எனக்கு பல முறை, சாமியார்களின்  வாழ்க்கை எப்படி நடக்கிறது என்று பார்க்கவேண்டும் என்று ஆசை. படிக்கும் முன், ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் . நான், இன்று கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறவன். ” சாமி, எனக்கு நல்ல புத்தியை கொடு” என்று வேண்டுபவன் தான் .கடவுளுக்கு பயந்தவன். ஒரு காலத்தில் கடவுள் இல்லை என்று நம்பியவன். பின், கடவுளின் மீது நம்பிக்கையை எனக்கு கொடுத்தவர், கடவுள் தான். சாமியார்கள் இல்லை. உண்மையான சாதுக்களை, ஹரிதுவாரிலும் ரிஷிகேசிலும் பார்த்தவன்.

கடவுளை நம்புகிறவன் கோவிலில் மட்டும் இல்லை, பான்ட் ஷர்ட் போட்டு வீட்டிலும் இருப்பான் என்று நம்புகிறவன். கடவுள் எங்கும் இருக்கிறார்…கோவிலுக்கும் செல்வேன், மசூதிக்கும் செல்வேன். கர்த்தரை, வீட்டின் முன் உள்ள சர்ச்சில் பார்த்து என்னை இரட்சிக்க சொல்வேன். வாரவாரம் குஜராத்தி லக்ஷ்மி நாராயண் கோவிலில், கிருஷ்ணனை கும்பிட்டுவிட்டு, மத்திய  சாப்பாட்டிற்கு வரிசையில் தட்டோடு நிற்பேன். சீக்கிய குருதுவாரில் தலையில் வெள்ளை துண்டு கட்டி, இரவில் ரொட்டியும் தின்பேன். கடவுளை எங்கு எப்படி பார்க்கவேண்டும் என்பது தனிப்பட்ட ஒருவரின் விருப்பம். யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. பிடித்தவரை கும்பிடுங்கள். உங்கள் விருப்பம். எனக்கு மனதில்’ பட்டதை எழுதும் “தில்” – கடவுள் எனக்கு அருளியிருக்கிறார். அதனால், சாமியாரை நம்பும் அடிபொடிகள், பிடிக்கவில்லை எனில் படிக்கவேண்டாம். இது என் தனிப்பட்ட கருத்து. சரி, கதைக்கு வருவோம் …

நம்மூரில், சாமியாருக்கா பஞ்சம்? முட்டு சந்தில், தடுக்கி விழுந்து, நிமிர்ந்து பார்த்தால், ஒரு சாமியார் தான் தூக்கி விட வருவார். அவ்வளவு Supply and Demand.  நான், டாப் 5, கார்ப்பரேட்  சுவாமிகளின் ஆசிரமத்தை சுற்றி பார்த்ததின், மொத்த அனுபவம் தான் இது. சுவாமி விவேகானந்தர்  பிறந்த மண்ணில் இவை அனைத்தும் நடப்பது தான் கொடுமை. இந்த வாரம்,  உங்களை, 30 நிமிட “Ashram – 360 Degree – Walking Tour ” மூலம் ஆசிரமத்தை சுற்றி காட்ட போகிறேன். எங்க, ரெடியா?

இதோ, இங்க கீழ விழுங்க பார்ப்போம் ….விழுந்திட்டீங்களா … ???

இப்ப நிமிந்து பாருங்க …

இதோ வந்துட்டார்,  நம்ம  குருஜி …..பெயர் ” ஸ்ரீ ஸ்ரீ  சம்யுத்தா- சரபோஜித – சிவானந்த சத் குரு, உண்மையானந்த ஸ்வாமிகள்”

Guruji

இவர் இயற் பெயர் ” குப்புசாமி கருப்பையன்”. இவர், பிறந்து வளர்ந்தது காட்டுக்குப்பம்.  12 வயதில் வெள்ளாடு மேய்க்கும் போது, செம்மறி ஆட்டின் பாலை குடித்ததால், இறைவனின் அருளை பெற்று இன்று, இந்த நிலைக்கு வந்துள்ளார். இவர் ஆசிரமத்துக்குதான், நான் உங்களை அழைத்து செல்லப்போகிறேன்.

“Welcome to “Ashram – 360 Degree – Walking Tour “.

தலைக்கு மேல் ஒரு சிறிய வட்டத்தை, பெரியதாய் சுத்துங்க …இது பிளாஷ் பாக் ( Flash Back ) டைம்…

“இயற்கையை ரசி, தனிமையை அனுபவி” என்று, கிட்டதட்ட எல்லா சுவாமிஜிக்களும் சொல்வதுதான். அந்த தனிமையும் இயற்கையையும் ரசிக்க, நான் பல முறைகள் வெவ்வேறு சுவாமிகளின் ஆசிரமங்கள் சென்று பார்த்து உள்ளேன். சொல்லப் போனால், ஒரு சாமி மடத்தில், 10 மாதம் தங்கி அனிமேஷன் வேலை கூட பார்த்து உள்ளேன். எந்த சுவாமி என்று யூகிக்க வேண்டாம். ஏன் என்றால் எல்லா சுவாமிகளுக்கும் ஓரே TAG Line தான்.

“வாழ்” – இந்த ரெண்டு எழுத்தில், அண்ட சராசரங்களையும் அடுக்குவார்கள். எப்படி?

“இயற்கையோடு வாழ்”, “தனிமையை ரசி” என்று சொல்லும் எல்லா சாமியார்களும், இயற்கை மற்றும் தனிமையை காட்டிக்கொள்ள ஒரு மலை அடிவாரத்தைதான், கூடாரம் விரிக்க சரியான இடம் என்று தேர்ந்து எடுத்து இருப்பர். இவை பொதுவாக ஊருக்கு வெளியே, ஒதுக்கு புறத்தில் இருக்கும். மினி வேன் shuttle Service உண்டு.

gate

இவர்கள் பிசினஸ், ஏதோ ஒரு கீத்து கொட்டகையிலோ இல்லை ஒரு பழைய கொடொனிலில் தான் முதலில் ஆரம்பிக்கும். ஊரில், இல்லாத கடவுளை செலக்ட் செய்து, இவர் இரவில் வந்து கோவிலை திறக்க சொன்னார் என்று சொல்லி கடையை ஓபன் செய்வார்கள். இதற்கு நாலு பேரை பிடித்து மார்க்கெட்டிங் செய்வார்கள். முதலில், கடவுளை கும்பிட வா என்று அழைப்பார்கள். காசு வர வர, கடவுள் போட்டோ கீழ் அமர்ந்து ” I am சுவாமி ” என்பார்கள். கடவுளுக்கு பயந்தவன், பின் சாமியாரின் சாபத்திற்கு பயந்து சரண் அடைவான்.

இவர்கள் இந்தியா முதல், நார்த் அமெரிக்கா வரை பரவி இருப்பார்கள். தமிழ் நாட்டில் பிறந்த குரு, கர்நாடகத்தில் குப்பையை கொட்டிக் கொண்டு இருப்பார். கர்நாடகத்தில் பிறந்தவர், தமிழ்நாட்டில் குப்பையை வந்து அள்ளுவார். கேரள மாதா, நம்மூர் மலை அடிவாரத்தில் ஒதுங்குவார். இவர்கள் எல்லாரும் வெளிநாடு சென்று குப்பைகளை பரப்புவர். ஒரு ஆசிரமத்தின் நோக்கம், தாக்கம் இன்னொன்றை பாதிக்காத வகையில், அவர் அவர் வேளைகளில் மும்முரமாக செயல்படுவர். முக்கியமாக, எல்லோரையும் ஓரே இடத்தில் பார்க்க முடியாது. ஒருவரை பற்றி இன்னொரு சாமி பேசாது. எல்லா சாமிகளுக்கும், வடநாட்டில் ஒரு பிரண்டு இருக்கும். வருஷம் ஒரு முறை, பிரண்டு மடத்தில் தங்கி, கேதாரிநாத் மற்றும் பத்ரிநாத் சென்று இமயமலையின் கீழ் ஒரு போட்டோ எடுக்க வசதியா இருக்கும்.

book2

சரி, இவங்க ஆசிரமத்தில் என்னதான் நடக்கும்?

தினமும் காலையில், ஒரு தியான கூட்டத்தை கூட்டுவர். கூட்டத்தின் பெயர், ஏதாவது சமஸ்கிரத வார்த்தையில் ஆரம்பிக்கும்.  யாருக்கும் புரியக் கூடாது.  ஒரு வருட Schedule – Microsoft Outlook Calendar – ல் புக் செய்து, பக்கா ப்ளானுடன் நடத்துவார்கள். காலையில், தூங்கி எழுந்து வந்தவனுக்கு ” Inner Awakening” என்று ஒரு மூலையிலும், தூங்க போனவனை கூட்டி வந்து ” Deep Divine Dive” என்றும், மூளை சலவையை  மாத  சந்தா வாங்கிக் கொண்டு நடத்திக் கொண்டு இருப்பார்கள்.

சில லோ பட்ஜெட், Small Scale Business அன்ட்டப்ரூநர்ஸ் சாமிகள், முதலில் வாய் பாட்டு, பரதநாட்டியம், குச்சுபுடி என்று Reverse Business Concept – ல் ஆள் பிடிப்பார்கள். இதை வைத்து, பாட்டு கிளாசுக்கு போன புள்ளைய கூட்டிட்டு வரும் பெற்றோரிடம், உன் காருக்கு பூஜை போடு, உன் வீட்டு காக்காவிற்கு பூஜை போடு என்று Business Initiative எடுப்பார்கள். Website, Email Marketing என்று எல்லாம் களைகட்டும். பின் பிசினஸ் டெவெலப் ஆனவுடன், தொட்டதற்கெல்லாம்  பணம். குருஜியின், காலை தொட ஒரு பணம், கழுவ ஒரு பணம். தலையில் தொட ஒரு பணம், முதுகை தடவ  ஒரு பணம். பணம் சேர்த்தவுடன், ஒரு காலேஜ் கட்டி கல்வி சேவை செய்ய தொடங்குவார்கள். காலேஜில், காவி உடை அணிந்து இன்ஜினியரிங் படிப்பார்கள். காவி உடை, போடாமல் சண்டை பிடிக்கும் மாணவனை, ஆள் வைத்து ரயில் ஏற்றி கொல்லும் சாமியும் உண்டு.

நீங்கள், குருஜியை தொடத்தான் பணம் தரவேண்டும். அவரே, சிலபேரை தொடுவார். அவை முற்றிலும் இலவசம். பரவசம்.

nithyananda

கூட்டம் அலை மோதும். எல்லா நாளும், மகாகுருஜி தரிசனம் உங்களுக்கு கிடைக்காது. இன்று, அவரை பார்க்க முடியுமா? என்று கேட்டால் ” இன்று அவர், கொலராடோவில் கொத்து பரோட்டா போடுவது எப்படி? என்ற செயல் விளக்க கூட்டத்தில் பேச போயுள்ளார் ” என்று சொல்வார்கள். சரி, அடுத்த வாரம் வந்தால் பார்க்க முடியுமா என்றால்” அவர் நாடிங்காம் பல்கலை கழகத்தில், நார்த்தங்காய் ஊறுகாய் போடுவது எப்படி? என்ற சொற்பொழிவிற்கு போய் விடுவார்” என்பார்கள். அவர் எப்போது இருப்பார், எப்போது இருக்கமாட்டார் என்று, ஒரு சில அடிபொடிகளுக்கு மட்டும் தெரியும்.

ஆனால் முதல் ராத்திரி மற்றும் சிவராத்ரிகளில் அவரை கண்டிப்பாக ஆசிரமத்தில்  பார்க்கலாம்.

எங்கும், இயற்கை கொஞ்சும்….கெஞ்சும் …எப்படி?

மலை அடிவாரத்தில், காசு கொடுத்து வாங்கி வந்த எட்டு மயில்கள், பத்து புள்ளி மான்கள், நூறு புறா அலைந்து கொண்டு இருக்கும். ஒரு மடத்தில், ஈமூ கோழி  கூட பார்த்தேன். மெக்ஸிகோவில் இருந்து “லாமா” முதல், அமெரிக்காவில் இருந்து “ஒபாமா” வரை எதுவும் தப்பாது. சில சமயம், கொத்தாத சாரை பாம்பை வைத்து குருஜி, வித்தையும் காட்டுவார். இயற்கையோடு, வாழ்கிறார்களாம் ; இதை, நல்ல பாம்பிடம் தான் கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும்.

Sadhu

எங்கும் செழுமை. Nerolac பச்சையை, டின், டின்னாக வாங்கி, ஆசிரமத்தில் காய்ந்த புல்லின் மேல் ஊற்றி இருப்பார்களோ என நினைக்க தோன்றும். இங்கு, வளரும் கொரியன் கிராஸ்ஸை ( Korean Grass), பக்கத்துக்கு கிராமத்தில் இருந்து வந்த ஏழை ஒருவன், காவி உடை அணிந்து, தன் மகளின் வரதட்சணைக்காக சோகமாக  வெட்டி கொண்டு இருப்பார். நமக்கோ, இது பயபக்தியாய் தெரியும்.

முற்றிலும் துறந்த கோலத்தில், தலை விரித்தபடி கல்யாணம் ஆகாத இளம் பெண்கள் சிறிய பொட்டுடன் ஆங்கங்கே நின்று கொண்டு இருப்பார்கள். அனைவரும் லேசாக தான் சிரிப்பர். ஆனால் பல் தெரியாது. அளவு சாப்பாடு மாதிரி; அளவு சிரிப்பு. எல்லாம் சொல்லிவைத்தது போல் சிரிப்பார்கள்.  சிரித்துகொண்டே நடப்பார்கள். மன்னிக்கவும். நடிப்பார்கள்.

எல்லா மாநில கலவையும் இங்கே இருக்கும். கேரளா, கர்நாடகா, போஜ்பூரி, நேபாளி , நோயாளி என செம கலவை. பைத்தியமாயிருந்தாலும் பரவாயில்லை. அழகாயிருந்தால் போதும். முக்கியமாக, பொட்டு ஒரே அளவிலும், வண்ணத்திலும் வைத்து  இருப்பார்கள். இங்கு ” திவ்யா ” – திவ்யா மாதாஜி என்றும், ” ஆனந்தி – ஆனந்தமாயீ ” என்று பெயர் மாற்றம் பெற்று இருப்பர். எப்படி, அழகிய பெண்களுக்கு மட்டும் சன்யாசம் பிடித்து போனது என்ற கேள்விக்கு, கருப்பு குருஜிக்கு மட்டும் தான் விடை தெரியும். இங்கு வசியம் தான், விசேஷம்.

பெண்களை பொறுத்தவரை, வயதுக்கேற்ற வேலை கொடுக்கப்பட்டு இருக்கும்.  இவர்களை ஐந்து வகையாக பிரிக்கலாம்.

Grade A: Age No bar. Unmarried and Divorced.
இவர்களை நீங்கள் அவ்வளவு எளிதில் பார்க்க முடியாது. சுவாமியின் எதோ ஒன்று இவர்களிடம்  சிக்கி இருக்கும். சுவாமியுடன் மட்டும் தான் இருப்பார்கள். இவர்களை வைத்துதான் சுவாமி,  இரவில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள வித்யாசத்தை கண்டுபிடிப்பார்.

Grade B:  Age Less than 25. Divorce in progress.
25 வயதுக்கு கீழ் உள்ள கல்யாணம் ஆகாத பெண்களுக்கு, சிரித்து ஆள்  பிடிக்கும் வேலை கொடுக்கப்பட்டு இருக்கும்.

Grade C:  Married Women with Family. Part time and Full time.
கல்யாணம் ஆன பெண்கள், ஆசிரம அடுப்படியில், அரிசி பருப்பு சாதம் செய்து கொண்டு இருப்பார்கள்.

Grade D: Very Old Married
அதைவிட மூத்தவர்களுக்கு ஆளுக்கு ஒரு பெட்டி கடை கொடுத்து சிவன், பாம்பு, சோம்பு போட்ட மோதிரத்தை வந்தவன் தலையில் கட்டசொல்வார்கள்.

Grade E: Special Quota: – Foreigners, IT Professionals
Overseas Recruitment Only. Used for entertainment, communication and Broadcasting. No டாமில். Only English.

அடுத்து, ஆண்கள் …

அரை வட்ட மண்டையுடன், ருத்ராட்சம் அணிந்த, கல்யாணம் ஆன, வீட்டை விட்டு ஓடிவந்த குடும்பஸ்தன்கள், குறுக்கும் நெடுக்கும் வேண்டுமென்றே நடந்து கொண்டு இருப்பார்கள். எல்லார் கையிலும், சாமியின் போதனை புத்தகம் சோதனை செய்து கொண்டு  இருக்கும்.  கழுத்தில், காவி நிறத்தில்,  ID Card தொங்கிக்கொண்டு இருக்கும். அதில், கடா வெட்டுக்கு முன், ஏன்? நம் கழுத்தில் மாலை என்று புரியாமல் விழிக்கும் ஆட்டைப்போல், அவனின் பழைய College புகைப்படம், கடைசி உண்மை முகத்துடன் தொங்கி கொண்டு இருக்கும்.

இந்த, அரைவட்ட குழுவின் தல- தளபதி மட்டும், ஒரு லேட்டஸ்ட் Iphone வைத்து இருப்பார். அவர் மட்டும், தலை விரித்த இளம்பெண்கள் குழு தலைவியிடம் (மாதாஜி) ” அவர்களின் வாழ்க்கையை” விவாதித்து கொண்டு இருப்பார். இந்த இருவர் தான் குருஜியின் Main Contact Points. ஆள் பிடிப்பது முதல், அமுக்குவது வரை செய்யும் செயல் வீரர்கள். எல்லா ரகசியங்களும் தெரிந்த குருவின்  குருவிகள்.

இந்த ரெண்டு குருவிகளையும், சிறை பிடித்தால் – குருஜி அன்றே தற்கொலை செய்து கொள்வார்.

கண்ணில் தென்படும் படி, குறைந்தது பத்து வெள்ளைகார பெண்மணிகள், கட்டத்தெரியாமல் காவி புடவையை, லூசான ஜாக்கெட்டு அணியவைத்து, வானத்தில் பறக்காத வெள்ளை காகத்தை பார்த்தபடி, தூண்கள் அருகே நிறுத்தி வைத்து இருப்பர். அந்த பெண்களை மேய்க்க, நம்ம ஊர் குருவி ( மாடர்ன் சாமி ) ஒருவரை, நீண்ட கேசம் வளர்க்க வைத்து, ஜிப்பா – T Shirt , சின்ன கண்ணாடி போட்டு, பட்சிகள் மீண்டும் மேலை நாட்டுக்கு பறக்காதவண்ணம், பாதுகாத்து வைக்க குருஜி கட்டளை இட்டு இருப்பார். அவனும், பெண் போல நடந்து, வளைந்து, நெளிந்து , குழைந்து இந்த பெண்மணிகளை ஆடு மேய்ப்பது போல், மேய்த்துக் கொண்டு இருப்பான். அவன், தூரத்தில் பெண்ணை போல் இருப்பான். அருகே சென்றாலும் பெண்ணைபோல் தான் இருப்பான்(ள்).

ஏனோ, அந்த அந்தபுரத்தில் எல்லாம் சொல்லிவைத்தது போல், மெதுவாக தான் நடக்கும். காற்று லேசாக தான் வீசும். மரங்களில் இலைகள் மெதுவாதான் அசையும். வேண்டும் என்றே எல்லாரும் மெதுவாக நடப்பார்கள். விட்டு விட்டு மயில்கள் அரவும். குயில்கள் அலாரம் அடிப்பது போல், இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறைதான்  கூவும். இங்கே, காட்டு மான்கள் துள்ளி துள்ளி ஓடாது. நீங்கள் போய் தொடலாம். மான்கள் – எருமையை போல் தான் மேய்ந்து கொண்டு இருக்கும். சின்ன முள்ளும், பெரிய முள்ளும் தொட்டுக்கொள்ள ரெண்டு மணி நேரம் ஆகும்.

இயற்கையை ரசிக்கும் காட்சிகள் ஏராளம் ….

ஆசிரமத்தில் நிறைய ஒற்றை அடி தடங்கள் இருக்கும். கூழாங்கல்லை, மாற்றி ஏற்றி, பதித்து வைத்து இருப்பார்கள். அதில், நீங்கள் துள்ளி நடந்து போகும் போது, ஆங்காங்கே,  இயற்கையை ரசிக்கும் ஜோடிகளை பார்க்கலாம். நான் பார்க்கும் போது , ஒரு கேரளத்து பைங்கிளியும், அமெரிக்க பால்ட் ஈகிளும்  ( Bald Eagle) பேசிக்கொண்டு இருந்தன.

அமெரிக்கன், தென்னை மரத்தை தடவிக்கொண்டே கேட்பான் ” What is this Maathaaji?”. அதற்கு அவள், மரத்தை கட்டிபிடித்து கொண்டு சொல்வாள் – “Americanji” This is called – Kera Vriksham in Malayalam; Kera means Coconut, Vriksham means Tree” என்பாள்.

“Why it is so Tall? என்பான் பால்ட் ஈகிள். அதற்கு பைங்கிளி சொல்லும் ” As Guruji said, it is God’s Hand. It brings sweet water from Clouds at night” என்பாள். அவன் பரவசத்தில், தன் இரு கைகளையும் வானத்தை நோக்கி கூப்பி “God is Great – Guriji is Right” என்பான். அப்போது ஒரு கொப்புரை தேங்காய், மரத்தில் இருந்து  கீழே விழுந்து அவன் மண்டையில் உடையும். அதை இருவரும் சேர்ந்து உரித்து, பிரித்து இளநீரை தேடி, இயற்கையை சோதனை செய்து கொண்டு இருப்பார்கள்.

முள் செடி இலைகளை தடவிக்கொண்டும், வாசமில்லா மலர்களை முகர்ந்து கொண்டும் இயற்கையை ரசிக்கும் காட்சிகள் ஏராளம், தாராளம்.

தூரத்தில் ஒரு மாட்டு கொட்டகை கண்ணுக்கு தெரிவது போல் கட்டி வைத்து இருப்பார்கள். அங்கே இருபது மாடுகள் கொழுத்த பின்பும், புல்லை தின்றுகொண்டு இருக்கும். டச்சு நாட்டு Holstein Friesian காளைக்கும் , ஆங்கிலேய Channel Island – ஜெர்சி மாட்டுக்கும் பிறந்த கன்றுகுட்டிக்கு, ஒரு குறுந்தாடி வைத்த இளம் சாமி, புல்லை அதன்  வாயில் வைத்து ஊட்டிக் கொண்டு இருப்பார். ஆசிரமத்திற்கு வேண்டிய பாலை கொண்டு வரும் ஆவின் வண்டி, கொட்டகைக்கு அருகே குடியிருக்கும். மொத்தம் கறக்கும் ஒரு சொம்பு பாலுக்கு, 25 மாடுகள், அங்கே தேன்நிலவு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கும்.

நூறு வருட புளிய மரங்களை வெட்டி போட்ட ரோட்டின் இருபுறமும், வேளாண் பல்கலை ஹைப்ரிட் தென்னைமரங்கள் நட்டுவைத்து, சொட்டு நீர் பாசனம் செய்து தண்ணீரை சேமிப்பர். கேட்டால், இயற்கை விவசாயம் என்பார்கள்.  ஒரு குட்டையில், பெரிய வெண்தாமரை மிதக்க வைத்து, அதை சுற்றி, சேரியில், குப்பனிடம் வாங்கி வந்த 15 பெரிய வாத்துக்களை நீந்த விட்டு,  நீந்தும் போது அன்னபறவையை போல கத்த சொல்லி  இருப்பார்கள்.

well

பண்டரிபாய் காலத்து பாழும் கிணற்றை தூர்வாரி, நாட்புறமும் சுவர் எழுப்பி, அதை புனித நீர் என்று சொல்லி, நடுவே ஒரு லிங்கத்தை மிதக்க வைப்பர். அந்த பாசி நீரில் பாசமாய் சில குட்டி சாமிகளும், குட்டிகளும் பரம பதம் விளையாடிக்கொண்டு இருப்பர் . இங்க என்னடா கூத்து? என்று கேட்டால் – ஞான ஸ்நானம் என்பர். இந்த குளத்தில் குளிக்கும் பெண்கள் “அந்த சாமியார் பின்னாடி போனீனா, பாழும் கிணத்தில் போய் விழுவ” எனும் சாபத்தை பெற்றோரிடம் பெற்றவர்கள்.

அடுத்தது கட்டட கலை…

நம்ம, Architect Gurumoorthy தான் கட்டியிருப்பார். ஆனால் ஆசிரமம், மொகெஞ்சதாரோ, அரப்பா போன்ற சிந்து சமவெளி நாகரீக பாணியில், வித்யாசமாக கட்டப்பட்டு இருக்கும். Concrete கட்டிடம் தான் – ஆனால், அதன் மேல் செம்மண் பூசி இருப்பார்கள்.

Dome

அங்கங்கே, புரியாத மொழியில் வேண்டுமென்றே கிறுக்கி இருப்பார்கள். முடிந்த அளவு வெளிச்சம் வராத கட்டுமானம். வெண்கல மணிகள், கீழே தொங்கி நம் மண்டையை இடிக்கும். அது இடித்த வலியில் “அம்மா” என்று நாம் கத்தினால், நம் கண் முன்னே தோன்றும் ஒரு ஆம்பள சாமி,  பக்கத்தில் நிற்கும் பொம்பள சாமியின் உதட்டில் ஒற்றை விரலை குறுக்கே வைத்து, ஸ்ஸ்ஸ் .. ” சாந்தி” “சாந்தி” என்று அவர் வாயால், ஹஸ்கி வாய்ஸ் கொடுப்பார்.

ஆசிரமத்தில், இடி விழுந்தாலும் ஸ்ஸ்ஸ் .. ஸ்ஸ்ஸ் ” சாந்தி” “சாந்தி” தான்.

டேய், இங்க என்னதான் நடக்குது என்று புரியாமல் திகைப்பவரை, மெதுவாக ஓரம் கட்டி,  இளம் சாமியார்கள் அடங்கிய குழு, அவரின் மூளையை, IFB ( International Fraud Bureau) washing machine – ல் சலவை செய்ய தொடங்குவார்கள். ஒரு மணி நேர சலவைக்குப் பின், அவரே எங்கே என் காவி உடை? எங்கே என் குருஜி என்று தேடும் நிலைக்கு வந்து விடுவார். அவரை, உள்ளே உள்ள ஒரு கடைக்கு அனுப்பி வைப்பார்கள்.

குழம்பிய நபர், அந்த கடைக்கு போகும் போது, மிகப் பெரிய போஸ்டரில்,  குருஜி ” வாடா என் ராஜா !!! ” என்று, தன் இரு கை கூப்பி அழைக்கும் போஸில், சிரித்து கொண்டு இருப்பார். கடையில், சன்யாசியாக மாற தேவையான அனைத்து பொருட்களும் ஒரு package-ல் கிடைக்கும். குருஜிக்கு 50 வயது இருக்கும். ஆனால் அவர் சுமார் 262 புத்தகங்கள் எழுதி இருப்பார். அவர், தன் முதல் புத்தகத்தை, அவர் தாயின் கருவில் இருக்கும் போது எழுதினார் என்று கடை கல்லாவில் இருக்கும், பொம்பள சாமி சொல்லும்.

குருஜி, எல்லா புத்தக அட்டையிலும் closeup – tight frame -ல் சிரித்து கொண்டு இருப்பார்.

book

முக்கால்வாசி புத்தக தலைப்புகளில் ” எதையாவது திறக்க சொல்லி இருப்பார் – இல்லை திறந்ததை மூட சொல்லி இருப்பார் “. T- Shirts முதல் Green Tea வரை எல்லாவற்றிலும் குருஜி இருப்பார். டாலர் விலையை, ரூபாயில் எழுதி விற்பார்கள். எல்லாவற்றிலும் இயற்கை – தனிமை – இனிமை. “போங்கடா !!!, நீங்களும் உங்க ….’ என்று இந்த வாக்கியத்தை முடிக்கலாம் என்று தோணும்.

இதையெல்லாம் பார்த்து, மயங்கி வெளியே வந்தால், ஆசிரம சிற்றுண்டி உங்களை அன்போடு வரவேற்கும். இங்கே எல்லாம் வேகன் ( Vegan ) தான். பேருக்கு கூட கோழி, முட்டை என்று சொல்ல கூடாது. பருப்பு, தயிர், வெண்ணை, வெங்காயம், வெள்ளை பூண்டு, புளிச்ச மோர், பாணி பூரி, போண்டா கறி, வெங்காய பகோடா, குருஜி லட்டு, பச்சரிசி பால் பாயாசம் என அனைத்தும் மலிவு விலையில் கிடைக்கும். ஆனால், எல்லாமே வேறு வித சுவையுடன் இருக்கும். எதை கலப்பாங்க, எதை விடுவாங்கன்னு எவனுக்கும் தெரியாது. அந்த சுவை, வேறு எங்கும் கிடைக்காது.

ஒவ்வொரு ஆசிரமத்திலும் ஒரு இனிப்பு கொடுப்பார்கள். அது அவர்களின் Brand Sweet.

Prasad

அது ஆயா கடை ஆப்பதிற்கும், சேட்டு கடை அல்வாவிற்கும் இடைப்பட்ட ருசியை, ஆனந்த பவன் சன்னா பட்டூராவில் பரவவிட்டு, நெல்லை லாலா கடை லட்டு போல் உருட்டி, பின் ஐயங்கார் பேக்கிரி பிரட் போல, வெட்டி வெட்டி தருவார்கள். என்ன இது? என்று கேட்டால், சத் குருவின் சத்தான மாவு என்பார்கள். இதை உண்ட மயக்கத்தில், தூண் மேல் சாய்ந்து, கடையில் வாங்கிய குருஜியின் புத்தகத்தை புரட்டினால் அரண்டு விடுவீர்கள்.

பெரும்பாலும் மதம் மாறுபவர்கள், மதத்துக்காக சண்டை இடுபவர்கள், தன் மதமே சிறந்தது என்பவர்கள், தன் மதத்தின் புனித நூலை கூட முழுதாக படித்து இருக்க மாட்டார்கள். ஆனால், குருஜி எல்லா மதத்தின் புனித நூல்களையும் அத்துப்படி செய்து இருப்பார். அவருடைய Source Code ( மூலக் கரு ), சமண மற்றும் பௌத்த மத போதனைகளே ஆகும். அந்த காலத்தில், புத்தர் சொன்னதை எவன் இந்த காலத்தில் படிப்பான்? ஆனால் இவர் படித்து வைத்து இருப்பார்.

இதை தவிர இலத்தீன், கிரேக்க மொழி நூல்களையும் ஒரு பிடி பி(ப)டித்து இருப்பார். குரானில் இரண்டு வரி, பைபளில் மூன்று வரி, பகவத் கீதையில் ரெண்டு வரி என எடுத்துப் போட்டு, மீதி உள்ள இடத்தில் மானே, தேனே, பொன் மானே என்று போட்டுவிட்டு, முற்று புள்ளியை மட்டும்  ஈப்ரு மொழியில் வைத்து இருப்பார்.

புரியாதவர்களுக்கு அரபியில், மேற்கோள் காட்டுவார். நிறைய இடத்தில தண்ணியும் காட்டி இருப்பார்.

 

இரண்டு பத்திக்கு நடுவே ” சாஷ்டாங்”, ” நாசஸ்டாங்க்”, ” குண்டலினி” , “சுண்டெலி” என ஓட விடுவார். ஒரு புத்தகத்தில் சுண்டெலியை ஓடவிட்டார் எனில், அடுத்த புத்தகத்தில் பெருச்சாளியை ஓட விடுவார். இவர் புத்தகத்தை படித்தால், முப்பது நாட்களில் டைனாசர் குஞ்சுகளை வளர்ப்பது எப்படி என்பது வரை விஞ்ஞானம் இருக்கும். இதை எல்லாம் துரத்தி எப்படி பிடிப்பது என்று சந்தேகம் கேட்டால், டைனாசர் பிடிக்க ஒரு யோகா உண்டு. காலையில் “சாஸ்டாங்’ நடத்துகிறேன், நாஸ்டா முடிச்சிட்டு வந்து உட்கார் என்பார். Oxford, Harvard பல்கலை கழகத்தின் முன் நின்று, போஸ் கொடுக்கும் புகைப்படங்கள், புரியாமல் முழிக்கும் மடையனை கூட  அறிவாளியாக்கும்.

தலை சுற்றி, மயக்கம் வர எங்கே இந்த ஜாம்பவான் குருஜி என்று கேட்டால், அவர் சீடர்கள்,  தொலைவில் உள்ள ஒரு குன்றினை காட்டுவார்கள். குன்றை நோக்கி நடந்து சென்று பார்த்தால், அங்கே ஒரு மாடர்ன் மேன், காவி வேட்டிக்கு கீழ், நைகீ (Nike) shoe தெரியும் படி, பாறையில் t-ஷர்ட் போட்டு , கால் மீது கை போட்டு அமர்ந்து இருப்பார்.

அவர் கி.பி – க்கும் கி.மு விற்கும் இடைப்பட்ட ஒரு காலத்தில், ஒரு சிந்தனையில்  மூழ்கி இருப்பது போல் தெரியும் .

enlightened

பெரும்பாலும் நீண்ட தாடி இருக்கும். அதில் சில வெள்ளை முடிகள் அவசியம்.  முகத்தில் விக்ரம் நடித்த ” தாண்டவம்” படம் மூன்று காட்சிகள் , house full லாக ஓடும். தூரத்தில் இருந்து பார்க்கும் போது ஒரு நடமாடும் நாலந்தா பல்கலைகழகம், பாறை மேல் அமர்ந்து பாடம் சொல்லிகொடுப்பதை போல இருக்கும். ஆப்பிள் போன் முதல் ஆரஞ்சு ஜூசு வரை கை எட்டும் தூரத்தில் இருக்கும். அவருடைய, லேட்டஸ்ட் ரே பான் ( Ray Ban ) கண்ணாடி, அவர் சட்டையிலேயே தூக்கு மாட்டி தொங்கி கொண்டு இருக்கும்.

பாறைக்கு கீழே,  அஞ்சு வெள்ளைக்காரிகள், ரெண்டு வெள்ளைக்காரன்கள், நாலு நம்மூர் அரைவட்டைகள் வாயை பொளந்து உட்காந்து இருப்பார்கள். They are the Core Group Followers. அமெரிக்காவில் பொண்டாட்டியிடம் சண்டை போட்டுவிட்டு ஓடிவந்த ஒரு IT மேதையும், கல்யாணம் ஆன அன்று, முதல் இரவில் தாலியை கழட்டி, கட்டிய புருஷனுக்கு முதல் இரவு அன்பளிப்பு கொடுத்த புண்ணியவதியும், Sony HD Camera – ல் குருஜி பேசுவதை படம் பிடித்து சுட சுட YouTube – ல் ஏற்றி கொண்டு இருப்பார்கள்.

ss

இதைப் பார்க்கவே பரவசமாய் இருக்கும்.

ஆனால் குருஜியோ, பாறைமேல் அமர்ந்து பழைய நமுத்து போன பிரிட்டானியா பிஸ்கட்டை, நசுக்கி நசுக்கி, வெள்ளை புறாக்களுக்கு போட்டுக்கொண்டே தனிமையை எப்படி ரசிக்க வேண்டும், இயற்கையுடன் எப்படி வாழவேண்டும் என்று பாடம் எடுப்பார். அவர் பேச பேச, கீழே அமர்ந்தவர்கள் உருகி, உருகி ஓடாய் போவார்கள். அடுத்த நாள் வேறு பாடம் ஆரம்பிக்கும்.

அடுத்த நாளும் புறாக்களும் சீடர்களும் கூடுவார்கள்.

ஆனால் மறுநாள், அனைவருக்கும் Gold Marie பிஸ்கட் கொடுப்பார்.

புறாக்களும், சீடர்களும் , பிஸ்கட்களும் மாறும்.

discussion

தினம் தினம் ஒரு கூத்து. பாறையில், Evening Talk Show – முடிந்தவுடன் அவரை Toyota Innova – வில் அள்ளி போடுவார்கள்.

சூரியன் சாயும் நேரம், புலித்தோலில் குருஜி சாய்ந்து இருப்பார்.

இரவு தான் ஆசிரமம் களைகட்டும்.

ஏழு மணிவாக்கில், எல்லா எழரைகளும், கூடு மாதிரி கட்டப்பட்டு இருக்கும் கூட்டுக்குள் கூடுவார்கள். இரவு சாஸ்டாங் இனிதே தொடங்கும். பகலில் பதுங்கிய, கிழட்டு பட்சிகள் இரையை தேடி ஊர்ந்து வந்து  அமரும்.

குருஜி, இப்பொது வேற கெட்டப்பில் இருப்பார். சிவ பெருமானின் உடையில், சிவ கார்த்திகேயன் ஸ்டைலில் கெட்டப்பை மாற்றி இருப்பார்.

kalabairava12

அவர் சொல்லுவதெல்லாம் இது தான்.

என்ஜாய் ,என்ஜாய், என்ஜாய் !!!!

இந்த கருமத்தை தான், ரெண்டு மணி நேரம் பேசுவார். ஆனால், அனைவருமே இந்த “கருமமே கண் ” என்று கேட்டு கொண்டு இருப்பார்கள்.

பேச்சின் முடிவில், அவர் கண் அசைப்பார். வினோத இசை கருவிகள் முழங்க ஆரம்பிக்கும். இந்த இசையை எங்கும் நீங்கள் கேட்டு இருக்க மாட்டீர்கள். கேட்ட மாதிரியும், சில சமயம் இருக்கும். கேட்காத மாதிரியும் இருக்கும். காரணம், இதுதான் …

drums

மிருதங்கத்தை, பாதி வெட்டி கவிழ்த்து போட்டு அடிக்கும் ஒரு சாமி . வயலினில் மூணு கம்பியை புடுங்கிவிட்டு வாசிக்கும் ஒரு பொம்பள சாமி. “தாரையில்” இருந்து ” தா” வை புடுங்கி, “தப்பட்டையில்” உள்ள ” “பட்” டுடன் இணைத்து ” தாபட்” என்ற கருவியை உருவாக்கி, அதில் மேலை நாட்டில் Drums வாசித்த வெள்ளைகாரனை கொண்டு வந்து “டொங்கு”, டிங்கு என்று அடிக்க வைப்பார்கள். 16 ஆம் – நூற்றாண்டில் ரோமாபுரியில் செத்த போப்பாண்டவரின் ( Pope Pius VI) இறுதி சடங்கில் பாடிய சோக கீதத்தை, இரண்டு ஐரோப்பிய பெண்மணிகள் பாட, வாரணாசியில் வாய்க்கரிசி போட்ட ரெண்டு ரிஷிகள் சங்கை ஊத, அந்த கூடாரமே ஒலியில் ரெண்டாய் பிளக்கும்.

என்ன இது குருஜி? என்றால் – இது தான்  Fusion இசை என்பார்கள்.

இசையின் உச்ச கட்டத்தில் ஆட்டம் ஆரம்பிக்கும். சிலர் எம்பி ஆடுவர்; பலர் குந்தியும் ஆடுவர். கூட்டம் கூட்டமாய் கும்மி அடிப்பார்கள்.  அதுவரை, கொண்டையுடன் இருந்த பெண் சாமிகளின் கொண்டை அவிழும். அவிழ்த்து விட்டு அலைந்த ஆண் சாமிகளின் , சடைகள் இழுத்து முடிந்து, கட்டப்படும். இடையே, சில மொட்டைகளும், கழுத்தில் கொட்டைகளும் போட்டவர்கள், மல்லாக்க படுத்து, காலையும் கையும் தூக்கி, அமாவாசையில் அம்மாபேட்டையில் ஊளையிடும் நாயை போல ஒலி எழுப்புவர். ஆட்டம் முடிவில் மயங்கி விழுந்த, பெண்களுக்கு மட்டும் அவசர சிகிச்சையை நடு சாமத்தில் குருஜி தருவார்.

dancing

இது போதும்.

இது தான், மாடர்ன் சாமிகளின் Corporate உலகம். நம்பினால் நம்புங்கள் – இது ஒரு தொழிற்சாலை. உற்பத்தி செய்வதாக சொல்வது “இயற்கை, நிம்மதி, வாழ்க்கை, தனிமை, இனிமை”.

dancing 2jpg

நான்கும், ஒரே கம்போ பாக்கில் ( Combo Pack) கிடைக்கும்.

உற்பத்தியாகும் பொருளுக்கு ” மதிப்பு கூட்டப்பட்ட வரி” ( VAT) , சேவை வரி ( Service Tax) ; இத்யாதி ; இத்யாதி இருக்கும். வாங்கி பயன் பெறலாம்.

தொழிற்சாலையில், ஜன்னலை திறந்து வா என்பார்கள். பின்பு, கதவை சாத்திவிடுவார்கள். என்னவென்று பார்க்க போனவன் திரும்பி வந்ததாக சரித்திரம் இல்லை.


ஜோசியக்காரனும், சாமியாரும் ஒருவிதத்தில் ஒன்றுதான்.

ஒருவன், உன் தலை எழுத்தை கண்டுபிடித்து சொல்கிறேன், பரிகாரம் செய் என்று சொல்லுவான். இன்னொருத்தன், உன் தலை எழுத்தையே, நான் மாற்றுவேன் என்பான்.

இந்த இருவரிடமும் சிக்கியவர்கள்,  பணம், வீடு, மனைவி, மக்கள் என அனைத்தையும் இழந்து தெருவில் உண்மையான பரதேசியாக அலையும் வரை விடவே மாட்டார்கள்.

ஏக்கம் உள்ளவனை வலை போட்டு பிடித்து தாக்குவார்கள். தள்ளாடி இருப்பவன், கீழே விழுவான். அவனுக்கு, சோம பானம், சுரா பானம் கொடுத்து மீண்டும் சந்தைக்கு இன்னொருவனை தாக்க அனுப்புவார்கள். இவர்களிடம், நீங்கள் வாதிட முடியாது. பயிற்சி அப்பிடி.

கழுகாய், வருவார்கள். புறாவை பிடித்து கொத்துவார்கள்.

இந்த, அடிபட்ட புறாக்கள் தான், ரத்தம் காய்ந்து காவியாக  ஆசிரமத்தில் அலைந்து கொண்டு இருக்கின்றன.

தலைக்கு மேல் சுற்றும் பெரிய வட்டத்தை, சின்னதாய் சுருக்குங்கள். Flash Back Over.

 

நீச்சல் நண்பர் – அப்படி Gold Marie பிஸ்கட் உண்ட புறாவாக இருக்க வாய்ப்புக்கள் அதிகம். அதனால், அவரிடம் கேட்டேன் ” உங்கள் ஆஸ்தான குருஜி யார்?”

என்னது? எனக்கு குருஜியா?

ஹ்ம்ம்.. இல்லை இல்லை ….நான் தான் எனக்கு குருஜி.

நீங்கள் நினைப்பது போல் நான் குருவை தேடி வரவில்லை. ஆர்க்டிக்கில் இருந்து வரும்போதே,  நான் சாமியாராய்தான் வந்தேன். சாமி மடம், எனக்கு தேவை இல்லை. என்னையும் சில கழுகுகள், கொத்த வந்தன.

இவன், வெறுமையானவன் என விட்டுச்சென்றன.

கோவையை அடுத்துள்ள, நரசிபுரத்தில் மலை அடிவாரத்தில் வீடு எடுத்து, கிராமத்து மக்களோடு தங்கிவிட்டேன். என்னால் முடிந்த மருத்துவ உதவியை மக்களுக்கு செய்கிறேன். ஒரு கிராமத்து பெண்ணை பிடித்து போனதால் திருமணம் செய்துகொண்டேன். ஒரு பெண், மற்றும் பையன் பிறந்தார்கள். பத்து ஏக்கர் நிலம் உள்ளது. விவசாயம் செய்கிறேன். காட்டு யானைகள் வீட்டு முற்றம் வரை வந்து செல்லும். என் மகன் பெயரில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறேன். இங்கிலாந்தில் உள்ள என் மருத்துவ நண்பர்கள், சில கோடிகளை என் தொண்டு நிறுவனத்திற்குள் கொட்டினார்கள். அதை வைத்து, விரக்தியால், தற்கொலை முயற்சி செய்தவர்களுக்கு என்னால் ஆன மறு வாழ்வு உதவிகளை செய்து வருகிறேன்.

முடிந்தால் வந்து என்னை பாருங்கள். ஆர்க்டிக் போக தேவையான அனைத்து விவரங்களையும் தருகிறேன் என்று விசிடிங் கார்டை நீட்டினார்.

என்னால் நம்பமுடியவில்லை. ஐந்து வாரங்களாய் என்னை துரத்திய எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைத்தது. புள்ளிகள் அனைத்தும் இணைத்து கோடுகளை புள்ளிகளே வரைந்தன.

ஒரு மனிதனுக்குள் எத்தனை ஆச்சிரியங்கள் !!!

உண்மைதான். அதிகம் பேசுபவனிடம், ஆச்சிரியங்கள் இருக்காது. ரகசியமும் தங்காது.

அவரிடம் கேள்விகேட்கும் சக்தியை இழந்தேன். நான் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டது இவைதான்.

1.  பிடித்ததை செய், பிடிக்காததை விட்டொழி – படித்து இருந்தாலும்…
2. “பணத்தை” விட “நிம்மதி” முக்கியம்.
3. “நாளை” என்பதை விட ” இன்று” தான் முக்கியம்.
4. வாழ்கைக்கு குறிக்கோள் தேவை இல்லை; வாழ்வது தான் குறிக்கோள்.
5. தனிமையில், இயற்கையும் புளிக்கும்.
6. ஆறடி மண்ணுக்குள் போகும் முன், உலகை காண்.
7. தேடிக்கொண்டே, சந்தோசமாய் இரு
8. கல்யாணமும் தேடலில் ஒரு பகுதிதான், பிள்ளைகள் வெறும் By Products.
9. இறக்கும் நாளை தள்ளி வைக்க போராடு.
10.உன் கேள்விகளுக்கு நீ தான் விடை.
11. உனக்கு குருஜி நீதான்.
12. உனக்கும், ஒரு நாள் வரும்

அவரிடம் இருந்து விசிடிங் கார்டு வாங்கினேன். பேன்ட் பின்புற பாக்கெட்டில் வைக்க, இதயம்  தடுத்ததால், அதை மேல் சட்டையில் இதயத்தின் அருகில் சொருகினேன்.

அதுவே நீச்சல் வகுப்பின் கடைசி நாள். நான் அவரிடம் சொன்னேன் ” நானும் ஒரு நாள் ஆர்டிக் செல்வேன். உங்களிம் வந்து தேவையான விவரங்களையும் வாங்கிக்கொள்வேன்”.

இது நடந்து 8 வருடங்கள் ஆகிவிட்டன . வருடங்கள் கரைந்து ஓடின.

நான் அவரை மீண்டும் இது நாள் வரை சந்திக்கவே இல்லை.

அவர் என்னிடம் பேசிய கடைசி வார்த்தைகள் ” உனக்கும் ஒரு நாள் வரும்”

எனக்கும்  “அந்த நாள்” வந்தது.   6 மாதம் கழித்து. ஆனால் அது ஆர்டிக் செல்ல அல்ல ….

 

ஒரு நாள் காலையில் ….

ட்ரிங் …ட்ரிங் …

என் முதல் generation I Phone ஒலித்தது ….

ஹலோ ” Who is this?”

I am Mukesh Speaking…from New Delhi.

ஒரு குரல் ஹிந்தியில், ஆங்கிலம் பேசியது.

“உடனடியாக டெல்லி வரமுடியுமா?”

“எதற்கு?” என்று கேட்பதற்கு பதில் “எப்போது?” என்று கேட்டேன் ….

 

(தொடரும் பயணம் …ஆர்டிக் நோக்கி )

முக்கிய குறிப்பு: படங்களில் உள்ள பெரியவர்கள், இடங்கள் – ஒரு Posture – க்கு தான், பயன்படுத்தி உள்ளேன். அவர்கள், எப்படி என்று நீங்களே முடிவெடுங்கள்.