டாக்டருக்கு, படித்துவிட்டு ஏன் ஆர்டிக்கில் 15 வருடம் வேலை செய்தீர்கள்? என்று கேட்டேன்.

சிரித்துக் கொண்டே என்னைப் பார்த்து சொன்னார் “நான் படித்தது ஒன்று. இப்பொது, செய்துகொண்டு இருப்பது ஒன்று. படித்துவிட்டோம் என்பதற்காக, வாழ்நாள் முழுவதும் அதையே நம்பி பிழைக்க வேண்டிய கட்டாயம் யாருக்கும் இல்லை. எனக்கும் அப்படித்தான்” என்றார்.

நான், பிரிட்டனில் மருத்துவம் படித்தேன். அங்கேயே, எனக்கு நல்ல வேலையும் கிடைத்தது. பாக்கெட் நிறைய சம்பளம். வாழ்க்கை, நேர்க் கோட்டில் தான் போய்க்கொண்டு இருப்பதாக நினைத்துக் கொண்டேன். இல்லை, இல்லை : இது ஒரு, சுழல் வட்டமென, ஒரு வருடம் கழித்துதான் புரிந்தது.

நான் ஒரு கான்சர் Specialist.

தினமும், வரும் கான்சர் நோயாளிகளை பார்க்க, பார்க்க மனம் வெதும்பியது. இந்த தொழிலில், தினமும் அழும் முகங்களை பார்க்க, ஒரு தியான நிலை வேண்டும். சிலர், வாய் விட்டு நம் முன் அழுவார்கள். சிலர் மனம் மட்டும் அழுவது நமக்கு தெரியும். இவர்கள், இறக்கும் தேதியை தெரிந்து வைத்து இருப்பவர்கள்.

இதையெல்லாம் தாங்கும் நிலை தான், எல்லாம் துறந்த நிலை. அது எனக்கு இல்லை என்பதை, போக போகத்தான் உணர்ந்தேன். நோயாளி அழுதால், நானும், என மனதில் அழுவேன். அவன் சிரித்தாலும், எனக்கு அழுகைதான் வந்தது. மரணத்தை பார்க்க பயம் வந்தது. தொழில் என்பதையும் தாண்டி, மனிதனை மனம் நேசித்தது.

இறக்க போகும் ஒருவன், சிரிப்பதை என்னால் பார்க்க முடியவில்லை.

I mean I got Aversion to Live and Die.

என் மருத்துவத்தால், குணமாகாத நோயாளி இறந்தபோது என்னால் தூங்கமுடியவில்லை. இரவெல்லாம் அழுவேன். ஜன்னலை திறந்து வானத்தை பார்த்து, செத்தவனை திரும்பி வா என்று அழைப்பேன்.

Fear

கடைசியில், நானே நோயாளி ஆனேன்.

iatromisia. இது தான் அந்த நோயின் பெயர்.  A dislike or aversion for the medical profession. ஒரு நோயாளி டாக்டர் , எப்படி இன்னொரு நோயாளியை குணப்படுத்துவது?

கூட வேலை செய்யும் நண்பர்கள், இது எல்லோருக்கும் இருப்பதுதான், போக போக பழகிவிடும், கவலைப்பட வேண்டாம் என்றார்கள். என் கவலையெல்லாம், இந்த வலியை நான் பழக்கப்படுத்திக் கொள்ளக்கூடாது என்பது தான். வெறுமையை நாடினேன். என்னால், வேலை பார்க்க முடியவில்லை. இது தொடர வேண்டாம் என்று முடிவெடுத்தேன் ; பணத்தை விட நிம்மதியின் விலை அதிகம். அதனால்தான், பணத்தை அடமானம் வைத்தும், நிம்மதியை வாங்க முடியாது.

வேலையை தூக்கி எறிந்துவிட்டு, வெறுமையை நாடினேன். வெறுமையின்  தலைநகரம் என்னவென்று கேட்டேன் . “ஆர்டிக்” என்று சொன்னார்கள். ஆர்டிக் வேலையில் சேர்ந்தேன்.

15 வருடங்கள் யாருமில்லா வெள்ளை பூமியில், காலம் கரைந்தோடியது. வேலை ஆறு மாதம். தூக்கம் மீதி மாதம். கோடையில், பத்து முதல் பதினைந்து ஆட்கள் தான், ஒரு குழுவில் ஆர்டிக் வருவார்கள். இவர்களுடன் ஒரு மூன்று மாதம் கழியும். பின்பு, மீண்டும் ஒரு பதினைந்து ஆட்கள் வந்து செல்வார்கள். குளிர் காலத்தில், 6 மாதம் Base Camp-ல் தங்கிவிடுவேன். தனி cabin. யாரும் கூட இல்லாமல், பிடித்ததை செய்வேன். இரவும் பகலும் ஒன்றுதான். கடிகாரம் பார்ப்பதில் அர்த்தமில்லை.

நீங்கள் மட்டும் எப்படி தனியாக இருப்பீர்கள்? உங்கள் cabin எப்படி இருக்கும்? எங்கு இருந்தது? என்ன சாப்பாடு?, உடை?, அவசர உதவி? …என்று ஏகப்பட்ட கேள்விகள் ….

? – ? – ?

விட்டு, விட்டு கேட்டேன்…

அவர் சொன்னார் ” இது ஐஸ் வாழ்க்கை. இரண்டு இடங்களில் நான் தங்குவேன். ஒன்று கிரீன்லாந்தின் கிழக்கு கடற்கரை. மற்றொன்று மேற்கு கரை. முன்பே சொன்ன மாதிரி, கிரீன்லாந்து, ஒரு பெரிய உறைபனிக்கட்டியின் மேல் உள்ள, உலகின் இரண்டாவது மிக பெரிய தீவு. அதன் கிழக்கு கடற்கரையில் பூமியில், மிகவும் கடுமையான சூழலில், வாழ்க்கையை தள்ளும் இன்யூட் வேட்டைக்காரர்கள், ஆங்காங்கே சிறிய சமூகங்களாக வாழ்ந்துவருகிறார்கள். எங்கும், செம்மண் கடற்கரைகள் ,சிக்கலான புவியமைப்பியல்; பார்க்க, பார்க்க அற்புதம்.

நான் தங்கி இருந்த கிராமத்தின் பெயர் “நிகொர்னாட்”. இது “நார்னியா” படத்தில் வருவது போன்ற வினோத மனிதர்களை கொண்ட தனி இடம். கிராமத்தின் இருபுறமும் கடல். சிவப்பு, நீலம், பச்சை என, கிரீன்லாந்து அரசு  பழங்குடிகளுக்கு வீடு கட்டி கொடுத்து உள்ளது. இந்த cabin  வீட்டிலில் ஒரு வீடு தான் நான் தங்கியிருந்தது.

என் கம்பெனி,  ஆறு மாதத்திற்கு எனக்கு தேவையான அனைத்தையும் , ஹெலிகாப்டரில் வந்து இறக்கிவிட்டு போகும். அவசர தேவைக்கு ஒரு Satellite போன். மின்சாரம் கிடையாது.

Niaqornat , வட மேற்கு தொலை சமூகத்தின், அப்பட்டமான பனிக் கிராமம்.

Greenland

 

இதை “உலக முடிவில்  ஒரு கிராமம் ” என்றும் அழைக்கலாம் . இந்த இன்யூட் கிராமத்தில்,  குளிர் மட்டுமே வசீகரிக்கும்.  குறுகிய உள்ளூர் பொருளாதாரம்.  கடல், பனி மலை – இதை தவிர இங்கு ஒன்னும் இல்லை . உண்ண , உடுக்க, பொழுதை கழிக்க வேட்டை ஆடுவார்கள். கிராமத்தின் ஒரே எதிரி காலநிலை மாற்றம் மட்டுமே.

Eskimo_Family

 

இந்த கிராமத்தின் மொத்த மக்கள் தொகை, ஒரு மேஜிக் நம்பர்.

மொத்தம் 59 பேர்.

சுமார் நூறு வருடங்களாக 50 இல் இருந்து 75 வரை ஊசலாடி கொண்டு இருக்கும் நம்பர். 200 பேர் வாழ்ந்த கிராமம் இன்று, வெறும் 59 பேர் கொண்ட சமூகமாக சுருங்கி விட்டது.  உண்மையில், இவர்கள் எல்லாரும் ஓரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் .

காரணம் – Inbreeding Depression.  இது என்ன Inbreeding Depression?

பட்டவர்த்தனமாக சொல்லவேண்டும் என்றால் ” மாமன் மகளை மணமுடித்து, மக்கு புள்ளைய பெறுவது தான் அறிவியலில்  Inbreeding Depression ” எனப்படும்.

சொந்தத்தில், மணமுடிப்பதனால் வரும் மரபியல் கோளாறு மற்றும் வீரியத்தன்மை குறைபாடு தான் இது.    இதனால் இவர்கள் தங்கள் தனி தன்மையை இழந்து, உலகில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறார்கள்.

அமேசானியர்களின் காட்டில் ஒரு இடத்தில ஓரே ஒரு பழங்குடி மட்டும் வாழ்ந்து வருகிறார்  என்று  சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.  இந்திய அந்தமான், நிகோபார் தீவுகளில் வாழும் 15 பேர் மட்டுமே இருக்கும் மர்மமான பழங்குடியினர் (The Sentinelese Tribe), உலகத்தின் அனைத்து தொடர்புகளையும்  மறுக்கின்றனர். இதைப்போல், பிரேசில் மற்றும் பெருவில் வசிக்கும் அவா ( The Awá) பழங்குடிகள் என பலவற்றை சொல்லலாம்.  இவர்கள், இன்னும் சில நூற்றாண்டில் அழிந்தே போவார்கள்.

சாகும் போது கூட, உலகம் பெரிது என்று தெரியாமல் சாகும் பாவப்பட்ட ஜென்மங்கள்.

அழியா உலகின், அழியும் குடிகள் இவை. நிகொர்னாட்டும் இதில் இடம் பிடிக்கும்.

http://www.uncontactedtribes.org/

uncontacted-tribe

 

இவர்கள், தினம் செய்வது ஓரே ஒரு வேலை. அது வேட்டை, வேட்டை வேட்டை.

Walrus_hunting

துருவ கரடிகள், சீல்கள் , சுறாமீன்கள், திமிங்கலங்கள் மற்றும் narwhals. எவையும் தப்பாது. இவைகளை, வேகவைக்காமல் உண்ணுவார்கள். இந்த புரதம்தான், முடிவில்லாத இருண்ட குளிர்காலத்தில் சூட்டை கரைக்க பயன்படும்.  கோடை பருவத்தில், உடல் உறவு கொண்டு குளிர் காலத்தில் பிள்ளை பெறுவார்கள். இருளில், தூங்கும் தாய்க்கு குழந்தை பிறக்கும் அதிசியம் இங்கு நடக்கும்.  குழந்தை, மிருகம் போல் தவழ்ந்து சென்று, தாய் மடியில் பால் குடிக்கும். இது, பனிக் கரடிகளின் பழக்கம்.  இவைகளும் குளிரில் குட்டி போட்டு ஸ்ப்ரிங்கில், ஸ்ப்ரிங்காய் வெளியே வருவார்கள்.

வருடத்தில், இரண்டு சாவுகளையும், இரண்டு குழந்தைகளையும் சந்திப்பார்கள்.

பிறந்த குழந்தைக்கு, திமிங்கிலம் வேட்டை ஆட சொல்லிக்கொடுப்பார்கள். இறந்த மனிதனை, படகில் கட்டி திமிங்களுக்கு இரையாக்குவார்கள். இவர்கள், வணங்குவது  இயற்கையை. எல்லாம் வருவதும் அதன் வழியே. போய் சேருவதும் அதனிடத்தே.

Inuits

என் cabin, இந்த கிராமத்தில் தான். இந்த மக்களோடு மக்களாக வாழ்ந்தேன். கோடையில் கப்பல் வரும். கோடையில் வரும் பயணிகளுடன்,  சாகச பனி மலைகளை கடந்து, துருவப்பகுதி மற்றும் fjords உள்ளடக்கிய ஸ்பிட்ஸ்பெர்கன் என்னும் முரட்டுத்தனமான வடமேற்கு கடற்கரையில் பயணிப்போம்.  போகும் வழியில், அற்புதமான பளார் பளார் என்று முகத்தில் அழகால் அறையும் அழகிய கடல் கழிமுகங்கள், 1000 மீட்டர் வரை வளர்ந்த கிரானைட் spiers என்ற விசித்திர இயற்கை வினோதங்களை பார்போம். கப்பல் முன் நின்று அழகை ரசித்த நான் ஒரு நாள், திரும்பி பார்த்தேன்.

15 வருடம் கடந்து போய் விட்டது, அப்போது தான் தெரிந்தது.

ஒரு வருடத்தில், சுமார் 200 பேரை மட்டுமே பார்த்து இருப்பேன். இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒரு முறை ஐஸ்லாந்து சென்று வருவேன். நான் குளிர் காலத்தில் சென்று வருவதால், அங்கேயும் ஆட்கள் வெளியே வரமாட்டார்கள். ஒரு கட்டத்தில், நான் மனிதர்களை பார்ப்பதே அபூர்வமாகிவிட்டது.

வெறுமையால் வாடினேன். இயற்கையை தனிமையில் ரசிக்கலாம். ஆனால் வெறுமையில் ரசிக்கமுடியாது.

இதை சொல்லிவிட்டு, ஒரு பெரு மூச்சி விட்டார்.

எத்தனை, வருடம்தான் இப்படி பனி பார்ப்பதை, பணியாக செய்வது? சொர்கமே என்றாலும், பழக பழக புளித்துதான் போகும். தனியே இருந்து நான் மிருகமாய் மாறுவது எனக்கே தெரிந்தது.

மனிதர்களை பார்க்கவேண்டும் என்று, ஆசை ஆசையாய் இருந்தது. இங்கிலாந்தில் உள்ள நண்பனிடம் கேட்டேன். நான், கூட்டம் கூட்டமாக மக்களை பார்க்கவேண்டும். எங்கு போனால் பார்க்கலாம்? என்று கேட்டேன்.

 

இந்திய நாட்டின் தென்கோடிக்கு போ. காலச்சாரத்தில் சிதையாத, சில கிராமங்கள் இன்றும் உண்டு என்றான்.

பெட்டி படுக்கையுடன் இந்தியா வர முடிவெடுத்தேன்.

வேலையை தூக்கி, மீண்டும் எறிந்தேன். அது, சிதறி ஆர்டிக் பனியில் கரைந்தது.  Niaqornat – விடம் இருந்து விடைப் பெற்றேன்.

சென்னை வரும் விமானத்தில் தூங்கும் போது ” அந்த Niaqornat பழங்குடிகளின் இரவு சோக கீதம் என்னை வாட்டியது”

அந்த பாடல்களின் வரிகள் சொல்வது இதைத்தான் …

ஓரே நோக்கம் வாழ்வது தான்.
இன்பமாக வாழவேண்டும்.
தனிமையை ரசிக்க வேண்டும்.
இயற்கையோடு வாழ வேண்டும்.
மனித மனத்தோடு கலக்க வேண்டும்…

 

நிற்க…..

எனக்கு, இது ஏதோ நம்மூர் சாமியார் சொன்னது மாதிரி இருந்தது

எனக்கு புரிந்து விட்டது, இவர் ஒரு புறாவாக இந்தியா வந்து இருக்க கூடும் …

எந்த புறா? தெரியவில்லையா?

சொல்கிறேன் ….எந்த புறா என்று …..

 

( புறா பறக்கும் …. தொடரும்)