தலைவா, தலைவன், தலை, தல, ல ….

இன்று தமிழ் நாட்டில் விக் வைத்தவன், டை அடித்தவன், நரை முடி வந்தவன்,  கருப்பு வெள்ளையாய் அலைபவன், விளக்கெண்ணை மாதிரி பேசுபவன், விடலை பையன் என யார் எடுத்தாலும் தன்னை தலைவன் என்று அழைத்துக் கொண்டால்,

இதற்கு முன் தமிழ் நாட்டில் வாழ்ந்த பெரியார், காமராஜர், கக்கன் போன்ற தலைவர்கள் எல்லாம் என்ன சிட்டு குருவி லேகியமா விற்றார்கள் ?

 

தலைவன் என்றால் என்னவென்று அர்த்தம் கூட தெரியாமல் ஒரு நடிகனை தலைவன் என்று சொல்ல இது என்ன இவர்களின் செல்ல பட்டமா, வெறும் அடை மொழியா, ரசிகர்கள் கொடுத்த பட்டமா, சமுதாயம் கொடுத்த அந்தஸ்தா,  புஜ்ஜு குட்டி போன்ற செல்ல பெயரா இல்லை அவர்கள் உண்மையான தலைவர்களா?

இதில் எந்த அளவு ரியலிசம் உள்ளது, இது அவர்களுக்கே வெளிச்சம்.

 

நான் கூட என் நண்பரை அடிக்கடி தலைவா… சொலுங்க என்பேன்.

அதற்காக, என் Project Manager கேட்கும் கேள்விக்கு அவர் தலையில் உள்ள மூளையா பதில் சொல்லும்.

Leader என்னும் ஆங்கில சொல்லுக்கு நிகர் தமிழ் சொல் தான் தலைவன். மூளையின் சிந்தனையில் மாற்றம் ஏற்படுத்துபவன் என்று பொருள்.

எனக்கும் ரியலிசம் இல்லா ஒரு தலைவன் ஒருவன் உள்ளார்.

அவர் இதிகாச இராவணன்தான்.

அவருக்கு மொத்தம் 10 தலை.

 

நடிகர்களை தலைவா என்று கூப்பிட்டால் அவர்களின் ஒரு தலை மட்டும்தான் திரும்பி பார்க்கும்.

அதுவே நான் ஒரு தடவை தலைவான்னு இராவணனை கூப்பிட்டா, மொத்தம் பத்து தலை திரும்பி பார்க்கும்.

வாய்ஸ் கூட பத்து மடங்கு கேட்கும், மொத்தம் பத்து வாய்.

ரியலிசம் வேறு.. இதிகாசம் வேறு.

 

உலகின் டாப் 10 தலைவர்கள் இவர்கள் தான் :

காந்தி, மண்டேலா, மார்டின் லூதர் கிங், லிங்கன், மாவோ துங், ஹிட்லர், வாஷிங்டன், நெப்போலியன், ரூஸ்வெல்ட் மற்றும் ஜூலியர் சீசர்.

இதை போல் சுமார் 250 உலகின் டாப் தலைவர்களில் பெயர்களை எடுத்து படித்து பாருங்கள். ஆனால் இவர்களில் ஒருவருக்கு கூட இரண்டு முகம் இருந்தது இல்லை.

ஓரே முகம். ஓரே பேச்சு. ரியல் பேச்சு.

 

நல்லதோ, கெட்டதோ ….பேசுவதை செய்வார்கள். செய்ததை பற்றி பேசியவர்கள்.

வெறும் ஜாலிக்காக ஒரு நடிகரை தலைவா என்று அழைப்பதில் தவறு இல்லை. இதை ஒரு செல்ல பட்டமாக உபயோகிப்பதிலும் தவறு இல்லை.

நடிகர்களை தங்கள் உண்மை தலைவனாக மானசீகமாக ஏற்றுக் கொள்வதில் ஒரு உண்மை ரசிகன் வேறு பாதைக்கு அடி எடுத்து வைக்கின்றான்.

 

சுருக்கமாக தன் ஆளுமை, திறமை, தத்துவம் மற்றும் அனுபவத்தின் மூலம் ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்த முனையும் ஒரு ஆளுமைவாதிதான் தலைவன் எனப்படுபவன்.

Alan Keith of Genentech சொன்னார் “தலைவன் என்பவன் ஒரு அசாதாரணமான ஒரு விஷயத்தை நிகழ்த்திக்காட்டும் பொருட்டு மக்கள் பங்களிப்பதற்கான ஒரு வழியை உருவாகியவன்”.

நல்லதோ, கேட்டதோ எதோ ஒன்றை இவர்கள் சமுதாயதிற்கு செய்வார்கள். செய்தவர்கள்.

ஹிட்லர் கெட்டதை வழி நடத்தினார். காந்தி அமைதியை போதித்தார். இருவருமே மாற்றம் உண்டாக்கியவர்கள் . Decision Makers.

இவர்களிடம் ஒரு இனம் புரியாத ஈர்ப்பு இருக்கும். அவர்கள் பேசுவதை, நடப்பதை, சிந்திப்பதை நம்பி பலர் அவர்களை நேசிப்பார்கள். பின் தொடர்வார்கள்.

அவர்களின் சிந்தாந்தம் ஒரு பேர் அலையை மனதில் எழுப்பும். யோசனை செய்வார்கள். ஆனால் முடிவை தீர்கமாக எடுப்பார்கள்.

A good leader is a good Decision Maker. நல்லதோ கெட்டதோ …Decision எடுப்பார்கள்.

இவர்கள் சர்வாதிகாரியாகவோ, ஏகாதிபதியாகவோ, சீர்திருத்தவாதியாகவோ, விடுதலை சிந்தாந்தம் உள்ளவர்களாகவோ இருக்கலாம்.

 

மேல் சொன்ன வசீகரம், நடை, உடை, பாவனை, சிந்தாந்தம், சிந்தனை என்று அனைத்தும் இந்த தலைவா நடிகர்களுக்கும் உண்டு.

என்ன ….ஓரே வித்தியாசம் இவர்களுக்கு இரண்டு முகம். திரையில் ஒன்று. நிஜத்தில் ஒன்று.

திரையில் விவசாயிக்காக போராடுவார்கள். பாகிஸ்தான் தீவிரவாதியை நேரில் நின்று சுடுவார்கள். லஞ்சம் லாவண்யம் எதிர்த்து நிற்கும் தியாக வீரர்கள்.

நிஜத்தில் இவர்கள் வெறும் திரைப்பட நடிகர்கள். திரை தொழிலில் வியாபாரம் செய்பவர்கள்.

அடுத்த படத்தை எடுக்க துணியும் செயல் திறன் சமுதாய மாற்றத்தை கொண்டுவருவதில் இதுவரை இருந்ததில்லை. இனிமேல் வேண்டுமானால் வரலாம்.

இவர்கள் திரையில் பேசிய வசனம் பார்த்து இவர்களை நிஜ ஹீரோ என்று ஆழ்மனது சொல்ல, அதன் கட்டளைக்கு அடிபணிந்து இவர்கள் அந்த நடிகனின் அடிமையாகி விடுவார்கள்.

அடிமையாகாமல் நடிப்பை, ஸ்டைலை ரசிப்பவன் ரசிகன்.

அடிமையாகி ரசித்து வழிபடுபவன் Follower – சீடன் அல்லது பின்பற்றி. இந்த குரூப் அவரை முழுவதுமாய் ஏற்றுக்கொண்டவர்கள் .

 

இதையும் தாண்டி சில நடிகர்கள், திரையும், நிஜத்திலும் நான் ஒன்றே என்று தன் சிந்தனை மற்றும் செயல்களில் நிகழ்த்தி காட்டியவர்கள்.

M.G. Ramachandran எனும் எம்ஜியார் தான் இவர்களுக்கு எல்லாம் முன்னோடி.

M.G.R முதலில் தன்னை நடிகனாக நிலை நிறுத்தி, பின் தான் பேசியதை நிஜத்தில் செய்து காண்பித்த பின்பு தான் மக்கள் தலைவர் ஆனார்.

சிந்தனையை செயலில் காட்டியவர்.

இப்போது உள்ள நடிகர்கள் சிந்தனைகளை பஞ்ச் டைலாக்கோடு நிறுத்தி விட்டு, கல்லா கட்டிவிட்டு கூட்டம் சேர்ந்தவுடன் ஆழம் பார்த்து அரசியலில் இறங்கலாமா..வேண்டாமா என்று யோசனை செய்பவர்கள்.

 

இன்று நடிகர்கள், திரையில் மக்கள் தலைவன் போல் வசனம் மட்டும் பேசி விட்டு, நிஜத்தில் எதுவுமே சமுதாயத்திற்கு செய்யாமல் எம்ஜியார் போல தலைவன் ஆக குறுக்கு வழி தேடுபவர்கள்.

ரத்த தான முகாம், மூன்று சக்கர மிதிவண்டி பரிசு, ரசிகன் கல்யாணத்திற்கு நன்கொடை. இது தான் இதன் தொடக்கம். முடிவும் அங்கேயே நின்று விடும்.

தலைவன் என்னும் வார்த்தையை ஒருத்தரை ஒருவர் பாதிக்கா வண்ணம் பிய்த்து வைத்துக்கொண்டு தலைவா, தல, தலைவன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்கள்.

 

இவர்கள் யாரும் தன்னை அப்படி அழைக்கவேண்டாம் என்று சொல்வதில்லை. காரணம் ஒரு ரசிகன் தன்னை அவ்வாறு அழைப்பதை மறைமுகமாக விரும்புகிறார்கள்.

ஒரு நடிகனை தலைவன், முதல்வன், முக்தி அடைந்தவன் என்று சொல்வது ஒருவருடைய விருப்பம். யாரும் அதை குறை சொல்ல அருகதை இல்லை.

 

இந்த பட்டங்கள் ஒரு ரியலிசம் இல்லாத செல்ல பட்ட பெயர்கள் தங்கள் ரசிகர்களால் வழங்கப்படவையே தவிர,

இதற்காக இவர்கள் என்ன மாதிரியான ஒரு சமுதாய மாற்றத்தை உருவாகினார்கள் என்பது அவர்களின் ரசிகர்களுக்கே வெளிச்சம்.

 

சூப்பர் ஸ்டார் என்பது பட்டம். அது ரஜினிக்கு ரசிகன் கொடுத்தது.

சில துடிக்கிற ரசிகர்கள் தன்னையும் ஒரு சூப்பர் ஸ்டார் என்று நினைப்பது ஒரு உளவியல்.

 

ஒரு நடிகனை தன் சீரியஸ் தலைவன் என்று மனம் ஏற்றுக் கொண்ட பிறகு, அவர் என்ன செய்தாலும், எதுவும் செய்யாவிடினும் அவர் செய்வதே சரி என்றாகிவிடுகிறது.

அவர் படம் ஓடினால் தான் வெற்றி பெற்றது போன்ற ஒரு குதூகலிப்பு, தோல்வி அடையும் போது வருத்தம் மற்றும் சமாளிப்பு.

அவர் வெறும் நடிகன் என்பதை மறந்து, தான் தான் அவரின் மூத்த சீடன் என்று சமுதாயத்திற்கு காட்டிக்கொள்ளும் எண்ணமே அது.

 

படம், நிஜம் என்று அனைத்தையும் ஒரு சேர குழப்பி அந்த நடிகனையும் குழப்பி விடும் கூட்டம்.

தலைவன்தான் என் உயிர் என்பார்கள். அவரே என் தயிர் என்று தினம் புரை ஊற்றுவார்கள்.

அவருக்காக வாதாடுவார்கள். அவர் செய்த தவறுக்கு இவர்கள் நியாயம் கற்பிற்பார்கள்.

அவருக்கு இவர்கள் வக்காலத்து வாங்கி பேசுவார்கள்.

காரணம் இவர்கள் அந்த நடிகரை நடிகன் என்பதை மீறி நேசிக்க ஆரம்பித்தவர்கள்.

சிலர் பேசுவதோடு நிறுத்தி விடுவார்கள்.

 

சிலர் அவரை ரியல் வழிகாட்டி என்று நம்ப ஆரம்பித்து மனதில் வழிபட ஆரம்பிக்கிறார்கள் .

உயிருடன் இருக்கும் நடிகனுக்கு கட் அவுட் வைத்து பால் ஊற்றுவார்கள்.

சிலர் அவர் படம் வர தாமதம் ஆகும் போது தீக்குளித்து இறந்து விசுவாசம் காட்டுவார்கள்.

நடிகன் என்பதையும் தாண்டி அந்த நடிகன் அவர்கள் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திவிட்டான் என்பதே உண்மை.

அப்போது தான் ஒரு சினிமா நடிகன் கடவுள் ஆகிவிடுகிறான்.

 

மனதில், ரசிப்பதில் மாற்றம் கொண்டுவந்தவன் தலைவன் அல்ல.

செயலில், சிந்திப்பதில் மாற்றம் கொண்டுவந்தவேனே தலைவன்.

அதனால் தான் காமராஜர், பெரியார், கக்கன் போன்றவர்களை தலைவர்கள் என்கிறோம்.

 

இது ஏதோ தமிழ் நாட்டில் மட்டும் இந்த தலைவன் உளவியல் நடக்கிறது என்று சிலர் நினைக்கிறார்கள்.

இல்லை இது ஒரு உலகளாவிய மனோத்தத்துவ உளவியல் கோட்பாடு. இது ஒரு thriller psycho subject .

ஆம், இதன் முன்னோடி அமெரிக்காவில் 1931 ல் பிறந்தான்.

அவன் பெயர் ….

 

 

தொடரும்.

Lion King – சிவாஜி ராவ் – நம்பிக்கை ( பார்ட் 5)