இந்த வாரம், ஒரு ஊரில் ஒரு கல்யாணம் நடந்தது. மூணு வருஷமா இந்த கல்யாணம் பத்திதான் ஊர் முழுக்க பேச்சு.
காரணம், இந்த கல்யாணத்தை முன் நின்று தலைமை தாங்கி நடத்தி இருப்பவர் “பிரம்மாண்டம்” என்ற ஒரு அப்பாடக்கர் திருமண புரோக்கர்.

பிரம்மாண்டம், இதுவரைக்கும் 11 கல்யாணங்களை தடபுடலா நடத்தியவர்.
பொதுவாக இவர் தடபுடலில், உண்மையில் கல்யாணம் என்று ஒன்று நடக்கும்.
மாப்பிள்ளை கம்ப்யூட்டர் உதவியுடன் அழகான பொண்ணுக்கு தாலி கட்டுவார்.
திருமணத்தில் மைக் பிடித்து “பிரம்மாண்டம்” வழக்கமா ஊருக்கு தெரிஞ்ச மெசேஜ் ஒன்னை வேற ஆங்கிளில் நின்று பட்டு சட்டை வேட்டி கட்டி செலவு செஞ்சு சொல்வார்.
அதில் சில உண்மையியிலேயே அட்டகாசமான கல்யாணங்கள், மேசஜ்கள்… மறுக்கமுடியாது.

அதே மாதிரி இந்த கல்யாணமும் தடபுடல்தான்.

ஆஸ்கர் கல்யாண மண்டபத்தில் நடந்த இந்த கல்யாணத்துக்கு ஆன மொத்த செலவு, 150 கோடிகள்.
வழக்கமா கல்யாண மண்டப கக்கூஸ் கூட தங்கத்தில் கோல்ட் ப்ளேடிங் செஞ்சு வைப்பாரு.
சிறப்பு விருந்தினரா நிச்சயதார்தத்துக்கு, அமெரிக்காவில் இருந்து ஆறுபேக் அருணாசலம் வரை வந்தார்.
இது எல்லாம் புதுசு இல்லை. வழக்கமா “பிரம்மாண்டம்” இதே டெக்னிக்தான் செஞ்சு ஊரை கூட்டுவாரு.

ஊரு மக்கள் அப்படி என்னதான் தடபுடல் என்று இவரின் கல்யாணங்களை பார்க்க போவார்கள்.

மாப்பிள்ளை ….ஊருக்கு புதுசு இல்லை. வயசு கொஞ்சம் அதிகம் என்றாலும் இதுக்கு முன்னாடி, பல வேஷத்தில் பல கல்யாணத்தில் நல்லா தாலி கட்டி நல்ல பெயர் எடுத்தவர்தான்.
பொண்ணு..கொத்தவரங்கா இடுப்பு வெள்ளைக்காரி. மதராச பட்டணத்துக்கு வெள்ளரிக்காய் விக்கவந்து… இங்கேயே செட்டில் ஆன பொண்ணு. சுருக்கமா சொன்னா – ஒரு சூப்பர் பிகர்.

கல்யாணத்துக்கு நம்ம ஊரு ரகுமணிபாய்தான் மேல தாளம். சூப்பர் கம்ப்யூட்டர்தான் (PC) போட்டோகிராபர் மற்றும் வீடியோகிராபர்.
ரெண்டு வருசமா மாப்பிள்ளையை சிக்ஸ் pack வைத்து அழகு பார்த்து, அப்புறம் அவரை சாப்பிட விடாம நோகடிச்சு இளைக்க வச்சு, இந்த அழகான வெள்ளைக்கார தமிழ் பொண்ணுக்கு 150 கோடி செலவு செஞ்சு தாலி கட்ட ஏற்பாடு செஞ்சாரு.
கல்யாணத்துக்கு போட்ட செட்டில் இருந்து சமையல்காரர் வரை எல்லாரும் அட்டகாசம். இவ்வளவு இருந்தும் என்ன பிரோஜனம்????

சில பேருக்கு மாபிள்ளையை தனிப்பட்ட முறையில் நல்ல மாப்பிள்ளை என்று பிடிச்சு இருந்தது.
சிலருக்கு கல்யாணதில் செஞ்ச கச்சேரி பிடிச்சு இருந்தது.
சிலருக்கு சூப்பர் கம்ப்யூட்டர் போட்ட கல்யாண ஆல்பம் பிடிச்சு இருந்தது.
சிலருக்கு மூணு மணி நேரம் உட்காந்து வெயிட் செஞ்சு சூப்பர் பிகரான கல்யாண பொண்ணை பார்த்தது பிடிச்சு இருந்தது.
நல்ல china fried ரைஸ் சாப்பாடு கல்யாணத்தில் போட்டதில் சிலருக்கு திருப்தி.

இவ்வளவு திருப்தி இருந்தும் “பிரம்மாண்டம்” நடத்திய இந்த “பிரம்மாண்ட” திருமணம் ஊத்திக்கிச்சு என்று ஊரில் பேச்சு.

காரணம் சிம்பள்.

ரெண்டு நிமிஷத்தில் கட்ட வேண்டிய தாலியை, 188 நிமிஷம் ஆகியும் கட்டாம மாப்பிள்ளை கூனி குறுகி கடுப்பேத்தினதால கல்யாணத்துக்கு வந்த பெரும்பாலானோர் கடுப்பாயி போயிட்டாங்க என்பதுதான் உண்மை.
கொஞ்சம் விட்டு இருந்தால் மாப்பிள்ளை தோழன் சந்தானம் தாலியை கட்டி இருப்பார். ஜஸ்ட் missed …

உண்மையை சொல்லிவிடுகிறேன்.

ஷங்கர், விக்ரம், ரகுமான், ஸ்ரீராம் போன்ற ஜாம்பவான்களை மனதில் வைக்காமல் பார்த்தால் இது ஒரு சுமாரன, அதிகம் செலவு செய்து நடத்தப்பட்ட மொக்கை கல்யாணம்.

 

முக்கிய குறைகள் சில:

1. கதை:​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​

“ஐ” னு சுருக்காமா பேர் வச்ச ஷங்கருக்கு சுருக்கமா கதை சொல்ல தெரியவில்லை. படத்தில் கதை ஒன்று உள்ளது. ரொம்ப பழைய அதே கதைதான்.
சென்னை இளைஞன் ஒருவனை தன் வாழ்க்கையில் சராசரியா சந்திக்கும் பலர், திடீரென்று கொடூர வில்லன்களாக மாறி இவரை கெடுக்க நினைக்கிறார்கள். இவர், அவர்களை எப்படி பழி வாங்குகிறார் ..பின் காதலியை கை பிடிக்கிறார் ? என்பது தான் கதை.
கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன். இது தான் ஒன் லைன். இதில் கணவனுக்கு பதில் காதலி அல்லது காதலன் என்று போட்டு கொள்ளுங்கள். இது ஷங்கருக்கே குழம்பிவிட்டது.
இப்ப short-film எடுக்கும் ஒருவரிடம் ஒரு பத்து லட்சம் கொடுத்து இருந்தால் இந்த கதையை இதைவிட அருமையாக வேறு விதத்தில் ரசனையுடன் 12 நிமிடத்தில் சொல்லி இருப்பார்கள்.
150 கோடி செலவு செய்தால் மூன்று மணி நேரம் கதை சொல்லவேண்டும் என்று அர்த்தம் இல்லை. தான் செலவு செய்ததை மக்களுக்கும், producer க்கும் மூன்று மணி நேரம் கணக்கு காண்பித்துள்ளார்.
இது மூன்று மணிநேரம் பார்க்க வேண்டிய கதையும் இல்லை. இந்த கதைக்கு மூன்று மணி நேரம் தேவையும் இல்லை.

2. நடிப்பு: விக்ரம் இந்த படத்தில் சூப்பர் என்கிறார்கள். உண்மையில் அவரை வீணாக்கி விட்டார் ஷங்கர் . நடிப்பின் அடையாளம் முகபாவம். தேவை இல்லாமல் கூனன் என்று கொடூர கேரக்டருக்கு மேக்கப் போட்டு முகபாவம் இல்லாமல் பிளாஸ்டிக் நடிப்பை விக்ரம் காட்டவேண்டிய துர்பாக்கிய நிலை. அந்த கூனன் character நடிக்க ஒரு நிஜ கூனனை நடிக்க வைத்து இருக்கலாம். திரையில் கூனன் நடிக்கவில்லை என்பது பெரும் குறை. இதை தவிர இவர் நடிக்கும் சிக்ஸ் pack அசைவுகள், மெட்ராஸ் பாஷை இவருக்கு பொருந்தவில்லை என்பதே என் எண்ணம். In simple words, there is no scope in this movie for a good actor like Vikarm.

3. வசனம்: சுஜாதா கல்லறையும் கண்ணீர் வடிக்கும். இதுக்கு மேல சொல்ல ஒன்னும் இல்லை. ஒரு குடும்ப டாக்டர் ஒரு அழகான பெண்ணிடம் என்னை மாமா என்று கூப்பிட வேண்டாம் என்று முதல் சீனில் சொல்லுவார். இந்த ஒரு வார்த்தை போதும். ஒன்னாம் கிளாஸ் படிக்கும் பையன் கூட சொல்லிவிடுவான். அவர் தான் வில்லன் என்று.

4. காமெடியன்கள்: இந்த படத்தில் சந்தானம் சேர்த்து மொத்தம் ஆறு பேர் காமெடியன்கள். இவர்களில் ஐந்து பேரை வில்லன் என்று படத்தில் காட்டியது ஒரு பெரிய குறை. ஷங்கர் பார்வையில் இந்த படத்தில் கிளைமாக்ஸ் ஹீரோ சந்தானம். பழிவாங்கும் படலத்தில் பஞ்ச் டயலாக் பேசி வில்லன்களை சிதற அடிப்பார். நிஜ வாழ்க்கையில் சந்திக்கும் மிக சாதாரண மக்கள் எப்படி கொடூர வில்லன்கள் ஆனார்கள் என்பது ஷங்கருக்கே வெளிச்சம்.

5. Screen Play: கதையில் வரும் ஓரே டாக்டர் இவர் தான். இவர் வைரஸ் ஊசி குத்தாம பின்ன யார் குத்தி இருப்பாங்க ஷங்கர் சார்? படம் ஆரம்பித்ததில் இருந்து கடைசிவரை அடுத்துவரும் கட்சிகளை நீங்களே சொல்லிவிடலாம்.
ஒரு சாம்பிள் சொல்கிறேன். சுமார் 127 முறை சீனாவில் எடுக்கப்பட்ட பூந்தோட்டம் படத்தில் வரும். சுமார் 55 முறை xingping – சீனா காட்சிகள் வரும். திரும்ப திரும்ப ஒரே காட்சி அமைப்புக்கள், சீரான கதை ஓட்டம்  என்று எதுவுமே இல்லை.
எல்லாமே மிஸ்ஸிங். சிக்ஸ் pack காட்சிகளில் விக்ரமை விட சைடு வரும் நடிகர்கள் அழகாய் pack வைத்து உள்ளார்கள். காட்சி பிழைகள் ஏராளம். வைரஸ், தேனி, ஊசி என்று காதில் ஏகப்பட்ட பூ சுற்றுவார்.
இவர் எடுத்த படங்களில் மிக மோசமான திரை கதை அமைத்து எடுக்க பட்ட படம் இது என்பது என் கருத்து.

இதைத்தவிர படத்தில் நிறைய குறைகள் இருந்தாலும்…சில நிறைகள் கண்டிப்பாக சொல்லவேண்டும்.

 

எனக்கு பிடித்தது: 1. ஸ்ரீராம் கேமரா 2. எமியின் நடிப்பு
பிடிக்காதது: மெர்சலாகிட்டேன் பாடலை எடுத்த விதம், விக்ரமை நடிக்கவிடாமல் செய்தது, மட்டமான எடிட்டிங்.

 

படத்தில் வில்லன் ஒருவர் “அதுக்கு மேல” என்பார்… தரையில் அமர்ந்த நான் chair போட்டு அமர்ந்து பார்த்தேன்.
இன்னொரு முறை ‘அதுக்கு மேல” என்பார்…chair போட்டு அமர்ந்த நான் சோபா மீது அமர்ந்து பார்த்தேன்.
கடைசியா ஒரு முறை ‘அதுக்கு மேல” சொன்னபோது பையன் மாடிக்கு போய் தூங்கலாமா என்றான்.

“பிரம்மாண்டம்” என்பது கதையில், நடிப்பில் மற்றும் திரைகதை எடுக்கபட்ட விதத்தில் இருக்கவேண்டும்.
சீனா போய் எடுத்தாலும், சந்திர மண்டலம் போய் எடுத்தாலும் இவை தான் “பிரம்மாண்டம்”

இந்த 150 கோடியை வைத்து ஒரு சுமாரான படம் எடுப்பதை விட, 25 நல்ல low budget படங்களை ஆஸ்கர் ரவிச்சந்திரன் எடுக்க முன் வரவேண்டும் என்பதே ஆசை.
மற்றபடி ஒரு முறை கண்டிப்பாக பார்க்கலாம்…..எப்படி 150 கோடி வீணாக போனது என்று பார்ப்பதற்காக.

 

www.sridar.com Rating: 5.0