யார் இவர்கள்? ரஜினி ரசிகர்களா?
இவர்களிடம் என்ன பேசினேன்?
———————————————————————————————————————————————————————-
வண்டி, மெதுவாக பெஸ்ட் வெஸ்டர்ன் ( Best Western Gold Rush Inn) ஹோட்டல் முன்பு நின்றது. இங்கு இருந்துதான், என் முதல் கட்ட பயணம் தொடங்க வேண்டும். இதுதான் வெள்ளைக் குதிரையில் உள்ள ஓரே உருப்படியான விடுதி.
இந்த தங்கும் விடுதி, 1898 ஆம் ஆண்டு யூகான் தங்க வேட்டையின் போது கட்டப்பட்ட ஹோட்டல். ரொம்ப பழைய ஹோட்டல். எதையோ பறிகொடுத்த சோகம் அதன் சுவர்களில் தெரியும். வண்டியில் இருந்து மெதுவாக இறங்கினேன். மதியம் சுமார் 3 மணி இருக்கும்….சூரியன் தன் மாலை வணக்கத்தை ஏற்கனவே சொல்லிவிட்டு மேகத்தின் பின்னே மறைந்து, என்னை எட்டிப் பார்த்தான்.
இறக்கி விட்ட ஜப்பானிய சப்பை கிளி, பனியில் பறந்து போனது.
-35 டிகிரி குளிர் காற்று வீசியது. என்னால் இந்த குளிரை தாங்க முடியவில்லை. வண்டியில் இருந்து இறங்கி, அவசரமாக ஹோட்டல் கதவை திறந்து உள்ளே ஓடினேன். ஹோட்டலில் மொத்தம் இரண்டு கதவு. முதல் கண்ணாடி கதவை திறந்தால் ஒரு அறை வரும். இதை Buffer Zone என்று அழைப்பார்கள். நடந்து வரும் போது பூட்டில் உள்ள பனியை துடைத்துவிட்டு பின்புதான் உள்ளே செல்லவேண்டும். இந்த ஊரில் எல்லா இடத்திலும் இந்த இரட்டை கதவுகள்தான்.
ஒரு இஞ்சுக்கு என் பூட்ஸில் ஒட்டி இருந்த பனியை துடைத்துவிட்டு உள்ளே போனேன். சுமார் ஐம்பது வயது மிக்க அழகி, வரவேற்பரையில் நின்று கொண்டு இருந்தார். வந்த என்னைபார்த்து ஒரு சின்ன சிரிப்பை சேதாரம் இன்றி கொடுத்தார். ” Welcome to Gold Rush Inn”. என்றார்.
என் குழுவில் உள்ள, ஆர்க்டிக் செல்லும் 8 பேரும் இந்த ஹோட்டலில்தான் சந்திக்கவேண்டும். கிரிகோரி அப்பிடித்தான் ஏற்பாடு செய்து இருந்தார். அழகியிடம் கேட்டேன் ” என் குழுவில் மொத்தம் 8 பேர் – கிரிகோரி என்பவர் புக் செய்து இருந்தார்…எல்லோரும் வந்துவிட்டார்களா? என்று கேட்டேன்”
அதற்கு அழகி, தன் முதல் குண்டை, என் வலது காதில் தூக்கிப் போட்டார். சாரி மிஸ்டர் எலுமலாயீ, 8 பேரில் 3 பேர் வரமுடியாது என்று போன் செய்து சொல்லிவிட்டார்கள். ஜப்பானில் இருந்து கிளம்பும் போது, flight delay ஆகிவிட்டதாம். 2 நாள் கழித்து தான் வந்து சேருவார்கள் என்றாள்.
ஐயோ, வரமாட்டார்களா? முக்கியமானவர் அங்கு இருந்துதான் வரவேண்டும். அந்த ஜப்பானியருக்குத்தான், நான்கு முறை Arctic பயணம் செய்த அனுபவம். என் ஆர்க்டிக் பயணம் அரோகராதான் என்று தோன்றியது. சரி, மொத்தம் எட்டு பேரில், மீதம் நான்கு பேர் வந்துவிட்டார்களா?” என்று கேட்டேன். நேற்றே வந்துவிட்டார்கள் என்று சொன்னவுடன், எனக்கு மிகவும் சந்தோஷம். எந்த அறையில் தங்கி உள்ளார்கள்? என்று கேட்டேன்.
இம்முறை, அழகி தன் இரண்டாவது குண்டை, என் இடது காதில் தூக்கிப் போட்டார். நால்வரில் இருவருக்கு உடம்பு சுகமில்லை. இருவரும் மருத்துவமனைக்கு சென்று இருகிறார்கள். இரவு வந்து விடுவார்கள்…. அவர்கள் நார்த் நோக்கி பயணிப்பது மிக கடினம் என்றார்.
அப்படி என்றால், எட்டு பேரில் ஐந்து பேர் இங்கேயே கிளீன் போல்ட். மொத்தம் மூணு பேரை வைத்துக்கொண்டு எப்படி ஆர்க்டிக் கிரிக்கெட்டு விளையாடுவது ?
என்ன செய்வது என்று தெரியவில்லை. உடனே கிரிகோரிக்கு போன் செய்தேன். மண்டையன் போனை எடுக்கவில்லை. கெட்ட வார்த்தையில் திட்ட வேண்டும் என்று தோன்றினாலும், திட்டி பழக்கம் இல்லாததால் வெறும் புலம்பிக்கொண்டே அடுத்து என்ன செய்வது என்ற யோசனையுடன் ரூம் சாவியை கையில் வாங்கினேன்.
அழகி சொன்னார், மிஸ்டர் எலுமலாயீ….உங்க ரூம் நம்பர் 111, மேல போங்க என்று… எனக்கு அவர் சொன்ன ரூம் நம்பர் ( ஒன்னு ஒன்னு ஒன்னு ) திருப்பதி நாமம் போன்று இருந்தது….மெதுவாக என் பெட்டியை எடுத்துக்கொண்டு என் அறைக்கு சென்றேன்…
ஆரம்பமே சரியில்லை…சரி என்ன என்று மண்டையனை கேட்க வேண்டியதுதான். கிரிகொரிக்கு மூளை ஜாஸ்தி. அதனால் அவரை மரியாதையுடன் மண்டையன் என்று கூப்பிடலாம்.
“ஏடு குண்டல வாடா” என்று, நாமம் போட்ட ரூமை மண்டையனை திட்டிக்கொண்டே திறந்தேன். நூறு வருட பாரம்பரியம் மிக்க அறை போலும் …அப்பிடி ஒரு பழைய நாற்றம். அதன் துர்வாசனையால் என்னை அரைந்தது.
கால் அணிகளை கழட்டிய ஞாபகம் மட்டும் இருந்தது. “குப்” என்ற வாசனையில் “கப்” என்று படுக்கையில் படுத்து தூங்கிவிட்டேன். உடம்பு வலி, தொண்டை வலி, தலை வலி என அனைத்தும் வலிகளும், கவலையுடன் சரியான விகிதத்தில் கலந்து, தூங்கும் போதும் மண்டையில் “பொட்” “பொட்” என சுத்தியல் வைத்து அடித்தன. ஒரு மணி நேரம் தூங்கி இருப்பேன் என்று நினைக்கிறேன். வயிறு பசித்தது. தூக்கமும் கலைந்தது.
எழுந்துவிட்டேன். ஓட்டலின் ஓட்டை கடிகாரம் மணி நான்கு என்று காட்டியது.
மெதுவாக எழுந்து ஜன்னல் பக்கம் சென்று திரை சீலையை தள்ளிவிட்டு தெருவைப் பார்த்தேன். இரவு பத்து மணிப்போல் இருந்தது. தெருவில் யாரும் இல்லை. தெருவிளக்குகள் மஞ்சள் நிறத்தில் மங்கி போய் எரிந்து கொண்டு இருந்தன.
தெரு என்று ஒன்று இருப்பதாய் தெரியவில்லை. எல்லாம் பனி மூடி இருந்தது. ஒரு பெரிய, கனரக வாகனம் மட்டும், பனியை தள்ளி, ரோடை சீர் செய்யும் பணியை, செய்துகொண்டு இருந்தது. சுமார் பத்து நிமிடங்கள் அந்த வாகனம் பனியை தூர்வாரி போடுவதை பார்த்துக்கொண்டு இருந்தேன். நான்கு மணிக்கு ஊர் அடங்கிவிட்டது போலும். நாய் ஊளை இடுகிறது.
ஜன்னலை வெறித்து பார்த்த என் கண்களுக்கு, கொஞ்ச நேரம் கழித்து ஓரே ஒரு வயதான தாத்தா கண்களில் தென்பட்டார். அவர் ஒரு Snow Sledge (இது ஒரு மர தட்டை. லேசான மரத்தில் செய்யப்பட்டு இருக்கும். இதன் முனையில் கயிறு கட்டப்பட்டு இருக்கும்) ஒன்றை இழுத்துக்கொண்டு நடந்து சென்று கொண்டு இருந்தார். அதன் மேல் சில மளிகை பொருட்கள் இருந்தன.
மீண்டும் ஒரு பதினைத்து நிமிடங்கள் சாலையில் யாரும் இல்லை. மீண்டும் ஒரு பெரியவர், எதையோ இழுத்துக்கொண்டு நடந்தார். இந்த காட்சிகளை ரசிக்க ஒரு மனம் வேண்டும்.
ஒரு செர்பிய ( ரஷ்யாவின் குளிர் தேசம்) படத்தில் இந்த மாதிரி காட்சிகளை பார்த்ததுண்டு. யாரும் இல்லாத ஊரில் யாருக்காக இந்த மனிதர்கள் வாழ்கிறார்கள்? ஒரு நாள் இவர்களுக்கு எப்படி கழியும்? மொபைல் இல்லை, பார்க்க தொலைக்காட்சி இல்லை… ஒரு நாளில் இரண்டு மணிநேரம் தான் சூரியன் தெரிவான்.
குளிரில் என்ன செய்வார்கள்?
இவர்களுக்கு குழந்தைகள் இருக்குமா?
குழந்தைகளை குளிரில் எப்படி பிறக்க வைப்பார்கள்? போன்ற ஏகப்பட்ட கேள்விகள்.
இவை எல்லாவற்றிற்கும் ஓரே பதில் தான்.
இது பனிப் பிரதேச வாழ்க்கை.
இங்கு வாழ, நீ இங்கு பிறந்து இருக்க வேண்டும்.
நீரில் பிறந்து, நீரில் மடியும் மீனைப் போல…இந்த வாழ்க்கை எனக்கு தெரியும். எனக்கு எட்டு வயது இருக்கும் போது அந்த மீன் இறந்து விட்டது.
அது என் பாட்டி.
என், பாட்டியும் இப்பிடித்தான் நீரில் பிறந்து நீரில் மடிந்தார். இன்று நினைத்து பார்த்தாலும் எனக்கு ஆசிரியம் தான். இது, என் அப்பாவின் அம்மா. என் நினைவில் என்றும் இருக்கும் பாட்டி. எப்போது என் கிராமத்துக்கு போனாலும், என் பெரியப்பா வீட்டு திண்ணையில் உட்காந்து இருக்கும். என் அப்பா வண்டி சத்தம் கேட்டவுடன், படுத்து இருக்கும் பாட்டி எழுந்து விடும். கொட்டை பாக்கை, லொட்டு லொட்டு என்று திண்ணையில் அமர்ந்துகொண்டு இடித்துக் கொண்டு இருக்கும். பாட்டியின் மிகப்பெரிய வேலை, மகன்கள் கொடுக்கும் பணத்தை சேமித்து தன் பேரன்மார்களுக்கு கொடுப்பதுதான். எப்போதும், ஒரு அடர் பச்சை நிற சேலை உடுத்தி இருக்கும். பொங்கல் அன்று மட்டும், சிவப்பு நிறம் அணிந்ததாய் ஞாபகம்.
பாட்டி, திட்டிக்கொண்டே பாசத்தை கொடுக்கும். என், பெரியப்பா மகனை ( அண்ணனை) காலையில் ஓட ஓட விரட்டும்.
நான் என் அப்பா வண்டியில் ஏறும் முன் “அடேய் பாபு இங்க வா….” என்று ஒரு இரண்டு ருபாய் நோட்டை கையில் திணிக்கும். பாட்டியின் கடைசி வாழ்க்கை முழுவதும், அந்த ஓரே திண்ணைதான். திண்ணையில் இருந்து கொண்டே அதட்டும். திண்ணையில் வைத்து தான் பேரன்களை கொஞ்சும். மகன்களிடம் பேசாமல் பாசத்தை காட்டும். அந்த வீடை தான் தான் இயக்குவதாக நம்பும். எல்லோரையும் நம்பவும் வைக்கும். 4 X 10 அடி திண்ணையில் உலகை ஆண்டதாய் நம்பியது. ஒரு திண்ணையில் வாழ்ந்து முடிந்துவிட்டது.
எல்லாம் இருந்தால்தான் வாழ்க்கை இல்லை. ஒரு திண்ணையிலும் சந்தோசமாக வாழலாம். என் பாட்டியின் மிகப் பெரிய சந்தோசம் என் அப்பாவின் Rajdoot மோட்டார் பைக்கில் பின் அமர்ந்து சென்றதாய்தான் இருக்கும். என் பாட்டி அதை, ஊரில் சைக்கிளில் பயணம் செய்த எத்தனை பாட்டிகளிடம் சொல்லி பெருமை பட்டதோ தெரியவில்லை.
இன்றோ, அந்த பெருமைபட்ட பாட்டியும் இல்லை, அதைக் கேட்டு பொறாமை பட்ட பாட்டியின் தோழிகளும் இல்லை. ஆனால், என் பாட்டி வாழ்ந்த வாழ்க்கை உண்மை. என் பாட்டி அடைந்த சந்தோஷம் உண்மை. என் அப்பா என் பாடிக்கு கொடுத்த சந்தோஷம் உண்மை. ஒரே ஒரு திண்ணை, ஒரு Rajdoot வண்டியில் ஒரு வாழ்க்கையின் மிக உன்னத சந்தோஷம் அடைந்தது என் பாட்டி.
ஒரு நாள் அது சாந்தியும் அடைந்தது.
என் பாட்டி இறந்த போது என் நெஞ்சு வலித்தது. என் பாட்டிக்கு வைத்த கொள்ளியில், என் கையில் என் பாட்டி திணித்த இரண்டு ரூபாயும் சேர்ந்து எரிந்து போனது…
எங்கள் தோட்டத்தில் வேலை செய்த கூலி ஆள் குடித்துவிட்டு மயானத்தில் பட்டிணத்தார் பாடலை பாடினான். அதன் அர்த்தம் தெரியாமல் அன்று அழுதேன்.
“அள்ளியிடுவ தரிசியோ தாய்தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் – மெள்ள
முகமேன் முகம்வைத்து முத்தாடி யென்றன்
மகனே யெனவழைத்த வாய்க்கு
முன்னை யிட்ட தீ முப்புரத்திலே
பின்னை யிட்ட தீ தென் னிலங்கையில்
அன்னை யிட்ட தீ அடிவயிற்றிலே
யானு மிட்ட தீ மூள்க மூள்கவே”
வெந்தழலில் வேகும் அவ்வுடலைப் பார்த்து, கண் கலங்கி வயக்காட்டில் இருந்து நடந்து வந்தேன்.
இதோ, அந்த ரோடில் நடந்து செல்லும் இந்த தாத்தாவும் தன் பேரனுக்கு தான் ஸ்னோ Sledge இழுத்து சென்று கொண்டு இருப்பார். இவ்வுலகில் பிறந்த எல்லா ஜீவ ராசிகளும் தனக்கென்று ஒரு வாழ்க்கையை வாழ்ந்து முடிப்பார்கள். அது ஒரு திண்ணையிலும் இருக்கலாம், இல்லை ஒரு தெருவிலும் முடிந்து போகலாம். இதுவும் ஒரு வெள்ளைக்கார கிராமம்தான். இங்கும் ஒரு பேரன் இரண்டு டாலர் நோட்டுக்கு வீட்டில் காத்து இருப்பான். தாத்தா, தள்ளாத வயதில் பேரனுக்கு தள்ளிக்கொண்டு போகிறார்.
இந்த மீனும் ஒரு நாள் மடியும். ஆனால் மீனின் வாழ்ந்த வாழ்க்கை மடியாது.
பேரன்கள் ஒரு நாள் திரும்பி வருவார்கள்.
இந்த நம்பிக்கை தான் வாழ்க்கை.
ஜன்னல் திரை சீலையை மூடிவிட்டு…என் அறையில் இருந்த நாற்காலியில் அமர்ந்து தனிமையில் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன். குட்டிப் போட்ட ஆடு மாதிரி அந்த அறையை சுற்றி சுற்றி வந்தேன் … ஆட்டுக்கு பசித்தது…
இந்த ஆடு புல்லைத் தேடி, ஹோட்டலில் இருந்த Restaurant தேடி சென்றது.
ஹோட்டலில் உள்ளே ஒரு குட்டி Restaurant இருக்கிறது. மணி ஐந்து, இருக்கும். மொத்தம் 25 இருக்கைகள் இருக்கும் என்று நினைகிறேன். வெறும் நான்கு பேர்தான் இருந்தார்கள். மெதுவாக அசைந்து வந்த அன்னக்கிளியிடம், சிக்கன் சூப் சொன்னேன். அருகில் வந்தவுடன்தான் அது அன்னக்கிழவி என்று புரிந்தது. இந்த ஊரில் இளமையின் வயது 50 போல. 45 நிமிடம் கழித்து சூப் வந்தது.
பசியில் மயக்கம் வந்தது. என் கேமராவை மேசையில் வைத்து மீண்டும் ஒரு கிளிக்கினேன். சூப் உள்ளே இறங்க இறங்க, உடலில் வெப்பமாதல் நடந்தது.
ஜுரம்…என் கரம் பற்றி என்னுள் ஏறிவிட்டது புரிந்தது. என் செல்போனும் சிணுங்கியது.
கிரிகோரி லைனில் வந்தார். “நீ எங்கு இருக்கிறாய்? உனக்காக 3 பேர் ஹோட்டலில் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். உடனே போய் பார்” என்றார்.
மண்டையனை திட்ட வேண்டும் என்று நினைத்தேன். ஏதோ சொல்கிறான்..முதலில் கேட்போம்… என்று நினைத்தேன்.
நான் ஹோட்டல் Restaurant – ல் தான் இருக்கிறேன் மண்டையா. அவர்கள் எங்கே என்றேன்?
Reception சென்று பார். பாத்து, பதுசா பேசு…..என்றான்.
சூப் குடித்துவிட்டு, அவசரம் அவசரமாக வெளியே வந்தேன்.
அடுத்த நான்கு மணி நேரம் கழித்து எடுத்த புகைப் படம் தான் நீங்கள் பார்ப்பது…
யார் இவர்கள்? ரஜினி ரசிகர்களா?
இவர்களிடம் என்ன பேசினேன்?
தொடரும்
( பனிப் பிரதேசம் )
இன்று பேரன்களே பாட்டியின் வாழ்க்கை வாழும்போது, கையில் பாட்டி திணிக்கும் இரண்டு ரூபாயும் இல்லை. அதைத் திணிக்கும் பாட்டியைப் பார்க்கப் பேரன் போகப் போவதுமில்லை.
ஒரு ஐம்பது அறுபது ஆண்டுகள் கழித்து அப்பேரனை அவன் பேரன் பார்க்கப் போவதுமில்லை. ஏனெனில் அப்பேரன் பாட்டனான வயதில் வாழுமிடம் பொதுவிடம் (முதியோர் இல்லம்), மகனது திண்ணையல்ல. பேரனது பேரனும், பேரனது மகனும், பேரன் தாத்தாவான வயதில் ஒன்றாக வரப் போவதுமில்லையாதலால், இரண்டு ரூபாயைப் பேரன் கையில் திணித்து மகிழப் போவதுமில்லை.
என்னே காலத்தின் கோலம்.
பனிப்பிரதேச பயணம் – பாகம் 14: பதிவு லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக ‘ரஜினி ஸ்டைலில்’ யார் இவர்கள்? ரஜினி ரசிகர்களா? – என ஆரம்பித்த விதம் அமர்க்களம்!
படத்திலும் கூட, ஒவ்வொருவரும் “பாபா முத்திரையோடும்”, தான் மட்டும் ‘மான்-கராத்தேக்கு’ போட்டியாக “மான்- குஙஃபூ” முத்திரையோடும், அமர்ந்துள்ள விதமே அலாதியான அழகு!
இந்தப் பதிவில் நாம் மிகவும் ரசித்ததுவும், உண்மையிலேயே வாய் விட்டு சிரித்ததுவும் கீழ்க்கண்ட வரிகளே:
“கிரிகோரிக்கு போன் செய்தேன். மண்டையன் போனை எடுக்கவில்லை”
“மிஸ்டர் எழுமலாயீ.. உங்க ரூம் நம்பர் 111.. திருப்பதி நாமம் போன்று இருந்தது.. ஏடு குண்டல வாடா, என்று நாமம் போட்ட ரூமை மண்டையனை திட்டிக் கொண்ட்டே திறந்தேன்”
“குப் என்ற வாசனையில் கப் என்று படுக்கையில் படுத்து தூங்கி விட்டேன்”
(இந்த வரிகளை படித்ததும், நம்மையுமறியாமல் ஆபீசிலேயே சிரித்ததுவும், அப்போது நம்மை ஒரு மாதிரியாக- M.கிரிகோரி போல- பார்த்தவர்களும் கூட உண்டு)
இதற்கிடையில், “பாட்டியின் பிளாஸ் பேக்” பனிப்பிரதேச வாழ்க்கைத் தத்துவத்தை படம் பிடித்துக் காட்டியது. அது ஒரு அமரகீதம் – சோககீதம்! அந்த பாரதிராஜாவின் வெள்ளை கிராமத்திற்கு, பட்டினத்து சித்தர் பாடலையும் பாடிக்காட்டியது, செஞ்சத்தை நெகிழ வைத்தது.
[இந்த இடத்தில், நம் பிதாமகர் அவர்கள், இது சம்பந்தமாக பதித்துள்ள கருத்துக்கள் பற்றி சொல்லியே ஆக வேண்டும். ‘காலத்தின் கோலத்தை – ஒரு 50-60 ஆண்டுகள் கடந்த காலநிகழ்வை- தீர்க்க தரிசனமாக’ முன்கூட்டியே உணர்ந்து பதித்த அந்த கருத்துக்கள்- ஆழ்ந்து உள்வாங்கப் பட வேண்டியவை!
‘கையில் பாட்டி திணிக்கும் இரண்டு ரூபாயும் இல்லை, அதை திணிக்கும் பாட்டியை பார்க்க பேரன் போகப் போவது மில்லை… அப்பேரன், பாட்டனான வயதில் வாழுமிடம் மகனின் திண்ணையில்லை..அது ஒரு பொதுவிடம் (முதியோர் இல்லம்)]
பின்னர், நம் ஆர்க்டிக் ஹீரோ, ஹோட்டல் உணவகத்தில் செய்த அளப்பறைகளோ சொல்லி மாளாது.
“ஜுரம் என் கரம் பற்றி என்னுள் ஏறிவிட்டது புரிந்தது.”
“மெதுவாக அசைந்து வந்த ‘அன்னக்கிளியிடம்’ சிக்கன் சூப் சொன்னேன். அருகில் வந்தவுடன் தான் புரிந்தது- அது ‘அன்னக்கிழவி’ என்று”.
“குட்டி போட்ட ஆடு மாதிரி சுற்றி சுற்றி வந்தேன்.. ஆட்டுக்கு பசித்தது… பசி மயக்கத்தில் ‘அன்னக் கிழவி கூட அன்னக் கிளியாகத்’ தெரிந்தது”
[இந்தக் “கிளிப் பைத்தியம்”, ‘லாஸ் வேகஸிற்க்கு’ கலக்கலாக, ‘கலாக்கிளியோடு’ சென்று வந்தும் கூட இன்னும் தெளிய வில்லையோ என்னமோ!]
கடைசியாக சஸ்பென்ஸில் முடித்திருப்பது:
“யார் இவர்கள்? ரஜினி ரசிகர்களா? இவர்களிடம் என்ன பேசினேன்?”
அப்படி என்னதான் பேசியிருப்பார்கள் – இந்த ரஜினி ரசிகர்களிடம்?
அரசியலா? ஆன்மீகமா?..கண்டிப்பாக தற்சமயம் இரண்டும் இல்லை!
பொறுத்திருந்து தான் பார்ப்போம்!
இன்று தான் 13 மற்றும் 14 பாகங்களை படிக்க நேரம் கிடைத்தது. பாகம் 14 -ஆர்டீக் சென்று கிரிக்கெட் விளையாடும் ஆசை … நான்கு மணிக்கு இருட்டி விடும் … நிசப்தம் … ஸ்லெட்ஜ் மற்றும் தாத்தா… தாத்தாவின் புகைப்படம் பார்க்க ஆசை … இருந்தால் (முடிந்தால்) போஸ்ட் செய்யவும்… இது பனிப்பிரதேச வாழ்க்கை; இங்கு வாழ நீ இங்கு பிறந்திருக்க வேண்டும் … அருமையான வரிகள் .. வெள்ளைகார தாத்தாவின் வாழ்க்கையும் உங்கள் அப்பா பாட்டியின் நினைவுகளும் … அதற்குள் இருக்கும் தொடர்பையும் சித்தரித்த விதம் அழகு … நாம் ஒவ்வருவருக்கும் இப்படி மனத்தில் நிற்கும் பாட்டி உண்டு …ஆவலுடன் காத்திருக்கிறோம் யார் அந்த நால்வர் குழு என்று ..