அது ஒரு கனாக்காலம்…1998. ஒரு புளியமரம். அன்று அதன் கீழே சில விதைகள் உதிர்ந்தன…
அங்கே ஒரு மலையாளி நாயர் டீ கடை வைத்து இருப்பார். தினமும் காலை 8.00 மணிக்கு, ஒரு காக்கி சட்டை போட்டுக்கொண்டு ஒரு ஓட்டை சைக்கிளில் டீ கேன் கட்டிக்கொண்டு வருவார். அதன் கை பிடியில் ஒரு பிளாஸ்டிக் பை இருக்கும். அதில் சுமார் 100 மசால் வடையுடன் விற்க வருவார்.
என் முதலாம் ஆண்டு Ph.D படிப்பு துவங்கிய வருடம் அது. Genetics Department டில் இருந்து பார்த்தால் அந்த நாயர் டீ கடை தெரியும்.
சுமார் 10 மணி அளவில் ஒரு ஒல்லியான தேகம் புகை மூட்டத்துடன் அங்கே மெதுவாக நடந்து வரும். அவர் வரும் முன்னரே ஒரு பத்து சீடர்கள் அவர் வருகைக்காக டீ குடிக்காமல் காத்து இருப்பார்கள். அந்த மெலிந்த நபர் வந்த அடுத்த சில நொடிகளில் அந்த புளிய மரம் போதி மரம் ஆகும். அவரை சுற்றி தேனீக்கள் போல மாணவர்கள் சுற்றி நிற்பார்கள். அந்த ஒல்லியான தேகம் பேச ஆரம்பிக்கும். கையில் இருக்கும் நாயர் டீ ஆறி இருந்தாலும் அவர் வாயில் தீப்பொறி பறப்பது தொலைவில் இருந்து பார்த்தாலே தெரியும். அவர் என்ன பேசுவார் என்று தெரியாது. ஆனால் அனல் பறக்கும்.
வெறும் 30 நிமிடங்கள் தான் கூட்டம் நடக்கும். பின்பு கூட்டம் கலைந்துவிடும். அதே கூட்டம் மீண்டும் மாலை 3.30 மணிக்கு கூடும். அப்படி என்னதான் இவர் பேசுகிறார் என்று எனக்கு ஆவல் வர, ஒரு நாள் அந்த கூட்டம் அருகே சென்று நின்று வேடிக்கை பார்த்தேன். பத்துக்கும் குறையாத மாணவர்கள் அவருடன் எப்பவும் இருப்பார்கள்.
“தோழா”, “தோழரே ” என்ற வெடி சிரிப்பு மட்டும் அடிக்கடி கேட்கும். ஒரு நாள் மெதுவாக சென்று என்னை அவரிடம் அறிமுகம் செய்துகொண்டு அந்த கூட்டத்தில் ஐக்கியம் ஆனேன்.
என் பெயர் எழிற்கோ தோழரே என்றார். எங்கள் பல்கலைகழகத்தில் Administrative position வேலையில் இருந்தார் என்று மாணவர்கள் சொன்னார்கள். எனக்கு அதை பற்றி எல்லாம் அதிகம் கேட்டு தெரிந்து கொள்ள ஆர்வம் இல்லை. எனக்கு அவர் பேச்சு மிகவும் பிடித்து போனது. நடு மண்டையில் ஆணி அடித்தது போல் பேசுவார். பந்தா கிடையாது. பாசாங்கு கிடையாது. வெகுஜன வசீகர பேச்சு. பார்த்த நொடியில் பத்து வருஷம் பழகியவன் மாதிரி பேசுவார். இவருக்கு என்று ஒரு Trade Mark சிரிப்பு உண்டு. Trade Mark சிந்தனை உண்டு. இவர் மாதிரி ஒரு அரசியல் கருத்தை , சமூக பார்வையுடன் எழுத்து உலகில் ஆணித்தரமாக பேசுவோர் மிக குறைவு.
தினமும் ஏதாவது ஒரு ஹாட் டாபிக் அவரே பிக் செய்வார். நச் நச் என்று பாயிண்ட் by பாயிண்ட் எடுத்து பேசுவார். கோர்வை பேச்சு அருவி போல கொட்டும். அவர் எதை பற்றி பேசினாலும் அதில் ஒரு டாப் கிளாஸ் நக்கல், நையாண்டி இருக்கும். கோயம்புத்தூர் குசும்பு என்பது வார்த்தைக்கு வார்த்தை கொட்டி இருக்கும். ஒரு நாள் தமிழக அரசியல் பற்றி பேசுவார். இன்னொரு நாள் உலக அரசியலை பற்றி அலாசுவார். இலக்கியம் பேசுவார். பெரியார் சிந்தனைகளை சத்தம் இல்லாமல் போதிப்பார். சினிமாவை பற்றி அலட்டாமல் விமர்சனம் செய்வார்.
அவர் தொடாத தின நிகழ்வுகள் மிக மிக குறைவு. அவர் பேசும் ஒவ்வொரு வரியிலும் நக்கல் இருந்தாலும் அதில் ஒரு நியாயம் இருக்கும். ஒரு கம்யுனிச சிந்தாந்தம் மறைமுகமாக அவர் பேச்சில் பொதிந்து இருக்கும்.
என் வாழ்நாளில் இதுவரை, ஒரு வெகு ஜன மனித வாழக்கையை இவ்வளவு வெளிப்படையாகவும் சுவாரசியமாகவும் ஒரு சாமானியன் பேசி கேட்டதில்லை. அவர் பேச்சில் பெரிதும் கவரப்பட்ட எனக்கு இன்னொரு அதிர்ச்சி காத்து இருந்தது. சுமார் ஒரு மாதம் கழித்துதான் அவர் ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர் என்று நண்பர்கள் சொல்லி தெரிந்து கொண்டேன்.
அவர் புனைப் பெயர்தான் பாமரன். அப்போது அவர் குமுதத்தில் ஒரு தொடர் எழுதி வந்ததும் அப்போது தான் தெரிந்தது. அந்த தொடரின் பெயர் பாமரனின் “பகிரங்க கடிதங்கள்”.
பாமரன் என்ற பெயர் யார் கொடுத்தது என்று தெரியாது. ஆனால் இவர் ஒரு உண்மை தமிழ் பாமரன்.
ஒரு நாள் அவர் குமுதத்திற்கு அனுப்பிய கடிதத்தின் copy எடுத்து வந்து படித்து காட்டினார். அசந்துவிட்டேன். அந்த வெளிப்படை நக்கல் எழுத்து நடை, சமுதாய பார்வை மற்றும் கருத்து தாக்கம் என ஒரே கலக்கல் எழுத்து. ஒவ்வொரு கடிதத்திலும் ஒவ்வொரு பிரபலத்தை எழுத்தில் கிழித்து, ஆணியில் அடித்து தொங்கவிடுவார். அடுத்த வாரங்களில் குமுதத்தில் வர இருப்பதை சில வாரங்கள் முன்பே எங்களிடம் படித்து காட்டி விவாதம் செய்வார். குமுதம் வந்தவுடன் அவரின் எடிட் செய்யப்பட்ட வரிகளை மீண்டும் படித்து காட்டுவார் .
அப்போது எனக்கு ஒரு வார்த்தை கூட அவர் எழுதும் எழுத்துக்களை பற்றி பேச தெரியாது. அது நாள் வரை ஒரு தமிழ் எழுத்து கூட கட்டுரையாகவோ அல்லது கவிதையாகவோ நான் எழுதியதில்லை.
அவர் ஒரு நாள் கைப்பட எழுதிய பக்கங்களை வாங்கி டீக்கடையில் படித்தேன். நானும் இவரை போல் எழுதவேண்டும் என்று முதன் முதலில் நினைத்தது அப்போதுதான்.
அந்த விதையை முதலில் என்னுள் விதைக்க வைத்தவர் நண்பர் பாமரன். இன்று அந்த விதைக்கு தண்ணீர் ஊற்றி வளர்த்து விட்டவர் முனைவர் இரத்தினசாமி.
இன்று யோசித்து பார்த்தால் …பாமரன் மட்டும் ஐரோப்பாவிலோ அல்லது கியூபா போன்ற தென் அமெரிக்க நாட்டிலோ பிறந்து இருந்தால் இந்நேரம் டாப் 10 புரட்சி எழுத்தாளர் வரிசையில் இன்று உலகில் வலம் வந்து இருப்பார். வீணா போன தமிழ் மண்ணில் பிறந்தது தான் ஓரே குற்றம். அவரின் எழுத்தும் பேச்சும் இந்த சமுதாயத்திற்கு உண்டான பெரும் பங்களிப்பு என்பது பலருக்கு புரிவதில்லை .
இன்னும் கூட இவர் என் பல்கலைக்கழகத்தில் ஒரு காலத்தில் வேலை பார்த்தவர் என்று எத்தனை மாணவர்களுக்கு தெரியும் என்று தெரியவில்லை.
எழுத்து உலகில் இன்று பூசி மொழுகி எழுதும் பல கலப்பட எழுத்துக்களிடையே, பாமரன் போன்ற நேர்மையோடு வெளிப்படையாக எழுதும் எழுத்தாளர்கள் மிக குறைவே என்று எண்ணுகிறேன்.
இன்னும் கூட நினைவு இருக்கிறது ….1999 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இயக்குனர் பாலாவின் சேது படம் வந்தது. அவருக்கு இவர் நெருக்கம் என்பதால் கோவை கலை அரங்கதில் நடந்த சேது பட விழாவிற்கு அனைவரையும் வர சொன்னார். நான் கலந்து கொண்ட முதல் சினிமா பட விழா அது. பல திரைப்பட நண்பர்கள் வந்து இருந்தார்கள் . ஒரு படத்தை எப்படி ஸ்கிரிப்ட் செய்கிறார்கள் என்பதை அன்றுதான் அவர்கள் பேசுவதை பார்த்து தெரிந்து கொண்டேன். ஸ்கிரிப்ட் writing என்பதை முதன் முதலில் விவாதிப்பதை அங்கு தான் கேட்டேன்.
அதற்கு அடுத்த வருடம் எங்கள் கல்லூரிக்கு கவிஞர் மற்றும் சினிமா பாடல் ஆசிரியர் அறிவுமதி பேச வந்தார். இவரும் பாமரனுக்கு நெருக்கமானவர்தான். அறிவுமதியை மேடையின் பின்புறம் பாமரனுடன் சந்தித்தேன்.. மாணவர்கள் இடையே இன்று தேவை சமூக புரட்சி என்று சீரியஸாக பேசினார் அவர். அன்று மேடையிலும் அதையேதான் பேசினார். என் வாழ்நாளில் மறக்க முடியாத மணித்துளிகள் அவை. இலங்கை பிரச்சனை பற்றி தீ பொறி பறக்க கவிதை வாசித்தார். அறிவுமதி பேசியதை பாமரன் ஒரு வாரம் விளக்கி டீக் கடையில் விவாதித்தார்.
அதன் பின்பு அவர் புளிய மரம் வருவது நின்றுவிட்டது. மேட்டுப் பாளையம் மாற்றல் ஆகி சென்றுவிட்டார் என்று சொன்னார்கள். அதன் பின்னர் அவர் ஆரம்பித்த வலைத்தளத்தில் தொடர்ந்து படித்து வந்தேன். வாசிக்க விரும்புவோருக்கு : www.pamaran.wordpress.com
_____________________________________________________________________________________
இதுவரை வெளிவந்த நூல்கள் :
பெரியார் பிறந்த தினத்தில் தொலைபேசியில் அழைத்து பேசினேன். அதே தோழரே என்ற வார்த்தைகள் ..அதே நக்கல் நையாண்டிகள்…
பாமரன் பற்றி மேலும் சில குறிப்புக்கள்:
இவர் 1983ல் உருவான உலக மனிதாபிமான கழக நிறுவனர். 2006ல் உருவான கோவை நாய்வால் திரைபட இயக்க முன்னோடிகளில் ஒருவர். Amnesty International – 1987 – 1991 வரையான செயல்பாடுகளிலும், ஈழ நண்பர் கழகம் – 1985 – 1990 வரையான செயல்பாடுகளிலும் அதிகம் ஈடுப்பட்டவர். வீரப்பன் மரணம் குறித்த உண்மை அறியும் குழுவில் இடம் பெற்றவர். முடிந்தால் இவரின் புத்தர் சிரித்தார் என்ற அணுஆயுத எதிர்ப்புக் கட்டுரைகள் படித்து பாருங்கள்.(இதன் மூன்றாவது பதிப்பு நக்கீரன் வெளியீடாக “அணு அணுவாய் சாவோம்”என்கிற பெயரில் நூலாக வெளிவந்துள்ளது.)
சுருக்கமாக அவரை பற்றி அவரே சொன்னது: இது வரையிலும் எந்த ஒரு விருதோ…பட்டங்களோ பெற்றிராத தமிழகத்தின் ஒரே எழுத்தாளன்.
எத்தனை புத்தகங்கள் வெளியிட்டுள்ளோம் என்பதனைக் காட்டிலும் எத்தனை செயல்பாடுகளுக்குப் பிறகு ஒரு புத்தகம் வெளிவந்தது என்பதில் கவனம் கொண்டவன்.
முதலில் செயல்…பிற்பாடு தேவைப்படின் அதனை ஒட்டிய ஒரு நூல் வெளியீடு. இதுவேஎனது வாழ்க்கை முறை.
மற்றபடிக்கு முதுகுக்குப் பின்புறம் நூல்களை அடுக்கிக் காட்டுவதிலோ …வெறுமனே சக எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளர்களுடன் மட்டும் பொழுதைக் கழிப்பதிலோ எந்த விதத்திலும் விருப்பம் இல்லாதவன். மக்களோடு மக்களாகக் கரைந்து போவதே வாழ்க்கை என உணருபவன்.பொதுவாக ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்பது மரபு. என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு புத்தகம் வெளியிடும் போதும் எனக்கு நினைவுக்கு வருவது : “என் பணி கடன் வாங்கிக் கிடப்பதே.”அம்புட்டுதான்.மற்றவை செயலில்.தோழமையுடன்,பாமரன்.
இவரது மகன் சேகுவேரா B.E படிப்பிற்குப் பின்னர் முதலில் இயக்குநர் மணிவண்ணனிடமும், தற்போது இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக வேலை பார்ப்பதாகக் கூறினார்….. மிக சந்தோஷம்.
அவரிடம் சொன்னேன், நான் இன்று எழுதும் நக்கல் நையாண்டி எழுத்தின் விதை ஒரு புளிய மரத்தின் கீழ் பாமரன் என்ற எழுத்தாளன் விதைத்தது.
அது கனடாவில் முளைக்க 15 வருடம் ஆனது.
எழுத்தாளன் என்றுமே ஒரு மரம் …விதைத்த விதைகள் ஏராளம். எப்படியும் ஒரு நாள் முளைத்தே தீரும்.
Really great,’… Unique personality in TN(AU)
great man.
தோழரின் நூல்களை1998 முதலே படித்து வருகிறேன் . எப்போது காண நேர்ந்தாலும் அதே சிரிப்பு கலந்த ‘தோழரே’ தான் !
எழுத்தாளர், சிந்தனையாளர் பாமரன் அவர்களின் தோட்டத்தில் பொறுக்கியெடுத்து விதைக்கப்பட்டு வளர்ந்த ஶ்ரீதர் என்ற மரத்தின் எழுத்து நிழலின் கீழ் நாங்களும் இளைப்பாறுகிறோம் என்பதை நினைக்க மிகவும் பெருமையாகவுள்ளது. தங்களது எழுத்தில் உள்ள கேலித்தொனி பாமரன் அவர்கள் விதைத்த விதையின் தரத்திற்கோர் சான்று. தொடரட்டும் பாமரன் அவர்களின் தோழர்களின் பணி!
I will go through his blogs.. Thanks for sharing.
Sadly I did not know 🙁 I have read some of his books. I knew him as Paamaran later. neengalum 1998 la laam anga dhaan irundheengalaa?
Yes Malathi Manimegalai
ஒரு வரியில் சொல்வதனால், என் வாழ்வை அவரை சந்தித்த முன்பு பின்பு என இரண்டாக பிரிக்கலாம்.
சொல்ல வார்த்தை இல்லை