ஒரு நாள் நானும், மயிலும் நீரில் நீந்திக் கொண்டு இருந்தோம்.
சுமார் ஏழு வருடங்களுக்கு முன், ஒரு நாள் நானும் என் மகனும் கோவையில் நீச்சல் குளத்தில் நீச்சல் பழக முடிவெடுத்தோம். என் மகனின் செல்ல பெயர் மயிலு. அவனை, என் மனைவி அப்படித்தான் அழைப்பார்.
அது ஒரு தனியார் நீச்சல் குளம். நாங்கள் நீந்தி பழக வேண்டிய இடம், குளத்தின் கீழ் பாதி. நான்கு அடி ஆழம். என்னால் நின்று கொண்டே நீந்த முடியும்.
மயிலு இப்போது தான் நீரில் முதல் முறையாக நீந்த முயற்சிக்க போகிறது.
மயிலுக்கு சொல்லிகொடுக்க ஒரு வாத்தி இருந்தார்.
அவர் பெயர் மாஸ்டர். குளத்தில் நீச்சல் பயிலும் அனைத்து பொடிசுகளும் அவரை மாஸ்டர் என்று தான் அழைக்கும். மாஸ்டருக்கு சொந்த ஊரூ கேரளம். நானும் அவரை மாஸ்டர் என்றே அழைப்பேன்.
மாஸ்டர் நீச்சல் சொல்லி கொடுக்கும் அழகே அலாதி. எப்படி எனக்கு தெரியும் என்றால், நானும் மயிலுடன் நீச்சல் பழக அவரிடம் தான் சேர்ந்தேன்.
எங்க வகுப்பு மத்தியம் மூன்று மணிக்கு. மொத்தம் 13 பேர் (10 குழந்தைகள், ரெண்டு 15 வயசு பசங்க அப்புறம் ஒரு எருமை மாடு).
முதல் நாள் மயிலுடன், நானும் குளத்திற்கு போனேன். மாஸ்டர் நீச்சல் குளத்தில் நின்று கொண்டு இருந்தார். எல்லா குழந்தைகளும் பல நாட்களாக வருவதால் அனைவரும் குளத்தில் குதித்து தயாராக இருந்தனர்.
நான் இறங்க தயாராக மயிலை தேடினேன். மயில் தப்பித்து விட்டது.
தண்ணீர் பயத்தில், மயில் மாடி ஏறி பறந்து கழிவறையில் ஒளிந்து கொண்டது. தேடி போய் மயிலை பிடித்தேன். மயில் அழுதது. அடம் பிடித்து ஆர்பாட்டம் செய்தது. நீரில் நீந்த முடியாது என்று பிடிவாதம் செய்தது.
பிடித்து தர தரவென மயிலை இழுத்து வந்தேன். மாஸ்டர் முறைத்து கொண்டு நீரில் நின்று கொண்டு இருந்தார்.
Come On – குதி என்றார். நான் மயிலை பார்த்து Come On – குதிக்கலாம் என்று சொல்லிகொண்டே குப்புற குதித்தேன், நான்கடி ஆழம் என்பதை மறந்து.
கால் முட்டி, குழந்தைகள் எல்லாம் பயந்து கத்துவது எனக்கு கேட்கவே இல்லை. ஏன் என்றால், என் தலை மட்டும் தண்ணீருக்கடியில். கால் கைகள் எல்லாம் வெளியே நீச்சல் செய்து கொண்டு இருந்தன.
நான்கடி தண்ணீரில் மூச்சு முட்டி வெளியே வந்து மயிலை தேடினேன். மயில் தண்ணீரில் குத்திகவே இல்லை.
நின்று கொண்டு என்னை பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தது.
ஒன்று மட்டும் புரிந்தது. மாஸ்டர் செம கடுப்பில் இருக்கிறார் என்று. அவரிடம் மண்ணிப்பு கேட்டுவிட்டு, பின் மயிலை தண்ணீரில் இறக்க தாஜா செய்ய ஆரம்பித்தேன்.
ஒரு வாரம் வரை மயில் குளக்கரைக்கும், கழிப்பறைக்கும் பறந்து, பறந்து என்னை பாடாய் படுத்தியது.
பத்து நாள் போராட்டத்தின் கடைசியில், மயில் தண்ணீரில் தன் காலை பதித்தது.
மாஸ்டர் தன வித்தையை ஆரம்பித்தார். மாஸ்டரின் விதிகள் இரண்டு. மற்ற இரண்டு விதிகள் என்னை சேர்ந்தது.
முதல் விதி:
மிதக்க வேண்டும். நம் இரண்டு கைகளையும் குளக் கரையை பிடித்துக்கொண்டு கால்களை மட்டும் அடித்துக்கொண்டு நீந்த வேண்டும்.
இரண்டாம் விதி:
முதல் விதி பழகிய பின்பு, இதை பழக வேண்டும். இரண்டு கைகளை நீட்டியவாறு, தலையை தண்ணீருக்குள் வைத்து கால்களை வேகமாக இடுப்பில் இருந்து துடப்பை போல் அடிக்க வேண்டும்.
மூன்றாம் விதி:
இது நானே தெரிந்து கொண்டது. இரண்டு விதிகளையும், மாஸ்டர் தண்ணீருக்கு வெளியில் இருந்து மட்டும் தான் சொல்லி கொடுப்பார். அவர் நீச்சல் குளத்தில் இறங்க மாட்டார். காலை குழுவிற்கு மட்டும் தான் தண்ணீரில் இறங்கி சொல்லிக் கொடுப்பார், மதியம் குளக் கரையில் நின்று கொண்டு கத்துவார். நாம் தலையை தண்ணீருக்கு வெளியில் நீட்டி காது கொடுத்து கேட்டு புரிந்து கொண்டு நீந்த வேண்டும்.
தலை விதி:
மூன்று நாட்களில் எருமை மாடு குளக் கரையில் வெங்காய பஜ்ஜி தின்று கொண்டு இருந்தது. நீச்சலே வேண்டாம் என்று ஒதுங்கி விட்டேன்.
வீட்டில் சண்டை பிடித்து 35,000 ரூபாய் ஆண்டு சந்தா வேறு கட்டி இருந்தேன். திட்டு வாங்க முடியாது. நீச்சலுக்காக புது உள்ளாடைகள் மற்றும் மேல் ஆடைகள் எல்லாம் வாங்கி வீணாக போனதா என்ற ஏக்கம்.
என் பார்வை உடற் பயிற்சி கூடத்திற்கு திரும்பியது. இந்த தனியார் நிறுவனத்தில் எல்லாம் ஓரே இடத்தில இருப்பது தான் வசதி.
Tennis, Squash, Badminton, Gym எல்லாம் இருந்தது.
கூடவே பஜ்ஜி, பகோடா மற்றும் பிரட் ஆம்லெட் எல்லாம் கிடைத்தது.
நினைந்த அரைக்கால் சட்டையுடன் உடற் பயிற்சி கூடத்திற்கு சென்றேன்.
யாருமே இல்லை. மெதுவாக உள்ளே சென்று பார்த்தேன்.
கட்டையாக, குட்டையாக ஒருவர் இருந்தார்.
அவர் ஓடிக்கொண்டு இருந்த தொலை காட்சியை பார்த்து கொண்டு இருந்தார்.
அருகே சென்று ,என் பெயர் ஸ்ரீதர், உங்க பெயர் என்ன? என்று கேட்டேன்.
என் பெயர் “மாஸ்டர்” என்றார்.
தொடரும்….
______________________________________________________________________________________________________
இந்த பயண கட்டுரையை படிக்க விரும்புவோர் …..கீழ் கண்ட இணைப்பில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்.
https://sridar.com/reach-me/subscribe/
நன்றி
ஸ்ரீதர் ஏழுமலை
Leave A Comment