்தருக்கு புலி புடிக்கும். இன்னொருத்தருக்கு புளியோதரை புடிக்கும். காட்டில் வாழும் புலியை அடிச்சு சாபிட்டா – நான் வெஜ். மரத்தில் வளரும் புளியை அடிச்சு சாப்பிட்டா வெஜ்.
நாம் எல்லோரும் பாக்டீரியா எனும் ஒரு தாய் மக்கள். பிறப்பில் சிலர் வெஜிடேரியனாக இருந்தாலும், நம் கொள்ளு தாத்தா எல்லாம் நான் வெஜ் குரங்கு என்பதை மறக்க வேண்டாம்.
ஒரு பெண் குரங்கின் தலையில் உள்ள பேனை இன்னொரு ஆண் குரங்கு எடுத்து பார்த்து தின்றுதான் இன்று இந்த பரிணாம வளர்ச்சி அடைந்து உள்ளோம்.

இதுதான் பேஸ் லைன். மதம், மண்ணாங்கட்டி எல்லாம் அடுத்து வந்தது.

சர்வ சமய, மத நம்பிக்கை கொண்ட மக்கள் கலந்து கொள்ளும் ஒரு விழாவில், வெறும் வெஜ் ஐட்டம் மட்டுமே போடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.
சுத்த வெஜ் ஐட்டம் சாப்பிட்டதால், ஒரு சுத்த வெஜிடேரியன் எவ்வளவு சந்தோஷ பட்டு இருப்பானோ, அதே அளவு வருத்ததத்தை அந்த பார்ட்டியில் சிக்கன், மட்டன் போடாமல் போனதுக்காக இன்னொரு நான்-வெஜிடேரியன் கடைசி chair ரில் உட்காந்து கொண்டு வருத்தப்பட்டு இருப்பான். இது தான் உண்மை.

இருந்தாலும் அவன் கண்ணில் வரும் தண்ணியை துடைதுக்கொண்டு, சிரித்துக்கொண்டே ஐந்து வித தயிர் சாதத்தையும், உருளை கிழங்கு பொரியலும் சூப்பர்னு முனகிக்கிட்டே சாப்பிடுறான் பாருங்க …அவன்தான் ஸார் ஜெண்டில்மென்… !!! அதுக்கு பேர்தான் ஸார் …சகிப்பு தன்மை.

இந்த சகிப்பு தன்மை எப்பவும் இரண்டு பக்கமும் இருக்கணும். சில சமயம் அது இல்லாம போவது வருத்தம்தான். யோசிச்சு பாருங்க. ஒரு வீட்டில் அம்மா இறைச்சி சாப்பிட மாட்டாங்க. சுத்த சைவம். அப்பா ஊர்வன பறப்பன என அனைத்தையும் வெளுத்து வாங்குவார். பசங்களில் ஒன்னு முட்டை மட்டும் சாப்பிடும். இன்னொன்னுக்கு சிக்கன் மட்டும் ஆவாது. மாமனார், மாமியாருக்கு மீன் குழம்பு என்றால் உயிர். எல்லோருமே ஒரே குடும்பமா ஒரு கூரையில் கீழ் வாழ்வதில்லையா?

இது தான் இந்தியா. அது போல்தான் நாம் வாழும் சமுதாயமும். ஒரு சமுதாயம் திருந்தாம ஒரு நாட்டை திருத்த முடியாது.

சர்வ சமய மக்கள் வாழும் நாடுதான் இந்தியா. இந்தியாவில் இந்துக்கள் 80 % பெருன்பான்மையாக வாழலாம். அதற்காக இந்த நாடு இந்துக்களுக்கு மட்டுமே என்று யாருக்கும், பட்டா எல்லாம் போட்டு கொடுக்கவில்லை. ஒரு மதத்தில் எது புனிதம் என்று சொல்லப்படுகிறதோ, விருப்பபட்டா அதை follow செய்யலாம். இல்லைனா முடிஞ்ச அளவு follow செஞ்சிட்டு மத்ததை லூசில் விடலாம். இது அவர் அவர் விருப்பம்.

ராமர் , சீதையுடன் காட்டில் கீரையும், தயிர் சாதமும் மட்டுமா உண்டு 14 ஆண்டுகள் வனவாசம் செய்தார்? இல்லையே.. இதை நான் சொன்னா சண்டைக்கு வருவாங்க.
வால்மீகி சொன்னதால் அதை வேற மாதிரி அர்த்தம் சொல்லி படிக்க சொல்வார்கள்.

மாடு இந்து மதத்தில் புனிதம்தான்…இல்லைன்னு யாரு சொன்னது? மாட்டையும், ஆட்டையும் உங்ககிட்டையா வெட்ட சொன்னான்?
ஆசையா இருந்தா உங்க அபார்ட்மெண்டில் ரெண்டு வாங்கி வுட்டு, புல்லை போட்டு வளருங்க.

மாடு இந்துவுக்குதான் புனிதம்..எல்லாத்துக்கும் இல்லை. இந்து நாடான நேபாளத்தில் வருஷதுக்கு ஆயிரம் மாட்டை வெட்டி பலி கொடுக்கிறான்.
ஒருத்தனுக்கு ஈமு கோழி புனிதம்னா …இன்னொருத்தனுக்கு சாமக் கோழி புனிதம்.

புனிதம் வீட்டிலும், கோவிலிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் கடை பிடித்துவிட்டு பொதுவில் எல்லா உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுத்தாதான் அதுக்கு பேர் சமுதாயம், சகிப்பு தன்மை.

இந்த நாகரீக உலகில், எல்லோரும் கலந்துதான் வாழ்கிறோம். எல்லோரும் கலந்துதான் பேசுகிறோம். எல்லோரும் கலந்துதான் ஆடுகிறோம் பாடுகிறோம்.
அப்புறம் ஏன் இந்த சாப்பாட்டு மேட்டரில் சகிப்புத்தன்மை இன்னும் வரவில்லை? அப்பன்னா …எங்கையோ உதைக்குது?

காரணம் இதுதான். Beef என்று சொல்லி பாருங்கள். உதடுகள் ஓட்டும். தயிர் என்று சொல்லி பாருங்கள். உதடுகள் ஒட்டாது.
காரணம் ஜாதி மத பேதம்தான். அதில் வந்த பயக்க வயக்கம்தான்.

ஒரு வெஜிடேரியன் உணர்வை , ஒரு நான் வெஜிடேரியன் மதிப்பது போல் ஒரு நான் வெஜிடேரியன் உணர்வை , ஒரு வெஜிடேரியன் மதிக்க வேண்டும் என்பதில் என்ன தவறு?
ஒருவரை நாம் கட்டாய படுத்தி மாமிசம் உண்ணுங்கள் என்று சொல்வது எப்படி அவர் மனதை கஷ்டப்படுத்துமோ அதே அளவு கஷ்டம் இதை இங்கு உண்ணக்கூடாது என்று சொல்லும் போதும் வரும்.

நாட்டு மக்களில் மைனாரிட்டிகள் 20% இருப்பது போல் சில பார்ட்டிகளில் 20% நான் வெஜ் மைனாரிட்டிகள் இருக்கலாம். என்னை பொறுத்தவரை …நான் எப்போதும் என் பார்ட்டிகளில் – நான் வெஜ் மற்றும் வெஜ் என இருவரின் உணர்வுகளுக்கும் சம மதிப்பு அளிப்பேன். பிறர் மனம் புண்படாமல் சகிப்பு தன்மையோடு எல்லோர் உணர்விற்கும் மதிப்பு அளித்து கூடி உண்டு மகிழ்வதுதான் உண்மையான மகிழ்ச்சி.

காரணம், உணவு என்பது அவர் அவர் விருப்பம். எனக்கு பசிக்கும் போது நான் எதை உண்ண வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும். நான் எதை உண்ண வேண்டும் என்பதை என் வயிறு கேட்கும். அதற்கு மூளை பதில் சொல்லும். என் உணவுக்கு என் வாலெட்தான் காசு கொடுக்கும். நல்லா இருந்தா வயிறு செரிக்கும்…முன்னாடி தொப்பை வரும்.
நல்லா இல்லைனா அரிக்கும்…பின்னாடி புடுங்கிகிட்டு போகும். சிம்பிள்.

நீ இதைத்தான் இங்கு சாப்பிடனும், நீ இதை சாப்பிடக்கூடாது என்று என்னிடம் சொல்லுவதே என் உரிமையை என்னிடம் இருந்து பறிப்பது போன்றது.

எதை உண்பது என்பது என் உரிமை. வெஜ், நான் வெஜ் – இரண்டுக்கும் அதே ரூல்தான். பிடித்ததை உண்டு வயிறு பசியார வேண்டும் என்பதே அது.

அவன் காசு கொடுத்து வாங்கும் உணவில் கண்டிஷன் போடுவது தீண்டாமையின் முதல் அத்தியாயம்.

அது இன்னும் முடியவில்லை.