நான் எந்த வான்கோவர் தமிழ் கடைக்கு போனாலும் என் பையன் குட்டி போட்ட பூனை போல் என் பின்னாடியே வருவான்.

நேத்து கூட ஜெயா Brothers கடைக்கு போனேன். Brothers னு போட்ட கடையில் ஏனோ ஒரே ஒரு பிரதர்தான் இருந்தார்.

Fanta அல்லது Thumps Up எங்கே இருக்கு சார் என்று கேட்டேன். அடுத்த அறையில் உள்ள fridge ஒன்றை காண்பித்தார். ஒரு பழைய recycled பாட்டிலில் பான்டா என்னை பார்த்து சிரித்தது. அவன் பங்காளி Thumbsup பக்கத்தில் தான் இருந்தான்.இந்தியன் Fanta தான் first option . அடுத்து Thumbsup. இந்த ரெண்டில் ஒன்னை வாங்கி கொடுத்தாத்தான் என் பையன் கடையை விட்டு வெளியே வருவான்.

அவனுக்கு வாய் கொஞ்சம் வக்கனை. கேட்டு கேட்டு சாப்பிடுவான். எதையும் கொஞ்சம்தான் சாப்பிடுவான் என்றாலும் ருசி நாக்கு. பான்டா வாங்கியதும் அங்கயே அதை ஓபன் செஞ்சு உர்ர்ர்ன்னு உறுஞ்சி, உறுஞ்சி குடிப்பான் . குடிச்சு முடிச்சதும், பாட்டில் துளை அருகே வாயை வைத்து சங்கு ஊதுவான். என்னதான் இங்கு Coke, ரூட் பீர் குடித்தாலும் இவனுக்கு மட்டும் எப்படி இந்த பழைய Fanta சுவை பிடிக்கிறது? ஒவ்வொரு முறை குடிக்கும் போதும் என்னையும் குடிக்க சொல்லுவான்.

எனக்கு சுத்தமா அந்த சுவை பிடிக்காது. நேற்றும் நான் சார் ஓட்டும் போது தொந்தரவு செய்தான். செம taste என்றான். எனக்கு பிடிக்காது வேண்டாம் என்றேன். ஏன் உனக்கு மட்டும் பிடிக்கவில்லை என்றான்? கார் ஓட்டிக்கொண்டே சொன்னேன் பதில் கொஞ்சம் பெருசு. முடிஞ்ச அளவு சுருக்கமா சொல்லுறேன் என்றேன். சுவை எப்படி மனுஷனுக்கு மனுஷன் வேறுபடுது என்பதை 75 வருஷம் ஆராய்ச்சியில் அறிவு குஞ்சுகள் கண்டுபுடிச்சதை ஒரு பத்து வரியில் சொல்றேன்.

 

பேஸ் லைன் இது தான்: எனக்கு பூரி புடிக்கும். பையனுக்கும் பூரி புடிக்கும். எனக்கு தக்காளி புடிக்கும். ஆனா அவனுக்கு புடிக்காது. அரிசி பருப்பு சாதம் அவனுக்கு புடிக்கும். என் மனைவிக்கு புடிக்கும் ஆனா எனக்கு புடிக்காது.
உலகில் வாசனை, சுவை ஒவ்வொருவருக்கும் வேறுபடும். நாக்கின் சுவை நம் தாதன் பாட்டியிடம் இருந்தும் வரும். அதுக்கு காரணம் TAS2R38. தான் காரணம். இது என்ன கார் plate நம்பரா? என்று கேட்க்க வேண்டாம். இது Taste receptor 2 member 38 என்ற ஒரு புரதம் ( Protein)- encoded by the TAS2R38 gene. இது ஓரே ஒரு ஜீன் தான் நம் நாக்கின் சுவையை கட்டுபடுத்துகிறது.

1931 லில் ஆர்தர் நரி என்பவர் ( Arthur Fox) phenylthiocarbamide (PTC) என்ற கெமிகல் பொருளை கீழே கொட்டிவிட்டார். ஆர்தர் நரிக்கு எந்த வாசனையும் வரவில்லை. ஆனால்அவர் அருகே வேலை பார்த்த இன்னொரு அறிவு குஞ்சுக்கு அந்தகெமிகல் வாசனை கசந்தது. அது ஆர்தர் நரிக்கிட்ட ஏன் இப்படி இந்த கெமிக்கல் இப்படிகசக்குது என்று கேட்டார் . ஆர்தர் நரிக்கு மூளையில் பொறி தட்டியது. உடனே அந்த கெமிகல் பொருளை நரி தன் சொந்த பந்தம், நண்பர்களிடம் கொடுத்து சுவைக்க சொன்னது. ஒவ்வொருத்தர் ஒரு சுவை சொன்னார்கள்.

உடனே நரி கடையை விரித்து ஆராய ஆரமபித்தது . இது ஆரம்பித்து 75 வருடம் கழித்து தான், சுவை என்பது மனிதனுக்கு மனிதன் எப்படி மாறுபடுகிறது என்பதை அறிவு குஞ்சுகள் கண்டுபிடித்து சொன்னார்கள்.2003 லில் தான் PTC gene, TAS2R38 கண்டுபிடிக்கபட்டது. இனிப்பு, கார்ப்பு, கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு போன்ற எல்லாமே இந்த ஒரே ஒரு ஜீன்தான் கட்டுபடுத்தும்.

நீங்க நாக்கில் வைக்கும் நெய் பொங்கல் முதலில் உருகி, taste buds மேல்பரவும். அங்கு இதுக்கு ரெடியா இருக்கும் Gustatory செல்ஸ் இதை உள் வாங்கிவிடும். இந்த செல்லுக்கு மேல் உள்ள கோடிங் ஆளுக்கு ஆள் மாறுபடும். உடனே இந்த தகவல் நரம்பு வழியே மூளைக்கு செல்லும். உடனே மூளைக்கு அது கசப்பா இல்லை இனிப்பா என்று புரிந்துவிடும். இவை அனைத்தும் ஒரு மைக்ரோ செகண்டில் ஒரு பகுதியில் நடந்துவிடும். அந்த நேரத்தில் நெய் பொங்கல் வாயின் வழியே வயிறுக்குள் சென்றுவிடும்.

உணவின் சுவையை நாக்கு டெஸ்ட் செய்தாலும் அது என்ன சுவை என்று சொல்வது நம் மூளைதான். அதனால் தான் ஒரு பழக்கபட்ட உணவை கண்கள் பார்த்தவுடன் நாக்கு அதை சுவைக்காமல் மூளை தனிச்சையாக வாயை ஜொள்ளு விட சொல்லும்.

ஆர்தர் நரி நாக்கில் உள்ள சுவையை கண்டுபிடித்தார். வாயில் ஜொள்ளு வடிவதை நாயை வைத்து பாவ்லோவ் கண்டுபிடித்தார்.

இது ஒரு நாய் நரி பரிசோதனை.

மணல் கயிறு படத்தில் SV சேகர் விசுவிடம் சொல்லுவார் ” நீங்க எனக்கு பாக்க போற பொண்ண, என் கண்ணுக்கு மட்டும் அழகா இருக்கனும்…ஆனா மத்தவங்க கண்ணுக்கு அசிங்காமா தெரியனும் என்று.

ரஜினி, கமல், லிங்கா, பான்டா, லிம்கா போன்றவை ரசனை, சுவை, வாசனை பிரியம் சம்பந்தபட்டவை.

இவை ஜீன்களால் கட்டுப்படுத்தபடுகின்றன. இதற்கு Evolutionary Evidence உண்டு. கொஞ்சம் adaptation, preference, acclimatization, availability போன்ற Environment பண்புகளும் இதை கட்டுப்படுத்தும்.

கொள்ளு பாட்டிக்கு தக்காளி பிடிக்காமல் போனதால் உங்கள் மகனுக்கு அது பிடிக்காமல் போகலாம்.

அவனுக்கு கண்ணுக்கு தக்காளியாய் தெரியும் பெண் உங்களுக்கு பூசணிக்காயாய் தெரியலாம்.

குழந்தைகளுக்கு ஒரு காய் கறியின் சுவை பிடிக்கவில்லை எனில் கட்டாயபடுத்த வேண்டாம். genes தான் அதன் சூத்ரதாரி.

இதை நான் சொல்லவில்லை. இது ஆர்தர் நரி சொன்ன பான்டாவின் சுவை… சிலருக்கு மட்டும் பிடிக்கும்.
___________________________________________

For more Details about Taste Genes Please Read. ( University of Utah – Taste Gene Study)

http://learn.genetics.utah.edu/content/inheritance/ptc/

European Food Information Council.

http://www.eufic.org/article/en/health-and-lifestyle/food-choice/artid/how-taste-preferences-develop/