நண்பர் பாலாஜி , உலக புகைப்பட தினம் அன்று ஒரு கேள்வி கேட்டு இருந்தார்.

உலக புகைப்பட தினம்ன்னு சொல்றாங்க… photo விற்கு தமிழ்ல ஏன் “புகைப்படம்ன்னு” சொல்றாங்க?
இதுல “புகை” எங்கிருந்து வந்தது? அப்போ “நிழல் படம்னா” என்ன?

இதற்கு நான் ஒரு நீண்ட டெக்னிக்கல் புத்தகம்தான் பதிலாக எழுதவேண்டும். முடிந்தவரை சுருக்கமாக மூன்று பகுதிகளில் சொல்கிறேன்.

200 வருடம் முன் புகைப் படமோ – போட்டோ என்ற சொல்லோ இல்லை. எல்லாமே கை வண்ணம்தான்
முதிலில் உருவானது சிற்பகலை. அடுத்து ஓவியக் கலை.

ஒரு படத்தை வரைய ஒரு Base வேண்டும். முதலில் மிருகத்தின் தோலில் வரைந்தார்கள். அடுத்து காகிதம்.
இதை சீனர்கள் கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே கண்டுபிடித்து விட்டார்கள். அச்சு அசலாக வரைந்த ஓவியர்களுக்கு ரியாலிட்டியின் மீது ஆர்வம் வந்தது.
மிருகத்தின் தோலில் வரைந்தும், கல்லில் வடித்தும் ஓய்ந்த கலைஞர்களுக்கு ஒரு விடிவு தேவைப் பட்டது.

கண் முன்னே தெரியும் காட்சியை மிக விரைவில் காகிதத்தில் வரையவேண்டும். எப்படி?
இந்த கேள்வியுடன் இவர்கள் போய் நின்ற இடம் வேதியலர்களின் ஆய்வுக்கூடம். சென்ற நூறாண்டு கெமிஸ்ட்களின் பொற்காலம்.

ஆனால் அதற்கு முன்னரே 13 ஆம் நூற்றாண்டில் ரோமாபுரியில் ஆல்பர்டுஸ் மக்னஸ் என்ற ஒரு கத்தோலிக்க சாமியார் தங்கத்தையும், வெள்ளியையும் பிரிக்க நைட்ரேட் என்னும் அமிலத்தை உபயோக படுத்தலாம் என்று கண்டுபிடித்து வைத்து இருந்தார். அவர் எழுதியது இது தான். வெள்ளி மீது நைட்ரிக் அமிலத்தை ஊற்றினால் வெள்ளி பிரிந்து விடும். இந்த சில்வர் நைட்ரேட் நம் தோலில் பட்டால் தோல் கருப்பாகிவிடும் என்று எழுதிவிட்டு செத்து விட்டார்.

இவர்கள் யோசித்த லாஜிக் இது தான். ஒரு கண்ணாடியில் புகையை மூட்டி கறுப்பாக ஒரு படலம் ஏற்படுத்துவது.
பின்பு நம் விரல்களைக் கொண்டு அதில் வரைவது. விரல் பட்ட இடங்களில் கண்ணாடி தெரியும். ஒளியும் வெளியே வரும்.

விரல்களுக்கு பதிலாக ஒளியையும், கரும் புகைக்கு பதில் ரசாயன கலவையையும் பயன்படுத்தினால் என்ன என்று யோசித்தார்கள்.
“Drawing with light” என்ற கிரேக்க சொல்தான் ஆங்கிலத்தில் போட்டோகிராப் என்று அழைக்கப்படுகிறது.

இதைஒரு கெமிகல் தடவிய உலாக பட்டையின் மீது ஏன் முயன்று பார்க்க கூடாது என்று யோசித்தார்கள்.
தங்கம், குரோமியம் என்று பல உலோக கரைசல்களை ஊற்றி சூரிய ஒளியை காட்டி, பிம்பம் அதில் விழுகிறதா என்று பார்த்தார்கள்.

இப்படி உலகத்தில் பல இடங்களில் பல வேதியலர்கள் ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கும் போது, பிரஞ்சு நாட்டில் யோசெப் நிசிபோர் நியெப்சு என்ற ஒரு ஓவியன் மனிதனும், குதிரையும் இருக்கும் ஒரு ஓவியத்தை எப்படி ஒரு தகட்டில் பதியவைப்பது என்று யோசித்துக்கொண்டு இருந்தான்.

அவன் கண்டுபிடித்தது இது தான்.

வெள்ளியை கண்டால் பெண்கள் மட்டும் அல்ல ஒளியும் பல்லை இளிக்கும் என்பதுதான்.
இதுதான் போட்டோ கிராபியின் ஆயுத எழுத்து கண்டுபிடிப்பு.

ஒரு இருட்டு அறையில், ஒரு சில்வர் குளோரைடு பூசிய உலாக தகட்டை வைத்துவிட்டு ஒரு சிறிய துளை மூலம் தன் வீட்டின் ஜன்னல் நோக்கி திருப்பி அமர்ந்தார்.
இது தான் உலகின் முதல் exposure…. சுமார் எட்டு மணி நேரம் கழித்து எழுந்து வந்து தகட்டை பார்த்தார்.

இயற்கைக் காட்சியொன்றை உள்ளடக்கிய உலகின் முதல் ஒளிப்படம் அவர் கண் முன்னே தெரிந்தது. அதை எடுத்துக்கொண்டு பிரஞ்சு அரசனிடம் ஓடிப் போய் காண்பித்தார்.
அதைப்பார்த்த அரசு, ஆண்டுதோறும் 6,000 பிராங்குகள் இறக்கும்வரை அவருக்கும், அவர் இறந்த பின்பு நியேப்சுவின் வாரிசுகளுக்கு ஆண்டுதோறும் 4000 பிராங்குகள் பெறவும் உத்தரவு பிறப்பித்தது.

உலகத்தின் முதல் புகைப்படத்தையே ராயல்டி கொடுத்துதான் வாங்கினார்கள். பின்பு அவர் மகனிடம் அந்த குறிப்புகளை விட்டுவிட்டு இறந்து விட்டார்.
2002 ஆம் ஆண்டில் இவர் 1825 ஆம் ஆண்டில் எடுத்ததாகக் கருதப்படும் உலகின் முதல் ஒளிப்படம் கண்டுபிடிக்கப்பட்டது. இது ஒரு ஏலத்தில் 450,000 யூரோக்களுக்கு விற்கப்பட்டது.
தற்போது அது அமெரிக்காவில் Texas மாகாணத்தில் Harry Ransom Center ரில் உள்ளது.

1850 வரை இது ஒளிப்படமாகதான் இருந்தது??? பின் எப்படி புகைப்படம் மற்றும் நிழற்படம் ஆனது?
உண்மையாகவே புகையை மூட்டித்தான் புகைப்படம் எடுத்தார்கள் என்று சொன்னால் நம்புவீர்களா?

தொடரும்
ஸ்ரீதர் ஏழுமலை