சின்ன வயசில் என்னை ஹிந்தி படிக்க வைக்க என் தந்தை முடிவெடுத்தார்.அப்போது, ப்ராத்மிக் நானே “தத்தக்கா புத்தக்கா” என்று படித்து பாசாகி விட்டு இருந்தேன். மத்தியமா, நானே படிக்க முடியாது. டியூஷன் கண்டிப்பா போகவேண்டும். What is your name? அப்பிடின்னு கேட்டா ” My Name is Khan” னு சொல்லுவாரு. அவர் தான் என் டீச்சர்.

எங்க ஸ்கூல் சயின்ஸ் டீச்சர் பேர்தான் Mr. Khan. அவர் ஒரு முஸ்லிம் வாத்தியார். ரொம்ப நல்ல மனுஷன். அவருக்கு உருது, ஹிந்தி ரெண்டும் தெரியும். அவரிடம் ஹந்தி கிளாசுக்கு என்னை சேர்த்து விட்டார் எங்க அப்பா. சண்டே காலை 11 மணிக்கு மொட்டை மாடியில் ஓலை கொட்டகையில் 2-3 பேருக்கு பிரைவேட் டியூஷன்.

சைக்கிளில் அரை பெடல் அடித்து கொண்டு, கான் சார் வீட்டுக்கு போகவேண்டும். மாதம் 15 ரூபாய் பீஸ்.

நான் மதியம் வரலாமா என்று கேட்டேன். வேண்டாம், 11 மணிக்கு வாங்க என்றார்.

ஏன், கான் மாஸ்டர் 11 மணிக்கு வர சொன்னருனு முதல் நாள் தான் தெரிஞ்சுது. அவரு சண்டே காலைல, பத்து மணிக்கு எங்கையோ போயிட்டு கை பையோட வருவாரு. அவுங்க வீட்டுகாரம்மா, அதை வாங்கிட்டு உள்ளே போயிடுவாங்க. அவரு, மாடிக்கு வந்து class எடுக்க ஆரம்பிப்பார்.

அவருக்கு, செம தொப்பை. லுங்கியில் தான் எப்பவுமே வீட்டில் இருப்பார். மேலே, சிங்கபூர் கட் பனியன் போட்டு இருப்பார். பனியனில், சின்ன சின்னதா ஓட்டை இருக்கும். நல்ல சிவப்பா, குட்டையா இருப்பார்.

மொட்டை மாடியில் கிளாஸ் ரூம். ஒரு கூரை வேய்ந்து ஒரு திண்ணை ஒரு chair. Chalk board எல்லாம் கிடையாது. நம்ம நோட்டில் எழுதி சொல்லிக் கொடுப்பார்.

கூரை கொட்டகைக்கு அருகில்தான் அவங்க வீட்டு சமையல் புகை கூண்டு. Mr. Khan, வாங்கி வந்து கைப்பையில் கொடுத்தது மட்டனும், சிக்கனும்.

Mrs. கான் சண்டே அன்னிக்கு மட்டன் பிரியாணியும், சிக்கன் குருமாவும் 11 மணிக்கு செய்ய ஆரம்பிப்பாங்க.

சண்டே வராம கூட ஒரு வாரம் போகலாம். பிரியாணி இல்லாமல் சண்டே போனதே இல்லை.

“Mr. கான் மத்தியமா புக் கையில் எடுக்க,
Mrs. கான் மத்தியானம் சமைக்க ஆரம்பிக்க,
பாய் வீட்டு மசாலாவில் மட்டனும் சிக்கனும் வேக
மத்தியம் வெயிலில் புகை கூண்டில்
செம வாசனை காற்றில் கரைய
நான் மெதுவாக மயங்க ஆரம்பிப்பேன்”

12 மணிவாக்கில், பிரியாணி வாசனை மொட்டை மாடி கூரையை வந்து அடையும்.

பிரியாணி வாசனை கூரை கொட்டாயை தூக்கி எறியும்.

அவர் வீடு இருப்பது முஸ்லிம் தெருவில். எல்லார் புகை கூண்டிலும் பிரியாணி புகை தான். சில சமயம் அவர் அந்த புகை கூண்டின் மேல் உள்ள சிமெண்ட் திண்ணையில் உட்காந்து கொள்வார். நான் கீழே உட்காந்து கொள்வேன்.

பிரியாணி புகை கூண்டில் இருந்து வெளியே வரும் ஓட்டையின் நேர் எதிரே என் மூக்கு இருக்கும்.

எங்கத்த ஏறும் பாடம்?

Mr. Khan எடுத்த ஹிந்தி பாடம் மண்டையில் ஏறவில்லை. Mrs. கான் செய்த பிரியாணி தான் மூக்கில் ஏறியது. இதில் நடுவே கான் சார் பசங்க மொட்டை மாடிக்கு ஓடிவந்து ” அத்தா, பிரியாணி ரெடி, ஜல்தி ஆவோ” என்று கோஷம் போடுவார்கள்”

நாசமா போச்சு.

டான்னு, 12 மணிக்கு புக்கை மூடி வைச்சிட்டு, பிரியாணி சாப்பிட Mr. கான் போயிடுவாரு. அவர் மட்டும் பிரயாணி சாப்பிட்டுவிட்டு மத்தியம் தூங்கிவிடுவார். நான் அவர் கொடுத்த lessons எல்லாம் முடிசிட்டு போகணும்.

ஆனா, நான் அந்த வாசனையில் கிளாஸசிலேயே மயங்கி விடுவேன்.

எனக்கு செம எரிச்சலா வரும். என்னிக்காவது, மனுஷன் என்னை சாப்பிட்டு போங்க என்று சொல்லுவாரா என்று தவம் கிடந்தேன். ஹ்ஹ்ம்ம், மனுஷன் கடைசி வரை சொல்லவே இல்லை.

அன்னிக்கு புடிச்ச பாய் வீட்டு பிரியாணி பைத்தியம்தான் இன்னும் என்னை விட்டு போகல. நான் பிரியாணி வெறியன் ஆனதுக்கு அந்த ஹிந்திதான் காரணம்.

சும்மா சொல்ல கூடாது, நாம என்னதான் பிரியாணி செஞ்சாலும் வராத டேஸ்டு, பாய் வீட்டு பிரியாணியில் மட்டும் எப்படி வருது என்கிற கேள்விக்கு இன்னைக்கு வரைக்கும் என்னக்கு விடை தெரியல.

கஷ்டப்பட்டு, ஒரு 10 வாரம் தாக்கு பிடிச்சேன்.

நான் மட்டும்தான் அவருக்கு ஓரே Student. அப்ப எனக்கு 12 வயசு இருக்கும். ஒரு பத்து Sundays, பிரியாணி வாசனையில் கரைந்தது.
நான் ப்ராத்மிக்கில் படித்த ” ஏக் காவ் மே, ஏக் கிசான் ரகு தாத்தாவிற்கு” மேல் மண்டையில் எதுவுமே நிற்கவில்லை.

ஒரு சண்டே, Mr. கான் இன்னிக்கு ஒரு புது student வரபோறாங்க என்று சொன்னார். சீக்கிரம் வந்து பழைய பாடத்த அவுங்களுக்கு கொடுத்துடு என்று சொன்னார்.

பத்து மணிக்கு ஒரு அக்கா வந்தாங்க.

நல்லா மொழு மொழுன்னு, செக்க சிவப்பா மையிட்ட மீன் கண்களுடன் இருந்தாங்க. பாவாடை தாவணி போட்டுக்கிட்டு, “மச மசன்னு புளுக் புளுக்னு” இருந்தாங்க.

கண்ணு மீன் மாதிரி இருந்ததே ஒழிய, அவங்க ஆத்துல மீன் வாசனை எல்லாம் வராது. அவுங்க ஐயர் ஆத்து பொண்ணு.

அவுங்க அப்பாவும், கான் மாஸ்டரும் Friends.

அப்ப நான் பன்னிரண்டு வயதில் இருந்து Thir “Teen” ஆகும் வயசு.

“வாங்க அக்கா” என்றேன்.

அவங்களும் வந்து, என் பக்கத்தில் உட்காந்து எல்லா பாடத்தையும், copy செஞ்சாங்க.

அதுதான் என் first Co Education. இனி ஒரு கிளாஸ் மிஸ் பண்ணகூடாதுன்னு முடிவு செஞ்சேன்.

Mr. Khan பத்து மணிக்கு வழக்கம் போல வந்தாரு. பாடம் ஐயர் ஆத்து அக்காவோட அமோகமா ஆரம்பிச்சது.

அப்போ மொபைல் போன் கிடையாது. Mrs. கான், வாத்தியாரை கூபிடனும்னா புகை கூண்டு வழியா ” இக்கா, இதற் அவோ” என்று கூவுவார்கள். சாரும், “ஆயியே, ஆயியே’ என்று லுங்கியை மடிச்சு கட்டிட்டு ஓடி போவார்.

11.30 மணிக்கு, Mrs. கான், “இக்கா, இதற் அவோ, வெங்காயம் பச்சிடிக்கு, வெங்காயம் நஹி ஹே, ஜல்தி ஆவோ” என்றார்கள்.

சாரும், நான் வெங்காயம் வாங்க மறந்துட்டேன். போயிட்டு வரேன். என்னை, அக்காவுக்கு பழைய பாடத்தை சொல்லி கொடுக்க சொல்லிட்டு போயிட்டார்.

நானும் ” ஒரு கிராமத்து கதையை அக்காவுக்கு சொல்ல ஆரம்பிதேன்.

அதாங்க ” ஏக் காவ் மே ….”

வழக்கம் போல் 11 மணி வாக்கில் புகை கூண்டில், பிரியாணி வாசனை வர ஆரம்பித்தது.

கண்களை, அக்காவிடமும், மூக்கை புகை கூண்டிலும் அடகு வைத்தேன்.

தீடிர்னு, ஐயர் அக்கா என்னை பார்த்து ‘ ஏண்டா அம்பி, என்னடா இங்க செமையா வாசனை வருது?… வாசனை சூப்பரா இருக்குடா. எனக்கு அதை சாப்பிடனும் தோணுதுடா. எங்காத்து, vegetable பிரியாணியை விட சூப்பரா இருக்குடா. எங்க இருந்துடா இந்த வாசனை?” என்று கேட்டார்கள்.

ஒன்னும் அறியாத வயசில் நானும் “அக்கா, இது சார் வூட்டு சண்டே ஸ்பெஷல். எல்லா கிளாசிலேயும் இந்த வாசனை வரும். இது மட்டன் பிரியாணி. சார் பொண்டாட்டியின் ஸ்பெஷல் ஐட்டம். இன்னும் கொஞ்ச நேரத்தில் =], நாட்டுக் கோழியும் வேகும். பாய் சார் வீட்டு குருமா வாசனையை எவனும் அடிச்சுக்க முடியாது. பேய் மாதிரி வந்து பட்டய கிளப்பும். வாரா வாரம் ஓரே கலக்கல்தான் அக்கா. நீங்க கண்டிப்பா எல்லா கிளாசுக்கும் வாங்க. மிஸ் பண்ணிடாதீங்க. செமயா என்ஜாய் பண்ணாலாம் ” என்று சொன்னேன்.

“நாசமா போச்சு”

அக்கா உடனே அலறிக்கொண்டே “ நாராயணா…நாராயணா…!!! அபச்சாரம், அபச்சாரம்…என்னது கவுச்சியா? எங்காத்துல இது தெரிஞ்சா என்னை கொன்னுடுவா. எனக்கு இந்தியும் வேணாம், அவர் வாங்கிட்டு வர வெங்காயமும் வேணாம்னு” தாவணியை உதறிட்டு அக்கா எழுந்து ஓடிட்டாங்க.

அக்கா ஓடாதீங்கனு நான் “ஏக் து ஜே கேலியே’ கமல் மாதிரி கூப்பிட்டது அக்கா காதில் விழவே இல்லை.

அவங்க, ஓடி போனவுடன் எனக்கு என்னோவோ மாதிரி ஆகிவிட்டது.

கான் வாத்தியார் வந்து ” எங்கடா அந்த பொண்ணு ? ” என்று என்னை அதட்டினார். அது ஓடி போனதை எங்க பசங்க பார்த்தாங்க. என்னடா சொன்னே? என்று மிரட்டினார்.

நான் பயந்த படியே ” சார், நான் ஒன்னும் சொல்லலை சார். அவங்க நைனா அவசரமா கூபிட்டாங்கனு அவங்களே தான் போயிட்டாங்க சார்” என்றேன்.

அநேகமா அவுங்க நைனா பேரு ” நாராயணன்” நினைக்கிறேன் சார்.

போகும் போது ” நாராயணா, நாராயானானு சத்தம் போட்டுக்கிட்டே ஓடி போனாங்க சார் என்றேன்.

அந்த அக்கா வீட்ல போய் என்ன சொல்லிச்சு என்ற பயம் எனக்கு.

அது தான் நான் கிடைசியா போன ஹிந்தி கிளாஸ். அன்னியோட முடிஞ்சு போச்சு.

” கதம் கதம்” – “ஹிந்தி கிளாஸ் கதம்”

அக்கா, மட்டும் ஓடி போகல. ஐயர் ஆத்து அக்கா, என் கொஞ்ச நஞ்ச ஹிந்தியையும் என் மனசில் இருந்து எடுத்துட்டு போயிட்டாங்க.

அன்னிக்கு எடுத்தேன் ஒரு முடிவு. இனி நான் படிச்சா, அந்த அக்கா கூட தான் ஹிந்தி படிக்கணும். இல்லை அதை படிக்கவே கூடாதுன்னு.

ஹிந்தி எதிர்ப்பை என் மனதில் விதைத்தது அந்த அக்காதான். அன்னியோட முடிஞ்சது என் மத்தியமா கிளாஸ்.

எக்ஸாம் எழுத போகவில்லை. அந்த மத்தியமா புக்கும் அப்பிடியே இருக்குது.

இன்னும், நான் ஹிந்தி எழுத்த பார்த்தா அந்த அக்காதான் நினைவுக்கு வராங்க.

 

” பிரியாணியால் ஐயர் ஆத்து அக்காவை இழந்தேன்.

ஐயர் ஆத்து அக்காவால் ஹிந்தியை இழந்தேன்.

ரெண்டு பேராலும், Mr.கான் வருமானத்தை இழந்தார்.

என்னால் ஐயர் அக்காவையும் மறக்க முடியல,

பாய் வீட்டு பிரியாணியையும் மறக்க முடியல”

 

இப்படிக்கு,

அந்த அக்கா வரும் வரை

இந்தி எதிர்ப்பை தொடரும்

அன்பு தமிழ் தம்பி