நேற்று சினிமா நடிகை கரீனா கபூரைப் பார்த்தேன்.

என் வீடு அருகே இருக்கும் லோக்கல் கடையில் நேற்று, ஒரு அதிசியம் நடந்தது.

இந்தி சினிமா நடிகை, கரீனா கபூரை நான் பார்த்தேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள். அவரே தான்.

 

எல்லோரும் ஏதாவது ஒரு சினிமா நடிகரையோ, நடிகையையோ எதிர்பாராத இடத்தில் பார்த்து இருப்போம்.

அதுவும் கனடாவில், கரீனா கபூரை பார்த்தது எனக்கு ஆச்சிரியம் தான்.

நானும் முதலில் நம்பவில்லை. அவர் ஏன் இங்கு வந்தார்? அதுவும் காய்கறி கடைக்கு?

மார்க்கெட்டிங் ஏதாவது செய்ய வந்தாரா? புரியவில்லை…

 

இந்த கடைக்கு (Fruticana) வாரா வாரம், ஒரு முறையாவது சென்று வருவேன்.

இந்த வாரம் போன போது ஒரு அழகான பெண் கண்ணாடி கதவிற்கு பின் புறம் இருந்தார்.

கரீனா கப்பூரைப் போல் தெரிந்தார்.

 

அவர்தானா, இல்லை வேறு எதவாது பஞ்சாபி பெண்ணா என்று சந்தேகம்.

குளிராக இருந்ததால், கண்ணாடியில் சரியாக தெரியவில்லை.

கண்ணாடியை கதவை லேசாக துடைத்துவிட்டு பார்த்தேன்.

 

சந்தேகமாக இருந்தது.

 

அங்கே, காய்கறிகளை அடுக்கி வைத்துக் கொண்டு இருந்த, பஞ்சாபி பெரியவரை அழைத்து வந்து, இது கரீனா கபூரா ? என்று கேட்டேன்.

அவர், அருகே சென்று பார்க்காமல், தொலைவில் இருந்து பார்த்துவிட்டு அநேகமாக அவராக தான் இருக்கவேண்டும் என்றார்.

 

கனடா வந்ததில் இருந்து எந்த ஒரு இந்தி நடிகரையோ அல்லது நடிகையையோ நான் பார்த்ததில்லை.

படத்தில் பார்ப்பது போலவே அழகாவே இருந்தார். திரும்பி பார்த்து சிரித்து கொண்டே இருந்தார்.

 

சிரிப்போ சிரிப்பு. அப்பிடியொரு சிரிப்பு. சிரிப்பதை நிறுத்தவில்லை.

 

ஏனோ, கடையில், யாருமே அவரை கண்டுகொள்ளவில்லை.

எனக்கு இந்தி தெரியாது. தெரிந்து இருந்தாலும், அவரிடம், நான் பேச முடியாது.

நான் பேசி இருக்க மாட்டேன். பேசினால் என்னை பைத்தியம் என்று சொல்லி இருப்பார்கள்.

 

சில வருடங்களுக்கு முன்னால், சிங்கப்பூரில் நான் தங்கிய ஹோட்டலில் தான் சூர்யாவும், ஜோதிகாவும் தங்கியிருந்தார்கள்.

Elevator – லில் சந்தித்தேன், இருவரும் நன்றாக பேசினார்கள்.

 

ஆனால், இங்கே கரீனா கபூர் பேசமாட்டார். எனக்கு தெரியும்.

 

எனக்கு கடுப்பு தான்.

தேவையில்லாமல் ஏன் இங்கு வந்து ஏன் பல்லை இளித்து கொண்டு இருக்கிறார்?

அதனால், ஒரு முடிவுக்கு வந்தேன்.

 

சட் என்று, கதவை திறந்து, யாரும் பார்க்காத போது

அவரை மெதுவாக கீழே தள்ளி விட்டுவிட்டேன்.

 

சத்தம் இல்லாமல் சரிந்து காய்கறிகள் நடுவே விழுந்தார்.

திரும்பி பார்க்காமல் நான் வேகமாக, பில் போடும் இடத்துக்கு வந்து விட்டேன்

 

நல்ல வேலை யாரும் பார்க்கவில்லை.

அவருக்கு வலித்து இருக்குமோ? இருக்காது.

என்ன இருந்தாலும் தள்ளி இருக்கக் கூடாதுதான்.

 

பில் போட்ட பின்பு தான் பார்த்தேன்

அடியேதும் படவில்லை.

கரீனா கபூர், முதல் மாதிரியே

சிரித்து கொண்டுதான் இருந்தார்

Frozen பரோட்டா கவரில்

Made In India என்று எழுதி இருந்தது.

 

கடையை விட்டு வரும் போது கூட

Frozen பரோட்டாவிற்கும், கரீனா கபூருக்கும்

உள்ள தொடர்பை மட்டும் புரிந்து கொள்ள முடியவில்லை.