அது என்ன, ” ஏக் காவ் மே ஏக் Car ரகு தாத்தா..” ???

எல்லோருக்கும் நாம வாங்கிய முதல் கார் பத்திய ஞாபகம், அதுல போன சுகம் மறக்க முடியாதது. ஹி ஹி … எனக்கும் அப்படிதான். நான் மறந்தாலும்,  இப்போ அந்த கார் உயிரோடு இருந்தால் அதுவும் என்னை மறந்து இருக்காது. அப்பிடி, ஒரு பாசக்கார கார். இது, அந்த காரை வாங்கி, வித்த கதைதான் – ஏக் காவ் மே ஏக் Car ரகு தாத்தா..”!

பொதுவா, வாழ்கையில எந்த முதல் அனுபவமும் சுகமானது. சுவையானது. அதில் சில ஏமாற்றங்களும், அதிர்ச்சிகளும் அடக்கம். ஒவ்வொரு அனுபவமும் ஒரு பாடத்தை கத்து தரும். பல வருடங்களுப்பின், அதை அசை போட்டு பார்த்தால் – ” அது ஒரு கனா காலம் தான்”. எல்லாரும், தன் வாழ்கையில் ஒரு தடவையாவது கோமாளியாய் ஏமாந்து இருப்போம். ஆனால், நம்மை எல்லா தருணங்களிலும் திறமைசாளிகளாய் மட்டும் சமூகத்துக்கு முன்னிலைப்படுத்த, தினம் போராடுவோம். ஓவரா, தத்துவம் பேசறேன்னு நினைக்கிறேன். நேரா கதைக்கு போகலாம்.

ஏக் காவ் மே…அதாங்க, …கோயம்புத்தூரல.. 

சுமார் பத்து வருசத்து மேல இருக்கும்னு நெனைக்கிறேன்….. இந்த குட்டையில் முதல் கல் விழுந்தது….கல்லை எரிந்தது ஒரு கார்.

சொந்த அனிமேஷன் கம்பெனி ஒன்றை சிங்கப்பூரிலும், கோவையிலும் நடத்தி வந்தேன். மிகப் பெரிய ஒரு ஜெர்மானிய கம்பெனி அனிமேஷன் Film Order எடுத்தேன். ( Luk, Germany). மொத்தம் 23 பேர், ரா பகலா அந்த படத்தை 4 மாதத்தில் முடித்தோம். வந்த காசில், படத்தை முடித்தப்பின் கார் வாங்கவேண்டும் என்று முடிவு. அது வரை என்னை 6 வருடம் சுமந்த (Yamaha) யாமஹா 135 -க்கு விடுதலை கொடுக்கலாம் என்று முடிவு செஞ்சேன்.OK ..னு மனசு சொல்லிச்சு.

அதுக்கு முன்னாடி இந்த யாமஹா 135 பத்தி சொல்லியாக வேண்டும். Ph.D first year- ல வாங்கின வண்டி.  என் சீனியர் ஒருவர் அதே வண்டி வைத்து இருந்தார். அதனால் நானும் ஒரு புது வண்டியை வாங்கி ஒட்டிக் கொண்டு இருந்தேன். Absolute Zero Maintenance. அதுபாட்டுக்கு ஓடும். ரிப்பேர் ஆனதா நிணைவில்லை. டயர் பஞ்சர்  ஆனாலும் மெக்கானிக் கடை முன் தான் நிக்கும். College-ல எனக்கு ஒரு பாய் பிரண்டு. (Muslim Friend). ஒரு Mechanic Shop introduce செஞ்சு வச்சார். Brooke Bond ரோட்ல – Joe Mechanic Shop தான் அது. Service -க்கு 175 Rs – தான். வருசத்துல ஒரு முறை வண்டிய விடுவேன். மத்தபடி, பேருக்கு கூட வண்டிய தொடைக்க மாட்டேன். மொத்தமா 6 வருசத்துல, 6 முறைதான் இதை கழுவி இருப்பேன். அதாவது ..ஆயுத பூஜை தினத்தில்.

மத்தபடி, மழை பெஞ்சு அதுவா கழுவிகிட்டா உண்டு.

ரியல் ஜீரோ Maintenance. வாங்க போற வண்டியும் இப்பிடித்தான் இருக்கும்னு என்னக்கு நெனப்பு. தூங்க போனேன். அன்னிக்கு நைட் நான் கார்ல போற மாதிரி கனவு…. நான் ஓட்டல. ஏன்னா.. எனக்கு கணவிலும் அப்போ கார் ஓட்ட தெரியாது. கார் ஓட்டியவர்…கருப்பா..வெள்ளை தொப்பி போட்ட டிரைவர். தமிழ் படத்தில வர மாதிரி …கார் கதவை திறந்து கொடுப்பார்….கார் ஓட்டுவார்..கொஞ்சம் சிரிப்பார். மீண்டும் ஓட்டுவார்..கொஞ்சம் சிரிப்பார்…இது கொஞ்சம் ஓவர் தான் என்றாலும், Petrol தீரும் வரை கனவில் கார் ஒடுச்சு…சந்தோசமா தூங்கினேன். காலைல எழுந்தா ஒரே நாளில், காசிக்கு கார்ல போன மாதிரி களைப்பு.

அடுத்த நாள், ஆபீஸ் போக யாமஹா எடுத்தேன். வீட்டுக்கும் ஆபீசிக்கும் 5 minutes travel-தான். அட…முன்னாடி நின்னுட்டு இருக்கும் யாமஹா 135, பாக்க இப்போ வேற மாதிரி இருந்தது. கழுவாத அந்த வண்டி, என் கண்ணுக்கு, இன்னிக்குத்தான் உண்மையாகவே அசிங்கமா தெரிஞ்சிச்சு.  இந்த வண்டி ஏனோ எனக்கு, இப்போ பிடிக்கலை…நம்ப Status-க்கு யாமஹா 135 திடீர்ன்னு ஒத்துவரலை. கனவு கருப்பு வெள்ளை டிரைவர், இடை இடையே வந்து தொல்லை செஞ்சார். ஆபீஸ் போனவுடன் நான் செஞ்ச முதல்வேலை போன் போட்டது;

ஹலோ, ….எனக்கு ஒரு கார் வேணும்!!!

Nokia Mobile-ல இருந்த முக்காவாசி பேறுக்கு போன் போட்டு “எனக்கு கார் ஒன்னு வேணும்னு” சொல்லற சாக்கில நான் கார் வாங்க போறதை நசுக்கா எல்லோருக்கும் பரப்பிட்டேன். அப்படி ஒரு அளப்பரை. ஆபீஸ்ல வேலை பாக்காம, முழு நாள் கார் கனவுல சுத்தி சுத்தி வந்தேன். வழக்கம் போல், Google முதல் Tea கொடுக்க வந்த Tea master வரை தேடல் தொடங்கியாச்சு. என் தேடலுக்கு பல வித response. சைக்கிள் மட்டுமே ஓட்டிய பல பேர் Tayota Owner போல் அட்வைஸ் கொடுத்தார்கள். Mileage, comfort-னு Permutation Combination போட சொல்லி என் மூளையை கெடுத்தார்கள். அதல ஒருவர் ” சார், புதுசா வாங்கிடாதீங்க. ஒட்ட பழகரதுகுள்ள, எப்பிடியும் வண்டி அடி வாங்கிடும். வீண் பண்ண வேண்டாம்னு” அட்வைஸ் செய்தார். ஒத்த தல வலி. Tea – குடிக்க ஆபீஸ் வெளியே வந்தேன். யாமஹா 135 என்னை பார்த்து சிரிக்கற மாதிரி தெரியுது. Blank- மண்டையனா வீடு வந்தேன். ரொம்ப கொழம்ப்பிட்டேன்.

நைட் எட்டு மணிக்கு, “அல் தோட்ட பூபதி நானடானு ” போன் அடிக்குது…

Phone-போட்ட Random number-ல எதிர் முனையில ஒரு குடும்ப நண்பர் “கர கரனு” பேசறார். அவர் நேர்மைக்கும் நியாதுக்கும் பேர் போனவர். முன்னாள் ராணுவ வீரர். புது காரா? பழைய காரா? னு கேட்டார். பழைய கார் வாங்கறதா இருந்தா, என்னக்கு தெரிஞ்சு ஒரு மேடம் கார் விக்க போறதா கேள்வி பட்டேன். முடிஞ்சா போய் பாருங்கன்னு சொன்னார். நல்லா ஞாபகம் இறுக்கு. அவங்க பேர் ராஜேஸ்வரி. “ரூட்ஸ் ராஜேஸ்வரினு” கூப்பிடுவாங்க. நல்ல மேடம். அவங்க கணவர் ராணுவத்தில் பணி செய்து கொண்டு இருக்கிறார் என்று சொன்னார். நல்லா விசாரிச்சிட்டு, விருப்பபட்டா வாங்குங்கோ அப்பிடின்னு சொன்னார். என் காதுக்கு என்னவோ ”

விருப்பபட்டா வாங்குங்கோ”-வில்-  GO GO… மட்டும் தான் கேக்குது .

போனை வைக்கும் முன்னரே, நம்ப அரை வேக்காட்டு பிசினஸ் மூளை, படார்னு முழிசிகிச்சு. மட மூளை சொன்ன லாஜிக் இது தான். கணவருக்கு ராணுவத்தில் வேலை. எப்படியும், அவர் அதிகம் இந்த வண்டியை ஓட்ட வாய்ப்பில்லை. Madam, வாரத்துக்கு ஆறு நாள் வேலைக்கு போறாங்க. கணவர் ராணுவத்தில் இருக்கும் போது, இந்த காரை அவங்க மட்டும் அதிக தூரம் ஓடியிருக்க மாட்டாங்க. Driver, வச்சு ஒட்டினதா நண்பர் சொல்லியிருந்ததால் எப்படியும் வண்டியை, வீட்டுக்கும் ஆபீசிக்கும் தான் ஒட்டியிருக்கனும்னு, ஒரு மிஸ்Calculation… Sorry..Madam வீட்டு கார் என்பதால் …ஒரு Madam Calculation! போட்டேன். என்னக்கு அப்போது கார் ஓட்ட தெரியாது. எப்படியும், முதல் ஆறு மாசத்துல கத்துகிட்டு ஓட்டும்போது நான் நாலு இடதுல்ல இடிகத்தான் போறேன். இடுச்சி ஓட்டிட்டு, பின்னால புது கார் வாங்கிக்கலாம்னு முடிவு செய்தேன். நான் எடுத்த முடிவு அன்று சொல்வதை விட, “இந்த காரால் நான் எடுத்த முடிவுன்னு” சொல்லலாம். ராணுவ கார் என்னை ரொம்பவே மாத்திடிச்சு. சிக்கிடுச்சு  ஒரு சூப்பர் கார் ! தூங்க போனேன்….

மீண்டும் கார் கனவு. ஒரே மாறுதல் ….இப்போ கனவுல ஓடியது மேடம் வீட்டு கார். நண்பர் சொன்ன தகவல்களின் அடிப்படையில் கனவில் காரருக்கு கூடுதல் Specs தெண்பட்டது . வெள்ளை நிறம்! வெண் மேகங்களை தாண்டி நிக்காமல் விடியும் வரை ஓடியது. எழுந்தவுடன் நான் ஓடினேன், நண்பர் ஆபீசிக்கு. மேடம் போன் நம்பர் நண்பரிடம் கேட்டேன். அவர் முழுதாய் சொல்லி முடிக்கும் முன், என் விரல்கள் மொபைலில் அவர் சொன்ன நம்பரை தானாகவே தட்டியது. எதிர் முனையில் “”அல் தோட்ட பூபதி நானடானு ”  போன் ரிங் டோன் அடிக்குது. அட,சே …என்ன ஒரு Co-Incidence. அப்பவே முடிவு பண்ணிட்டேன்.

இந்த கார் என்னகாக பிறந்ததுனு. அவங்க விக்கலைனாலும், புடிங்கிட்டாவது வந்துடணும்னு, ஒரு வைராக்கியம்.

போனில், மீண்டும் மீண்டும் “அல் தோட்ட பூபதி அந்த ரெண்டு வரியை பாடினார்’. அவர் பத்தாவது முறை படும் போது போனை மேடம் எடுத்தாங்க.

கர கர Voice. மிலிடரி வீட்டு அம்மாவுக்கும் மிலிடரி வாய்ஸ். மேஜர் சுந்தர்ராஜன் மாதிரி முதல்ல English-ல சொன்னதையே, மீண்டும் தமிழ்ல்ல Translate – செஞ்சு பேசினார். North India – வில் கொஞ்ச வருஷம் இருந்தவங்க, தமிழ் நாட்டுக்கு வந்தவுடன் இப்பிடித்தான் பேசுவாங்க.

பல வருஷம் வெளி நாட்டில் இருந்தவங்களும், Flight-ல இருந்து இறங்கியவுடன், இந்த மொழி டார்ச்சர் பண்ணுவாங்க.

மேடம் போனில் ” I am Busy, come after 5 PM. நான் வேலையா இருக்கேன்.அஞ்சு மனிக்கு மேல் வந்து பாருங்கனு சொன்னார்கள். நான் ஓகேனு சொல்லுவதுற்குள்ள போன் வைக்கப்பட்டது.  நான் என் ஆபீசிக்கு போனேன். பறந்தேன்னு சொல்லலாம். ஒரே பரவசம். சும்மாவா! ஆனால் இந்த இந்து மணி மட்டும், சீக்கிரமா வரணும்னு மனசு சொல்லுது. கொடுமை. கடிகாரம் ஏனோ மெதுவாக ஓடுது. கடிகாரத்தை  கடிந்து கொண்டேன். கடிகார முல்லை கண்ணால் வேகமாக திருப்ப முயன்றேன். வேலை பார்த்ததை விட கடிகாரத்தை அதிக நேரம் பார்த்தேன். ஆறு மணி நேரம் ஆறு யுகமாய் கழிந்தது.

5′ O Clock. மணி அடித்து. அப்போது நான், நின்று கொண்டு இருந்தேன்.Madam டேபிள் முன்னே . யார் நீங்க? நிமிந்து கேட்டாங்க ரூட்ஸ் ராஜேஸ்வரி.
நான்: உங்க கார் என்னக்கு வேண்டும்.
மேடம்: காரை பாத்திங்களா? விலைய சொன்னாக. என்ன வாங்கறீங்களானு? கேட்டாங்க.

நான் காரை பாக்காம, மண்டைய நல்லா ஆட்டின மாதிரி ஞாபகம்.

வெளியே போய் காரை பார்த்தேன். சொன்னா நம்ப மாட்டீங்க. என் நொள்ள கண்ணுக்கு, எல்லாமே நல்லா தெரிஞ்சது. ஷோ ரூம்ல இருக்கிற மாதிரி, புதுசா பட்டாசா நின்னுட்டு இருந்தது. சீட் கவர் முதல், நிறைய புதுசா மாத்தி வச்சு இருந்தாங்க. சுத்தி, சுத்தி inspection செய்தேன். வெளியே பார்த்தேனே ஒழிய, ஓட்டி பாத்து வாங்கணும்னு ஏனோ என்னக்கு தோணவே இல்லை. அப்போ, வெள்ளையும் சொள்ளையுமா டிரைவர் ஒருத்தர் ஓடி வந்தார். அவர், மேடம் வீட்டு டிரைவர். சார், இந்த காரை வாங்க போறீங்களா? -னு கேட்டார். ஆமாம்னு சொன்னேன். உடனே, அவர் மூஞ்சில அப்படி ஒரு சோகம். ஒருமாதிரி யோசனை செய்தார். ஏதோ தயங்கி,தயங்கி சொல்ல வந்தார்..

படார்!!!! மீண்டும், நம்ம நாசமா போன மூளை வேலை செய்தது.

என், நியூரான்கள் சொன்ன லாஜிக் இது தான். கார் வித்தவுடன்அவருக்கு வேலை போக போகுது. அதனாலதான் வருதப்படரார். அதனால, இதை விக்காமல் செய்ய ஏதோ சொல்ல வரார். உஷார், கேட்காதேனு Brain, Bargain பண்ணுச்சு. அவர் பேச ஆரம்பித்தார். நான் காது கொடுத்து கேட்கவேயில்லை. பேசும் போது அவர் சொன்ன வார்த்தையில ” தல்றது ரொம்ப கஷ்டம் சார் “ மட்டும் காதுல கேட்டுச்சு. நான் அவரு இந்த கார் இல்லாம “பொழப்ப தல்றது ரொம்ப கஷ்டம்” -னு சொல்றாருன்னு நினைச்சேன். உள்ள போய் ஓ.கே, என்னக்கு கார் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டேன். அவங்க பாணியில – “Deal Over, முடிசாச்சு”. 2 நாள்ல cheque கொடுப்பதா வாக்கு. இந்த, இராணுவ பேரம் முடிந்ததை, நம்ப இராணுவ நண்பருக்கு போன் போட்டு சொல்லிட்டு, நின்னுட்டு இருந்த (என்னோட) காரை ஒரு லுக் விட்டுட்டு வந்துட்டேன்.

வெள்ளி கிழமை Cheque ரெடி. ரூட்ஸ் ராஜேஸ்வரிக்கு, போன் பண்ணேன். ஆபீஸ்ல இருந்தாங்க. ஆறு மணிக்கு வரலாம்னு கேட்டேன். “Come Before Dark -இருட்டரதுகுள்ள வாங்கனு” சொன்னாக. கார் ஓட்டும் நண்பரோடு மதியம் ரெண்டு மணிக்கு போனேன். Cheque கொடுத்து சாவிய வாங்கினேன். வண்டியை நண்பர் ஓட்ட நான் Boeing 747 வாங்கின மிதப்புல சாஞ்சி உக்காந்து கண்ணாடிய எத்தி விட்டு ரோட்ல போற 2 Wheeler-ல பார்த்து Lighta – சிரிச்சேன். அடுத்த 6 மாசுத்துக்கு, நான் சிரிச்ச ஒரே சிரிப்பு அதுதானு அப்போ எனக்கு தெரியாது. ஏன்னா …

ஏக் காவ் மே, ஏக் Car ரகு தாத்தா..

முதல் பயணம்: சாயும் காலம் …ஆபீஸ்ல இருந்து சீக்கிரமா வீடு வந்தாச்சு. புது வண்டியில ஒரு ரவுண்டு போக ஆசை. சித்தாபுதூர் மெயின் ரோட்ல ஓட்டாம, நம்ம தெருவில் மட்டும் ஓட்டிட்டு வரலாம்னு ஒரு எண்ணம். +2 முடிச்ச வுடனே 4 Wheeler Licence Wife வாங்கிட்டாங்க.  So, அவங்க தான் வண்டி ஓட்டணும். நான் , அம்மணி, கிருஷ் மூணு பேரும் ரெடி. வண்டி தெரு முனையைதான் தாண்டி இருக்கும்… குறுக்கே சைகிள் போக அவங்க மெதுவா Break போட…சடார்னு!! ஷார்ப்பா… நின்னுச்சு. பரவாயில்லையே சூப்பரா பிரேக் பிடிக்குதுன்னு நெனைச்சேன். சைக்கிள்காரன், போய்ட்டான். நின்ன வண்டி, கிளம்ப மாட்டேன்குது. சாவிய நல்ல திருப்பினா ” ஓயன்யா ஓயயான்னு” சவுண்ட் . அதுவும் நடு ரோட்ல.

கிருஷ் கேட்டான் ” ஏன்பா வண்டி நிக்குது?” “எனக்கே தெரியலப்பானு” சிவாஜி கணேசன் ஸ்டைல சொன்னேன்.

“ஓயன்யா – ஓயயான்னு” ஒரு அஞ்சு நிமிடம் சாவிய விட்டு ஆட்டியும் ஒரு ப்ரோஜினமுமும் இல்லை. நடு ரோட்ல வண்டி நின்னதால ….பைக்ல போற ஒருத்தன் கடுப்புல ” சார் …இப்பிடி உட்காரம இறங்கி தலுங்க Start- ஆயிடும்னு ” சொன்னான். ஹ ஹா …ஹ்ம்ம் …இறங்கி வண்டிய தள்ளினேன். இன்ச் கூட நகரவே இல்லே. கியர் போட்டு இருக்கும் போது எப்படி நகரும்? Tea கடையில் இதை பாத்து கொண்டு இருந்த Toyota Owner-கள், மீண்டும் Neutral-ல போட்டு வேகமா தள்ள சொன்னாங்க. நான் திரு திருன்னு முழிக்க …டீ கடையில் இருந்து 2 பேர் கூட என் கூட தள்ள, ” டமார்னு ” ஸ்டார்ட் ஆயிடுச்சு. சரி, நான் போய் வண்டியில உட்காரலாம்னு பாத்தா, மெதுவா வண்டி உருண்டுகிடே போகுது. நிக்கவே இல்லை. அம்மணி, மீண்டும் பிரேக் போட்டா நின்னாலும் நின்னுடும்னு அப்பிடியே வீட்டுக்கு போய் நிறுத்திட்டாங்க. நடந்தே வீட்டுக்கு வந்தேன். சரி கடுப்பு.  

” தல்றது ரொம்ப கஷ்டம்” இதைதான் ரூட்ஸ் ராஜேஸ்வரி டிரைவர் சொல்ல வந்தது நெனைச்சு, நொந்து போனேன்.

என்னக்கு சம டோஸ். “புது கார் கேட்டேன், உங்கப்பா வாங்கின காரை பார்ரானு’ திட்டிட்டு போய்ட்டாங்க. கிருஷ் முடி வெட்டும் கடையில், ஒரு டிரைவர், எப்போதுமே ஓசி Tea குடித்து கொண்டு இருப்பார். நடந்து வரும் போது, கையோட அவரை கூட்டி கொண்டு வந்தேன். வந்தவர், Car Bonnet-ஐ ஓபன் செய்து மண்டய உள்ள வுட்டு, ஆட்டு ஆட்டுன்னு ரெண்டு நிமிஷம் ஆட்டினர். அட, இது சிம்பிள் problem சார். Starter தான் issue. Correct செய்தால் தள்ள வேண்டி வராதுனார். நிம்மதி அடைந்தேன். எவள்ளவு ஆகும்னு கேட்டேன். வரும் முன்னரே முடி வெட்டும் கடையில் மண்டையில் Ready செய்த Quote -950 ரூபாயை சொன்னார். முதல் நாளே 950 ரூபா முங்கா. இது 6 வருடத்தில் என் யமாகா 135 வைத்த செலவு.

தூங்க போனேன். கனவுல கார் இப்பவும் வந்தது. அதை, அதே டிரைவர் ஓட்டினான். கனவில், கண்களை, ஜூம் செய்து பார்த்தால், அதை நான் தள்ளிகொண்டு இருந்தேன். கலைந்தது கனவு. வேர்த்து கொட்டியது. வண்டி தள்ளியபின் வந்த, அதே வேர்வை.

தப்பு செய்றோம்னு தெரியுது, ஆனா, ஏன் செய்றோம்னு தெரியாது “. இதுக்கு Technical-லா ” ஏமாந்து போறோம்னு பேரு.

அடுத்த நாள், ஆபீசில் எல்லோரும் கேட்டார்கள். என்ன சார் கார்ல வரலையா? என்னத்த சொல்ல? வாங்கனத சொல்லறதா, இல்ல, தள்ளனத சொல்றதா? போங்கடனு நெனைச்சிக்கிட்டு சொன்னேன்; Licence அடுத்த வாரம் வாங்கிட்டு அப்புறம் காரை எடுக்கலாம்னு ஐடியா. நம்பினார்கள். என் நம்பிக்கையை, அந்த கார் அன்று evening உடைத்தது.

ஓசி tea Driver Evening வந்தார். வண்டிய குடுங்க சார், starter மாத்திட்டு வரேன்னு சொன்னார். Gas fill செய்து கொடுத்தேன். அரை மணி நேரம் கழித்து வரேன்னு சொன்னவர் மூணு மணி நேரம் Escape. போன் போட்டு கேட்டால் ….இதோ வந்துட்டேன்னு சொன்னவர் , நான் HIGHWAY-ல ஓட்டி , குறுக்கு சந்தில் டெஸ்ட் பண்ணிட்டு இருக்கேன்னு கதை விட்டார் . நாலு மணிக்கு போனவர், நைட் ஒன்பது மனிக்கு வந்தார். நான் அவரை திட்ட வரதுக்குள்ள அவர் என்னை திட்டினார்.

ஏன் சார் கார்ல பாட்டரி வீக்கா?

ஹெட் லைட் டிம்மா எறியுதுன்னர். எனக்கு, அடி வயிறு எரிஞ்சது.

நின்னு நின்னு சார்ஜ் ஏத்திட்டு வர டைம் ஆயிடுச்சு. பட், இத சரி செஞ்சிடலாம். ஆயிரம் ருபாய் செலவகும்னு சொன்னார். நாளைக்கு யோசிச்சிட்டு phone செய்றேன்னு அவரை அனுப்பி வச்சேன்.  சரி கடுப்பு. கார் வங்கியும் ஓட்ட முடியலே. ரூட்ஸ் ராஜேஸ்வரி, ஏன் இருட்ரதுகுள்ள வர சொன்ன விவரம் ” Bright” டா மண்டையில எறிஞ்சது. “Come before Dark” – இதை இங்கிலீஷ்ல ஒரு முறையும், தமிழ்ல பல முறையும் பினாத்த ஆரம்பித்தேன்.

 “ஏதோ பேசுறேனு தெரியுது, ஆனா, ஏன் பேசுறேனு தெரியல”. இதுக்கு Technical-லா ” அரை பைத்தியம்னு ” பேரு.

நம்பிக்கை தான் வாழ்க்கை. தளராம, தூங்க போனேன். அடுத்த நாள் கிருஷ் முடி வெட்ட, கடைக்கு கூட்டிட்டு போனேன். ஓசி Tea Driver  இருந்தார். முடி வெட்டும் நண்பர், டிரைவரை பார்த்து கேட்டார் ” நேத்து என்னப்பா குடும்பத்தோட உக்கடம் விசேசதுக்கு கார்ல போய் கலக்கிடியமே?”  டிரைவர் திரு திருன்னு முழித்தார். என்னக்கு புரிந்தது.. அவர் கலக்கியது ஏன் காரில்; Highway-ல போய் குறுக்கு சந்தில் அவர் டெஸ்ட் பண்ணிட்டு வந்தது தான் சொந்தக்காரன் வீட்டு விசேசதுக்கு.  அந்த நிமிடமே – ஓசி Tea Driver கட் ஆனார்.

எங்கள் தெரு முனையில் ” லக்ஷ்மி நாராயணா பாட்டரி சர்வீஸ்”-னு ஒரு கடை.  கடையின் ஓனர், மா பெரும் தெய்வ பக்தர். திருப்பதி ஏழுமலையான் பக்தர்.

அந்த ஏழுமலையானை, இந்த ஸ்ரீதர் ஏழுமலையான் சந்திக்க திட்டம்.

அவர், எல்லோரயும் ” சாமி” னுதான் கூப்பிடுவார்.  கடையில் அவர் இல்லைனாலும் ஒரு சின்ன Tape Recorder ” கோவிந்தா ! கோவிந்தா ! ” னு சொல்லிகிட்டே இறுக்கும். நியூ சித்தாபுதுரின் ” Tamil Nadu Electricity Board” இவர் தான். எப்ப வருவார் ….எப்ப போவார்னு அவருக்கே தெரியாது. மூணு மணி முதல், 5 மணி வரை daily Power Cut ஆன சமயத்தில் ” நான் கடவுள்” ரூபத்துல பிஸியா இருப்பார். அவருக்காக, தவமாய் தவம் இருந்து, UPS battery வாங்கி செல்வார்கள். Office மற்றும் வீட்டுக்கு UPS மாட்டி கொடுத்ததால பழக்கம். நேர்மையானவர்.  வழக்கம் போல என்னோட மூலையில தத்துவ மழை கொட்டுச்சு:

“சாமின்னு சொல்ற பக்தனை நம்பு , சாமியே சரணம்னு சொல்ற பூசாரிய நம்பாதே”. 

அவர்கிட்ட போனேன். வாங்க சாமி…என்றார். கார் பாட்டரி வீக்னு, Weak- கா சொனேன். கவலை படாதீங்க..இதோ நம்ப தம்பிய அனுப்பி பக்க சொல்றேன்னு சொன்னார். எனக்கு சார்ஜ் ஏறியது. அவர் அசிச்டன்ட் அவரை போலவே ” சின்ன கடவுள்”. கால் அடிபட்டதால தாங்கி தாங்கி நடப்பார். அவரும் “ஓ.கே சாமின்னு” செக் பண்ண போனவர் சந்தோசமா வந்தார். சார்!!!  கார் பாட்டரி செத்து போச்சு!!!  எனுக்கு மூச்சு நின்னு போச்சு. எவ்வளவு ஆகும்னு கேட்டேன். புதுசு 3500 – முதல் ……8000 ருபாய் வரை ஆகும்னு சொன்னார். அவர் மாடல்களை விளக்க ஆரம்பித்தார். எனக்கு காதில் எதுவுமே விழவில்லை. கடைசியில் சொன்னேன் ….3500 Rs. battery -மாத்திடுங்க.

அந்த வாரம் சண்டே ” கார் வாஷிங் டே”.

ஓடாத ஓட்ட காரை, கார் வாஷிங் செய்ய இறங்கியாச்சு. ஒரு வாரம் ஓடாததால் ” ஒரு இன்ச் அளவுக்கு தூசி”. அதுல சில காதல் மன்னன்கள் ” SMS” எழுதி வைத்து இருந்தார்கள். எல்லா மெசேஜ்களையும் Delete செய்தேன். கழுவி முடித்தவுடன் நமக்கு, Driving Class – ஆரம்பம். அன்று ஊரில் இருந்து மனைவியின் சித்தி மகன் வந்து இருந்தார். பெயர் பன்னீர். வாட்ட சாட்டமா இருப்பார். கோவையில் இன்ஜினியரிங் படிச்சிட்டு இருந்தார். Hostel-லில் தங்கி இருப்பார். வார இறுதியில் வீட்டுக்கு வருவார்.

என் பையன்னுக்கு மிகவும் பிடித்தது – ஒன்னு, பாலக் பன்னீர், இன்னொன்னு இந்த பன்னீர்.

Driving Class: பொதுவா, Driving சொல்லி கொடுக்கும் போது இந்த ” சொல்லி கொடுக்குறேனு” Driving Seat-க்கு பக்கத்துல உக்காந்துகிட்டு மனுசங்க பண்ற அடாவடி உலகளாவிய அளப்பரை. அர்ஜுனன் தேர் ஓட்டும் போது, கிருஷ்ண பரமாத்மா வழி காட்டிய மாதிரி பேசுவாங்க. அவங்கள ஓட்ட சொன்னா கேவலமா ஓட்டுவாங்க. இருந்தாலும் இந்த Licence – வச்சுக்கிட்டு, NASA- வில ராக்கெட் ஓட்டுன அனுபவசாலி மாதிரி அவங்க பாக்கிற பார்வையே அலாதி. என்னக்கு, Class அரம்பம்.

காரில் நான், அம்மணி, கிருஷ் மற்றும் பன்னீர். டிரைவர் நான், அம்மணி தான் டீச்சர். நான் ஸ்டியரிங் பிடித்த அடுத்த விநாடி

” இப்படி ஓட்டு , அப்படி ஒடை, மெதுவா அழுத்துனு” ரப்ச்சர்.

கார் மெதுவா ஓடினாலும், சண்டை வேகமா நடந்தது. விவாதம் முத்தி அவினாசி ரோடில் நின்றது. அங்கயே, காரும் நின்றது. நான் “கார் ஓட்ட உன்கிட்ட கத்துக்க மாட்டேன்னு” சபதம் விட்டுட்டு காரில் இருந்து இறங்கி நடந்தே வீட்டுக்கு வந்தேன். நான், கடுப்புல வீட்ல இருந்தேன். ரொம்ப நேரம் மூணு பேரையும் காணோம். வீட்டுக்கு வந்தவுடன் ஒரு பிடி பிடிக்கலாம்னு ரெடியா இருந்தேன். வந்தாங்க. நான்தான் வாங்கி கட்டிகிட்டேன். “நல்லா கார் வாங்கி கொடுத்தாரா உங்கப்பா…” இனி அதை அவரே ஓட்டோ சொல்லுனு” சாவிய தூக்கி போட்டுட்டு போய்ட்டாங்க. பன்னீர் சொன்னார் ” நீங்க இறங்கி போனதுக்கு பிறகு கார் Start-ஆகவே இல்லை. நான்தான் தள்ளிட்டு வந்தேன்னு” ஒரு குண்டை போட்டார்.

மீண்டும், மீண்டும் கடுப்பு.

இது சரிப்பட்டு வராது. ஒரு Subject Specialist தான் தீர்வுனு முடிவுக்கு வந்தேன்.  Car mechanic ஒருவரை தேடி பிடித்து கூட்டி வந்தேன். Ignition Switch + Spark Plug Problem. 750 ருபாய் செலவு. மாத்தினேன். மாத்தி ஒரு வாரம் ஓடியது. தைரியம் வந்து, கொஞ்சம் கொஞ்சமாய், வண்டி தெருவை தாண்டி கோவை ரோட்டில் தயங்கி தயங்கி ஓட ஆரம்பித்தது. நானும், வண்டி ஓட்ட கொஞ்சம் கத்துக்கிட்டேன்.

அந்த வாரம் சனி கிழமை …சனி பெயர்ச்சிகாருக்கு, ஏழரை நாட்டு சனி ஆரம்பித்தது.

சனிக்கிழமை பன்னீர் வந்து இருந்தான். நான், பன்னீர், கிருஷ் …காரை எடுத்து கொண்டு கணபதி வரை செல்லலாம் என்று ஐடியா. ஒரு சிக்னல். Break பிடித்தேன். வண்டி நின்றது. நானாகத்தான் நிறுத்தினேன்.  ” பழக்க தோஷத்தில் “மாமா, நான் தல்ரேனு” பன்னீர் சொன்னார். இல்ல பன்னீர் கார் முதல் மாதிரி இல்லைன்னு சொன்னேன். போகும் வழியில் ரயில்வே கேட் உள்ளது. கார் Railway gate நெருங்கியவுடன் நின்றது. நான் நிறுத்தவில்லை. இப்போது அதுவாகவே நின்றது. மீண்டும் மீண்டும் மீண்டும் கடுப்பு. பன்னீர் சிரித்தான். ” மாமா நான் தல்ரேனு” பன்னீர் கரை தள்ள பக்கத்தில் உள்ள மெக்கானிக் கடைக்கு போனோம். அவர் புதுசா ஒரு Car component Introduce செய்தார். கார் LPG + Petrol-லில் ஓடுவதால் Converter மாத்த வேண்டி இருக்கும். அதுதான் மூல காரணம். எவ்வளவு ஆகும்னு கேட்டேன். Converter + Switch எல்லாம் சேத்து பழசு மாத்தினால் 2800 ருபாய் செலவாகும். இது கூட – Full LPG unit மாத்திட்டா perfect- ஆ ஓடும். நான் கியாரண்டி என்றார். ஆனா செலவு கொஞ்சம் அதிகம் ஆகும்னு சொன்னார்.

அவர் விலையை சொன்னவுடன்

” வெள்ளி கிழமை இரவு, டாஸ்க்மார்க் முன்னால் மயங்கி விழுந்தவனை போல்” தலை சுத்தி Flat ஆனேன்.

17500 ருபாய். என்ன பண்ணலாம்?  ஒரு வாரம் மாத்த மனமில்லை. கார் எடுத்து ஓட்ட, தைரியமும் இல்லை.

இருதலை கொல்லி பல்லியாக மாறினேன்.

கொடுமை என்னன்னா, கார் எதுக்கு நிக்குதுனே தெரியாம, எதை மாத்தணும்னு புரியாம, போறவன் வரவன் சொல்லறத கேட்கலாமா வேண்டாமான்னு இருக்குற குழப்பம் இருக்கே..அப்பா சாமி. ஒரு தத்துவம் தோணிச்ச

” புது காருக்கு பழைய பார்ட்ஸ் மாத்தலாம் ஓடும் – நம்பு ,
ஓட்ட காருக்கு புது பார்ட்ஸ் தான் மாத்தனும் – நம்பலனா
ஓடாம நடு ரோட்ல நிக்கும்”

எப்போ ஒருத்தனுக்கு தத்துவம் வந்துச்சோ, அன்னைக்கே அவன் குட்டி சுவரு. எல்லா தத்துவத்தையும் அதில் எழுதி வச்சு, அவனே படிச்சிட்டு நல்லா முட்டிக்க வேண்டியது தான்.

முடிவு – 17500 முங்கா. New LPG Unit Ready. அப்பவும் அடங்குச்சா அந்த கார்? இல்லையே.

அதுக்கு முன்னாடி இந்த காரின் ஒரு Luxury Feature பத்தி கொஞ்சம் சொல்ல வேண்டி உள்ளது. Air Conditioning: இது Company AC fitted Model. கார்ல எது வேணும்னாலும் ON பண்ணலாம். AC, ON  செஞ்சால் அவ்வளவுதான். ரெண்டு  மகினோ  Horizontal Machining Center + மூணு மோரி சைக்கி Vertical Machining Center கலந்து ஓடினால் வரும் சவுண்ட் வரும். பயங்கர Sound. தல வலி பின்னி எடுக்கும். கார் 40 Km Speed-ல ஓட்டும் போது நெஞ்சை பிடிச்சிகிட்டு ஓடும். ஓடும் போது AC On செஞ்சால் Automatic- கா, 20 KM Speed-க்கு வந்திடும். கொடுமை இது இல்லை.

இவள்ளவு சவுண்ட் விட்டும், அனல் காத்து தான் அட்டகாசமா வரும். கோயம்புத்தூர்ல கிளம்பும்போது ON செஞ்சால், பொள்ளாச்சி வரும் போது Light- டா Cool ஆகும். மீண்டும் பொள்ளாச்சியில் கிளம்பும்போது ON செஞ்சால், கோயம்புத்தூர் வரும் போது Light- டா Cool ஆகும்.

இதுக்கு மேல நீங்க cooling expect பண்ணா – கார்ல உட்காந்துகிட்டு, மூஞ்சிய blower கிட்ட காட்டணும்.

சுமாரா எபக்ட் கிடைக்கும். இப்படி பட்ட ஒரு நல்ல AC தான், என் அடுத்த செலவு. ABT – Maruthi Bill-லில்: AC Compressor bearing is worn out and for the for bearing, AC gas filling and labour = Rs.3800. இந்த பில்லை, நான் ரொம்ப கூலா எடுத்துக்கிட்டேன்.

இரண்டாவது மாதம்: சனி பெயர்ச்சியின் பலன்கள் பலித்தன.

ஒரு பல பரீட்சை. திருப்பூர் செல்ல வேண்டும். நான் மட்டும், ஒரு அசட்டு தைரியத்தில் வண்டிய கிளப்பிடேன். Client meeting. காலையில் பத்து மணிக்கு மீட்டிங். நம்ப கார் நிலைமை தெரிஞ்சு, எதுக்கும் ரெண்டு மணி நேரம் முன்னால கிளம்பினேன். கோவை தாண்டியவுடன் பெரு மூச்சு விட்டேன். ஏன் என்றால் நம்ம காருக்கு 2 item பிடிக்காது. 1. Traffic Signals. 2 Railway Gates. இந்த ரெண்டு இடத்தில் நிறுத்தலாம், தப்பில்லை.

கிளம்பறது நம் கையில் இல்லை. அதுவா முடிவு பண்ணி கிளம்பினா உண்டு.

திருப்பூர் போகும் வழியில் இது ரெண்டும் இல்லை. ஆனாலும் கார் தன் வேலைய வேறு விதத்தில் காட்டியது. புஸ்ஸ்ஸ்….. Puncture. ஓரமா நிறுத்தி பார்த்தா, Front Tyre Puncture. முன்ன பின்ன ஸ்டெப்னி Use செஞ்சதில்லே. பார்த்த ஞாபகம் கொஞ்சம் இருக்கு. ஏதோ கீழ படுத்துகிட்டு சுத்துவாங்கனு மட்டும் தெரியும். மீட்டிங் போக டிப் டாப்பா டிரஸ் செஞ்சிட்டு காலங்காத்தால ரோட்ல படுத்துகிட்டு கம்பிய போட்டு மானாவாரியா சுத்திகிட்டு இருந்தேன். நான் படுத்திட்டு இருந்த pose- பாத்திட்டு லாரி டிரைவர் ஒருவர் நிறுத்தினார். சொல்லி கொடுத்தார். காரை தூக்கி நிறுத்திட்டு, டிக்கியை ஓபன் செஞ்சால் உள்ளே ஒரு அதிர்ச்சி. மழ மழனு ….smooth-தா – கை பட்டாவே ஓட்டை விழும் அளவிற்கு ஒரு Stepney Tyre. லாரி டிரைவர் சொன்னார்

” இப்பிடி ஒரு டயரை இப்பதான் நான் பாக்கிறேன்”.

முடிவு பண்ணினேன். இத போட்டுக்கிட்டு திருப்பூர் போக முடியாது. மீட்டிங் Cancelled. Very Busy Today, Sorry…We will reschedule- னு குறுந்தகவல் அனுப்பிட்டு, அழுக்கு சட்டையோடு வண்டியை திருப்பி கோயம்புத்தூருக்கு விட்டேன். நின்ற இடம் அவினாசி ரோடில் ஒரு டயர் கடையில்.

காலை முதலாளி கடை திறக்கும் முன் காரோடு கதவின் முன் நின்றேன். பெரிய கடை. உள்ளே நிறுத்துங்க, பார்போம்னு சொன்னார். ஒரு முறை காரை சுத்தி வந்து எல்லா டயர்களையும் பார்த்தார். என்னை பார்த்தார். அவர் பார்த்த பார்வையில் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது

” எப்பிட்ரா இப்பிடி ஒரு காரை வாங்குனே?

பிறகு சொன்னார் “சார் , எல்லா டயரும் வோர்ன் அவுட். மாத்துனா, நாலையும் மாத்தனும். 4800 INR + 250 for Alignment and labour Charges. பில்லை வாங்கிகிட்டு பில்லா ஸ்டைல வீட்டுக்கு வந்துட்டேன். வெளியே நின்னுகிட்டு இருந்த யாமஹா என்னை பார்த்து வாய் விட்டு சிரித்தது.

அடுத்த வாரம் வந்தது. பன்னீரும் வந்தான். க்ரிஷிக்கு ஏக கும்மாளம். ஏன்னா, அப்போதான் wife வண்டிய எடுப்பாங்க. தல்றதுக்கு ஆல் வேண்டும். பன்னீர் வந்தால் கிருஷ் கேட்பான் ” போலாமா?”. நல்ல காலம் இந்தமுறை கார் எங்கும் நிக்க வில்லை. ஆனால், அடைப்பு வந்த மாதிரி நின்னு நின்னு போகுது என்கிறார்கள். முக்கால் பைத்தியம் ஆனேன்.

பெரிய முடிவு ஒன்று எடுத்தேன்.

அந்த மாதம் திருவாரூரில் என் நண்பனின் கல்யாணம். காருக்கு கடைசி பல பரீட்சை. பேசாமல் ABT Service Station-ல் விட்டு மாத்த வேண்டியதை எல்லாம் ஒரு முறை மாத்தினால் என்ன?  முடிவு செய்தேன். அந்த மாத கடைசியில் Full Service விடுவது என்று. வண்டி ABT-இல் விட்டு விட்டு அங்கே உள்ள visitor’s அறையில் Wait செய்தேன். மாருதி கார் சைஸ் height-ல் குட்டியா, குட்டையா ஒருத்தர் வந்தார், சர்வீஸ் Engineer. அவர் பெயர், மகேசுனு அவர் கொடுத்த மலிந்த பிசினஸ் கார்டு சொன்னது. அவர் சொன்னார்; டைமிங் பெல்ட் Problem. அத பாக்காம விட்டதால, என்ஜின் problem. இதை சரி செய்யலைனா என்ஜின் engine seize – ஆகும்னு சொன்னவுடன், என் ஹார்ட்  seize ஆனது. நான் போடுற belt-டே, tighta loosa-னு எனக்கு தெரியாது. அவர் டைமிங் பெல்ட் பத்தி சொல்லுவது என்னக்கு ஒன்னும் புரியல. ஆனா,நான் கடைசியா சொல்ல கூடாதது ஒன்னு சொன்னேன்.

“எவ்வளவு செலவானாலும் பரவாயிலே…மாத்துங்க…ஆனா வண்டி நிக்காம ஓடணும்.”

கண்டிப்பா சொன்னேன். ABT மகேசு இந்த வரிக்கு எவ்வளவு மதிப்பு கொடுதார்னு மூணு நாளில் தெரிந்தது.

மூணு நாள் கழித்து போன் வந்தது. போனேன். காரில் எல்லாமே மாத்தி இருந்தார்கள். மாத்தாம விட்டது அதன்,ஓனர் என்னைத்தான். கார் கீழ Anti Rust Coating எல்ல்லாம் வேற. என்னக்கு ரொம்ப சந்தோசம். ஆனா, அது பில்லை நீட்டியவுடன் அடங்கியது. 38,000. ( Engine Rebore முதல் துடைத்த காசு வரை ). இதுவே நான் செய்யும் கடைசி செலவு.

இது “ஓட்ட கார் மீது சத்தியம்”.

மீண்டும் மகேசுகிட்டே கேட்டேன்.” வண்டி நிக்காம ஓடுமா?” கண்டிப்பானு சொன்னார்.

கடைசி பல பரீட்சை நாள் வந்தது. திருவாரூர் போய் வரவேண்டும். என்னக்கு Licence வரவில்லை. எனவே ஒரு டிரைவர் ஏற்பாடு செய்ய சொல்லி என் நண்பரிடம் சொல்லி இருந்தேன். கடைசி வரை அவர் மறந்து விட்டு கிளம்பும் முன் இரவு டிரைவர் கிடைக்கவில்லை என்று குண்டை தூக்கி போட்டார். என் நிலைமையை சொல்லி ( கார் நின்னு போனால் தள்ள ஆள் வேண்டும்) மீண்டும் தேட சொன்னேன். பதினோரு மணிக்கு கூப்பிட்டார். Driver Ready, நல்ல பையன், போகும் போது Town hall-இல் Pick-Up செய்து கொள்ளுங்கள். காலை நாலு மணிக்கு கிளம்பி முதலில் திருச்சி சென்று என் Junior வீட்டில் தங்கி விட்டு பின்பு திருவாரூர் செல்வதாக யோசனை.

காலை எழுந்து, நான்கு மணிக்கு டவுன் ஹால் சென்று டிரைவருக்கு போன் போட்டேன். அட, கனவில் வந்த மாதிரியே, குட்டையா, கருப்பா, காலை இருட்டோட இருட்டா நடந்து வந்தார். சிறு உரையாடலுக்கு பின் வண்டி கிளம்பியது.

கடவுளை வேண்டி கொண்டேன். இந்த டிரைவர், வண்டியைத் தள்ள கூடாது என்று.

கடவுள் கை விடவில்லை. நான் தான் தப்பாக வேண்டி கொண்டேன் என்பது படிக்க படிக்க தெரிந்து கொள்வீர்கள். வண்டி கோவையை சலனமில்லாமல் தாண்டியது.

தூக்க கலகத்தில் வந்ததால், நான் மெதுவாக டிரைவரிடம் பேச்சு கொடுத்தேன். நான் கேட்டேன், ” எதனை வருசமா வண்டி ஒட்டி கொண்டு இருக்குறீங்க?”. முதல் குண்டை போட்டார். நான் டிரைவர் இல்லீங்க. அண்ணன், வேற ஆள் கிடைக்கல, போய்ட்டு வானு சொன்னார், வந்தேன்னு சொன்னார். நாங்க நகைக் கடை வச்சு இருக்கோம். எங்க குடும்பம் நகை செய்யும் குடுமபம்னு, சட்டைய கழட்டி, அவர் போட்டு இருந்த ரெண்டு மூணு தடித்த தங்க சங்கிலிகளைகளையும், கையில் போட்டு இருந்த Bracelet-யும் ஐந்து மணி இருட்டில் ஜொலிக்க வைத்தார்.

முதல் குண்டின் புகை அடங்கும் முன், ரெண்டாவது குண்டை வீசினார். நான் எப்படி சார் ஓட்டுறேன்? ” நாலு மாசமா வண்டி ஒட்டி இப்பதான் licence வாங்கிட்டேன்”. Driver ஓட்ட சொகுசாய் தூங்கலாம் என்ற என் எண்ணம் சுக்கு நூறாய் உடைந்தது. அவருக்கும் எனக்கும் உள்ள ஒரு வித்தியாசம் – சுமாரா ஓட்டுற அவரிடம் Licence இருப்பது தான். பயத்தில் நான் உறைந்து போய் ” எங்க உங்க Licence தாங்க, பாத்துட்டு தரேன்னு கேட்க, மூணாவது குண்டை தான் வாயால் போட்டார். ” அவசரத்துல மறந்து வச்சுட்டேன் சார்”. கேட்டா அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம், பயபடாதிங்கனு பயபடாம சொன்னார். அதில் இருந்து அவர் கார் எப்படி ஓட்டினாலும் எனக்கு தப்பாய் தெரிந்தது. பொழுது விடிந்தது. ஆறு மணிக்கு தனது நான்காவது குண்டை போட்டார்.

இது மத்த குண்டினை போல் இல்லாமல் ….மிகவும் சத்தமாய் இருந்தது….!!

வெளிச்சம் வர வர….ஆட்கள் நடமாட்டம் அதிகமனவுடன் அவர் ஓட்டும் Style- லை மாத்தினார். 50 அடிக்கு, வண்டிக்கு முன்னால் எது இருந்தாலும், Horn அடிப்பார். அந்த வண்டி நகரும் வரை, தன் கையை Horn-ல் இருந்து எடுக்கவே இல்லை. பயங்கர சத்தம். விட்டு விட்டு அடித்தாலும் பரவாயில்லை. அழுத்தி பிடிச்சா, மனுஷன் எடுக்கவே மாட்டார். காதுல ரத்தமே வரும் போல இருந்தது. Horn -இப்படி அடிகாதேனு சொன்னாலும் அடங்கவே இல்லை. பழகமாயிடிச்சு சார், இல்லேன்னா இடுச்சிடுவேனு பயம்னு சொன்னார். கொடுமைடா சாமி. போக போக, Horn அடிப்பதை என்ஜாய் பண்ணி வித விதமாய் விளையாட்டு பிள்ளை போல அடிக்க ஆரம்பித்தார். ஒரு மணி நேரம் ஓட்டினால் 40 நிமிஷம் ….அவரின் horn நாதஸ்வர கச்சேரிதான். காலை வெயில் வந்ததால் பாழாய் போன AC- ON பண்ண – CNC lathe-ம் ஓட, ஒரே ரண களம். இந்த ரெண்டு சவுண்ட் மிக்ஸிங் தாங்காம இறுக்கும் போது, போர் அடிக்குது சார் …பாட்டை போடுங்க..அப்பதான் தான் தூங்காம ஓட்டுவேன்னு சொன்னார்.

நம்ம CD player – ஒரு வித்தியாசமானது.

வண்டி நின்னால் Multi- Track இல் பாடும். ஓடினால் Single – track தான்!

. புரியலையா? வண்டி நிக்கும் போது போட்டால் பாட்டில் பாடிய ஆண், பெண் மற்றும் background மியூசிக் எல்லாம் கேட்கும். வண்டி ஓட்ட ஆரம்பித்தவுடன் வரும் சத்தத்தில் மெதுவாக பெண் குரல் கரைந்து போகும். பாடலை ஆண் மட்டும் கஷ்டப்பட்டு பாடுவார். வண்டி இன்னும் வேகம் எடுக்க, AC – ON செய்தவுடன், ஆண் குரல் மங்கி வெறும் back ground Music-ல் , டும், டும்னு சவுண்ட் மட்டும் கேட்கும். பாட்டு நமக்கு தெரிஞ்சு இருந்தால், கரோகியா ( Karaoke) நம்ம பாடிக்கலாம். இல்லேன்னா , ” டும், டும் சவுண்ட்க்கு, பாட்டு கேட்குர மாதிரி தலைய ஆட்டிக்கலாம். ரொம்ப போர் அடித்தால் ” இந்த மியூசிக்குக்கு என்ன பாட்டுன்னு போட்டி வைக்கலாம்.

SPB பாடின பாட்டை L.R. ஈஸ்வரினு, சொல்ல வைக்கும்.

டிரைவர் CD player- ON செய்துவிட்டு, அவர் மட்டும் தலைய ஆடிகிட்டு, Horn அடிச்சிகிட்டு, AC Noise-சோடு திருச்சி வந்து சேர்த்தார். அவரும் தூங்கவில்லை. காரில் வந்த யாரும் தூங்கவில்லை. இந்த ஐந்து மணி நேரத்தில் என் ஒரே நிம்மதி …நிக்காமல் ஓடிய கார் தான்.

கார் திருச்சியை தாண்டி லால்குடி நோக்கி சென்றது. நண்பன் வீடு லால்குடியையைத் தாண்டி இருபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அந்த வாரம் திருச்சியில் நல்ல மழை. லால்குடி வரை நன்றாக இருந்த ரோடு, தீடீர் என்று மேடும் குழியுமாய் மாறியது. பல குழிக்கு நடுவே ரோடு தெரிந்தது. என் நிம்மதி தொலைந்தது. நம்ப Horn Driver – அதுவரை மெதுவா ஓட்டியவர், வண்டி ரொம்ப குலுங்கியதால் வேகமாக ஓட்ட வண்டியில் “கட முட” என்று Sound வர ஆரம்பித்தது. மெதுவாக ஓட்ட சொன்னால் ” சார், கொஞ்சம் ஸ்பீடா போனா குலுங்காதுன்னு” லாஜிக் சொல்லி கடுப்பு ஏத்தினார். பாத்து ஓட்டுன்னு சொல்லும் போதே ஒரு பெரிய குழியில் விட்டு வேகமாக ஓடினார்.

படக்” பலத்த ஓசை. 

ஏதோ கால் முறிந்த மாதிரி ஒரு ஓசை. முடிந்தோம்னு நெனைச்சேன். ஆனால் வண்டி ஓடி, நண்பனின் வீட்டு வரை நிக்காமல் சென்றது. அது என்ன ”  “ படக்”???? ”

எதோ உடைந்தது. ஆனால் உடைந்தது என்ன வென்று தெரியவில்லை. வண்டியும் நிக்கவில்லை.குழம்பிகொண்டே, நண்பனின் வீட்டில் குழம்பு சாதம் சாப்பிட்டேன். வண்டி நிக்க போவது நிஜம். எங்கே எப்போது என்பது தான் கேள்வி குறி. வண்டி, திருவாரூர் நோக்கி தன் பயணத்தை அன்று மத்தியம் தொடங்கியது. இப்போது வண்டியில் புது வித சப்தங்கள் வந்தன.

“நிக்க போவுதுன்னு தெரியுது, ஆனா, எங்க நிக்கும்னு தெரியல”. இதுக்கு Technical-லா ” ஓட்ட கார்னு” பேரு. 

ஒரு வழியாய், திருவாரூர் வந்து சேர்ந்தோம். கல்யாணமும் முடிந்தது. மீண்டும் கோவை நோக்கி பயணம். கல்யாணமான நண்பன் என் ஜூனியர். அவர் Ph.D முடித்து, பின் IFS ஆகிவிட்டார். அவருடைய Ph.D Chairman கல்யாணத்துக்கு வந்து இருந்தார். அவர் எனக்கும், என் மனைவிக்கும் வாத்தியார் கூட. நல்ல மனிதர். ” எப்போ கிளம்பறீங்க? எப்படி போறீங்கன்னு கேட்டார்?” கார் இருக்கும் நிலைமையில் உண்மை சொல்லுவதா? இல்ல பொய் சொல்லுவதானு தெரியல. கார்ல வந்தேன்னு நான் தயங்கி சொல்ல, நான் பஸ்லதான் வந்தேன்னு அவர் சொன்னார். போகும் போது எத்தனை பேர் போறீங்க? உங்கள்ளுக்கு problem இல்லைனா நான் வரலாமானு? கேட்டார். இல்லைன்னு சொன்னா வருதபடுவார்.

வாங்க சார் போகலாம்னு சொன்னேன்.

சார், கொஞ்சம் வாட்ட சாட்டமா இருப்பார். அவர்,  நம்ப Horn- Driver பக்கத்தில் உட்கார, வண்டி கோவை ரோடில் பயணித்தது. Horn- Driver, தன் வித்தையை ஆரம்பித்தார். Professor, அவர் அடித்த Horn-இல் அதிர்ந்தே போனார். அவர் ஏன்டா இந்த வண்டியில் ஏறினோம்னு என்னை பாக்க, நான் அவரை பாக்க…Driver தன் வேலையை செவ்வனே செய்தார். கூடவே பல வித ” படக்” Sounds வேற. திருச்சியை நெருங்கும் போது எது நடக்கக் கூடாதோ அது நடந்தது. வண்டி நின்றது. நடு ரோட்டில் நின்றது.

நான் முழு பைத்தியம் ஆனேன். 

Horn- Driver கிட்ட எறங்கி தள்ளுப்பானு சொன்னா ” சார், நீங்க ரெண்டு பேரும் தள்ளுங்க, நானே கியர் போடுறேன்னு சொல்லறார். நான் கடவுள்கிட்ட இந்த டிரைவர் வண்டிய தல கூடாதுன்னு வேண்டினது பலித்தது. பாவம், நானும் என் ப்ரோப்பசரும் வண்டிய தள்ள வேண்டிய நிலைமை. ஒரு அரை கிலோ மீட்டர் தள்ளி இருப்போம். வேர்த்து விறு விறுத்து, மூச்சு தள்ளி, மயக்கமா ஒரு Mechanic Shop வரை தள்ளினோம். Mechanic பார்த்தான். புதுசா ஒரு ITEM காலி.  ப்ரோப்பசரும்  Horn டிரைவரும், மெக்கானிக்கிடம் பேசினார்கள். நான் Already பைத்தியம் ஆனதால் அவர்கள் பேசியது எதுவுமே கேட்கவில்லை.   கோவை வரை ஓடும்படி, எதையோ மாத்தினார். 350 ருபாய் கொடுத்தேன்.

“என் ப்ரோப்பசர் முன், என் கார் பரீட்சையில் தோத்தது” – ” நானும் இந்த கார்கிட்டே தோத்து போனேன்”

கோவை வந்தவுடன் ” ABT மகேசுவுக்கு” போன் செய்தேன். “புது கார் ஒன்னு புக் பண்ணனும், எப்போ வரலாம்?” அன்றே ஒரு புது வண்டியை புக் செய்தேன். இந்த வீனா போன காரை ABT மகேசு வித்து தரவேண்டும் என்பதே என் கண்டிஷன். ஒரு வாரம் கழித்து என்னக்கு ஒரு போன் கால்.

எதிர் முனையில் ஒருவர் ” சார், உங்க கார் என்னக்கு வேணும் “
மீண்டும் ஒரு  குட்டையில் கல் விழுந்தது..



 

____________________________________________________________________________________________________

பின் குறிப்பு:

இந்த காரை ஒருவர் வாங்கினார். அவரை நான் வாழ்கையில் இரண்டு முறை பார்த்து இருக்கிறேன். முதன் முதலாக நான் பார்த்தது , அவர் என்னிடம் கார் வாங்கும் போது. அவரை கடைசியாக, மூன்று மாதம் கழித்து, நான் அவினாசி ரோடு சிக்னலில் பார்த்தேன்.

அவர், தன் காரை தள்ளிக் கொண்டு இருந்தார்.

____________________________________________________________________________________________________

விரைவில்….

ஏக் காவ் மே, தோ CAR ரகு தாத்தா..!!!
(Shot in Vancouver, Oct 2010)