பொங்கல் என்றால் எனக்கு நினைவுக்கு வருவது மாட்டுப் பொங்கல்.  

என் சொந்த கிராமம் நாங்கள் வசித்த  ஊரில் இருந்து 15 km தொலைவில் இருக்கிறது. 

எங்கள் தோட்டத்தில் அப்போது விவசாயம் அமோகம். மூன்று போகமும் நெற் பயிர்கள் காற்றில் வளைந்தாடும். பச்சை மஞ்சள் என கூப்பாடு போடும்.

நீர் வற்றா கிணறு. அதன் பெயர் ” ஆச்சாரி கிணறு” – (அந்த நிலத்தை ஒரு ஆசாரியிடம் இருந்து வாங்கியதால் கிணறுக்கு ஜாதியின் பெயர்). ஜாதியின் பெயர் வைத்ததால் என்னோவோ தண்ணீருக்கு அடி தடி நடக்கும்.

அது ஊரின் ஓரே வற்றா கிணறு. வறண்ட பூமியில் சொர்க்கமாய் தண்ணீர் வரும். பூமியின் கீழ் நீரோட்டம் ஓடுவதாய் பல Village விஞ்ஞானிகள் கையில் குச்சி வைத்து ஆரூடம் சொல்வார்கள்.

தோட்டத்தில் வேலை செய்யும் உழைப்பாளியின் பெயர் “சின்ன பையன்”. இவர் உண்மையாகவே சின்ன பையன் தான், உயரத்தில். சுமார் 4 அடி இருப்பார். கடின உழைப்பாளி. நேர்மையானவர். என் தந்தையின் பதினைந்து வருட அப்ரடீன்சு.

சுமார் எட்டாவது படிக்கும் வரை எங்கள் தோட்டத்தில் மாடுகள் இல்லை. என் தந்தையின் Rajdoot மோட்டார் பைக்கில் எங்களை அழைத்து போய் பொங்கல் வைத்துவிட்டு சாயும் காலம் கூட்டி  வருவார்.

இந்த வருடம் எங்கள் தோட்டத்துக்கு 2 புதிய வரவுகள்.

“நம்ப 2 மாடு வாங்கியிருக்கோம்” என்று என்  தந்தை சொல்லும் போது, பரவசமானேன். ஏன் என்றால், இந்த மாட்டு பொங்கலில் எங்கள் தோட்டத்தில் மாடு இருக்கும்.

மாட்டுப் பொங்கல் அன்று மாட்டுடன் விளையாடலாம் என்று எண்ணம். மாட்டுக்கு நான் வண்ணம் பூச போகிறேன் என்று இறுமாப்பு.

எந்த வண்ணம் பூசவேண்டும் என்று முடிவு செய்து மஞ்சள், சிகப்பு, பச்சை என செட்டியார் பெயிண்ட் கடையில் அடம் பிடித்து வாங்க வைத்தேன்.

ஒன்றுக்கு மூன்று தூரிகைகள். எல்லாம் தயார். கலையில் மாட்டுப் பொங்கல்.

வழக்கம் போல் மாட்டுப் பொங்கல் அன்று Rajdoot மோட்டார் பைக் கிராமம் நோக்கி பறந்தது.

மஞ்சள் பையில், வாங்கிய எல்லா பெயிண்ட் டப்பாகள் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொண்டேன் .

இன்று, நான் தான் மாட்டு கொம்பிற்கு வண்ணம் பூச போகிறேன். கை பர பரத்தது.

மோட்டார் பைக், தனது சுவாசத்தை கிராமத்தில் எங்கள் தோட்டத்தில் நிறுத்தியது.

எனக்கு மாட்டை பார்க்க ஆவல் பற்றிக் கொண்டது. மாடு எங்கே என்றேன்.

“டோய் சின்ன பையா ” மாட்டை அவுத்து கூட்டிட்டு வாடா” என்று என் தந்தை சத்தம் போட, சின்ன பையன் தோளில் உள்ள துண்டை தட்டி போட்டபடி ஓடினார்.

எங்கள் வீட்டு மாடு, எப்படி இருக்கும் என்னும் ஆவல் கூடி கொண்டே போனது.

சின்ன பையன் – ரெண்டு வெள்ளை அரேபிய குதிரைகளை ஓட்டி கொண்டு வந்தார்.

மாடுகள் ரெண்டும் ஐந்தரை அடி உயரம். வெள்ளை நிறம். திமிறி கொண்டே வந்தன. காத்து இருந்த நான் மாட்டை தொட போனேன்.

“தம்பி கிட்ட வராத, இது பாயுற மாடு! தூர நின்னு பாத்துக்கோ ” என்று சின்ன பையன் சொல்ல என் ஆசை பெயிண்ட் டப்பா ஓட்டை ஆனது. இரண்டு மாடுகளுமே முரண்டு செய்தன.

நின்று கொண்டு இருக்கும் பைக்கில் ஏறி அமர்ந்து சின்ன பையன் மாட்டை அடக்கி கட்டி போடுவதை பார்த்தேன். இரண்டு மாடுகளுமே முரண்டு செய்தன. கிட்ட நெருங்க கூட முடியவில்லை.

சின்ன பையன் பெயிண்ட் டப்பாவை திறந்து, விரலில் கலக்கி ஏனோ தானோ என்று ரசனையே இல்லாமல் வண்ணம் தீட்டினார்.

என்னக்கு செம கோபம். ஆனால் மாட்டுக்கோ அதை விட கோபம், திமிறியது திமிறிய படியே இருந்தது.

எல்லாம் முடிந்தது. நான் நினைத்த டிசைன் வேறு, சின்ன பையன் அடித்த டிசைன் வேறு. ரசனையே இல்லாமல் அடித்து இருந்தார்.

மாட்டுக்கு டிசைன் பிடிக்கவில்லை என்று நம்பினேன். ஏன் என்றால் எனக்கும் பிடிக்கவில்லை.

என்னடா அடிச்சு முடிச்சிட்டியா என்று என் தந்தை அதட்ட ” வாத்தியாரே இதோ முடிச்சிட்டேன்னு ‘ பெயிண்ட் டப்பாவில் இருந்த எல்லா வண்ணத்தையும் மிக்ஸ் செய்து டிசைன் கான்செப்டை கொன்று விட்டார்.

முடிந்தே போனது.

என்னை பொறுத்தவரை “அது சின்ன பையனின் மாட்டுப் பொங்கல்”

வண்டியில் ஏறி அமர்ந்து வீட்டுக்கு வரும் போது, திரும்பி பார்த்தேன்.

இரண்டு மாடுகளும் என்னை பார்க்காமல் வைக்கோல் தின்று கொண்டு இருந்தன.

“ஏய், சின்ன பையா மாட்டை உள்ள கூட்டிட்டு போய்  கட்டுப்பா” என்ற என் தந்தையும் சத்தத்துடன்

“புட்” புட்”என Rajdoot தன் புகையை கக்கியது.

என் வாழ்நாளில் ஒரு மாட்டுகாவது கொம்பில் வண்ணம் பூச வேண்டும் என்ற ஆசை இந்த மாட்டுப் பொங்கல் வரை நிறைவேறவில்லை.

அதனாலே என்னோவோ மாட்டு பொங்கல் என்றால் இன்றும் பரவசம்.

 

பெயிண்ட் டப்பாவும், தூரிகைகளும் கனடாவில் உள்ளன. மாடு மட்டும் சிக்க வேண்டும்.

 

தொட்டில் ஆசை சுடுகாடு மட்டும்.