என் பையனுக்கு சங்கீதம், வாயில் அருவி போல் கொட்டவேண்டும் என்ற ஆசை எனக்கு ஒரு காலத்தில் இருந்தது.

அவனும் ஒரு முத்துசுவாமி தீட்சிதராகவோ அல்லது சியாமா சாஸ்திரிகளாகவோ வரணும் என்ற நப்பாசைதான் காரணம்.
எனக்கு பாட தெரியாது.
எனக்கு இல்லாத திறமை என் பையனுக்கு இருக்கவேண்டும் என்று நினைத்தவன், நான்.
பாட்டு எனக்கு வருதோ இல்லையோ, என் பையனும் பாடனும்.
காரணம், நான் ஒரு டிபிகல் இந்திய தந்தை.

இது நடந்தது உண்மை….

அவனுக்கு சுமார் ஏழு வயது இருக்கும் போது, வீட்டுக்கு வந்து பிரைவேட் பாட்டு டியூஷன் எடுக்க ஒருவாத்தியார் அம்மாவை பிடித்துக்கொண்டு வந்தேன்.

பாட்டு கிளாஸ் நன்னா …பேஷா…ஆரம்பிச்சது.
அவனும் ஒரு மூணு மாசம் “தாம் தக்க,தைய தக்க” என்று பாட ஆரம்பித்தான்.

டீச்சர் அம்மாவும் நான் போட்டு கொடுக்கும் BRU காபி குடித்துக்கொண்டே பாட்டு சொல்லிக் கொடுப்பார்கள்.
பையனுக்கு சுமார் 4 கர்நாடக சங்கீத பாடல்கள் மூன்று மாதத்தில் அத்துப்படி.

நாதம், சுருதி, லயம், ஸ்வரம், தாளம், ஆவர்த்தம் என்று என்னென்னவோ என் காதில் கேட்டது.
பையன் பாட்டு சத்தம், குக்கரில் வேகும் பிரியாணி விசில் சத்தத்தோடு கலக்க ஆரம்பித்தது.

பழைய துண்டை அவன் கழுத்தில் போட்டு ஒரு ஆங்கிளில் நின்று பார்த்தேன்.
பையன் ” சியாமா கிருஷ்ண கவின் சாஸ்திரிகள்” போன்று தெரிந்தான்.

திடீரென்று ஒரு நாள் அவன் ஸ்கூலில், இன்ஸ்டன்ட் பாட்டு போட்டி நடந்தது.
மேடையில் மைக் கொடுத்து பாடசொல்லி பரிசு கொடுத்து உள்ளார்கள்.
என் பையனுக்கு பரிசு கிடைக்கவில்லை.

இந்திய தந்தையின் வயித்து எரிச்சல் …
First Prize வாங்காத கடுப்பில், ஒரு வெந்த இந்தியன் தந்தைபோல் என் மறைமுக investigation கேள்விகளைஆரம்பிச்சேன்.
அவனிடம் நீ எந்த பாட்டு மேடையில் பாடின ? என்று கேட்டேன்.

அதுக்கு அவன் சொன்னான் நான் பாடியது …இந்த பாட்டுதான் ..

“ஆடுங்கடா என்னை சுத்தி
நா ஐயனாரு வெட்டு கத்தி

பாடப்போறேன் என்னை பத்தி
ஹேய் கேளுங்கடா வாய பொத்தி “

இது போக்கிரி படத்தில் விஜய் பாடியது.

எனக்கு தூக்கிவாரி போட்டது. ஏன்டா, காசு கொடுத்து பாட்டு கிளாஸ் வச்சு சொல்லிக் கொடுத்த பின்பும் நீ போய் போக்கிரி பாட்டு பாடிட்டு வந்து இருக்க…ஏன்டா, டீச்சர் சொல்லிகொடுத்த மூணு பாட்டில் ஏதோ ஒன்னை பாடவேண்டியது தானே ? …என்று கேட்டேன்.

அப்பத்தான் அவன் பாட்டு டீச்சர் கிட்ட கிளாஸ் போறது அவனுக்கே ஞாபகம் வந்தது.
மனுசு ஒட்டாமல் செய்யும் எதுவும் மூளையில் ஏறாது என்று அன்று புரிந்தது.
அன்றில் இருந்து வீட்டில் BRU காபி போடுவது நின்றது.

“இடுப்பு எலும்ப ஒடிச்சி வெச்சு
அடுப்பில்லாமல் எரிய வெச்சா
போக்கிரி பொங்கல் போக்கிரி பொங்கல்”

அன்னிக்கி பொங்கி பொங்கி ..வாயை பொத்தினவன்தான் …
இன்றுவரை… இதை படி… அதை செய் …என்று என் ஆசைகளை அவனிடன் சொல்லுவதை நிறுத்திவிட்டேன்.

நீதி இது தான்:

எனக்கு சங்கீதம் ஆசை இருந்தா அதை நான் தான் கத்துகிட்டு பாடனும். என் பையன் இல்லை.
நல்ல குரல் உள்ள குழந்தை பாடினா நம்ம பையனும் பாடனும் என்பது விதி அல்ல.
எது வருமோ அது தான் வரும். எது வராதோ அது வராது.

எல்லா குழந்தைகளிடம் ஒரு Talent இருக்கும்.
அதை கண்டுபிடித்து Encourage செய்யவேண்டும் என்ற அடிப்படை அன்று புரிந்தது.
எல்லா திறமைகளை வளர்க்க குழந்தைகளை expose செய்வது பெற்றோரின் கடமை.

ஒன்னு வரலைனா அடுத்து, அடுத்து போயிட்டே இருக்கனும்.

இது முடிந்து மூணு மாசம் கழித்து, அதே பாட்டு டீச்சர் அவுங்க ஏரியா டீக்கடையில் என்னை பார்த்தார்கள்.
“என்ன சார் இந்த பக்கம் ?” என்றார்.
என் பையன் மாடியில் டான்ஸ் கிளாஸில் இருக்கான், அதான் BRU coffee குடிக்க வந்தேன் என்றேன்.

சிரிச்சுட்டு போயிட்டாங்க.

 

தொடரும்

டான்ஸ் கிளாஸ்.