October, 1984 முதல் வாரம். ஒரு அம்பாசிடர் காரின் புகை மூட்டம் எங்கள் வீட்டின் முன்னால் அடங்கி நின்றது.
வாயில் புகையுடன் என் மாமா இறங்கி வந்தார். பாசமலர் சிவாஜியை விட அதிக பாசம் உள்ள அண்ணன் அவர்.

தன் தங்கைக்கு (என் அம்மாவிற்கு) தான் உபயோகபடுத்திய Black and White டிவியை கொடுத்துவிட்டு எங்கள் வீட்டுக்கு வந்தார்.
கார் டிக்கியை அவர் திறக்கும் போது நான் ஆவலுடன் எட்டிப் பார்த்தேன்.
உள்ளே ஒரு பெரிய கருப்பு பெட்டி. Sliding door போட்டு அதன் உள்ளே அந்த பொக்கிஷம் இருந்தது.
கூடவே ஒரு சிவப்பு கலர் பூஸ்டர் மற்றும் ஒரு amplifier ரும் இருந்தது.

அந்த டிவியின் மாடல் பெயர்: டயனோரா

1975 ஆம் ஆண்டு ஓபுல் ரெட்டி என்பவரால் சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட டிவி கம்பனிதான் டயனோரா (Dyna Vision Ltd)
1982 லில் கலர் டிவி செய்ய ஆரம்பித்தார்கள். அதை வாங்கதான் அவர் சென்னைக்கு ஊட்டியில் இருந்து எங்கள் ஊர் வழியே பழைய டிவியை கொடுத்துவிட்டு செல்ல வந்தார்.

எங்க ஏரியாவின் முதல் டிவி பெட்டி அது தான்.

நாங்கள் குடியிருந்த லைன் வீட்டில் மொத்தம் 10 வீடுகள். சுமார் 40, 50 பேர் குடியிருபார்கள் என்று நினைக்கிறேன்.
சற்று நேரத்தில் டிவி வந்த செய்திகேட்டு கூட்டம் அந்த பெட்டியை பார்க்க கூடிவிட்டது. மாமாவும் உடனே சென்னை கிளம்பிவிட்டார்.

வீட்டுக்கு டிவி வந்ததே ஒழிய அதை எங்களால் போட்டு பார்க்கமுடியவில்லை.
காரணம் அதற்கு ஆன்டெனா (Antenna) பெருத்த ஆள் கிடைக்கவில்லை.

ஊரில் இருப்பது ஒரே ஒரு ரேடியோ மெகானிக்.அவர்தான் ஊரில் ஓரே உருப்படி. Tape Recorder ரேடியோ repair தான் அவர் முதல் வருமானம். ஏக demand.
எங்கப்பா அவரை தேடிப் பிடித்து வந்து கம்பிகளை அறுத்து ஆன்டெனா செய்ய தினம் தினம் அழைப்பார்.
அவர் இப்போ வரேன், அப்போ வரேன் என்று சொன்னாரே ஒழிய வரவே இல்லை.

ஒரு மாதம் ஆகிவிட்டது. எனக்கு டிவி பார்க்க ஏகப்பட்ட ஆவல்.
Connect செய்யாத டிவியை பார்க்க தினம் தினம் ஆட்கள் வரவருவார்கள்.
சிக்னல் வராத டிவியை ஆன் செய்து காண்பித்தாகிவிட்டது .

இதை எப்படியாவது அண்டெனா பொருத்தி படத்தை ஓடவிடவேண்டும் என்று ஆசையில் என் தந்தையை தினம் தினம் நஞ்சரிக்க ஆரம்பித்தேன்.
அவரும் முடிந்தவரை ஏலெக்ட்ரிசியனை கையோடு பிடித்துவர அவர் கடைக்கு நடையாய் நடப்பார்.

போங்க… நாளைக்கு கண்டிப்பா வருவேன் என்று சொல்வார் …ஆனால் வரவே மாட்டார்.
காத்து இருந்து ஏமாந்ததுதான் மிச்சம். அந்த மாதத்தின் கடைசி நாள் வந்தது.

ஏதோ…எங்கோ நடந்தது. அவ்வளவுதான்.
அதுவரை பொருத்து இருந்த தந்தையும் அந்த லைன் வீட்டு மக்களும் பொங்கி எழுந்தார்கள்.

கொலை நடந்த வெறியில் எல்லாம் தன்னாக நடந்தது.
அடுத்த இரண்டு நாளில் எப்படியும் அந்த ஏலெக்ட்ரிசியனை பிடித்துவர ஆளுக்கு ஆள் ஐடியா கொடுத்து கையோடு அவரை பிடித்து வர கிளம்பினார்கள்.

இரண்டாவது நாள் காலையில் electrician சிக்கிவிட்டார். அவரை பிடித்துவந்து என்ன செய்வியோ தெரியாது … இன்னும் மூன்று மணி நேரத்தில் டிவி தெரிஞ்சே ஆகணும் என்று மிரட்டி ஆன்டெனா போட சொன்னார்கள்.

சுமார் 10 பேர் அவருடன் வேலை பார்த்தார்கள். கம்பி அறுத்து வயர் இழுத்து, பவர் connection என்று ஆளாளுக்கு ஒரு வேலை செய்ய அந்த ஏரியாவே அதகளம் பட்டது.

அதற்குள் டிவியை ஒருவர் வீட்டில் இருந்து வெளியே எடுத்துவந்து வைத்துவிட்டார். மக்கள் டிவி பார்க்க மெதுவாக கூடி விட்டார்கள். Chair, பாய் என்று விரித்து அனைவரும் ரெடி.

இன்னும் ஒரு மணி நேரம்தான் சீக்கிரம் சீக்கிரம் என்று ஏலெக்ட்ரிசியனை பெண்டு நிமித்திவிட்டார்கள்.
மாடியில் நின்று ஆன்டெனா ஆங்கில் பார்க்க ஒருவர், பூஸ்டர் திருப்ப ஒருவர் என்று சென்னையை நோக்கி அலுமினிய கம்பிகளை திருப்பி ரெடி செய்தார்கள்.

டிவியை முதன் முதலில் ஆன் செய்யும் அந்த பொன்னான நேரம் வந்து விட்டது.

கூட்டம் டிவியின் முன் அலைமோதியது.
எல்லோரும் ரெடி. நான் ஆன் செய்தேன்.

முசு முசு என தெரிந்த டிவியில் ஆங்கில் மாற்ற கொஞ்சம் கொஞ்சமாக சத்தம் ஹிந்தியில் வந்தது.

முதல் காட்சி மெல்ல திரையில் தெரிந்தது. அப்போது எல்லாம் படம் கோடு கோடாய் ஓடும். பூஸ்டர் வைத்து கரெக்ட் பாயிண்ட் புடிக்கவேண்டும்.
மெதுவாக திருப்ப முதல் காட்சி தெரிந்தது.

அடுத்த வினாடி மொத்த கூட்டமும் ஓவென்று சத்தம் போட்டு அழுதது.
சிலர் ஒப்பாரி கூட வைத்து அழுதார்கள்.

அங்கே ராஜீவ் காந்தி, இந்திராகந்திக்கு கொல்லி வைத்து கொண்டு இருந்தார்.
அன்று நவம்பர் மூன்று, ராஜ்காட்டில் இந்திராகாந்தியின் இறுதி ஊர்வலம் தூர்தர்சனில் Live Telecast.

நான் மட்டும் சிரித்து கொண்டு இருந்தேன்.

நான் ராகுல் காந்தியை இப்போது ரொம்ப திட்டாம இருக்க ஒரே காரணம்,
அவர் பாட்டி செத்த புண்ணியத்தில்தான், நான் முதன் முதலில் வீட்டில் டிவி பார்த்தேன்.