ஏய் மானிடா…!!!

ஆர்பரிக்கும் ஆப்ரிக்கா
என்னை வா, வா என்றது

வளர்ந்த கரு,
பிறந்த மடியை தேடிச் சென்றது

பூவுலகில் பிறந்த பயனை,
புண்ணிய பூமியில் தேடி அலைந்தது

இது, மனித குலத்தின் தாய்நாடு
நம் தாத்தன், பாட்டன் வாழ்ந்த காடு

அதோ அங்கே, வெள்ளை மல்லிகையை
தலையில் வைத்து கிளிமஞ்சாரோ சிரிக்கிறாள்

அவள் அழகை ரசிக்க, மந்தி மந்தியாய் யானைகள்
மஞ்சள் வெயில் மயக்கத்தில் அன்னநடை நடக்கின்றன

ஜூலையில் பிறந்த யானைக் குட்டிகள்,
தாயின் கால்களுக்கு இடையே பரமபதம் ஆடுகின்றன

கொம்பேறி காண்டாமிருகம்
கொட்டாவி விடுகின்றன

சோம்பேறி ஓட்டகசிவிங்கிகள்
அப்பாவியாய் அலைகின்றன

நீர் யானைகள் குளித்துவிட்டு,
புடவை மாற்ற மறைவிடத்தை தேடுகின்றன

குட்டி சிறுத்தை ஆடர் செய்த புள்ளி மானை,
தந்தை வேட்டையாடி வெட்டி, தாயுடன் புசிகின்றன

டிவி சீரியல் பார்க்க. ஆஸ்ட்ரிச் பறவைகள்
வீடு நோக்கி ஓடுகின்றன

நகை வாங்கி கொடுக்க சொல்லி பெண் நாரைகள்
ஒத்தை காலில் தவம் கிடக்கின்றன

ஷேவிங் செய்யாத காட்டுராஜா, பியுட்டி பார்லர்
போய்வந்த வரிகுதிரைகளிடம் வட்டி வசூலிக்கின்றன

மீசை வைத்த பப்பூன் குரங்குகள்,
மரங்களில் அமர்ந்து கை கொட்டி சிரிக்கின்றன

தாலிகட்ட பயந்து  எட்ட நிற்கும் காட்டெருமைகளை,
வெட்கத்துடன் முதலைகள், நீரினுள் மறைந்து பார்கின்றன

இங்கே, காதல் காட்சிகள் ஏராளம்
மாமன் மச்சான் உறவுகளும் தாராளம்

இங்கே, வாய்க்கா வரப்பு தகராறும் உண்டு
முக்கோண காதல் விவகாரமும் உண்டு

இங்கே, ஓடி பிடித்து விளையாடி சாவது செய்தி அல்ல
வயதாகி செத்தால்தான் Breaking News !!!

உயிர் ஜனித்த அழுகை சத்தமும், மரண ஓலமும்,
ஒரே நொடியில் இங்கு மட்டும்தான் கேட்கமுடியும்.

சாண்டியாகோ zooவும்,  Safari park கும்.
இங்கே, ஒவ்வொரு மரத்தின் கீழும் இருக்கும்

சுட்டெரித்த பகலவன் இரவுக்கு விருந்தளிக்க,
காட்டுக் குயில்களை  கூவ சொல்லி நிலவை அழைக்கின்றான்

இலைகள் உதிர்த்து விதவையான அகேசியா மரங்கள்,
மறுமணம் முடிக்க மழையை வேண்டி நிற்கின்றன

பேசும் ஆப்ரிக்க கிளிகள், மௌன விரதம் இருக்க
காட்டு யானைகள்  பிளிரும் சத்தத்தில்,

இங்கே, சிவப்பு பூமி அதிர்கிறது
தூவானம் தூறுகிறது

காய்ந்த இலை நெருப்பில் மசாய் மக்கள்,
குச்சிகளுடன் குதித்து நடனம் போட

இரவின் ஒளியில், அண்டம் விரிய
கருப்பு இனத்தின் வெள்ளை மனதை அறிய

ஆப்ரிக்கா  வந்து பாருங்கள்.
இது வாரணாசியும், ஜெருசலேமும்

மெக்கா, மதினாவுடன்
ஒன்று கலந்த புண்ணிய ஸ்தலம்

ஆப்ரிக்க கண்டம், ஒரு
அண்டம் விரிந்த பிரம்மாண்டம்

நெஞ்சு குழி பத பதைக்க,
ஈரக்குலை நடுநடுங்க,

மானுடம் தோன்றிய இந்த மண்ணை,
மண்டியிட்டு முத்தம் இட்டேன்.

சிவந்த மண், நெத்தியில் குங்குமம் இட
என் இதயம் துடிப்பது, என் இதயத்திற்கே தெரிந்தது

பெற்றுடுத்த பூமித்தாய்
என்னுடன் முதல் முறையாக பேசினாள்.

இயற்கையே கடவுள், இதை தாண்டி
இவ்வுலகில் ஏதுமில்லை மானிடா,

பொருள் தேடும் உலகில், நீ என் அருள் பெற
இங்கு வா…. வந்து என்னை பார்…. புரியும்

ஆப்பிரிக்காவில் வைரங்கள் மட்டும்  மிண்ணுவதில்லை,
ஆப்ரிக்க கண்டமே மிண்ணும் !!!