அந்த சனிக் கிழமையும் வந்தது.

எனக்கு முன்னமே, ஐஸ்லாந்துகாரர் குளத்தில் நீந்திக்கொண்டு இருந்தார்.

இரண்டு நாடுகளையும் பற்றி படித்ததை, என் மூளை மனப்பாடம் சரியாக செய்ததா, என்று என் வாயை விட்டு கேட்க சொன்னேன்.

வாய், மூளையுடன் கேட்டு சரிபார்த்து எனக்கு முணுமுணுத்து சொன்னது. எல்லாம் சரி, நீரில் குதி என்றது.

வாய் சொன்னதை கேட்டு, மூக்கை பொத்தி, கேள்விகளுடன், குளத்தில் குதித்தேன்.

 

முங்கி, நான் வெளியே வரும் போது நண்பர் நீருக்குள் சென்றார்.

வெளியே வருவார், என்று காத்து இருந்த எனக்கு, சில நிமிடங்களில் கழித்து குளத்தின் மறுகரையில் தரிசனம் தந்தார். முதலில், வழுக்கை தான் தெரிந்தது. அது வயது ஐம்பது என்று ஊர்ஜிதம் செய்தது.

நமக்கு நடக்க வேண்டும் என்று ஒன்றை நினைக்கும்போது, அது தற்செயலாக நடக்காவிட்டாலும், வேண்டுமென்றே நடக்கவில்லை என்று நினைப்பது தான் மனித மனம். அவர் என்னை தவிர்க்கிறார் என்று மனம் சொன்னது.

மூளையும், வாயும் கூட்டணி சேர்ந்து இல்லை என்று சொன்னது.

 

எவ்வளவோ யோசிக்கும், மூளைக்கும் – கிழிய கிழிய பேசும் வாயிக்கும் உடலில் எங்கு மனம் ஒளிந்து கொண்டு இருக்கிறது என்று மட்டும் தெரியாது.

 

அவரை தொடர்ந்தேன். இப்பொது மனிதர் குளக் கரையில் தன் பிள்ளைகளுடன் அமர்ந்து இருந்தார்.

நீந்தி அருகே சென்ற என்னைப் பார்த்து : How are you doing? என்றார்.

 

வாயும், மூளையும் ஏற்கனவே கூட்டணியில் இருப்பதால், காது கேட்கவில்லை. அவருக்கு பதில் சொல்லாமல் ..

வாய், முதல் கேள்வியை மூளை சொல்லாமலே கேட்டது.

நீங்கள் ஏன் அவ்வளவு அழகான நாட்டில் இருந்து இந்தியா வந்தீர்கள்?

 

இந்த கேள்வியை அவர் எதிர் பார்த்து இருப்பார் போல …

மெல்ல சிரித்தார். பதில் ஏதும் சொல்லவில்லை.

குழந்தைகளை பார்த்து மீண்டும் குதிக்க ரெடியா என்றார்.

 

எனக்கு புரிந்தது. இது பார்மாலிட்டி சிரிப்பு. ஏன் என்றால், நான் கேட்ட கேள்வி அப்பிடி.

 

யோசித்து, பார்த்தேன்…எத்தனை பேர் இதே கேள்வியை இவரிடம் கேட்டு இருப்பார்கள்?

எதனை பேருக்கு இந்த மனிதர் ஒரே பதிலை திரும்ப திருமப் சொல்லி இருப்பார்? ஒரு காலத்தில் வெறுத்து விடும்.

 

யோசித்து பாருங்கள்.

 

ஒரு வீட்டில் இழவு நடந்து இருக்கும். இறந்தது, முதிய பாட்டி என்று வைத்து கொள்வோம்.

இழவுக்கு, வந்தவர்கள் ஒவ்வருவரும் பாட்டி எப்படி இறந்தார் என்று பாட்டியின் மகனிடம் கேட்பார்கள்.

அவர், சுமார் 12 மணி நேரத்தில் நடந்தவை அனைத்தையும் கேட்ட முதல் நபருக்கு சொல்லுவார்.

கேட்டவர் தொலைபேசியில் அனைவருக்கும் சொல்லிவிடுவார். எல்லோரும் இழவுக்கு, மாலையுடன் வருவார்களோ இல்லையோ, கேள்வியுடன் வருவார்கள்.

மீண்டும், அதே கேள்வியை அடுத்து வருபவரும் கேட்பார். 12 மணி நேர கதை, சுருங்கி இப்போது 11 மணி நேர கதை சுருக்கமாக இருக்கும்.

அதை நீடிக்க அனைவரும், துணைக் கேள்விகளையும், தங்கள் விருப்பு வெறுப்புகளையும் கேள்வியாக மாற்றி கேட்பார்கள்.

இழவு வீட்டில் சில பேர் கேட்கும் கேள்வியில் இன்னொரு இழவு விழும் அளவு இருக்கும்.

இது இப்படியே தொடர்ந்து, பாட்டி பாடையில் ஏறிய பின்னரும் கடைசி பேருந்தில் ஓடி ஏறி வந்த தூரத்து விருந்தாளி, பாட்டி சாவும் போது நீங்க எங்க இருந்தீங்க என்று கேட்பார். அப்போது, அந்த மகன் பேசமுடியாமல் ஒரு சிரிப்பு சிரிப்பார்.

அது, விரக்திக்கும் – இயலாமைக்கும் இடையே இருக்கும்.

அப்போது, முகத்தை திருப்பிக்கொண்டு சொல்வார்.

” ஹ்ம்ம், என்னத்த சொல்ல, நல்ல சாவு. சரி, சரி , ஏம்மா சாப்பாடு ரெடியா? அண்ணன் வந்து இருக்காரு, குளிச்சிட்டு சாப்பிடுங்க” என்று சொல்லுவார்.

இது இழவு வீட்டில் மட்டும் இல்லை, நீங்கள் ஆஸ்பத்திரில் படுத்து இருந்தாலும் ஒரே கேள்வியை கேட்டு உங்களை பாடாய் படுத்துவார்கள்.

ஆங்கிலத்தில் – Formality Gesture – என்பார்கள். கேட்க வேண்டும் என்பதற்காக கேட்பது. சொல்லவேண்டும் என்பதற்காக பதில் சொல்வது.

ஐஸ்லாந்துகாரரிடம் நான் கேட்டதும் Formality Question தான். என், ஆர்வத்தை எப்படி அவருக்கு புரிய வைப்பது?

தமிழனுக்கு, டாஸ்மார்க் வேலை செய்யும். வெள்ளைகாரனுக்கு, ஒரு குவளை கொட்டை வடி நீர் போதும் ( Coffee ).

Why don’t we have a Coffee? என்றேன்.

 

மாடு, தலை ஆடிக் கொண்டே, கம்பங் கொல்லைக்கு வந்தது.

Caffeine – ரத்தத்தில் கரைய கரைய, ஐஸ்லாந்தும் உருகியது.

மெதுவாக பேச ஆரம்பித்தார்.

நான், ஐஸ்லாந்தில் பிறந்து வளர்ந்தேன். என் வீடு புல் வெளியில் இருப்பது, ஒரு புள் வெளியில்தான். ஜன்னலை திறந்தால், வெளியே ஒரு புறம் பனி ஆறு ஓடும். மறுபுறம் எரிமலை வருடத்தில் சில நாள் புகையை கக்கும்.

 

I mean it the island of contrasts, where heaven and earth meet, and where the Sagas of the Vikings were written, a land of glaciers, erupting volcanoes and the magnificent midnight sun.

 

அவர், சொன்னதை கற்பனை செய்து பார்த்தால், அவர் சொர்க்கத்தில்தான் பிறந்து உள்ளார். நாம், இறந்த பின்பு தான் அங்கே போக நினைப்போம்.

” எனக்கு அங்கு எல்லாம் இருந்தது – தேவையான பணம், நல்ல வீடு, வந்தேறிகள் சேர்த்து வைத்த சொத்து “. விருப்பத்தோடு வேலைக்கு செல்ல நினைத்தேன்.

கிரீன்லாந்தில் ஒரு கம்பெனி என்னை வேலைக்கு அழைத்தது. அது, ஆர்டிக் பயண ஏற்பாடு செய்யும் கிரீன்லாந்து கம்பெனி. வேலைக்கு, விருப்பமாய் போய் சேர்ந்தேன்.

ஆர்டிக் செல்ல வரும் பயணிகளுக்கு, பயண ஏற்பாடு, தேவையான பொருள்கள் மற்றும் அனைத்து தேவைகளையும் கூட இருந்து பூர்த்தி செய்து, பின்பு அவர்களை வடக்கே கூட்டி ஆர்டிக் செல்லவேண்டும். 15 நாள் முதல் 30 நாள் வரை, ஆர்டிக் பெருங்கடலில் பயணிக்க வேண்டும்.

Expedition

அது யாரும் இல்லா, வெள்ளை பூமி. ஆறு மாதம், சூரிய தரிசனம். ஆறு மாதம் முழுவதும் இருட்டு. ஒரு குழுவில் அதிக பட்சம் 10-15 பேர் தான். பாதி பேர், பாதி வழியில் திரும்பி விடுவர்.

மீதி உள்ள 5 -6 பேருடன் பயணிக்க வேண்டும். துணைக்கு, பனி கரடிகள் ஏராளம். யாரும், இல்லா வான் வெளியை பார்த்து ஊளை இடும். கரடி, எப்படி ஊளை இடும் என்று யோசனை செய்ய வேண்டாம்.

 

ஊளை இடும். நம்புங்கள். ஏன் என்றால், நானும் அதை நம்பவில்லை.

நம்பினால் தான் காபிக்கு காசு கொடுப்பேன் என்றார். நம்பிவிட்டேன்.

 

” எத்தனை நாள் வேலை பார்த்தீர்கள்?” என்று கேட்டேன்.

15 வருடம் என்று சொல்லும் போது, அவர் முகத்தில் ஒரு பெருமை தெரிந்தது.

அவர் என் முகத்தை பார்கவில்லை. பார்த்து இருந்தால் தெரிந்து இருக்கும் ” பொறாமை” முகம் எப்படி இருக்கும் என்று.

அன்று அவர் விவரித்ததை என் மனம் தமிழில் இதயத்தில் பதித்தது…

 

“ஆர்டிக்கில் தான் பூமி தாய் சிரித்து கொண்டு இருப்பாள்.
யாரும் இல்லா அண்ட வெளியில், பனிப் பாறைகள்
உருகி உடையும் சத்தத்தில் பனி கரடிகள் நீந்தி சென்று இரையை தேடும்.

கடல் நீர், உவர்ப்பு என்னும் எண்ணம் மாறும்,
சூரிய ஒளி, கடல் நீரில் பச்சை வண்ணத்தை
ஒளிக் கற்றைகளை கொண்டு வரையும்
பாறைகள் தங்கம் போல் ஜொலிக்கும்

யாரும் இல்லா வெள்ளை வனத்தில்
சரஸ்வதி தாய், வீணை வாசிப்பாள் –
இனம் புரியாத ஒரு ஒலியை காதுகள் கேட்கும்

நீ எல்லாவற்றையும் துறந்து –
அங்கேயே மடிய தூண்டும்

நீ எங்கு மடியவேண்டும் என்று விரும்புகிறாயோ
அதுவே சொர்க்கம்”

 

அன்று, முடிவெடுத்தேன் …நானும் சொர்கத்தை பார்க்கவேண்டும்.

 

அடுத்து, ஏழு வைகுண்ட எகாதேசிகள், திருவரங்கத்தில் வந்து போயின.

மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் இந்துக்களால் வைகுண்ட ஏகாதசி எனக் கொண்டாடப்படுகிறது.

இது கிரெகொரியின் நாட்காட்டியில் திசம்பர்-சனவரி மாதங்களில் வரும்.

வைணவர்கள் தாம் வழிபடும் திருமாலின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் கதவுகள் அன்று திறக்கப்படுவதாக நம்புகின்றனர்.

 

எட்டு ஆண்டுகள் கழித்து, அதே மார்கழி மாதத்தில் ….

எனக்காக வடக்கே வெள்ளை குதிரையில் (Whitehorse) திரு அரங்கபெருமான்,

என்னை சொர்கத்துக்கு அழைத்து செல்ல காத்து இருப்பார் என்று எனக்கு அன்று தெரியவில்லை.