கனடா, என்னை வாடா என்றது…….

2010 ஆண்டு..

அன்று ருபாய் நோட்டு சிரிப்பை தரவில்லை

நிம்மதி தரும் எனும் நம்பிக்கை கூட இல்லை

அப்போது, கனடா, என்னை வாடா என்றது.

சிவப்பு வண்ண மேபிள் கொடி பட்டொளி வீசி பறந்தது

Flight ஏறி பறந்தேன்..உற்றார் உறவுகளை பிரிந்தேன்.

 

இன்றோடு, மூன்று வருடம் ஆகிறது.

மூன்று ஆண்டுகள் போனதே தெரியவில்லை என்று பொய் சொல்ல மாட்டேன்.

ஒவ்வொரு மணி துளியும் எனக்கு தெரிந்தே நகர்ந்தது. ஆமை போல்.

ஒவ்வொரு மாதமும், நாளும் , ஏன், ஒவ்வொரு மணி துளியும் என்னை வதக்கியது, எனக்கே தெரியும்.

வந்து இறங்கிய, முதல் வாரத்தில் சில போன் நம்பர்களை இழந்தேன்.

இன்னும் சில வாரத்தில், பழைய நண்பர்களை மறந்தேன்.

பின்பு, சிலரை மறக்க நினைத்தேன்.

பெரும்போலோரை நினைவில் வைத்தேன்.

சிலரை நான் மறந்தாலும் என் நினைவில் இருந்தார்கள்.

அவர்களை Face Book -ல் Close Friends என்று குரூப் செய்தேன்.

அதே போல், கனடாவில் பலரை சந்தித்தேன்.

அதில் சில பேர் நண்பர்கள் ஆனார்கள்.

சிலர் அவர்களாகவே கிடைத்தார்கள்.

சிலரை நான் பொறுக்கி எடுத்தேன்.

சிலரை சல்லித்தேன்.

சிலரிடம் ஓடி சென்று ஒட்டிக் கொண்டேன்.

சிலரிடம் சப்பென்று போனதால் – ஒதுங்கி விட்டேன்

ஒதுக்கவும் பட்டேன்.

 

கனடா, தினம் ஒரு பாடத்தை கத்துக்கொடுத்தது.

பல அனுபவங்கள் எனக்கு பிரமிப்பை தந்தது.

கனேடிய போனில் மாதம் வெறும் 200 நிமிடம் மட்டும் டாக் டைம் என்றனர்.

அதிசியமாக இருந்தது.

இந்தியாவில், வருடத்தில் 200 நிமிடம் மட்டுமே போனில் பேசாமல் இருந்திருப்பேன்.

போனில் பேசி பேசி – சூடாகி, போன் எரிந்து போன கதை எல்லாம், இங்கு குளிரில் ஆறியது.

பேசுவதை குறைத்தேன்.

ஓவராக பேசுவதையும் குறைத்தேன்.

எடுத்து பேச வாய்ப்பு இருந்தாலும் – வாய்ஸ் மெயில் விட கத்துக் கொண்டேன்.

 

 

மனிதனிடம் பேசாமல் இரவு வந்தவுடன் வாய்ஸ் மெயில் லுடன் பேச ஆரம்பிதேன்.

இனிதே, இயந்தர வாழக்கை தொடங்கியது.

இதை புரிந்தவர்கள் தொடர்கிறார்கள்., புரியாதவர்கள் விலகி சென்றார்கள்.

கனடா, தினம் ஒரு பாடத்தை மீண்டும் கத்துக்கொடுத்தது.

சிலவற்றை ஓசியிலும், பெரும்பாலானைவையை டாலர் செலவழிக்க வைத்ததும் கத்துக்கொடுத்தது.

நொங்கி நூடுல்ஸ் எடுத்தது.

இதை இங்கு உள்ளவர்கள் The So Called – Canadian Experience என்பார்கள்.

 

கீழே விழுந்தாலும் – Canadian Experience என்பார்கள்.

எழுந்து நின்றாலும் – Canadian Experience என்பார்கள்.

 

ஊரில் புலி, இதனால் எலியாக மாறும்,

அஞ்சு வருடம் முனால் வந்த எலி, நம் கண் முன்னே அனகோண்டாவாய் திரியும்.

 

படித்ததை விட்டு – கொடுப்பதை வாங்கிக்கொண்டு

ஓ கனடா …ஓ ஓ கனடா …என கனேடியன் பாஸ்போர்ட்டுக்கு பாட சொல்லும்.

 

என்னதான் வாட்டினாலும் ஒரு இனம் புரியாத இன்பத்தை தரும்.

இன்பமாக இருக்கும் பொது கோடுகள் வரைந்தேன்.

வட்டமாய் வரவேண்டும் என்று வரம் வேண்டினேன்.

 

மூன்று வருடத்தில், என்னை சுற்றி ஒரு வட்டம் வரைந்தேன்.

இன்று, அதை எட்ட நின்று பார்த்தேன்.

” வட்டம் கோணல் மாணலாக உள்ளது”

நான், செய்தவை அனைத்தும் சரியல்ல என்று புரிகிறது.

I am not a perfect man.

தவறுகளை திருத்திக்கொள்ள இன்னும் காலமும் நேரமும் உள்ளது.

நான் செய்த தவறுகளை சுட்டி காட்டி –

நேரடியாகோவோ, தொலை பேசி மூலமாகவோ அல்லது மின் அஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.

தவறுகள் திருத்தி பின் கொல்லப்படும் !!

 

மூன்று ஆண்டு கனடா வாழ்கையை அவ்வப்போது துணுக்கு செய்தியாக எழுதி வைத்தேன்.

எல்லாவற்றையும் ஒரு பதிவில் ஏற்ற முடியாது.

வாரம் ஒரு வலை பதிவை இந்த மாத முடிவில் இருந்து என் புதிய வலை தளம் வடிவமைக்கப்பட்ட பின்பு பதிவு செய்வேன்.

 

தொடரும் என் கனேடிய பயணம்….பயணங்கள் முடிவதில்லை….

 

முக்கியமாக ஒன்று …

மூன்று வருடத்தில் எனக்கு மூன்று வயது அதிகமாக ஆகிவிட்டது ..

வயதாகி விட்டதால் ஏதேதோ தோணுகிறது …

வருடம் ஒரு முறை இந்தியா செல்ல ஆசை …

டாலர் சிரிப்பை தரலாம்

நிம்மதியை தராது

 

அயல்நாட்டு வாழ்க்கை வெளியே பூச்செண்டு

உள்ளே ஒரு குப்பை தொட்டி !!!

சாம்பல் – பசிபிக் பெருங்கடலில் கரைவதை விட

ராமேஸ்வரத்தில் தான் நன்றாக கரையும் என்று தோன்றுகிறது…