2013, டிசம்பர் மாதம், தனியாக ஆர்டிக் செல்ல முடிவெடுத்து விட்டேன். என் மனைவியிடமும், மகனிடமும் நான் ஆர்டிக் செல்ல இருப்பதாக கூறினேன். வருத்தப்பட்டார்கள்… கூட வரமுடியவில்லை என்று. இது ஒன்றும் கொடைக்கானல் இன்ப சுற்றுலா அல்ல…குடும்பத்துடன் புளி சாதம் கட்டிக்கொண்டு செல்ல…இது குடும்பத்துடன் போக வேண்டிய இடம் அல்ல. ஆர்டிக் சென்டர் வரை வேண்டுமானால் குடுபத்துடன் மே, ஜூன் மாதங்களில் சென்று வரலாம். ஆர்டிக் சென்டர் என்பது ஆர்டிக் செல்லும் வழியில் இருக்கும் பாதி தூர மைல் கல். இது ஒரு கற்பனை கோடு. இந்த கோட்டிற்கு மேல் சென்றால் புளி கண்டிப்பாக வயிற்றை கலக்கும்.
மகனும், மனைவியும் இந்தியா செல்லும் அடுத்தநாள், நான் ஆர்டிக் செல்லலாம் என்று முடிவு எடுத்தேன். எனக்கு மொத்தம் 12 நாட்கள் விடுமுறை. கனேடியன் ஆர்டிக், வான்கூவரில் இருந்து வடக்கே சுமார் 3500 – 4000 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. டிசம்பரில் – 40 டிகிரி முதல் -60 டிகிரி வரை குளிரும். எங்கும் பனிக்கட்டிகள் மற்றும் பனிப்பாறைகள் மிதக்கும். காதை பிளக்கும் ஒலியுடன் குளிர் காற்று வீசும். மொத்த பனிப் பிரதேசமும் இருட்டி இருக்கும். கடும் குளிரில்தான் பயணிக்க வேண்டும்.
நான் மிகவும் பயந்தது, குளிருக்கு தான். காரணம், நான், பிறந்தது ஊட்டி என்றாலும் வளர்ந்தது வேலூரில். இதை ராயர் வேலூர் என்றும் அழைப்பார்கள் – (கிருஷ்ண தேவ ராயர் ஆண்ட பூமி).
வேலூரில், பசிக்கு செத்து போனவனைவிட, மே மாத வெயிலுக்கு செத்தவன் தான் அதிகம். இங்கு வெயில் அதிகமாக அடிக்கும் போது ” வெயில் கொளுத்துகிறதே” என்பார்கள்.
ஒவ்வொரு வருடமும் மூன்று மாதங்கள், ஊட்டியில் உள்ள என் பாட்டி வீட்டுக்கு, வெயிலுக்கு பயந்து தப்பித்து ஓடி விடுவேன். மீதி ஒன்பது மாதம், வேலூர் வெயிலில் “உஸ்ஸ்ஸ்ஸ்…” எனும் உஷ்ணப் பெருமூச்சில்தான் கழியும். ஊட்டி குளிரில் தினம் தினம் குளிக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனால், வேலூரில் தினம், தினம் குளியல் தானாகவே நடக்கும். உங்கள் வேர்வையே உங்களை குளிப்பாட்டும். வேலூரின் ” அழகில்லாத பெண்கள் வாழும் ஊர்” பட்டத்துக்கு இந்த வெயிலும் ஒரு காரணம். உண்மையில் ஒரு காலத்தில் வேலூர் மக்கள் சிவப்பாக கூட இருந்து இருக்கலாம் என எண்ணத் தோன்றும். கொளுத்தி போட்ட வெயிலில் கருப்பாகி விட்டார்கள், பாவம்.
இங்கு, சுமார் கருப்பு பெண்ணை சிவப்பு என்பார்கள். சிவப்பு நிற பெண்ணை வெள்ளைக்காரி என்பார்கள்.
வேலூர் வெயிலில் வளர்ந்த எனக்கு குளிர் கொஞ்சமும் ஆகாது. பதினைந்து வருடங்களுக்கு முன், கோவையில் டிசம்பர் மாதம் என்றால் மிகவும் குளிரும். கொஞ்சம் குளிரிலும், எனக்கு உடல் நடுங்கும். ஆஸ்துமா நோய், என்னை பலவருடங்களாக வாட்டி வந்தது.
இதை சரி செய்ய, நான் பல வருடங்கள் போராடினேன். உயிர் உள்ள நூறு மருத்துவர்கள் செய்யாத வித்தையை, செத்த கோழியின் எலும்பு சூப் தான் சரிசெய்தது. எனவே டிசம்பரில் ஆர்டிக் செல்வதை என் உடல் ஏற்று கொள்ளுமா என்று எனக்கு கொஞ்சம் தயக்கம்.
என் ஐஸ்லாந்து நண்பருக்கு அலைபேசியில் அழைத்தேன். “டிசம்பரில் ஆர்டிக்கில் குளிருமா? எவ்வளவு குளிரும்? என்னால் அந்த குளிரை தாங்கமுடியுமா? என்பது தான் அது. அவர் சொன்னார், “எல்லாரும் நினைப்பது போல் ஆர்டிக் மிகவும் குளிரான பிரதேசம் கிடையாது. பெரிய மலைகளோ, மரங்களோ இங்கு கிடையாது, அதனால், திடீரென்று பனிக் காற்று வீசும். -40 முதல் -60 வரை டிசம்பரில் எதிர்பார்க்கலாம். தேவை, குளிரை தாங்கும் உடுப்பு. என்னதான், குளிருக்கு உடை அணிந்து சென்றாலும், மனதிடம் இருந்தால் மட்டுமே ஆர்டிக் குளிரை தாங்க முடியும்” மேலும் சொன்னார் “ஆர்டிக் செல்ல தேவை நல்ல மனதிடமும், சிறந்த செயல் திட்டத்துடன் கூடிய ஆர்டிக் survival பற்றிய பொது அறிவும் தான்”. நீங்கள் முதலில் செய்ய வேண்டியது ஆர்டிக் பற்றிய பொது அறிவை வளர்த்துக் கொள்வது.
எல்லோருக்கும் ஆர்டிக் என்றால் உலகின் மேல உள்ளது, மிகவும் குளிரான பகுதி இதுதான் என்ற எண்ணம் உள்ளது. இது உலகின் குளிர்ந்த பகுதி கிடையாது. ரஷ்யா – அன்டார்டிக்தான் உலகின் மிக குளிர்த தேசம். இங்கு -128 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது.
முதலில், ஆர்க்டிக் பெருங்கடல் என்றால் என்ன? அது எங்குள்ளது என்பதை முதலில் பார்ப்போம்.
ஆர்டிக் பெருங்கடல், உலகிலுள்ள பெருங்கடல்களுள் சிறியது. இது முழுவதுமாக ஆர்க்டிக் வட்டத்திற்கு (Artic Centre) மேல் அமைந்துள்ளது. இப்பெருங்கடல் முழுவதுமாக நிலப்பரப்பால் சூழப்பட்டுள்ளது. அலாஸ்கா – ரஷ்யா இடையே அமைந்துள்ள பேரிங் நீரிணையம், கிரீன்லாந்து – கனடா இடையே அமைந்துள்ள டேவிஸ் நீரிணையம், கிரீன்லாந்து – ஐரோப்பா இடையே அமைந்துள்ள டென்மார்க் நீரிணையம், நார்வேஜியன் கடல் போன்றவை ஆர்க்டிக் பெருங்கடலை வெளி உலகுடன் இணைக்கின்றன. சுருங்க சொன்னால், இது நில பரப்பால் சூழப்பட்ட கடல், பூமியின் தொப்பியாய் தலையை மூடியுள்ளது .
ஆர்க்டிக் பெருங்கடலின் மையப்பகுதி நிரந்தரமாக பத்து அடி ஆழத்திற்கு பனிக்கட்டியாக உறைந்துள்ளது. வெயில் மாதங்களில் பனிக்கட்டிகளை சுற்றி நீர் சூழ்ந்து அவை மிதக்க துவங்கிவிடும். குளிர் மாதங்களில் வெயில் மாதங்களில் இருந்ததைப் போன்று இருமடங்கு அதிக பரப்பில் பனிக்கட்டி உறைந்து விடுகிறது. ஆர்டிக் பெருங்கடல் அலைகளே இல்லாத பெருங்கடலாகும். இதில் கப்பற்பயணம் செய்ய முடியாது. குளிர்காலத்தில் உறைபனியாகவும், இதரப்பருவங்களில் பனிக்கட்டித் துண்டங்கள் மிதக்கும் பகுதியாகவும் இது விளங்குகிறது.
நான் போக விழைவது இந்த ஒரு பனிக்கட்டித் துண்டங்கள் மிதக்கும் கனேடியன் ஆர்டிக் பகுதிக்குத்தான். ஐஸ்லாந்து நண்பரிடம், பேசியது எனக்கு கொஞ்சம் தைரியத்தைக் கொடுத்தது. என் நெருங்கிய நண்பர் கிரிகொரி (Grgori Lomowski), ஒரு நேட் ஜியோ northern explorer. சிறந்த புகைப்பட கலைஞர். சுமார் பத்து முறை ஆர்டிக் மற்றும் அண்டார்டிக் புகைப்பட பயணங்களில் ஈடுபட்டவர். அவரை தொடர்புகொண்டு என் டிசம்பர் கனவை சொன்னேன்.
அடுத்த ஒருமணி நேரத்தில் சுமார், 25 emails என் இன்பாக்ஸ் வந்து கதவை தட்டின. அத்தனையும் ஆர்டிக் செல்ல தேவையான குறிப்புகள் அடங்கிய PDF files. நான் முதலில் ஒரு குறிப்பை படிக்க ஆரம்பித்தபோது, சுமார் இரவு11 மணி இருக்கும்.
பதினோரு மணிக்கு, ஆரம்பித்த ஆர்டிக் எக்ஸ்பிரஸ் என்ற அறிவு தாகம், ஐந்து குவளை தேநீருடன், கண்கள் படிக்க, தொண்டை வழியே மூளையின் துணையுடன், காலை ஐந்து மணிக்கு மனதில் சேர்ந்தது.
மொத்தம் 125 பக்கங்கள் …. படிக்க படிக்க ஆர்டிக் உந்தல் என்னை தள்ளியது. கட்டிலில் படுத்து படித்துக்கொண்டு இருந்த நான் மெதுவாக பறக்க ஆரம்பித்தேன்… ஆர்டிக் டெர்ன் போல … சிறகுகளை விரித்து வானத்தில் பறப்பதை உணர்ந்தேன்.
அது என்ன ஆர்டிக் டெர்ன் உந்தல்?
ஆம், ஆர்டிக் டெர்ன் என்று ஒரு பறவை உண்டு. இந்த, ஒரு அடி பறவையை நினைத்து பார்த்தால் உலகின் எந்த பயணமும் எளிதுதான். முதலில், ஆர்டிக் டெர்ன் (Arctic Tern) பற்றி தெரிந்து கொள்வோம்.
இது பறப்பதற்கு என்றே பிறப்பெடுத்த ஒரு கடற்பறவை. இதுதான் உலகிலேயே அதிக தூரம் பறக்கும் பறவை. சுமார் ஒரு அடி நீளமுள்ள இப்பறவை, தன் வாழ்நாளின் பெரும்பகுதியை, பறப்பதிலேயே செலவிடுகிறது. இது கோபிசெட்டிப்பாளையத்தில் இருந்து கோயம்புத்தூர் வரை பறக்கும் பறவை அல்ல. இவை துருவம் டு துருவம் பாயிண்ட் டு பாயிண்ட் சர்வீஸ் நடத்தும் உலகின் ஒரே நிறுவனம். ஆர்டிக் டெர்ன்தான் வட துருவத்திலிருந்து ,தென் துருவத்திற்கு நான் ஸ்டாப் flying சர்வீஸ் நடத்தும் மோனோபொலி நிறுவனமும் கூட. இந்த நிறுவனத்தை சேர்ந்த பறவைகள் குளிர் காலத்திற்கு (December) சற்று முன்பாக வட துருவத்திலிருந்து கிளம்புவார்கள். அடுத்த ஸ்டாப் தென் துருவம் தான். போகும் வழியில், ஏதாவது பிரச்னை என்றால் மட்டுமே ஓய்வு.
தென்துருவத்தில் இரண்டு மாதம் தங்கியபின்பு, கோடை காலத்திற்கு (June) சற்று முன்பாக, மறுபடியும் வட துருவத்தை நோக்கி பறக்க ஆரம்பிக்கும். இவ்வாறாக வட துருவத்தில் ஒரு கோடையும், தென் துருவத்தில் ஒரு கோடையுமாக ஒவ்வோர் ஆண்டும் இரண்டு கோடைகளை இது அனுபவிக்கின்றது.
சரி, இரண்டு கோடைகளை அனுபவிக்க இவை பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெரியுமா? கிட்டத்தட்ட 70,000 கி.மீ . இவை பறக்கும் நேரங்களில் உணவும் உண்பதில்லை. மேலும் இதனால் ஒரே தடவையில் நில்லாமல் 4000 கி.மீ தொலைவு கூட பறக்க முடியும். இது கிட்டத்தட்ட உலகை சுற்றி வரும் தூரம் ஆகும்.
இவ்வாறாக தன் வாழ்நாளில் கணிசமான நாட்களை பறந்தே கழிக்கின்றது. பூமியில் தன் வாழ்நாளில் அதிக நேரம் சூரிய ஒளியில் வாழும் உயிரினம் இது மட்டுமே ஆகும்.மேலும் இது பறக்கும் போது அனைத்து விதமான சாகசங்களையும் மேற்கொள்ளும். வாழ்வென்னும் நீண்ட பயணத்தில் நாம் களைப்படையும் போது, இந்த பறவையை நினைத்தால் உடனே நாம் உந்துதலை பெறலாம்.
செப்டம்பர் மாதம், கட்டிலில் படித்துகொண்டே பறக்க ஆரம்பித்தவன், பேருந்து ரயில் என எனக்கு நேரம் கிடைக்கும்போது ஆர்டிக் குறிப்புகளை படித்துகொண்டே பறந்து கொண்டு இருந்தேன். அது ஒரு சுகவாசம். இதுநாள் வரை ஆர்டிக் சென்று வந்தவர்களின் பயணக்குறிப்புகள் என்னை பரவசத்தில் ஆழ்த்தின. என்னை அறியாமல் என் மனம் ஆர்டிக் செல்லும் மனதிடத்தை பெற்றது.
நான் இரண்டு விஷயங்களை இந்த 4 மாதத்தில் முடிவெடுத்தேன்.
1. நான் படித்த ஆர்டிக் பற்றிய அனைத்து குறிப்புகளும் ஆங்கிலத்தில் இருந்தது. நான் திரும்பி வந்தவுடன், நானும் ஒரு ஆர்டிக் தொடரை எழுதவேண்டும் என்பதுதான். முதலில் அதை, ஆங்கிலத்தில் எழுதுவதாகத்தான்திட்டம். McDonald சென்று Burger சாப்பிடுவதில் என்ன ஆச்சிரியம்? அதனால்தான், KFC – ல் பொங்கல், வடை செய்து சாப்பிட ஆசைப்பட்டேன். ஆர்டிக் பற்றி தமிழ் தொடர் எழுத காரணம், நான் ஆங்கிலத்தில் ஆர்டிக் குறிப்புகளை படிக்கும் போது எல்லாம் புரிந்தது. ஆனால் அதை ருசிக்க முடியவில்லை. வாழை இலையில் வழிந்தோடும் தமிழ் ரசத்தை, நக்கி குடித்த நாக்கு, ஆங்கிலத்தை ருசிக்க மறுத்தது. இந்த தொடரை எழுத முதல் காரணம், நான் தமிழை நேசிப்பதால் இல்லை, தமிழ் என்னை நேசிக்கவேண்டும் என்பதால்.
2. இந்த பயணத்தின் போது, அனைத்து புகைப்படங்களும் நானே எடுக்கவேண்டும். யாரிடமும் என் புகைப்பட கருவியை கொடுத்து எடுக்க சொல்ல கூடாது. Tripod மற்றும் Infrared Remote – மூலம் மட்டுமே உபயோகித்து, புகைப்படம் எடுக்கவேண்டும்.
இந்த இரண்டு விருப்பங்களை நிறைவேற்றுவது மிகவும் கடினம். இப்பொது, ஒரு வார தொடரை எழுத, எட்டு மணி நேரம் தேவைபடுகிறது. மொத்தமாக 500 மணி நேரம் இருந்தால்தான், இந்த தொடரை எழுதி முடிக்க முடியும். இருப்பினும், தினம் காலை ஐந்து மணிக்கு எழுந்து எழுதிக்கொண்டு வருகிறேன். இரண்டாமாவது, இந்த பயணத்தின் போது, அனைத்து புகைப்படங்களும் நானே எடுக்கவேண்டும் என்பதை செய்து முடிக்க, நான் பட்ட வேதனைகளை இனி வரும் தொடரில் சொல்கிறேன்.
நான்கு மாதங்களில் நான், ஆர்டிக்கை பற்றி படித்தது, தெரிந்துகொண்டது, தயார் செய்தது, வாங்கியது, வாடைகக்கு எடுத்தது, வட்டிக்கு விட்டது, பெற்றது, இழந்தது, பார்த்தது, அனுபவித்தது, சுகம் கண்டது, சோர்வடைந்தது என அனைத்தையும் அடுத்த 15 வாரத்தில் சொல்லிவிடுகிறேன்.
பயணத்திற்கு தேவையான அனைத்தையும் ஒன்னொன்றாக சேகரித்தேன். பெட்டியில் அடுக்க ஆரம்பித்தேன். கேமரா டெஸ்ட் எடுக்க ஒரு படம் எடுக்க விரும்பினேன். என் மகனின், கட்டிலின் மேல ஒரு உலக வரைபடம் ஒட்டி இருந்தான்.
அதன் முன் அமர்ந்து ஒரு கிளிக் செய்ய சொன்னேன். கேமரா ஆட்டோ மோட் ஒரு கிளிக்கை கிளிக்கியது. அடுத்த ஒருவாரத்தில் இந்த பெட்டியில், எதை எதற்காக எடுத்து சென்றேன் என்பதை கூறுகிறேன்.
ஒருவாரம் முன்பு கண்டிப்பாக ஒரு முறை, மிக முக்கியமான ஒன்றை செக் செய்து இருக்கவேண்டும். அதை முற்றிலும், மறந்துவிட்டு மற்றவை அனைத்தையும் எடுத்து வைத்தேன்.
இன்னும் 7 நாட்களில் பயணம்…..எதை எடுத்தேன்…எதை விடுத்தேன்…..???
அதற்கு இயற்கை எனக்கு கொடுத்த பரிசு என்ன?
தொடரும் ஆர்க்டிக் பயணம் …
மிகவும் நயம்பட எழுதுகின்றீர்கள் Sridar. தமிழ் உங்களை நேசிக்கின்றதோ இல்லையோ, தமிழர்கள் தங்களை நேசிக்கும்படி எழுதுகின்றீர்கள். மிகவும் இயல்பாகவும், எழுத்து நடை நாங்களும் தங்களுடன் பயனிப்பதுபோலவும் உள்ளது. அந்த 500 மணி நேரமும், அடுத்த 15 வாரங்களும் எங்களுக்கு ஒரு விருந்து படைக்கப்போகிறதென்பதில் ஐயமொன்றுமில்லை!
அன்றொருநாள், “அழகாக” ஊட்டி குளிரில் குழந்தையாக உதித்து…
பின்னர், வேகவைக்கும் வேலூர் வெயிலில் பல வருடங்கள் வெந்தும், அழகு கலையாமல் வளர்ந்து..
(அதுசமயம், ‘வேர்வையிலேயே’ பலமுறை குளியல்களும் போட்டு)
கோவைக்கு பதினைந்து வருடத்திற்கு முன்பு வந்து, ‘செத்த கோழியின் எலும்பு சூப்பை’ உறிஞ்சி அனுபவித்து…. ( ‘ஆஸ்துமா நோய் தீர்க்க வல்ல’ அதன் மருத்துவ மகிமையை உலகிற்கு எடுத்துக் காட்டி)…
அதன்பின், ‘அறிவு தாகம்’ என்ற ஆர்க்டிக் எக்ஸ்பிரஸில், ஐந்து குவளை தேநீருடன், ஆறு மணி நேரம் பயணித்து, 125 மைல்கற்கள் (பக்கங்கள்) கடந்து வந்து..
இதற்கிடையில், ‘பறப்பதெற்கென்றே’ பிறப்பெடுத்த “ஆர்க்டிக் டெர்ன்” கடற்பறவையை போல, அதன் உந்துதலால், ‘கலக்குவதற்கென்றே’ கனடா வந்தது போல் ‘மயில்களோடு’ வான்கூவர் வந்திறங்கி…
பறக்கும் போது ‘சாகசங்கள்’ செய்யும் அந்த பறவையைப் போன்று, இங்கு வந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக பல்வேறு அவதாரங்கள் எடுத்து, விதவிதமான ‘ஜெகஜால வித்தைகள்’ காட்டி சாகசங்கள் செய்து
ஒரு வித்தியாசத்திற்காக “KFC-யில் பொங்கல் வடை” என்று சொல்லி, கொஞ்சும் தமிழில், சொல்லொணா அழகுடன், கலக்கோ கலக்கென்று கலக்கி வரும் நம் ஆர்க்டிக் ஹீரோவுக்கு…
நம் நெஞ்சார்ந்த இனிய வாழ்த்துக்கள் கோடி!!
‘ஆர்க்டிக் பெருங்கடல்’ பற்றிய நம் ஹீரோவின் வர்ணனைகள் அழகுக்கு அழகு சேர்க்கின்றது! (பூமியின் தலையை மூடியுள்ள தொப்பி போன்ற – அலைகளே இல்லாத, கப்பலும் ஓடாத, பனிப்பாறைகள் மிதக்கும் பெருங்கடல்!)
வியக்க வைக்கும் “ஆர்க்டிக் டெர்ன்” கடற்பறவைகள் பற்றிய வர்ணனைகளோ அபாரம்! உள்ளத்தை கொள்ளை கொள்ளும் எழில் கொஞ்சும் உருவகங்கள்!!
அற்புதமான வண்ணப் படங்கள் மற்றும் கவின்மிகு காணொளியுடன்!!
பின்குறிப்பு:
நம் பிதாமகர் டாக்டர் சுவாமி அவர்கள் நயம்பட இங்கு சுட்டிக் காட்டியதைப் போல “அந்த 500 மணி நேரமும், அடுத்த 15 வாரங்களும் எங்களுக்கு ஒரு விருந்து படைக்கப்போகிற தென்பதில் ஐயமொன்றுமில்லை!”
நாமும் காத்திருக்கிறோம்!!
ஒவ்வொரு பந்தியிலும் பரிமாரவிருக்கும் “அழகு தமிழ் வண்ண பதார்த்தங்களுக்காக”!!
Will come with my comments for this beautiful episode on 3rd April. The first picture was very serene and beautiful.
ஒன்ன புதுசா பண்ணனும்னு நினைச்சா அதும் அத உடனே பண்ண முடியாம கொஞ்ச நாள் கழிச்சுதான் பண்ண முடியும்ன்னு ஒரு நிலை இருக்கும் போது வர்ற படபடப்பு, சந்தோசம், கொந்தளிப்பு எல்லாம் உங்க எழுத்துள்ள அப்படியே தெரியுது………
அன்று..
நாம் ‘கோவையில்’ பணியாற்றி வந்த காலத்தில் (1980’s) நெருக்கமான நமது இனிய நண்பர் ஒருவர்…
‘வேலூரில்’ பிறந்து வளர்ந்து, தற்சமயம் ‘ஊட்டியில்’ கலக்கிக் கொண்டு வருகிறார் கடந்த 32 வருடங்களாக!! . (கல்லூரி முதல்வராகவும், பல்கலைக்கழக துணைவேந்தராகவும் மற்றும் மருத்துவம் சார்ந்த பல துறைகளிலும்!!)..
இன்றோ…இங்கு
அதே ‘ஊட்டியில்’ பிறந்து, ‘வேலூரில்’ வளர்ந்து, ‘கோவை’ யில் ஆஸ்துமாவுக்கான ஒரு அதிரடி சிகிச்சை முறைதனை கண்டறிந்து மருத்துவ உலகிற்கு தெரியப்படுத்தி விட்டு,
இன்று கனடா வந்து, வான்கூவர்-வாழ் தமிழ் நெஞ்சங்களை, தம் “பனிப்பிரதேச பயணத் தொடராலும்” மற்றும் பல்வேறு ‘ஆன்மீக தத்துவார்த்தங்களாலும்’, கலக்கி வருகின்றார் ஒருவர்!
அவர் வேறு யாருமல்ல…
நம் அனைவருக்கும் தெரிந்தவர்; அனைவருக்கும் இனிய நண்பர்…
“அவதார்-3 : ஆர்க்டிக் ஹீரோ” அவர்களே!!
அவரது கலைப்பயணம் மாபெரும் வெற்றியடைய நாமனைவரும் நெஞ்சார வாழ்த்துவோம்!!
The preparatory task was well said.The mind set of a traveler before a journey was described with reality. The message on Artic and Artic tern was superb. Surely writing in Tamil has its own impact…