இந்த கட்டுரையை படித்துவிட்டு யாரும் பொங்க வேண்டாம்.

எல்லா தொழிலிலும் நேர்மையானவர்கள் உண்டு. இது example அல்ல. Exceptions சிலரை பற்றியது.

இந்த கட்டுரையின் நோக்கம், தாக்கம் எல்லாமே இந்த இரண்டு வரிகள்தான்.

 “கடை தெருவுக்கு போய் தேங்காய் வாங்கும் போது தட்டி பார்க்கும் ஞானம்,

டாக்டர் அநியாய பில்லை நீட்டும் போது, தட்டி கேட்க வருவதில்லை”

6 வருடம் முன்னால், கோவையில் ஒரு பிரபல பல் டாக்டரிடம், என் மனைவிக்கு ஒரு பல் வலித்ததால், செக் செய்ய அழைத்துச் சென்றேன்.

செக் செய்துவிட்டு முதலில் ஒரு பல்லில் மட்டும் கோளாறு என்றுதான் ஆரம்பித்தார். செக் செய்யும் போதே நான் எங்கு வேலை செய்கிறேன் என்று பேச்சு வாக்கில் கேட்டு வாங்கி தெரிந்து கொண்டார்.

“டிஸ்கவரி” என்றதும் உடனே ஒரு பல், இரண்டானது. பேசும் போதே அது மூன்றும் ஆனது.

கடைசியில், சிலவற்றை புடிங்கி, பலவற்றை அடைக்கவேண்டும் என்று ஆறு பல்லில் முடித்தார்.

நான் ” என்ன டாக்டர், ஒரு பல்தானே பிரச்சினை என்று வந்தோம்.

எப்படி டாக்டர் இத்தனை பல்லில் பிரச்சனை ஆனது?” என்று வாயை பிளந்தேன். கொஞ்சம் ஓவராக வாயை பிளந்து கேட்டுவிட்டேன் என்று நினைக்கிறேன்.

வாய் பிளந்த என்னையும் ஓரே அமுக்காக அமுக்கி, ஒரு chair – ல் சாய்த்து, என் வாயையும் செக் செய்து உங்களுக்கும் சில பல்லை புடிங்கி, பல பல்லை அடைக்கவேண்டும் என்றார்.

மொத்த, பற்களின் கூட்டு தொகை 11 ஆனது. இவை அனைத்தையும் உடனே செய்யவேண்டும் என்றார்.

நாம் ஆரம்பிக்கலாம் என்று, காலெண்டரை செக் செய்ய ஆரம்பித்தார். உடனே receptionist வந்து, வாங்க இது உங்க first appointment, உங்க செகண்ட் சிட்டிங், Third சிட்டிங் என்று பேச ஆரம்பித்தார்.

எனக்கு தூக்கி வாரி போட்டது. மீண்டும் கேள்வி கேட்கப் போன என்னை ” இவர் மிக பிரபலமான பல் டாகடர். இவர் சொன்னால் சரியாகதான் இருக்கும். என்னை மேலும் கேள்வி கேட்கவேண்டாம்” என்று மனைவி ஜாடை காண்பித்தார்.

நானும் அமைதியாக “மொத்தம் எவ்வளவு செலவு ஆகும் டாக்டர்?” என்று கேட்டேன்.

சுமார் ஒரு பல்லிற்கு “8,500” என்றும், சில பல்லிற்கு “12,500” என்றும், கூட கிளீனிங், ப்ளீச்சிங், ஷைனிங், fixing, Root Canal, Suez Canal என்று வாயாலயே ஏதேதோ ஒரு கணக்கு சொல்லிக்கொண்டே போனார்.

மனதில் கூட்டிப் பார்த்தேன். மொத்த செலவு சுமார் லட்ச ரூபாயையும் தாண்டியது.

பேசும் போதே பையனின் வாயில் ஒரு பிளாஸ்டிக் கிளிப் மாதிரி ஒன்றை வைத்து காண்பித்தார். அது 5000 ரூபாய். வாயில் வைத்ததால் நான் அதை வாங்கியே ஆகவேண்டும்.

மீண்டும் கேள்வி கேட்கலாம் என்று நினைத்த பொழுது, என் மனைவி என்னிடம் ” இவர் மிக பிரபலம், சரியாகத்தான் இருக்கும், கேள்விகள் கேட்க வேண்டாம்” என்று சொன்னார்.

இருந்தாலும் நான் கேள்வி கேட்டேன்.

டாக்டர், வெயிட் …உங்ககிட்ட நான் உங்க விலையை பற்றி நிறைய கேள்வி கேட்கணும். ப்ளீஸ் என்றேன்.

அதுவரை, அவர் கண்களில் தெரிந்த ” ப்ளீசிங் பவுடர் விக்க வந்தவன் கண்ணில் தெரியும் Marketing ஒளி”, “சட்” என்று மங்கியது. முகம் சுளித்தார்.

ஏதோ மூன்றாம்தர மனிதனை பார்ப்பது போல் பார்த்தார். நான் கேள்விகளை கேட்பதை, அவர் விரும்பவில்லை.

காரணம், அவர் டாக்டர், நான் நோயாளி. இது தான் பேஸ் லைன். (Base Line).

இந்த கோட்டை நாமளும் தாண்ட கூடாது. அவரும் தாண்ட மாட்டார்.

இந்த பேஸ் லைனை தாண்டி வரும் மருத்துவர்கள் மிக குறைவு. தோள் மீது கைபோட்டு, பரஸ்பரம் மனதுவிட்டு பேசும் நல்ல மருத்துவர்களை, நீங்கள் விரல் விட்டு எண்ணிவிடலாம். இவர் அந்த ரகம் இல்லை.

சரி? எனக்குள் ஒரு கேள்வி….

டாக்டர் என்பவர் யார்? ஏன் நாம் கேள்வி கேட்பதை பொதுவாக, எல்லா டாகடர்களும் விரும்புவதில்லை?

காரணம், டாக்டர் என்ற சொல்லே ஒரு “சமூக மாயை” கொண்ட சொல்.

It is a Social Illusion personified, hype word – Māyā word !!!

இந்த மாயையை, இந்த சமூகம்தான் அவர்களுக்கு கொடுத்தது. டாக்டர் என்றாலே ஒரு மரியாதை, ஒரு மிதப்பு, ஒரு மிதிப்பு. அவர் செய்யும் தொழில் ஒரு புனிதம், அவரும் மிக புனிதமானவர், தூய்மை உள்ளம் படைத்தவர், விவரம் அறிந்தவர், எந்த கேள்விகளுக்கும் அப்பாற்பட்டவர், மொத்தத்தில் அவர் ஒரு கடவுள் என்று பல முக திரைகள் இந்த சமூகம் அவர்களுக்கு, அவர்கள் கேட்காமலேயே வழங்கி உள்ளது.

இந்த போலி மாயைதான், அவர்களுக்கு மரியாதையையும், தேவை இல்லாத சமூக அந்தஸ்தையும் கொடுத்து உள்ளது. எவ்வளவு மடையனானாலும் சரி, டாக்டருக்கு படித்துவிட்டால், இந்த மரியாதையும் அந்தஸ்த்தும் தானாக வந்துவிடும் என்ற மாயை. நன்றாக படித்தவன் டாக்டர் ஆகலாம் என்பது மாறி, பணம் கட்டி படித்தவன் இந்த குரூப்பில் சேர்ந்து, நல்ல மருத்துவர்களின் பெயர்களையும் கெடுத்து விட்டார்கள்.

அந்த டாக்டர் பட்டத்தை படித்தோ, பணம் கொடுத்தோ வாங்கிவிட்டால் மரியாதையும் அந்தஸ்த்தும் தானாக வந்துவிடும் என்பதும் ஒரு சமூக அவலம்தான். பொண்ணுக்கு டாக்டர் மாப்பிள்ளை தேடுவதும், அதற்கு மகன்களை கொட்டி கொட்டி படிக்க வைப்பதும் ஒரு சமூக அவலம்தான்.

செய்யும் தொழில்தான் தெய்வமே ஒழிய, இந்த தொழில் செய்பவன் தெய்வம் என்று ஒன்று இல்லை.

டாக்டர் தொழிலை மிக நேர்மையாக, மனசாட்சிக்காக செய்பவர்கள் பலர் இருக்கலாம். ஒரு சிலர், இந்த முக மூடியை அணிந்து செய்யும் அட்டகாசம் பற்றிய கட்டுரை தான் இது.

சிறு வயதில் நான் ஓட்டிய முக்கா பெடல் சைக்கிள் டயர் பஞ்சர் ஆனது. வீட்டின் எதிரே உள்ள முஜீப் பாய் சைக்கிள் கடைக்கு எடுத்து சென்று ரிப்பேர் செய்வேன். ரிப்பேர் செய்யும் போது, முஜீப் பாயிடம் சைக்கிள் பஞ்சர் பற்றி கேள்விகள் கேட்பேன். அவரும், லுங்கியை மடித்துக்கட்டிக் கொண்டு எல்லா பதில்களும் சொல்வார். பஞ்சர் போடும் Sealants எங்கே வாங்கினார், எவ்வளவு செலவு ஆகும் என்பது வரை கேள்விகள் கேட்பேன். பொறுமையாக பதில் சொல்வார். கடைசியில் ஒரு ரூபாய் கொடுப்பேன். முத்தம்மிட்டு வாங்கி வைப்பார். அப்போது தேன் மிட்டாய் 5 காசு.

இது ஒரு தொழில். ஒரு ரூபாயுக்கு கேட்ட கேள்விகளுக்கு பதில் கிடைத்தது.

அதே வயதில் எனக்கு, உடம்பு சரியில்லை. டாக்டரிடம் அழைத்து சென்றார் என் அப்பா. இரண்டு மணி நேரம் waiting. டாக்டர், மேஜையில் சாய்ந்து நிற்பார். நாக்கை, உள்ளிருந்து கண்ணத்தில் துருத்தி,துருத்தி செக் செய்வார். ஏதோ, விஞ்ஞானி போல் போஸ் கொடுப்பார். வெள்ளையும், சொள்ளையுமாய் இருப்பார். கிராமத்தில் இருந்து வந்தவர்கள் வாய் பொத்தி, கை கட்டி நிற்பார்கள். அவர் பேசி பார்த்ததில்லை. கேள்விகள் கேட்டால், முனகி ஒரு வார்த்தை அளந்து பேசுவார். அதிக பட்சம் ரெண்டு வார்த்தை. அதற்கு மேல் பேசமாட்டார்.

அவருக்கு ஒரு அச்சிச்டன்ட். அவர் மிக குள்ளம். அவர் தான் அதிகம் பேசுவார். நோயாளிகளிடம் பாசத்துடன் பேசுவார் . டாக்டர் சைகையில் காமிக்கும் ஊசி மருந்து ரெடி செய்வார். என் உடம்புக்கு என்ன டாகடர்? எப்ப சரியாகும்? …இப்படி எத்தனை கேள்விகள் கேட்டாலும் டாக்டர் ஒரு முக்கல், ஒரு முனகல் மட்டுமே கொடுப்பார். எனக்கென்னவோ, அந்த அச்சிச்டன்ட் தான் டாக்டர் படித்து இருக்கவேண்டும் என்று நினைப்பேன்.

அது ஒரு வகை திமிர். டாக்டர் திமிர்.

15 ரூபாய் கொடுப்பார் என் அப்பா. அதை தன், ஒரு பாக்கெட்டில் ஏனோ தானோ என்று நொந்துவார். இன்னொரு பாக்கெட்டில் கை விட்டு கத்தை கத்தையாக எடுத்த பணத்தில் மீதி 5 ரூபாய் எடுத்து நம்மிடம் வீசுவார்.

இதுவும் ஒரு தொழில்தான். ரெண்டு ரூபாயுக்கு கேட்ட கேள்விகளுக்கு பதில் கிடைத்தது. 15 ரூபாய் கொடுத்ததும் கேள்விகள் கேட்க முடியாது.

ஏன், இந்த டாக்டர் நோயாளிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுவதில்லை? அப்படியே சொன்னாலும் ரெண்டு வார்த்தைதான்…

டாக்டர் என்றால் அதிகம் பேசமாட்டார். அவர் சொல்லுவதெல்லாம் உண்மை. செய்வதெல்லாம் சரி. அவர் கேள்விகளுக்கு அப்பாற்பட்டவர் என்பது இந்த சமுதாயம், டாகடர்களுக்கு பண்நெடும்காலமாக கொடுத்துவைத்த போலி அந்தஸ்து.

காரணம், அவர் டாக்டர், நான் நோயாளி. இது தான் பேஸ் லைன். (Base Line).

இது இன்று நேற்று வரையப்பட்ட கோடு இல்லை. ஆதாம், ஏவாள் ஆப்பிள் சாப்பிட்டு கர்ப்பம் தரித்த போது பிரசவம் பார்த்த டாக்டரிடம் இருந்த திமிர்.

கிரேக்க மன்னர்கள், Hippocrates, Galen, Dioscorides போன்ற மருத்துவர்களுக்கு பயந்து நடுங்கினார்கள். Din-e Ilahi வழிபட்ட பேரரசர் அக்பர் வரை, மருத்துவருக்கு பயந்தார்கள்.

காரணம் உயிர் பயம்.

மனிதனுக்கு உயிர் என்றாலே பயம். உயிர் சமந்தப்பட்ட எதை கண்டாலும் அதன் மீது பக்தி வந்துவிடும்.

பாம்பானாலும் சரி, டாக்டர் என்றாலும் சரி.

மனிதனுக்கு எதன் மீது பயம் வருகிறதோ அதை உடனே கடவுளாக மாற்றிவிடுவான். இப்பிடித்தான் டாக்டர் கடவுளானார். ஏன் என்றால் அவர் மனித உயிர்களை காப்பாற்றுகிறார். படித்தவர்.

ஒரே நேரத்தில் 60 பேர்களின் உயிர்களை, பாதுகாப்பாக காப்பாற்றி இரவு முழுவதும் கண் முழித்து வண்டி ஓட்டும் ஓட்டுனரை நாம் கடவுளாக மதிக்கிறோமா? இல்லையே.

 அவரும் காசுக்குதான் வண்டி ஓட்டுகிறார். டாகடர்களும் காசுக்கு தான் ஊசி போடுகிறார்கள்.

டிரைவருக்கு அந்த அந்தஸ்து வருவதில்லை. ஏன் என்றால் அவர் படிக்காதவர். அழுக்கு பிடித்த உடைகளும், அவரின் ஏழ்மையும் அவருக்கு கடவுள் அந்தஸ்து கொடுப்பதில்லை. ஆனால், அதே டிரைவர் accident ஆகாமல் தவிர்த்துவிட்டால் உடனே கடவுள் அந்தஸ்து இந்த சமூகம் வழங்கிவிடும். காரணம் உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

மனித மலங்களை அள்ளியவன், பிணங்களை எரிப்பவன் என எத்தனையோ தொழில்கள் உள்ள இந்த உலகில், மருத்துவத்தின் மீது இந்த சமூகம் ஏற்படுத்திய மாயை மரியாதையால், பணம் வாங்கி வருமானத்திற்கு செய்யும் தொழிலையே, புனித சேவை என்று நினைத்து, ஒரு மருத்துவரிடம் கேட்கவேண்டிய அடிப்படை கேள்விகளையே நாம் பயந்து கொண்டு கேட்பதில்லை. காரணம் உயிர் பயம்.

இப்படி நாம் கேள்வி கேட்காமல் போனதால், பல பதில்கள் நமக்கு கிடைக்காமலே போகும்.

நாம் மருத்துவரிடம் பணத்தை கட்டிவிட்டு கை கட்டி நிற்கவேண்டியதில்லை. கார் ரிப்பேர் ஆனால், mechanic-கிடம் பல கேள்விகள் கேட்பது போல், தாராளமாக மருத்துவரிடம் கேள்விகள் கேட்கலாம்.

இந்தியாவில் எனக்கும் கேட்க தோன்றியதில்லை. கனடாவில் என்னால் கேட்க முடிகிறது. பதில்கள் கிடைகிறதா என்பது இரண்டாவதுபட்சம். உடனே, நான் கனடாவில் டாக்டர்கள் சூப்பர் என்றும், இந்தியாவில் மட்டம் என்றும் சொல்லவில்லை.

இங்கும் ஒரு மட்டத்தை பார்த்தேன்.

கனடாவில், எனக்கு சிறுநீரகத்தில் ஒரு பெரிய கல் வந்துவிட்டது. அப்போது, எல்லா டெஸ்டும் முடிந்து எல்லா results டாக்டர் கையில் இருந்தது. அவருக்கு சுமார் 75 வயது இருக்கும். அவர் தான் Kidney Stone – டாப் specialist.

என் அருகே வந்து, என் results எடுத்து பார்த்தார்.

வலியால் துடித்துக்கொண்டே கேட்டேன் “டாக்டர், மிகவும் வலிக்கிறது…எவ்வளவு பெரிய கல்? எப்போது எனக்கு சரியாகும்? எதனால் எனக்கு வந்தது? என்று operation செய்யமுடியும்?”

அவர், வேண்டா வெறுப்பாக முணுமுணுத்தார்
“It is a Stone, It will pain… Let us see…வெயிட்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். அவர் பேச்சில் ஒரு இறுமாப்பு இருந்தது.

It is a Stone, It will pain..இந்த வெண்ணை எனக்கே தெரியும்.

இவர் ஒன்னும் சும்மா சொல்லவேண்டியதில்லை. இங்கே மருத்துவம் இலவசம் இல்லை. அரசாங்கம் எனக்காக மருத்துவருக்கு காசு கொடுக்கிறது. It is Tax Payers Money. He is obliged to answer all questions, if he knows the Answer. இருந்த வலிக்கு “அவரை தமிழில் திட்டினேன்”

எனக்குதான் கல். அவருக்கு இல்லை. எனக்கு தான் வலிக்கிறது. அவருக்கு இல்லை.
கேள்வி கேட்டா பதில் சொல்லணும், இல்லை தெரியாதுன்னு சொல்லணும். நான் ஒன்னும் சும்மா கேட்கவில்லை.

Tax Pay செய்து காசு கொடுத்து கேட்கிறேன். சொல்லவேண்டியது அவர் கடமை. நின்னு ரெண்டு நிமிஷம் பேசாம போனா இவரு பெரிய புடலங்காயா? கல் எடுத்த பின்னாடி உன்னை வச்சுகிறேன் என்றேன்.

அவர் சென்றபின்பு, ஒரு பஞ்சாபி நர்ஸ் வந்து சொன்னார். கவலை படவேண்டாம். டாக்டர் மிக பெரியவர். அவர் தான் இதில் மிக பிரபலம். அதனால் அதிகம் பேசமாட்டார். அவரிடம் appointment வாங்குவதே கடினம். கவலைவேண்டாம்.

என், அனைத்து சந்தேகங்களுக்கும் பொறுமையாக பதில் சொன்னார்.

கடவுள், அந்த டாக்டர் இல்லை, நர்ஸ்தான்.

ஏன் ரெண்டு வார்த்தை பேசினால் டாகடர் இளைத்து விடவா போகிறார்? அவருக்கு ஏன் இந்த இறுமாப்பு?

அவருக்கு என்ன ரெண்டு கொம்பா முளைத்து இருக்கிறது?
அவர் பேசாமல் போனதற்கு காரணம், நான் டாக்டர், நீ நோயாளி என்ற போலி கௌரவம்தான்.

இன்று, டாக்டர்கள் அதிகம் பேசுவதில்லை. பேசினால் மாட்டிக்கொள்வோமா என்ற பயம்.
மருத்துவம் படித்து வரும், பணம் வேண்டும். ஆனால் அதில் வரும் ரிஸ்க் அவர்களை சேர்ந்தது இல்லை.
நோய் பற்றி full detail சொல்ல தயங்குவார்கள். நாம்தான் அவர்கள் பின்னால் பதில் தேடி ஓடவேண்டும்.

நூறு மாடி கட்டிடம் மீது நிற்கும் சித்தாளின் வேலையில் கூட தான் ரிஸ்க் உள்ளது.
அதுவும் உயிர் சம்பந்த பட்டது.

வார்டில் ரவுண்டு வரும் டாக்டர்களுக்கு நாம் ஒரு நாள் முழுவதும் காத்து இருப்போம்.
அவர் சில நொடிகளில் பட்டும் படாமல் பதில் சொல்லிவிட்டு செல்வார்.
அதற்க்கு மேல் நாம் கேள்வி கேட்ககூடாது.

கேட்டால் நான் டாக்டர், நீ நோயாளி. டாக்டர் தொழில் ஒரு புனிதமான தொழில் என்பது என்னை பொறுத்தவரை ஒரு incorrect statement.

“டாக்டர் தொழிலும்” ஒரு புனித தொழில் என்பது கூட சரியில்லை. அப்படி என்றால் உலகில் எத்தனையோ புனிதமான தொழில்கள் இந்த லிஸ்டில் வராமல் உள்ளன.

என்னை பொறுத்தவரை சேவை தான் புனிதமானது. தொழிலில் புனிதம் இல்லை.
காசு கொடுத்து வாங்கும் வேலையில், எல்லா கேள்விகளுக்கும் அவர்கள் பதில் சொல்லவேண்டும்.

பத்து ரூபாய் கொடுத்து வாங்கும் முறுக்கு பேக்கெட்டில், எவ்வளவு உப்பு % என்று போடவேண்டும் என்று கேட்க்கும் நாம், நமக்கு போடும் ஊசியின் விலை என்ன? எதற்கு போடவேண்டும்? எவ்வளவு விலை என்று கேட்பத்தில்லை.

காரணம், நான் டாக்டர், நீ நோயாளி.

 ஒரு சேவையை புனிதம் என்று சொல்லலாம். தொழிலை எப்படி புனிதம் என்று சொல்லமுடியும்?

பணி அல்லது தொழில் என்பது ஒருவருடைய வாழ்வாதாரத்திற்கு, வருமானம் ஈட்டக்கூடிய செயல். இதனை உத்தியோகம் அல்லது அலுவல் என்றும் கூறுவர். (Profession)

ஒருவர் பணம் அல்லது சேவை மனப்பான்மை அல்லது இரண்டிற்குமான தம்முடைய உழைப்பை பகுதி நேரமாகவோ அல்லது முழு நேரமாகவோ செலவு செய்தல் தொழில் எனப்படும்.

 சேவை (Service) என்பது வேறு. தொழில் (Profession) என்பது வேறு.

Red கிராஸ் செய்வது சேவை. இராணுவத்தில் செய்வது நாட்டு மக்களுக்கு சேவை.(Service)
சேலம் சிவராஜ் வைத்தியர் செய்வது தொழில்.

காசு வாங்கி உடலை செக் செய்தாலும், உடலை விற்றாலும் அது தொழில்தான்.(Profession)
பணம் வாங்கி, வருமானம் ஈட்டி உயிர் காக்கும் மருத்துவம் செய்தாலும் அது தொழில்தான்.

சைக்கிள் ரிப்பேர் செய்ய போகும் போது கேட்பது போல, டாக்டரிடம் எல்லா கேள்விகளையும் கேட்க நமக்கு உரிமை உண்டு. கூகிள் செய்து, research செய்து நல்ல Products வாங்குவது போல், கூகிள் செய்து, research செய்து நம் சந்தேகங்களை கண்டிப்பாக டாக்டரிடம் கேட்கலாம்.

இந்தியாவில் என் மனைவி, என் மகனை காண்பிக்க சென்ற டாக்டரிடம் நிறைய கேள்விகள் கேட்டார். எல்லாம் சந்தேகம் தான். அவருக்கு உடனே “சுர்ர்ர்” என்று கோபம் வந்து ” ஏம்மா, நான் டாக்டரா, நீ டாக்டரா? “, நான் சொல்றது மாதிரி செய் என்று அதிகாரம் பேசினார்.

கனடாவில், எவ்வளவோ பரவாயில்லை. டாகடர்களிடம் கேள்விகள் தாராளமாக கேட்கலாம். பொதுவாக, பொறுமையாக பதில் சொல்லுகிறார்கள். ஆனால், கேஸ் போடதபடி, படித்த எல்லா options சொல்லி, உங்களையே முடிவு செய்ய சொல்லி சொல்லுவார்கள். அந்த சுதந்திரம் இங்கு அதிகம் உண்டு. இந்தியாவில் இந்த சுதந்திரம் அதிகம் வரவில்லை என்று நினைக்கிறேன்.

ஆனால், அன்று அந்த பல் டாக்டரிடம் கேள்வி கேட்கவேண்டும் என்று தோன்றியது. காரணம் அப்போது நான் மீடியா பிசினஸ் செய்து கொண்டு இருந்தேன். 10,000 ரூபாய் நான் செய்யும் தொழிலில் Service Charge கேட்கும் போது, என்னிடம் பத்தாயிரம் கேள்வி கேட்பார்கள். பத்தாயிரம் ரூபாயிக்கு, Split of Cost கேட்பார்கள்.

நானும், அந்த பல் டாக்டரிடம் கேள்விகள் கேட்டேன்?

எப்படி சார் உங்கள் கணக்கு வருது ?

நேரில் கொஞ்ச கேள்விகளை கேட்டுவிட்டு, இன்னொரு பிரபல பல் டாக்டரிடம் செக் செய்து அவரிடம் quote வாங்கினேன். கொஞ்சம் research செய்துவிட்டு, அதே பழைய பல் டாக்டருக்கு போன் செய்தேன்.

எப்படி சார் ஒரு பல்லிற்கு 8,500″ என்றும், சில பல்லிற்கு “12,500” என்றும் கிளீனிங், fixing, ரூட் canal, சூயஸ் சேனல் என்று வாயாலயே ஏதேதோ ஒரு கணக்கு சொல்கிறீர்கள்? இதே treatment வேறு ஒரு டாக்டர் 1,500 என்று சொல்கிறார். அப்படி என்ன ஸ்பெஷல் treatment இது? ஆறு மடங்கு, எதனால் அதிகம் வாங்குகிறீர்கள் என்றேன்?

எனக்கு Split of Cost கொடுங்கள். Types of Materials Used, Options எல்லாம் கொடுங்கள் என்றேன்.
ஏன் அதே Xray லேப் சென்று எடுக்க சொன்னீர்கள்? வேறு லேப்பில் எடுத்தால் என்ன? என்றவுடன்

இதை, அந்த பல் டாக்டர் எதிர்பார்க்கவில்லை.

டாக்டர் இருந்தாலும் சுதாரித்து, நிதானமாக சொன்னார் “மிஸ்டர், நீங்க கேட்கிற கேள்விகளுக்கு நான் பதில் சொல்லணும்னு அவசியம் இல்லை” விருப்பபட்டா வாங்க மிஸ்டர், இப்பிடி கேள்வி எல்லாத்துக்கும் பதில் சொல்லமுடியாது. இருந்தாலும் கொஞ்சம் explain செய்கிறேன் என்று தட்டு தடுமாறி, விலை சொல்ல ஆரம்பித்தார்.

அந்த விலையில் அவர் அப்பா, அவரை Private Dental Collegeல் சேர்க்க கொடுத்த காசுக்கு வட்டியும் இருந்தது.

பேசும் போதே, போனை துண்டித்துவிட்டார். போன் வைத்தபின்பும் அவர் பல் நறநறவென கடித்தது எனக்கு கேட்டது.

என்னை பொருத்தவரை, ஒருவருக்கு நான் தரும் மதிப்பு, மரியாதை, அந்தஸ்து எல்லாமே அவரின் Total Personality பொருத்துதான்.

கடந்த பத்து வருடத்தில் நான் கற்றுக்கொண்டது இதுதான்.

ஒருவர் செய்யும் வேலை, படிப்பு, தொழில், சொந்த வீட்டின் அளவு, சொந்தவீடுகளின் எண்ணிக்கை, சொத்து, அறிவு என்று எதைப்பற்றியும் எனக்கு கவலை இல்லை. இந்த படிப்பு பீத்தல், சொத்து பீத்தல், வீட்டு பீத்தல், அறிவு பீத்தல், திறமை பீத்தல், சிவப்பு சைரன் பீத்தல்கள் ஒருவருடைய அந்தஸ்தை உயர்த்தாது.

ராக்கெட் விட்டாலும், ரங்கராட்டினம் சுற்றினாலும் காசுக்காக வேலைபார்த்தால் அது தொழில். அதில் வருவது வருமானம்.

சிலருக்கு படிக்க வாய்ப்பு, வசதி எல்லாம் இருந்து இருக்கும். படித்து டாக்டர் பட்டம் பெற்று இருப்பார்கள். சிலருக்கு அது கிட்டி இருக்கும். சிலருக்கு அது கிட்டி இருக்காது. அதற்காக, மற்றவெரெல்லாம், மடையர்கள் அல்ல.

டாகடர்கள் ஒரு உதாரணம் தான். இவர்களை போல், மற்ற சில துறைகளில் வேலை செய்பவர்கள் ( IT, Research, Space Science, Psychology, Media ) தங்கள் தொழில் சார்ந்த மேதாவிகளாக அலைவார்கள்.

உண்மையில் இவர்கள் தகரடப்பாக்கள்.

நான் டாக்டர் – நீ நோயாளி என்பதும்,

நான் பணக்காரன் – நீ ஏழை என்பதும்,

நான் விஞ்ஞானி – நீ வெறும் ஞானி என்பதும்,

நான் IT – நீ Non IT என்பதும்,

நான் மேனேஜர் – நீ அச்சிச்டன்ட் என்பதும் ஒன்று தான்.

சமுதாய பார்வைகளை, தொழில் மற்றும் பணத்தோடு சேர்த்து எடை போடுவது தான் இதன் அரம்பம்.

இதற்கு முடிவு, தொழில் சார்ந்த, படித்த பணக்கார சமுதாய மேதாவிகளை பார்த்து பயந்து ஒதுங்காமல் இருப்பதே ஆகும்.