மாஸ்டர், நான் இங்க உறுப்பினர்.

நீச்சல் எனக்கு வரல, அதான் இங்க …..

நான் சொல்வது, மாஸ்டர் காதுக்கு விழவே இல்லை. அவர், மும்முரமாக தொலைகாட்சியை பார்த்து கொண்டு இருந்தார்.

நான், மீண்டும் மாஸ்டர் என்று அழைக்க….

செம, அடி…இப்பிடித்தான் அடிக்கணும், சூப்பர்.

வாங்க, வாங்க, இந்த Shot- டை பாருங்க, எப்படி அடிச்சி ஆடறான் டோனி என்றார்.

நானும், சூப்பர் சூப்பர் என்று Tread Mill மேல் ஏறி நின்று கிரிக்கெட் மேட்ச் பார்க்க ஆரம்பித்தேன். சுமார், 30 நிமிடங்கள் கழித்து, ஆட்டம் முடிந்தவுடன், என்னை பார்த்து, சொல்லுங்க, உங்க உடம்பில் எதை குறைக்கனும்?

என் கொழுப்பை தான், மாஸ்டர் என்றேன்.

என்னை, ஏற இறங்க பார்த்தவர், சரி இது ஒன்னும் பெரிய பிரச்னை இல்லை. இங்க உள்ள மில் ஒனர் பசங்க எல்லாம் நம்ப Students தான். முக்காவாசி பசங்களுக்கு நான் தான் மாஸ்டர். நீங்க கவலைபடாதீங்க, பாத்துக்கலாம் என்றார்.

மணி நாலு ஆச்சு, வாங்க சாப்பிட்டுகிட்டே பேசுவோம் என்றார்.

இருவரும், அங்கே உள்ள மினி ரெஸ்டாரன்ட் முன் அமர்ந்தோம். மனுஷன், திரும்பவும் கிரிக்கெட்டை பேச ஆரம்பித்தார். அவர் பேசி முடிக்கும் போது, நாலு வெங்காய பஜ்ஜி, ஒரு தட்டு பகோடா, ஒரு டீ – கடையில் இருந்து என் வயிறுக்கு இறக்குமதி ஆகி இருந்தது.

மீண்டும், Tread Mill – பக்கம் வந்தவர், ஒன்னும் கவலை படாதீங்க ….நாளைக்கு சரியா மூணு மணிக்கு சந்திப்போம்னு சொல்லிட்டு, மேட்ச் ஹை லைட்ஸ் பார்க்க ஆரம்பித்துவிட்டார்.

நானும், மயிலை நீரில் நீந்த விட்டுட்டு மூணு மணிக்கு மாஸ்டரை பார்க்க வந்துவிடுவேன். இரண்டு பெரும் Tread Mill மேல ஏறி நின்று பேசுவோம். கிட்டத்தட்ட, லோக்கல் அரசியல் முதல் ஐநா சபை வரை விவாதிப்போம்.

டிவி ஒரு பக்கம், பஜ்ஜி ஒரு பக்கம். உடற் பயிற்சியை தவிர, மற்ற அனைத்தும் நடந்தது. ஒரு மாதத்தில் இரண்டு 2 KG ஏத்தி விட்டார்.

நான், இது சரிபட்டு வராது மாஸ்டர். நான் வேற எதாவது முயற்சி செய்கிறேன் அன்று கூறிவிட்டு அடுத்து உள்ள Squash Court பக்கம் சென்றேன்.

Squash Court – குழிக்குள் இருக்கும். படிக்கட்டில் இறங்கி மெதுவாக சென்று பார்த்தேன்.

எல்லாருமே 60+. White and White.

கண்ணாடி டப்பா மாதிரி ஒரு இடம். இரண்டு கிழடுகள் ஒரு சின்ன பந்தை ஓடி ஓடி மூச்சிரைக்க அடித்து துவசம் செய்து கொண்டு இருந்தன. ஏன் அடிக்கிறோம், எடுத்து அடிகிறோம்னு புரிஞ்சிக முடியாத விளையாட்டு.

மொத்தமா, 4 பேர் தான் இருந்தாங்க.

சிறுபிள்ளைதனமா இருந்தது. ஆனா பெருசுங்க ஆடுதுங்க.

இந்த ஆட்டத்தை ஒரு முறை தூர்தர்சனில் பார்த்து இருக்கிறேன். Janser Khan, Jahangir Khan னு இரண்டு பாகிஸ்தானி ஆட்டக்காரர்கள் வியர்த்து விருவிருக்க ஆடுவார்கள். அதோட சரி, அப்புறம் இப்பதான் பார்க்கிறேன்.

அமர்ந்து இருந்த, பெருசு கிட்ட போய் கேட்டேன். “இவங்க ரெண்டு பேரும் யாருன்னு?

இரண்டு பேரும் மில் ஓனருங்க, பெட் கட்டி ஆடிகிட்டு இருங்காங்க.

இது வேலைக்கு ஆகாது. அங்கிருந்தும் கிளம்பினேன்.

அடுத்து, டென்னிஸ். மயிலு கொஞ்ச நாள் டென்னிஸ் பழகி கொண்டு இருந்தான். அங்கேயும் ஒரு மாஸ்டர். அவர் பெயர் முஸ்தபா.

அவரிடம் சென்று, டென்னிஸ் சேரலாமா என்று கேட்டேன். என் தொப்பையை பார்த்துவிட்டு, இது ஓடி ஆடி விளையாடனும். போய் தொப்பையை குறைச்சிட்டு வாங்க என்றார்.

மீண்டும், நீச்சல் குளத்திற்கு திரும்பினேன். வேண்டா வெறுப்பாக, ஒரு மூலையில் கம்பியை பிடித்து கொண்டு நீந்துவது போல் பாவ்லா செய்து கொண்டு இருப்பேன்.

இப்பிடியாக ஒரு வாரம் ஓடியது. காசு ஏற்கனவே, கட்டிவிட்டதால் வேற வழி இல்லாமல் மூன்று மணிக்கு தினமும் ஆஜர். இப்பிடியாக ஒரு மாதம் கழிந்தது.

பின்பு ஒரு தினம், அதிசியமாக ஒரு வெள்ளைகாரர் குளத்தில் இரண்டு பசங்களுடன் இறங்கினார். 12 அடியில் தான் நீந்துவார். அவர் கூட்டிவந்த இரண்டு பசங்களும் 12 அடியில் குதித்து அட்டகாசமாக நீந்தி என் வயிறு எரிச்சலை கூட்டினர்.

அவர் கூட்டிவந்த 2 பசங்களில் ஒன்று பையன், இன்னொன்று பெண். இருவர்க்கும் 7 அல்லது 8 வயதுக்குள் இருக்கும்.

பையன் வெள்ளைக்காரன் போல் இருப்பான். பெண் சாத் சாத் ..தமிழ் கலர்.

மெதுவாக தத்தி, தத்தி நீந்தி அவரிடம் சென்று ஹாய் சொன்னேன்.

நான் வெள்ளைகாரனுடன் பேசுவதை பார்த்த மயில், நீந்தி என் அருகே வந்தது.

அவர், தன்னை அறிமுகம் செய்து கொண்டார். My name is Auðbjǫrg Abraham, from Iceland என்றார்.

I am Sridar, from Tamil Land என்றேன்.

பரவாயில்லை, நீங்க தமிழ் பேசுங்கோ என்னக்கு புரியும் என்றார்.

தண்ணீரில் எனக்கு தூக்கிவாரி போட்டது.

உங்களுக்கு தமிழ் தெரியுமா என்று கேட்டேன். என் மனைவி தமிழ் தான்.

இப்பொது அந்த பசங்க ஏன் Black and White என்று Genetics என் மண்டையில் ஊசி வைத்து குத்தியது.

இங்க நான் ஒரு NGO நடத்திட்டு வரேன். இந்தியா வந்தேன், பிடித்து போயிடிச்சு. அதான் கல்யாணம் செஞ்சிட்டு செட்டில் ஆயிட்டேன் என்றார்.

உங்க ஊருக்கு போறதுண்டா என்று கேட்டேன். ஹ்ம்ம் ….இந்த பசங்களுக்கு Iceland – சுத்தி காட்ட கூட்டிட்டு போனதுண்டு.

Iceland – இல் எந்த ஊர் என்று கேட்டேன்.

Iceland Capital is where i born and brought-up. Do you know what is the capital of Iceland ?

இதை அவர் தமிழில் கேட்டு இருந்தாலும் எனக்கு தெரிய வாய்ப்பில்லை. எனக்கு தெரியாது என்று சொல்ல வாய் திறக்கும் முன், அதுவரை அமைதியாய் இருந்த மயில் கூவியது.

ரெய்க்ஜாவிக் ( Reykjavik ).

Very good என்றார். சத்தியமாக நான் முதன் முதலில் அப்போதுதான் இந்த பெயரை கேட்டேன்.

மயிலுக்கு நான் வாங்கி கொடுத்த கம்ப்யூட்டர் மற்றும் கூகிள் எர்த் மானத்தை காப்பாற்றியது.

அடுத்து, இது எது பக்கத்தில் உள்ளது என்றேன். Greenland பக்கத்தில் உள்ளது என்றார்.

Greenland – Iceland

எங்கும் பச்சையாக இருப்பதால் Greenland என்றும் – எங்கும் பனியாக இருப்பாதால் Iceland என்றும் ஊகித்து கொண்டு பேச்சை கொடுத்தேன்.

Iceland – இல் முழுதும் பனியாக இருக்குமே …எப்படி சமாளிப்பீங்க என்றேன்.

சிரித்து கொண்டே சொன்னார்… Iceland – முழுவதும் பச்சை பசேல் என்று இருக்கும்.

அப்ப, Greenland?

முழுவதும் பனியாக இருக்கும்.

Greenland

Greenland

Iceland

iceland

மொத்த உலக ஞானமும், முழு மானத்தோடு உடம்பை விட்டு போனது.

நீச்சல் தெரியாமலேயே, உடல் தண்ணீரில் மிதக்க ஆரம்பித்தது.

( தொடரும் )