ஒரு நாள் பேருந்து நிலையத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து வந்து கொண்டு இருந்தேன். வரும் வழியில் ஒரு சின்ன சிக்னல். ஆள் நடமாட்டம் இல்லை, இரவு 8 மணி.
மழை தூரிக்கொண்டு இருந்தது…
நடை பாதை பொத்தானை அழுத்திவிட்டு காத்துக் கொண்டு இருந்தேன்.
சிக்னலில் கோளாறு போல. 5 நிமிடம் வரை பச்சை விளக்கு அணையவில்லை. சிக்னலின் அருகே ஒரு கிருஸ்துவ தேவாலயம்.
வண்டிகள் நிக்காமல் ஒரு புறம் மட்டும் ஓடிக்கொண்டு இருந்தது. புரியவில்லை.
தீடீர் என்று வெள்ளை சொக்காய் போட்ட இரண்டு மாணவர்கள் என் முன் தோன்றினர். சட்டையின் மேல் புறம் இயேசுநாதர் சிரித்துக்கொண்டு இருந்தார்.
கையில் சில கிருஸ்துவ புத்தகங்கள்.
எப்படி இருகின்றாய்? என்று பேச்சு கொடுத்தனர். சில நிமிடங்கள் எங்களிடம் பேச முடியுமா என்று ஒரு மாணவன் என்னை பார்த்து கேட்டான்.
சிக்னல் விழாத கடுப்பில் – “விருப்பமில்லை” என்பதை விருபத்துடன் கூறினேன்.
உண்மையாகவா? ஒரு நிமிடம் கூட முடியாதா என்றான் இன்னொரு மாணவன்.
இல்லை என்று கோபத்தோடு கூறினேன்.
இதை ஏசுநாதரே இங்கே வந்து உன்னிடம் கேட்டால் இப்படி தான் பதில் சொல்வாயா என்று கேட்டான் ?
எனக்கு தூக்கிவாரி போட்டது. இந்த கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லை.
கடவுள் வந்து கேட்டால் ….. ????
சில வினாடிகள் யோசித்து சொன்னேன்…
ஏசுநாதரே இங்கே வந்து என்னிடம் கேட்டால் ” கடவுளே !!! மழையில் வெகு நேரமாக நின்று கொண்டு கொண்டு இருக்கிறேன் …சிக்னல் வேறு வேலை செய்யவில்லை ….எனக்காக பச்சை விளக்கை அனைத்து, நடை பாதை விளக்கை ஒளிரவை” என்று கேட்பேன் என்றேன்.
இந்த பதிலை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
சிரித்துக் கொண்டே சொன்னார்கள்
“God Bless You ” – Jesus will Switch on the Lights for you – Believe in Jesus ” என்றார்கள்.
சடார் என்று பச்சை விளக்கு நின்று, நடைப்பாதை விளக்கு ஒளிர்ந்தது.
இயேசு வழி காட்டினார்!
மூன்று பேரும் மகிழ்ந்தோம்.
சிரித்துக் கொண்டே வெவ்வேறு பாதையில் நடந்தோம்.
இயேசு வழி காட்டினார் என்பது அவர்கள் நம்பிக்கை. இயேசு தான் வழி காட்டினார் நினைத்தால் கடவுள் நம்பிக்கை.
நம்பினாலும் தப்பில்லை தான். ஏன் என்றால் நான் வழி தேடி நிற்கின்றேன்.
இயேசு வராவிட்டாலும் விளக்கு ஒளிரும் என்பது அறிவியல்.வாழ்க்கையில், நடக்க வேண்டியது எத்தனையோ நடப்பதில்லை.நடக்க கூடாதது நம் கண் முன்னே நடக்கும்.
நாம் விரும்பும் போது நடப்பதற்கும், விரும்பாத ஒன்று நடக்கக் கூடாது என்றும் கடவுளை வேண்டுகிறோம்.
கோடான கோடி மக்கள் தினம் கடவுளை வேண்டுகிறார்கள்.
மக்களின் எல்லா விருப்பு வெறுப்புகளையும் கடவுளால் நிவர்த்தி செய்ய முடியாது.எவன் நடக்கும் என்று நினைத்து வேண்டுகிறானோ அவனுக்கு நடக்கும்.
நடக்கும் என்று ஒருவனை நினைக்க வைப்பவர் தான் கடவுள். இது தான் கடவுள் நம்பிக்கை.
இயேசு, அல்லா , கிருஷ்னன் – எல்லாருமே நம்பிகையை அளிப்பார்கள்.
நம்புங்கள் நடக்கும்.
இதைத்தான் கிருஸ்தவ மதம் போதிக்கிறது …
தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும்.
ஆண்டவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். அவர் என்றும் உங்களை ஆசீர்வதிப்பார்.
என் இனிய கிருஸ்துவ நண்பர்களுக்கு சமர்ப்பணம்.
Leave A Comment