அதற்கு பின், நீச்சல் நண்பரை தினமும் சந்தித்தேன். ஆர்டிக் பற்றி பல மணிநேரங்கள் பேசினோம். நான், அவரிடம் கேட்கவேண்டிய கேள்விகளை மெதுவாக கேட்க ஆரம்பித்தேன். பதில்களும் வர ஆரம்பித்தன.

என் கேள்விகள், உரையாடலை துவங்கும். அவர் பதில்கள், புதிய கேள்விகளை துவக்கும்.

 

கடிகார முள், சுற்றாமல் நின்று வேடிக்கை பார்க்கும்.

ஆர்டிக் பற்றி பேசுவதால், முள் உறைந்து போய் இருக்கலாம்.

 

அவர் பேச்சில் அவ்வளவு சுவாரசியம்.

நேரம் போவது எங்களுக்கு தெரியும். அதனால் தான், 4 மணி ஆனவுடன், மீண்டும் ஒரு மணி நேரம் உரையாடலை நீட்டிப்போம்.

 

அவர், பதில் சொல்லாத formality கேள்வியை மீண்டும் கேட்டேன்.

ஆனால் இந்தமுறை நான் அவரை பார்த்து “நீங்கள் உங்கள் கடைசி காலத்தை எங்கு கழிக்க விரும்புகிறீர்கள்” என்று கேட்டேன்.

 

அவர் என்னைப் பார்த்து சிரிக்காமல் கேட்டார் “You mean, Where I want to Die?”

“காபி குவளையை, அவர் வாய் நன்றாக உறிஞ்சியது என் காதுக்கு கேட்டது .முழுவதும் குடித்தபின்னும் எதற்காக உறிஞ்சுகிறார் என்று மட்டும் தெரியவில்லை. குவளையை தூர எறிந்தார். இந்நேரம், என் கேள்வியை முழுவதும் உள்வாங்கி இருந்தார்”

 

மெதுவாக பேச ஆரம்பித்தார்.

 

சுமார், பதினைந்து இருபது வருடங்கள் என் வாழ்க்கையை ஆர்டிக் மற்றும் சப் ஆர்டிக் துருவத்தில் கழித்து விட்டதால் இந்த கேள்விக்கு சரியான பதில் சொல்ல முடியும் என்று நினைக்கிறேன் என்றார்.

 

நாம் எங்கு, யாருக்கு பிறந்தோம் என்று பிறந்த பின்புதான் பிறர் சொல்லி கேட்போம்.

நாம் எங்கு, எப்படி இறப்போம் என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை.

எனக்கும் அப்படிதான், என்றார்.

 

ஆனால், உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும் நாம் பிறந்த மண்ணிலேயே உயிர் துறக்க ஆசை படுகின்றன. இதற்கு உளவியல் காரணங்கள் பல இருப்பினும், அவை அனைத்தும் எல்லா ஜீவ ராசிகளின் ராசிகளின் மரபணுவில் பதியப் பட்டுள்ளன.

மரபணு (gene) என்பது ஒரு உயிரினத்தின் பாரம்பரிய இயல்புகளை சந்ததிகளினூடாக கடத்தவல்ல ஒரு மூலக்கூற்று அலகாகும்.

இதை முதன்முதலில் கிரிகோர் மெண்டல் (Gregor Mendel) சந்ததி வழி தொடர்பில் பண்புகள் கடத்தப்படுவதைக் கண்டறிந்து உலகிற்கு சொன்னார். யாரும் நம்பவில்லை.

Medal Law

இனப்பெருக்கத்தின் பொழுது பெற்றோர்களிடமிருந்து சந்ததிகளுக்கு மரபணுக்கள் கடத்தப்படுகின்றன என்ற உண்மையையும் சொன்னார் . நம் எல்லோர் பண்புகளும் நம் மூதாதையர்களின் பண்புகளில் இருந்து பெறப்பட்டவை.

நாம் என்று இறப்போம் என்பது வரை, என்றார்.

 

உண்மையில், மரபணுக்களை வைத்து மிக விரைவிலேயே மனிதனின் இறப்பு நேரத்தையும், ஆயுட்காலத்தையும் முன் கூட்டியே சொல்லிவிட முடியும் என்று விஞ்ஞானிகள் தற்போது கூறியுள்ளனர். இது குறித்து அமெரிக்காவின் போஸ்டன் மெடிக்கல் சென்டரில் ( Boston Medical Center) உள்ள நியூ இங்கிலாந்து சென்டினேரியன் ஸ்டடி மையம் ( New England Centenarian Study Center) விரிவான ஆய்வை நடத்தியது. நீண்டகாலம் வாழும் 1,000 பேரின் ஜீ்ன்களை (மரபணுக்கள்) மையமாக வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

நீண்ட நாள் வாழ உதவும் ஜீன்கள் உடலில் இல்லாதவர்களும் சிறப்பான வாழ்க்கை முறை, உடற் பயிற்சி மூலம் தங்கள் வாழ் நாட்களை அதிகரித்துக் கொள்ள முடியும் என்பதும் இந்த ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

ஒரு பத்து நிமிடங்கள் செலவு செய்து கீழ் கண்ட வலைதளத்தில் நேர்மையாக பதில் அளித்து பாருங்கள். சுமாராக நீங்கள் வாழும் வயதை காட்டிவிடும். இதில் கடைசியில் வரும் பதிலை விட, கேட்கப்படும் கேள்விகளில் நிறைய பதில்கள் உள்ளன.

https://www.livingto100.com/

http://www.bumc.bu.edu/centenarian/

நான், அன்று பதிவு செய்து பார்த்ததில், 72 வயது என்று வந்தது.

Life

அடுத்த நாள் அவரை சந்தித்த போது, அவர் என்னைப் பார்த்து சிரித்து கொண்டே கேட்டார் ” Now you know, When you will die?” என்றார்.

72 வயது என்றேன்.

ஏன் அதற்கு மேல் வாழ ஆசை இல்லையா? என்றார். உண்டு தான், ஆனால் எப்படி என்று தெரியவில்லை என்றேன்.

உங்களுக்கு என்ன ஆசை என்றேன்?

I want to Die, When I wish to..

I wish to die, Where I want to…

அவர் சொல்வதின் உள் அர்த்தம் புரிந்தது. இதை இப்படியும் சொல்லலாம்

“வாழும் போது சாக நினைப்பவன் – வாழத் தெரியாதவன்.
சாகும் போது வாழ வேண்டும் என்று நினைப்பவன்
வாழ்க்கையை தொலைத்தவன்”

நான், வாழத் தெரியாதவனும் இல்லை,
வாழ்க்கையைத் தொலைத்தவனும் இல்லை.

என் வாழ்க்கையை தேடுபவன் என்றார்.
அதனால் தான் இந்தியா வந்தேன்” என்றார்

எல்லாம் சரி தான். எனக்கு பதில் புலப்படவில்லை.

 

அது எப்படி தேடிக் கொண்டே சந்தோசமாக இருப்பது?

இந்த கேள்விக்கு பதில் கிடைக்காமல் தான் பல பேர் விடை தேடி அலைந்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்த கும்பலை பார்த்து தான்

“அனைத்துக்கும் ஆசைப்படு” என்று ஒரு சாமியாரும்
“ஜன்னலை திற காற்று வரட்டும்” என்று இன்னொரு சாமியாரும்
வாழும் கலையை காசு வாங்கி கொண்டு சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

அன்று விடைபெறும் போது சொன்னார்,

என்று, எப்படி இறப்போம் என்பதை விட வாழ்வதை பற்றி யோசி
வாழ்வில், பொருள் தேடுவதை விட்டு, வாழ்க்கையை தேடு

வாழ்க்கைக்கு குறிக்கோள் தேவை இல்லை
வாழ்வது தான் குறிக்கோள்

எங்கு வாழ்ந்தால் என்ன?
எப்படி வாழ்ந்தால் என்ன?

நீ எப்படியோ, அப்படியே வாழ்.
ஆனால் வாழ்ந்து முடி.

ஆறடி மண்ணுக்குள் போகும் முன்
உன் நான்கடி வீட்டின் சுவற்றுக்குள் அடிமையாகாமல்
உலகின் காற்றை, சுவாசி.

அவர் என் கண்களுக்கு ஒரு சுவாமியாக தெரிந்தார்.

வீட்டுக்கு வந்தவுடன் என் வலைதளத்தில் என் பெயருக்கு கீழ் நான் எழுதிய TAG LINE வரிகளை மாற்றி எழுதினேன்

“நான் எப்படியோ, நான் அப்படியே” – “I am who I am “

இது கடவுள் மோசஸை பார்த்து கூறியது.

thuvaram purp

 

இதை படிப்பவர்கள் சில பேர் நினைக்கலாம் ” இதை எழுத இவன் என்ன பெரிய பருப்பா என்று”

உண்மைதான்.

நான் வேக வேண்டும் என்றால் – நான் தான் பருப்பாக இருக்கவேண்டும்.

அதன் அர்த்தம் தான் “நான் எப்படியோ, நான் அப்படியே”

நீங்களும் பருப்பாக வேண்டும் என்றால், அதை நான் நினைக்க கூடாது.

நீங்கள் தான் உங்களை பெரிய பருப்பாக நினைக்கவேண்டும்.

“நீ எப்படியோ, நீயும் அப்படியே”

 

நீச்சல் நண்பர், சொன்ன வரிகளில் அன்று எனக்கு புரியாதது இந்த வரிகள் தான் – “வாழ்க்கைக்கு குறிக்கோள் தேவை இல்லை, வாழ்வது தான் குறிக்கோள் “

2013 – ல் நான் நடத்திய ஒரு சமூக கூட்டத்தில் பெரியவர் ஒருவர் சொன்னார்…

 

“என் வாழ்க்கையில் எனக்கு எந்த குறிக்கோளும் கிடையாது

குறிக்கோள் இல்லாமல் வாழ்ந்து வருகிறேன்.

எதை அடையவும் நான் வாழவில்லை.

என் வாழ்க்கையின் வெற்றி அதன் போக்கில் வாழ்வது தான்”

 

சொன்னது பெரியவர் என்றாலும் அவரும் ஒரு சுவாமிதான்,

என்ன?அவர் சொல்லில் பல இரத்தினங்களும் பொதிந்து இருக்கும்.

 

புரிந்தது, அவரின் சித்தாந்தம் ….

8 வருடம் முன்பு நீச்சல் நண்பரிடம் கேட்ட சிந்தாந்தம் தான்.

 

சித்தாந்தம் பேச சாமியாராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. காவி உடையும் தேவை இல்லை, வெள்ளை அங்கியும் தேவை இல்லை. மெய்ஞானம் போதும்.

அவர் பேசி அமர்ந்தபின், எத்துனை பேருக்கு அதன் உள் அர்த்தம் தெரிந்தது என்று எனக்கு தெரியாது.

 

இந்த காலத்தில், பான்ட் சொக்காய் போட்டு வந்து வாழ்க்கைத் தத்துவம் பேசினால் உலகம் ஏற்காது. பத்தில் பதினொன்றாய் சேர்த்துவிடும்.

“நீ நல்லா இருப்பாய்” என்று சாமி முன் நின்று பூசாரி சொன்னால், ஆமாம் சாமிஎன்று தட்டில் பத்து டாலர் போட்டுவிட்டு கை எடுத்து கும்பிட்டு கேட்கும் உலகமிது.

 

சக மனிதனிடமும், வாழ்க்கையின் தத்துவங்களை கற்று தெரிந்து கொள்ள முடியும் என்ற அகண்ட பார்வையை பார்க்கும் போது தான் உலகம் சுருங்கும்.

அகண்ட உலகத்தை சுற்றுவதை விட, சுருண்ட உலகத்தை சுற்றுவது எளிது.

“ஆர்டிக் செல்ல தேவை அகண்ட பார்வை – சுருண்ட உலகம்” என்றார்.

 

இவ்வளவு, விஞ்ஞானமும் தத்துவமும் பேசும் நீச்சல் நண்பரை பார்த்து கேட்டேன் ” நீங்கள் என்ன படித்து உள்ளீர்கள்? என்றேன் ”

நான் ஒரு டாக்டர் என்றார்.

எனக்கு ” தலை” மேலும் கீழும் – சுத்தியது ….

 

 

ஆர்க்டிக் பயணம் தொடரும்….